வியாழன், பிப்ரவரி 05, 2015

தைப்பூசத் திருவிழா - 2

நேற்று மதுரை மீனாட்சியம்மனின் தைப் பூச தெப்பத் திருவிழாவைக் கண்டு களித்தோம்!..

இன்று, வங்கக் கடல் கடந்த மலேஷிய நாட்டில் -

வண்ணத் தமிழ் - வடிவேல் முருகனுக்கு நிகழும் - மகத்தான தைப்பூசத் திருவிழாவினைக் கண்டு களிப்போம்!.. வாருங்கள்!..


மலேசியாவின் புகழ் பெற்ற கோயில்களுள் ஒன்றுதான் - பத்துமலை முருகன் கோயில். பத்துமலை முருகன் குகைக்குள் வீற்றிருக்கின்றான்.

இந்த குகைக் கோயில் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுண்ணாம்புக் குன்றுகளில் அமைந்துள்ளது.

இந்த மலையில் மேலும் பல குகைகள் அமைந்துள்ளன.


மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து வடக்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பத்துமலை.

1878-ல் அமெரிக்க தாவர இயலாளரான வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்து மலையினைக் கண்டறிந்து ஆய்வு செய்து அறிவித்தார்.

ஸ்ரீமான் K. தம்புசாமிப்பிள்ளை
அதன்பின், 1891-ல் கோலாலம்பூரில் செல்வந்தராக -
புகழ்பெற்று விளங்கிய கே. தம்புசாமிப் பிள்ளை எனும் புண்ணியர் -
பத்துமலையில் - தரை மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் ஒரு குகையின் வாசல் வேல் வடிவில் இருந்ததைக் கண்டு அதிசயித்து ஆங்கொரு முருகன் கோயிலை அமைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

திருக்கோயிலில் முதல் தைப்பூசத் திருவிழா நிகழ்ந்த ஆண்டு 1892.

அப்போது -  ஸ்ரீதண்டாயுதபாணி வீற்றிருக்கும் குகைக்குச் செல்ல மலைச் சரிவில் அமைந்த ஒற்றையடிப் பாதை ஒன்றே வழி!..

குகைக் கோயில் (Tks - Wiki)
28 ஆண்டுகள் கழித்து - 1920-ல் குகைக்குச் செல்வதற்கு மரக்கட்டைகளினால் 272 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

இதன் அடிவாரத்தில் தான் உலகில் மிக உயரமான முருகன் சிலை அமைந்து உள்ளது.

140 அடி உயரத்துடன் விளங்கும் இந்த சுதை சிற்பத்தினை தமது குழுவினருடன் வடித்தவர் - திருஆரூர் சிற்பி திரு R. தியாகராஜன்.

தாய்லாந்திலிருந்து தருவிக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவையுடன் ஜொலிக்கும் முருகனின் திருமேனி - ஜனவரி 2006 -ல் ஒரு டன் எடையுள்ள செவ்வந்திப் பூமாலை அணிவிக்கப்பட்டு தீப ஆராதனையுடன் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கூடுதல் செய்திகளை வழங்கிய விக்கிபீடியாவிற்கு நன்றி.

சிறப்புமிகு பத்துமலையில் நடந்த தைப்பூசத் திருவிழாவின் காட்சிகளை
காணொளியுடன் இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.














பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் -  272 படிகளை மட்டுமின்றி - 
இன மொழி வேறுபாடு எனும் தடைகளையும்  கடந்து - மலைக்குகையில் விளங்கும் ஸ்ரீதண்டாயுதபாணியைத் தரிசித்து மகிழ்ந்திருக்கின்றனர்.

பக்திப் பரவசத்துடன் காவடிகள் ஏந்தியும் பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் தமது வேண்டுதலை நிறைவேற்றினர்.

மலேசியாவில் பினாங்கு நகரிலும் மற்றும் தண்ணீர்மலை தண்டாயுதபாணி கோயிலிலும் தைப்பூசத் திருநாள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

(நாளைய பதிவிலும் தைப்பூச தரிசனம் தான்!..) 

1987-ல் மலேசியா சென்ற போதும் - திருக்கோயில்களைத் தரிசிக்க முடிய வில்லை.

பத்துமலைப் பரமனைத் தரிசிக்க வேண்டும் - என, தணியாத தாகம் உண்டு!..
தாகத்தினைத் தீர்த்தருள்வான் தண்டபாணி என்ற நம்பிக்கையும் உண்டு!..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..
வீரவேல் முருகனுக்கு அரோகரா!..
* * *  

14 கருத்துகள்:

  1. மலேஷியாவுக்குச் செல்லும் தமிழர்கள் இந்த பத்துமலை முருகனை தரிசிக்காமல் வருவதில்லை, என் இரு மகன்களும் அது பற்றிக் கூறி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி.

      நீக்கு
  2. தைப்பூச விழா பதிவு அருமை காணொளியும் கண்டு களித்தேன் தங்களது அவா நிறைவேற இறைவனை வேண்டுகிறேன், நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களின் வேண்டுதல் கண்டு மனம் நெகிழ்கின்றது
      இனிய வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி.

      நீக்கு
  3. அழகான புகைப்படத் தொகுப்பு, மற்றும் காணொளியையும் கண்டேன் ஐயா. பணிச்சுமையால் காலதாமதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      பணிச் சுமைகளுக்கு இடையேயும் -
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பத்து மலை முருகன் கோயிலுக்குச் சென்று வந்த
    நிலைவலைகள் நெஞ்சில் மோதுகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய நினைவலைகளைக் கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  5. காணொளி மூலம் கண்டு களித்தோம்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் களிப்பினைக் கண்டு எனக்கும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  6. பத்துமலை முருகன் பற்றிக் கேள்விப் பட்டுள்ளோம். உங்கள் காணொளியும், படங்களும் நேரில் கண்டது போல மகிழ்வைத் தந்தது. அந்த குகை ரொம்ப அழகு. நேரில் காணத் தூண்டும் அழகு..ம்ம்ம் எப்போது வாய்ப்பு கிடைக்குமோ!!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பத்துமலை தரிசனம் செய்ய என்னுள்ளும் ஆவலுண்டு..
      நம்முடைய ஆவல் நிறைவேற வள்ளல் பெருமான் வழிகாட்டுவான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. பத்துமலை முருகன் தரிசனம் - காணொளியும் அருமை....

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      பத்துமலை தரிசனம் செய்த தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..