புதன், பிப்ரவரி 25, 2015

குவைத்

வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத் - மிகச் சிறிய நாடு.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளுள் எண்ணெய் வளத்தை 
ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு.

இன்று 25/2 - தேசிய தினத்தையும் (National Day)
நாளை 26/2 ஈராக்கின் பிடியிலிருந்து 
தன்னாட்சியுரிமை ( Liberation Day ) 
பெற்ற நாளையும் கொண்டாடுகின்றது. 


இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் கிழக்கில் அரபு வளைகுடாவும்  - எல்லைகளாக அமைந்துள்ளன.

குவைத் சிட்டி
குவைத் நகரம் - நாட்டின் தலைநகரமாகும்.

அரபு வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள குவைத் நகரிலேயே பாராளுமன்றமும் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன.


மேலும், மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சார, பொருளாதார மையமாகவும்  குவைத் திகழ்கின்றது. 

நிறைய உயர் கல்விக் கூடங்கள் விளங்குகின்றன. 

2007- ல் இந்நாட்டின் மக்கள்தொகை 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இவர்களில் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.

இஸ்லாம் தேசிய மதம். 

இந்நாட்டின்  குடிமக்கள், 75 - 80 சதவிகிதத்தினர் சன்னி பிரிவினர்.
மற்றையோர் ஷியா பிரிவினர்.

Kuwait Towers
இந்நாட்டில் வசிக்கும்  வெளிநாட்டினரில்,  கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 3 - 4 லட்சம். 

இந்துக்கள் எண்ணிக்கை 3 லட்சம். பெளத்தர்கள் ஒருலட்சம் பேர். 
சீக்கியர்கள் பத்தாயிரம் பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

  
மற்ற மதத்தினர் அவரவர் மத வழக்கங்களைப் பின்பற்றவும் திருமணம் முதலான நிகழ்வுகளை நடத்தவும் அனுமதியுண்டு.

ஈத்-உல்-ஃபிதர் எனும் ரமலான் (நோன்புப் பெருநாள்) ஈத்-உல்-அத்ஹா எனும்  பக்ரீத் (தியாகப் பெருநாள்) ஆகியன பெருஞ்சிறப்புடன் அனுசரிக்கப்படுபவை.

அப்படி இப்படி என்று - குறிப்பாக சில தனியார் நிறுவனங்கள் - தொழிலாளர்களை நடத்துவதில் குற்றம் குறைகள் இருக்கின்றன. 

இருந்தாலும் - சில விஷயங்களில் பாராட்டத்தக்க செயல்பாடுகள் நிறையவே உள்ளன.

பாலைவன நாடாகிய குவைத்தில் அரிய பொருள் - தண்ணீர்.

அதை - கடைக்கோடி குடிமகனுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குகின்றது குவைத்.

உணவுப் பொருட்களைக் கையாள்வதில் - எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி கடுமையான ஒழுங்கமைப்புகளுடன் - சுத்தம் சுகாதாரம் பேணப்படுகின்றது.

உணவு சம்பந்தப்பட்ட தொழிலாளர் அனைவருக்கும் - வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் உண்டு. அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

முடி திருத்துவோர், அழகு நிலைய பணியாளர், சலவைத் தொழிலாளர், மளிகைக் கடை நடத்துவோர் - என அனைவருக்கும் வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் உண்டு.

இந்த விஷயங்களை நம் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏக்கப் பெருமூச்சு தான் மிச்சம்!..

பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்ததில் இருந்தே - இந்திய நாணயங்கள் இங்கே புழக்கத்தில் இருந்துள்ளன. அந்த நாணயங்கள் இங்கே அரும்பொருள் காட்சியகத்தில் காணக் கிடைக்கின்றன.

பாரதம் சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்திய காசும் பணமும் குவைத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன. 

குவைத்தில் புழங்கிய இந்திய நாணயங்கள்
1961-ல் தனக்குத் தனியாக நாணயங்கள் தேவை என குவைத் அரசு முடிவு எடுத்ததன் பிறகு - இங்கிருந்து இந்திய காசும் பணமும் விலக்கிக் கொள்ளப் பட்டதாக அறியமுடிகின்றது.

இந்த முடிவு 1961 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட பிறகு - அடுத்து வந்த இரண்டு மாதங்களில் குவைத் நாட்டில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்திய நாணயத்தின் மதிப்பு - 342 மில்லியன் IRs.






ஐம்பது ஆண்டுகளுக்கு முன் - 
இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட கோதுமை அரைக்கும் திருகை இயந்திரங்கள், ஜாடிகள், ஜாதிக்காய் மரப் பெட்டிகள், அஞ்சறைப் பெட்டிகள், சல்லடைகள் - என ஏகப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் காணலாம்.

இன்னும் கூட, அறுபது - எழுபது வயதைக் கடந்தவர்கள் - பாசத்துடனும் நேசத்துடனும் இந்தியாவை நினைவு கூர்கின்றனர்.

ஆனால் - இன்றைய இளந்தலைமுறையினருக்கு - நம்மவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் -  அவர்களை அங்கீகரிப்பதற்கு தயக்கமும் மயக்கமும் இருக்கின்றது.

நம்மை அவர்கள் ஏளனமாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் - 
நம்முடைய அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சமும் ஊழலும், நிர்வாக சீர்கேடுகளும்!..

ஒருகாலத்தில் இந்தியாவின் உதவியை,  குவைத் மட்டுமல்ல -
அனைத்து அரபு நாடுகளுமே எதிர் நோக்கி இருந்தன..

ஆனால், இன்றைக்கு!?.. நீங்களே அறிவீர்கள்..

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?..
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?..

- என்று காது கிழிபட அறைந்தாலும் - திண்ணையில் கிடக்கும் கிழவன் கூட,

எங்காவது வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடலாமா!.. 

- என்று ஏங்கும் வண்ணம் செய்வதிலேயே நமது அரசும் அரசு அலுவலர்களும் குறியாக இருக்கின்றார்கள்.

கைக்கு எட்டிய வேலை - 1972/73-ல் கையூட்டு கொடுக்க இயலாததால் கை நழுவிப் போனது.

திரும்பவும், 1980/81-ல் வழுக்கு மரத்தில் போராடி ஏறிய வேளையில் -  நிர்வாக சீர்திருத்தம் என்ற பேரில் - காலைப் பிடித்து இழுத்து விட்டார்கள்..

TNPSC - தேர்வுகள் எழுதி தேறிய பின்னரும் - 
மீண்டும் ஏற்றிவிட கேட்கப்பட்டது - கையூட்டு..

உன் பொங்கலும் வேண்டாம்!.. பூசாரித்தனமும் வேண்டாம்!.. - என்று பிழைக்க வழி தேடி - திசை மாறிய பறவையைப் போல் ஆனது வாழ்க்கை!.

அதன் பிறகுதான் - மலையும் கிணறும் காணாமல் போயின!..



எது எப்படியோ - நமக்கும் நம்மைப் போன்ற பலருக்கும் சோறும் தண்ணீரும் வெளிநாட்டில் என்றான பிறகு பழையனவற்றைக் கிளறுவதால் ஆகப் போவது யாதொன்றும் இல்லை.



வெளிநாட்டு வாழ்க்கை வரமா.. சாபமா.. தெரியவில்லை!..
எனது இன்ப துன்பங்களில் இணைந்து நிற்கின்றது குவைத்!.. 

இன்று 25/2 தேசிய தினத்தையும் (National Day)
நாளை 26/2 தன்னாட்சியுரிமை நாளையும் ( Liberation Day ) 
கொண்டாடும் குவைத் வாழ்க!...


வாழும் மண்ணிற்கு நல்வாழ்த்துக்கள்!..
* * * 

19 கருத்துகள்:

  1. வாழும் மண்ணிற்கு நல்வாழ்த்துகள்..... உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துகள்....

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எல்லா வளமும் இருந்தும்
    எதுவும் இல்லாத நாடாக நம் நாடு மாறிவிட்டது
    கொடுமைதான் ஐயா
    இலஞ்சம், இலஞ்சம்
    இந்நிலை என்று மாறுமோ
    தாங்கள் வாழும் மண்ணிற்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா
    தங்களுக்கும் வாழ்த்துக்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எல்லா வளமும் இருந்தும்
      எதுவும் இல்லாத நாடாக மாற்றி விட்டார்கள்..
      நாம் வீணாக வேடிக்கை பார்த்திருந்தோம்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அந்த அனுமதியும் சிறப்பு ஐயா...

    அழகான படங்களுடன் பல தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. பிறந்த மண்ணைப் பற்றிய எழுதிய தாங்கள் தற்போது வாழும் மண்ணைப் பற்றி எழுதியுள்ள விதம் நெகிழச் செய்துவிட்டது. வெளிநாட்டு வாழ்க்கை, உள்நாட்டு வாழ்க்கை எதுவாயினும் நாம் அமைத்துக்கொள்வதைப் பொறுத்தே அமையும். உங்களுக்கு எல்லா நலனும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம். வித்தியாசமான எண்ணங்கள் வரும்போது பகிர்ந்துகொள்ளுங்கள், நாங்கள் இருக்கிறோம், ஏற்ற இறக்கங்களில் பங்குபோட்டுக்கொள்ள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் ஆறுதலான வார்த்தைகள் மனதில் நிற்கின்றன..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பிடையீர்.
    நாம் வாழும் நாட்டை போற்றுதல் என்பது உம்மால் (தமிழனால்) மட்டுமே முடியும். நம் நாடு உலக வல்லரசு என்பதில் முதலில் இருந்தது என்று சொன்னால் நம்ப முடியுமா? உண்மை அது தான். ( என் அடுத்த பதிவு) ஆனால் என்று சுயநலம் மிகுந்ததோ அன்றே எல்லாம் தலைகீழ். தாங்கள் சொன்னது போல் அரசு வேலை என்பது................ தங்கள் தொகுப்புகள் அத்துனையும் அருமை. பாலைவன நாடாகிய குவைத்தில் தண்ணீர் அரிய பொருள். ஆனாலும் எல்லோருக்கும் கிடைக்கிறது. இங்கு, பெருமுச்சு மட்டுமே விட முடிகிறது. சிவனைச் சுவைப்பதில் ஆழ்ந்த ஆனந்தம் கொண்ட நீர் மற்ற மதத்தினரையும் போற்றுதல் என்பது எத்தகைய பெரிய குணம். எல்லோரும் இப்படியே இருந்து விட்டால்.................. தங்களின் ஒரு பதிவில் ஏசுவும் கிருக்ஷ்ணனும் படம் பார்த்தேன். அதையே குறிப்பிடனும் என்று இருந்தேன். வாழ்த்துகள்.
    அன்புடன்
    மகேசுவரி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாலமகி..
      விரிவான கருத்துரை!.. ஆச்சர்யம்!..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வாழ்வுதரும் நாட்டுக்குக் கடமைப் பட்டு இருப்பது நல்லது. ஆனால்........... அங்கு வாழும் இந்தியர்கள்மனதில் கிடைக்கும் பணம் தவிர வேறு நிம்மதி இருக்கிறதா.?இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர குடிமகனாக இருக்கிறார்களா. சொந்த தொழில் ஏதும் ஒரு இந்தியனாகத் தொடங்க முடியுமா.?கேள்விகள் எல்லாமே தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      என்னதான் பணம் சம்பாதித்தாலும் - நிம்மதி என்பது அவரவர் மனங்களைப் பொறுத்தது..

      இந்நாட்டின் குவைத்தியின் ஆதரவுடன் - சிறு தொழில் , வணிகம் தொடங்கி நடத்தலாம். தடையில்லை..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. குவைத் பற்றிய நிறைய விடயங்கள் தங்தமைக்கு நன்றி நண்பரே... யூ.ஏ.இ யில் டிசம்பர் 2-3 ல் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      கூடுதல் தகவல் தந்தமைக்கு நன்றி.
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  8. வாழும் மண்ணைப்பற்றிய தங்களின் எண்ணப் பகிர்வும், படங்களும் அருமை.
    உள்நாட்டு வாழ்க்கை ,வெளிநாட்டு வாழ்க்கையின் எண்ணங்களும் சென்னவிதமும் செம்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      வருக.. வருக..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. குவைத்பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன். அருமையாக சொன்னீர்கள். குடி தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கிறது என்பதே மகிழ்ச்சியான விஷ்யம். மதுரையில் எங்கள் வீட்டில் நல்ல தண்ணீர், போர் தண்ணீர் எதுவும் இல்லை விலைக்கு வாங்கி உபயோகப்படுத்தினோம். நல்ல தண்ணீருக்கு எல்லோரும் சட்டவிரோதமாய் மோட்டார் போட்டு இருக்கிறார்கள். குடிதண்ணீர் வரவில்லை என்று புகார் கொடுத்தால் வந்து பார்த்து விட்டு ஏதோ செய்து விட்டு பணத்தை வாங்கி கொண்டு போய் விட்டார்கள். தண்ணீர் வரவில்லை.
    குடும்பத்தை விட்டு நீங்கள் வெளிநாட்டில் இருப்பது ஒன்று தான் கஷ்டம் மற்ற கஷ்டங்கள் இல்லை உங்களுக்கு.
    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் சொல்வது சரி.. நகராட்சிக் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னால் - கூட்டமாக வருகின்றார்கள்.. ஏதாவது செய்து விட்டு - குறிப்பாக நிற்பது பணம் வாங்குவதில் தான். நம் நாட்டில் தண்ணீரை அலட்சியம் செய்வது - பாலைவன நாட்டில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி..

      நீக்கு
  10. மிகச் சிறந்த விவரங்கள் குவைத் பற்றி. தாங்கள் சொல்லி இருப்பது மிக மிக உண்மை, இங்கு தங்களுக்கு வேலை கிடைத்தலில் இருந்த இன்னல்கள், கிடைத்தும் தொடர முடியாமை...அதனால் வெளிநாட்டு வாழ்க்கை....இதுதான் உண்மை ஐயா. நிம்மதி என்பது நாம் இருக்கும் இடத்தில் இல்லை. நம் மனதில் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் எந்த நாடும் நம் நாடுதான். னீங்கள் சொல்லி இருக்கும் காரணங்கள் தான் நம் நாட்டிலிருந்து இளைஞர்கள் வேறு நாடுகளுக்குச் செல்வது எல்லாமே....அவர்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. பல விஷயங்கள் பெருமூச்சைத்தான் வரவழைக்கிறது......

    நல்ல பதிவு ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் கூறுவது போல் - நம் நாட்டில் பல விஷயங்கள் பெருமூச்சைத் தான் வரவழைக்கின்றன..

      விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..