சனி, பிப்ரவரி 14, 2015

சிவ தரிசனம் - 02

கடலைக் கடையலாமா!..

அடாததை தயக்கமின்றிச் செய்தவர்கள் - செய்பவர்கள் - அசுரர்கள்.

இவர்களின் தாய் திதி. எனவே அசுரர்களுக்கு தைத்யர்கள் எனப் பெயர்.

அடாததை தயக்கத்துடன் செய்தவர்கள் - செய்பவர்கள் - சுரர்கள்.

இவர்களின் தாய் அதிதி. எனவே சுரர்களுக்கு ஆதித்யர்கள் எனப் பெயர்.

திதி, அதிதி ஆகிய இருவருமே - காஸ்யப முனிவரின் மனைவியர்.

ஆக, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிதடி என்பது பங்காளிச் சண்டை!..


அண்டம் எங்கிலும் அதிகாரம்!..  - அது ஒன்றே இரு தரப்பினரின் நாட்டமாக இருந்தது.

அமர லோகத்தின் அரியாசனத்தை விடமாட்டேன்!.. - தேவேந்திரன்

அதை எப்படியும் அடைந்தே தீருவோம்!.. - அசுரர்கள்.

கொடாக்கண்டன் விடாக்கண்டன் - என வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தனர்.

தேவர்களுக்கு அமைந்த மாதிரி தலைமை அமையவில்லை அசுரர்களுக்கு.

அப்படியே அமைந்தாலும் ஏடாகூடமாக வரங்களைக் கேட்பதும் -
அந்த வரங்களாலேயே அழிவதுமாக இருந்தனர் - அசுரர்கள்.

நிலைமை இப்படி இருக்க -

பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க ஆதரவு வேண்டி - வெள்ளைக் கொடி பிடித்துக் கொண்டு தேவர்கள் அசுரர்களைத் தேடிச் சென்றனர்.

என்னடா.. இது?.. வராத விருந்தாளிகள்!.. - என அசுரர்கள் திகைத்தாலும் வாங்க.. வாங்க !.. - என்று வரவேற்றனர். உட்கார்ந்து பேசினர்.

எல்லாவற்றுக்கும் முட்டு கொடுக்கும் சுக்ராச்சார்யார் கூட சும்மா இருந்தார்.

அமுதத்துக்காக சமரசமாகி கூட்டணி அமைத்தனர்.
ஒரு கொள்கை  உடன்பாட்டுக்கு வந்தனர்.

ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு - ஏனைய வித்யாதரர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் - கொள்கை விளக்கம் அளித்தனர்.

அதன்படி - மந்தர மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைவது - என முடிவாயிற்று.

இழுத்துக் கட்டிக் கடையக் கயிறு வேண்டுமே!..

நல்ல காலம்!.. நாகங்களுள் ஒன்றான வாசுகி அந்தப் பக்கம் ஒரு ஓரமாகப் போகவும், அதை மடக்கி விரட்டிப் பிடித்தாகி விட்டது. 

அந்த விநாடியிலிருந்து - வாசுகிக்கு கெட்ட காலம் ஆரம்பமாயிற்று!..

ஏன்?.. எதற்கு?.. என்று புரியாமல் திகைத்தது வாசுகி.

விஷயம் அறிந்ததும் - ஏழரையான் எட்டிப் பார்த்தாற்போல இருந்தது.
  
அதற்கு அப்பொழுதே அங்கேயே வயிறு கலங்க  ஆரம்பித்து விட்டது.

''ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்து இழுத்தால் அறுந்து போவேனே!..'' - என்று பரிதாபமாக முனகியது - வாசுகி.

இருந்தாலும் நம்மவர்கள் விடவில்லை. உனக்கும் ஒருபங்கு!.. என்று சொல்லி ஓரமாக ஓலைப் பெட்டிக்குள் அடைத்து - சுற்றி வைத்து விட்டார்கள். 

ஒரு சுபயோக சுபதினத்தில் மந்தர மலையைத் தூக்கிக் கடலில் போட்டாகி விட்டது.

கொஞ்சம் யோசனையாகவே இருந்தது வாசுகிக்கு. ஓரக்கண்ணால் பார்த்தால் - தேவேந்திரன் வஜ்ராயுதத்தை வைத்துக் கொண்டு நிற்கின்றான்.

வாயடைத்துப் போன வாசுகி தானாகவே சென்று மந்தர மலையைச் சுற்றிக் கொண்டது. இப்போதும் அதற்கு பெருங்குழப்பம் தான்!.. காரியம் முழுதாக நிறைவேறுமா என்று!..

தேவேந்திரன் தன்னுடைய சகாக்களை எல்லாம் அழைத்து மெல்லிய குரலில் எதையோ பேசினான்.

அந்தப் பக்கம் குதுகலத்துடன் அசுரர்கள்!.. அமுதம் அப்போதே கிடைத்து விட்ட  மாதிரி..

அசுரர்களும் கூட்டங்கூடிப் பேசினார்கள். அமுதம் கிடைத்ததும் முதல் கை அமுதத்தில் ... அடுத்த கை தேவேந்திரன் தலையில் - என்று!.

எங்கும் ஒரே ஆரவாரக் கூச்சல்!.. கைதட்டல்கள்!..

கயிலாயம் வரைக்கும் போயிற்று சத்தம்!... தவத்திலிருந்த சிவம் விழித்தது.


''..நந்தி!..''

''..ஸ்வாமி!.. இந்த இரண்டு பேருக்கும்... வேற வேலை எதுவும் இல்லையா!.. அதனால சும்மா இருக்க முடியாம கடலை வறுக்க.. இல்ல.. இல்ல.. கடலைக் கடையப் போறாங்களாம்!..''

பணிவிலும் பணிவாக பதில் சொன்னார் - நந்தியம்பெருமான்.

சிவம் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தது.


''..அப்பா!..'' - குறு குறு எனத் தவழ்ந்து ஓடி வந்தான் - கோலக் குமரன்.

அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் - அன்னை சிவகாமசுந்தரி.

''அவர் தவம் கலைந்து விட்டால், மறுபடியும்  நான் மயிலாகப் பிறக்க வேண்டுமே!.. '' - என்று.

* * *

பாற்கடல் ஓரத்தில் - திருவிழாக்கடை போல ஒரே கூட்டம். 

வித்யாதரர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் - திரண்டு வரும் அமுதத்தைக் காண காத்திருந்தனர்.

மகத்தான தவமிருந்து சித்தி அடைந்த யோகியர்களும் முனிவர்களும் - கூட சிறுபிள்ளைகளைப் போல ஆவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

''..சரி!.. நாங்கள் எல்லோரும் வால் பக்கம்!..'' - தேவர்கள்.

''..இல்லை.. இல்லை..  எங்களுக்குத் தான் வால்!..'' - அசுரர்கள்.

''அதிலென்ன சந்தேகம். உங்களுக்குத் தான் வால்!.'' - என்று மனதிற்குள் சிரித்த
தேவேந்திரன் அசுரர்களிடம் வந்தான். 

''..சொல்லிப் பாருங்கள் - தல!.. என்று.. வாயெல்லாம் தித்திக்கும். தலையின்  சிறப்பு நீங்கள் அறியாததா!?.. இந்த நல்ல காரியத்துக்கு நீங்களே தலைமை அல்லவா!..'' - என்றான்.

இந்த வஞ்சப் புகழ்ச்சியைக் கேட்டு அசுரர்களுக்கு ஆனந்தம் - இந்திரனின் தலையே கைக்கு வந்துவிட்ட மாதிரி..

ஆனால், தேவேந்திரனின் திட்டம் என்ன?..

''வாசுகி ஏகக் கடுப்பில் இருக்கிறது. விழுந்து கடித்தால் அவர்களையே கடித்து வைக்கட்டும்!.. - என்பது தான்!..


ஆயிற்று.  தலைவிதியை நொந்து கொண்டிருந்த வாசுகியின் தலையை அசுரர்களும்,  வாலை தேவர்களும் பிடித்து - இப்படியும் அப்படியுமாக இரண்டு இழுப்பு இழுத்தார்கள்..

மந்தர மலை சுழன்றது. கடல் நுரைத்துக்  கலங்கி - பொங்கியது.

அவ்வளவுதான்!..

மத்தாக நின்ற மந்தர மலை ஒருபுறமாகச் சாய்ந்து விழுந்து கடலுக்குள் போய் விட்டது.

வாசுகிக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!.. கடைவதைக் கைவிட்டு விடுவார்கள் என்று!..

"என்ன ஆச்சு?.. என்ன ஆச்சு?..'' - அங்குமிங்கும் கூக்குரல்கள்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

இந்திரன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நாரதர் வருகிறாரா!.. - என்று.

அப்போது,  இளந்துறவி ஒருவர் சொன்னார் -

'' அடே!.. மூடர்களே.. மத்து நின்று சுழல ஒரு அச்சு வேண்டாமா?..''

பழுத்த பழங்கிழவர்கள் எல்லாம் பல் தெரியச்  சிரித்தார்கள்.

தேவேந்திரனுக்கு வெட்கமாகி விட்டது.

இந்த முனிவர்களிடமும் போய், ''..இளமையாய் இருப்பது எப்படி?..'' - என்று யோசனை கேட்டவன் தான் இந்திரன்.

பெரும் யோகிகளான முனிவர்கள் சொன்னார்கள் -

''..இதெல்லாம் பெருந்தவமிருந்து பெற்ற யோகசித்தியினால் விளைந்தது!..'' என்று.

போகத்துள் கிடக்கும் தேவேந்திரன் - யோகியரின் பேச்சைக் கேட்பானோ!..

அத்தோடு அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.

இப்போது அதையெல்லாம் யோசிக்க நேரமில்லாத தேவேந்திரன்,

வாசுகியைக் கையில் பிடித்துக் கொண்டு - விட்டால் தான் ஓடிப் போகுமே - வைகுந்தம் நோக்கிப் போனான்.

அவன் பின்னாலேயே எல்லாரும் கூட்டமாக ஓடினார்கள்.


''..நாராயணா!.. கோவிந்தா!.. கோ....விந்தா!..'' 

வைகுந்தத்தின் வைரமணிக் கதவுகள் திறந்தன..

''வாருங்கள்.. வாருங்கள்!..'' -  வரவேற்றனர் வாசுதேவன் தம்பதியினர்.

''..கோவிந்தா!.. கோ....விந்தா!..'' - மறுபடியும் தேவாசுரர்களின் கோஷ்டி கானம்.

''..அதுதான் தெரியுமே!. அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?..''

திருமகளை நோக்கிய - ஆராஅமுதன், அனந்தசயனன் - ஸ்ரீஹரிபரந்தாமன் புன்னகைத்தான்!..

அன்னை அமிர்தலக்ஷ்மியின் முகத்திலும் புன்னகை படர்ந்தது. 

தேவேந்திரனுக்கு சொல்ல வார்த்தை வரவில்லை. தொண்டைக்குள் நிற்கிறது அழுகை. அசுரர்களுக்கு முன்னால் அழுது விடக்கூடாது என்று தவித்தான்.

''அஞ்சேல்!.. யாம் மந்தர மலைக்கு அச்சாக இருப்போம்!..''   என அபயம் அளித்த  அச்சுதன் - தன் மனதில் நினைத்துக் கொண்டான் -

''அப்போதே வந்திருந்தால் இந்தத் தொல்லையே இருந்திருக்காது!..'' - என்று.

அல்லல் அகற்றி அபயம் அருளும் - அமுதனை அறிந்து அடைந்தாரில்லை!.. 

கையில் வெண்ணெய் இருந்தும் நெய்க்கு ஏங்கினான் - தேவேந்திரன்!..

இந்நிலையில் -

அச்சுதனின் ஆதரவைப் பெற்றதும் - தேவாசுர கூட்டணிக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை.

கடலை மறுபடியும் கலக்கியடிக்க ஆரவாரத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

தேவேந்திரனின் கைக்குள் சிக்கிக் கொண்டிருந்த வாசுகி -

கிடைத்த ஒரு கணத்தில், கண்ணீருடன் தலையை உயர்த்தி ஆயிரந்தலை  ஆதிசேஷனைப் பார்த்து -  '' செளக்கியமா!..''  - என்றது.  

அந்த வார்த்தைக்கு -   ''.. என் கதியைப் பார்த்தாயா!.. '' - என்று அர்த்தம்!


ஆராஅமுதனாகிய ஸ்ரீஹரிபரந்தாமன் திருவுளங்கொண்டபடி - பொன்னொளி மின்னும் ஆமையாகி பாற்கடலுள் விரைந்தான்.

கடலுள் வீழ்ந்து கிடந்த மந்தரமலை மெல்ல மெல்ல நிமிர்ந்து நேராக நின்றது.

எங்கும் ஜயகோஷம். உற்சாகம்.

தேவேந்திரனுக்கு அமிர்தம் கிடைத்து விட்டதாகவே சந்தோஷம்.

அவனுக்குத் தெரியாது - நாடகத்தில் நடைபெற வேண்டிய காட்சிகள் இன்னும் இருப்பது!..

-: விறுவிறுப்பான காட்சிகள் - நாளை!.. :-

திருச்சிற்றம்பலம் 
* * *

18 கருத்துகள்:

  1. நாளைய விறுவிறுப்பான காட்சிகளுக்காகக்
    காத்திருக்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்களுடைய ஆவலைக் கண்டு எனக்கும் பதற்றமாக இருக்கிறது.
      சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்ல வேண்டுமே என்று!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. மிக மிக மிக ரசனையாக எழுதி உள்ளீர்கள் ஐயா... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. தங்களின் நடை அருமை. பக்தி இலக்கியத்தை இப்படி நான் பார்க்கவில்லை. அருமையாக வருகிறீர்கள். வருங்கள் காத்து இருக்கிறேன். என்ன நடக்கும் என்று ,,,,,,,,,,,,,,,,, எல்லாம் அவன் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மீதியையும் நயமாகச் சொல்ல வேண்டும்..
      எனக்கும் பதற்றமாக இருக்கின்றது.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. சுவாரஸ்யமாய்...செல்கிறது கதை. நீங்கள் சொல்லிச்செல்லும் விதம் அழகாய் மனதில் பதிந்து விடுகிறது. நாளைக் காட்சிகளுக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. ரசனையாக ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. முகல் பாகமும் வாசித்தாயிற்று. அருமையான தொடராகச் சொல்லி உள்ளீர்கள்! சிவராத்திறிச் சிறப்பு நிகழ்வாக உள்ளது ஐயா! ரசித்தோம், தெய்வீக வாசத்துடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும்
      இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வெகு அழகாய் கதை சொல்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  9. விறுவிறுப்பான நாடகம் - சிற்சில திருப்பங்களுடன்....

    அடுத்த பகுதிக்கு இப்போதே விரைகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..