திங்கள், ஜனவரி 12, 2015

மார்கழிக் கோலம் 28

குறளமுதம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. (261)  

January 12, 1863
இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்.
   

பிறவற்றால் தமக்கு விளைந்த துன்பத்தைப் பொறுத்தலும் 
எக்காரணம் கொண்டும் பிற உயிர்கட்கு துன்பம் செய்யாதிருப்பதும்
ஆகிய தன்மையே தவம் ஆகும்
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 28


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத 
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *

ஆலய தரிசனம்
குருவாயூர்



மூலவர் - ஸ்ரீ உன்னி கிருஷ்ணன் , பால கிருஷ்ணன்

தீர்த்தம் - ருத்ர தீர்த்தம்
தலவிருட்சம் - துளசி

துவாரகையில் அவதார நோக்கம் நிறைவேறியதும் உத்தவரை அழைத்து கண்ணன் சொன்னான் - 

இன்றிலிருந்து ஏழு நாள் துவாரகையை கடல் கொள்ளும்!.. - என்று.

உத்தவர் அதிர்ந்தார். அவரிடம் மேலும் நடக்க இருப்பவைகளை விவரித்தான் கண்ணன்.

கண்ணா.. நீ இல்லாமல் நாங்கள் எப்படி உயிர்த்திருப்போம்!.. - உத்தவர் மனம் கலங்கினார்.

அப்போது தன்னைத் தான் உகந்து - தன் திருமேனியை உத்தவரிடம் கொடுத்தான் ஸ்ரீ கிருஷ்ணன்.

ஏழாம் நாள் கடல் கொள்ளும் போது இந்த திருமேனி வெள்ளத்தில் மிதந்து வரும் . இதனைக் கண்டெடுத்து தேவகுரு ஆகிய பிரகஸ்பதி மற்றும் வாயு இருவரது துணை கொண்டு பூமியில் தக்கதொரு இடத்தில் பிரதிஷ்டை செய்வாயாக!.. நான் எப்போதும் விருப்புடன் அங்கே வாசம் செய்வேன்!.. - என்று அருளினான். 

அதன்படி வெள்ளத்தில் மிதந்து வந்த திருமேனியை தேவகுருவும் வாயுவும் - கொணர்ந்து பரசுராம ஷேத்ரத்தில் சிவபெருமான் தவமிருந்த ருத்ர தீர்த்தக் கரையில் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். 

பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீஹரிபரந்தாமன் பூவுலக மக்களுக்காக எண்ணற்ற க்ஷேத்திரங்களில் பல்வேறு திருக்கோலங்களில் திருக்காட்சி அளிக்கின்றான். 


எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணனாக திருக்காட்சி நல்கும் திருத்தலங்களுள் - சிறப்பானது - குருவாயூர்.

குருவாயூர் பழைமையான திருத்தலம். ஆதி குருவாயூர் திருக்கோயிலினை தேவசிற்பியான விஸ்வகர்மா நிர்மாணித்ததாக ஐதீகம்.

கார்த்திகை முதல் நாளில் இருந்து குருவாயூர் கோயிலில் மண்டலகாலம் அனுசரிக்கப்படும். மண்டல பூஜையின் போது நாற்பது நாட்களும் பஞ்சகவ்ய அபிஷேகமும் நிறைவு நாளன்று களப அபிஷேகமும் நிகழும். 

களப அபிஷேகத்திற்காக சந்தனம், பன்னீர், குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம் முதலானவற்றைக் கொண்டு கோயிலிலேயே சந்தனக் கலவை தயாரித்து ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிடுவார்கள். 

அன்று முழுதும் ஸ்வாமி சந்தனக் காப்பிலேயே திருக்காட்சி நல்குவார்.

பட்டத்ரி ஸ்ரீ நாராயணீயத்தைச் சொல்லச் சொல்ல ஸ்ரீஉன்னி கிருஷ்ணன் ஆமாம்!.. ஆமாம்!.. - என்று தலையசைத்து ஏற்றுக் கொண்டதாகச் சொல்வர்.

ஞானி மேல்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டத்ரி - ஸ்ரீநாராயணீயத்தினை கோயில் வளாகத்தில் இருந்தே இயற்றினார். அவர் அமர்ந்திருந்த மேடை புனிதம் எனக் கருதி பாதுகாக்கப்படுகின்றது.

இத்திருக்கோயிலில் தனிப்பட்ட அர்ச்சனை ஆராதனை என்று வெளியில் இருந்து வரும் எதையும் அனுமதிப்பதில்லை. கட்டளை பூஜைக்கு பணம் செலுத்தினால் கோயில் நிர்வாகமே அனைத்தையும் செய்கின்றனர்.

அதிகாலை இரண்டரை மணிக்கே குளித்து விட்டு - பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். மூன்று மணிக்கு மங்கல இசையுடன் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம். 

முதல் நாள் இரவு அணிவிக்கப்பட்ட ஆடை ஆபரண அலங்காரங்களைக் களைந்த நிலையில் விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் கிருஷ்ணனுக்கு தைலாபிஷேகம். 

இது சுத்தமான நல்லெண்ணெய்யில் செய்யப்படுவது. இந்த எண்ணெய் கோயிலிலேயே நாட்டுச் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகின்றது. 

தைலாபிஷேகம் முடிந்த பின் வாகைச்சாத்து. மருத்துவ குணமுடைய வாகை மரப்பட்டைகளை இடித்து சலித்து - மிருதுவான பொடியினை கிருஷ்ணனின் திருமேனியில் சாத்துவதே - வாகை சாத்து.


பலிபீடத்தினைக் கடந்து சந்நிதிக்குச் செல்லும் முன்பாக இரு மருங்கிலும் உரலில் - வாகைத் தூள், சந்தனத் தூள் - இடிப்பதைக் காணலாம்.

அதன் பின் சங்காபிஷேகம். தொடர்ந்து தங்க கலசம் கொண்டு தூய நீரால் அபிஷேகம். அதன் பின் - அவல்பொரி, வாழைப்பழம், சர்க்கரை - நிவேத்யம் செய்யப்படும்.

ஸ்ரீகிருஷ்ணனுக்கு நெய் பாயசம் மிகவும் பிடித்தமானது என்பதால் - அதுவே இங்கு பிரதானம்.

உஷத் பூஜையின் போது மயிலிறகு புல்லாங்குழல் பொன்னாபரணங்களுடன் ஸ்வாமியைத் தரிசிக்க - கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

உஷ பூஜை முடிந்ததுமே - சீவேலி!.. கோயில் யானையின் மீது ஸ்ரீகிருஷ்ண விக்ரகத்துடன் (உற்சவ திருமேனி) கருவறையைச் சுற்றி வருவர்.

மூலத் திருமேனி பால கிருஷ்ண அம்சம் என்பதால் ஸ்வாமிக்கு நிவேத்யம் செய்யப்படுபவை -   நெய்பாயசம், பால் பாயசம், அப்பம், திரிமதுரம் மற்றும் கனி வகைகள்.


அந்தி வேளையில் மூலஸ்தானத்தைச்சுற்றிலும் அடுக்கு தீபங்கள் ஏற்றப் படுகின்றன. 

சந்நிதியின் முன்னுள்ள ஏழடுக்கு பெருந்தீபமும் ஏற்றப் படுகின்றது. மங்கள ஆரத்தியின் போது சகல தேவர்களும் வந்து தரிசிப்பதாக ஐதீகம்.

ஸ்ரீகோயிலின் அருகில் கணபதி சந்நிதி உள்ளது. 

சந்நிதிக்கு வெளியே தான் - பிரசாதமாக சந்தனமும் தீர்த்தமும் தருகின்றனர்.

ஸ்ரீகோயிலின் சுற்றுச் சுவர்களில் மூலிகை வண்ணங்களைக் கொண்டு கேரள பாணி ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

துலாபாரம் கொடுப்பது இங்கே பிரசித்தம். சர்க்கரை, கரும்பு, வாழைப் பழம்,  நெல், அரிசி, தேங்காய் - என வேண்டுதலின் பேரில் எடைக்கு எடை செலுத்தி மகிழ்கின்றனர்.

கோயில் வளாகத்தில் குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டுவது சிறப்பாக கலகலப்புடன் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

ஸ்ரீகிருஷ்ணன் சந்நிதியில் அன்னம் ஊட்டப்பட்டால் வாழ்நாள் முழுதும் உணவுக்குக் குறை வராது என்பதும் நோய் நொடி வராது என்பதும் மக்களின் நம்பிக்கை.

குருவாயூர் கோயிலுக்கென நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. 


விஷேச திருநாட்களின் போது நடைபெறும் ஆனை ஓட்டம் பிரசித்தி பெற்றது. 

குருவாயூரின் யானைக் கொட்டாரம் உலகின் மிகப் பெரிய பூங்கா. 
இங்கிருந்த பத்மநாபன் கேசவன் எனும் யானைகள் சிறப்பானவை. 

தனித்துவமான கேசவன் யானைக்கு சிலை வைத்திருக்கின்றனர்.

குருவாயூர் க்ஷேத்திரத்திற்கு அருகில் மம்மியூர் எனும் தலத்தில் சிவன் அம்பலம் விளங்குகின்றது. இத்தலத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது மரபு.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட தலமாக இல்லை. 

திருச்சூரிலிருந்து 30 கி,மீ. தொலைவில் உள்ளது குருவாயூர். 

தமிழகத்தின் பல முக்கியமான நகரங்களில் இருந்து குருவாயூருக்குப் பேருந்துகள் இயங்குகின்றன. 

எனினும் தஞ்சையிலிருந்து குருவாயூருக்குப் பேருந்துகள் கிடையாது.

காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் சென்று திருச்சூரில் இறங்கி அங்கிருந்து குருவாயூர் செல்லலாம்.

இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர் திறத்தமா
வரந்தரும் திருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்
பரந்தசிந்தை ஒன்றிநின்று நின்னபாத பங்கயம்
நிரந்தரம்நி னைப்பதாக நீநினைக்க வேண்டுமே!.. (852)  
திருமழிசையாழ்வார் அருளிய திருப்பாசுரம்.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவாசகம் - பிடித்த பத்து


உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெருமானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!.. (1) 
* * *

திருக்கோயில்
பாபநாசம்


இறைவன் - கயிலாய நாதர், பாவநாசர்
அம்பிகை - உலகம்மை
தீர்த்தம் - தாமிரபரணி
தலவிருட்சம் - களா மரம்

தலப்பெருமை
மா முனிவர் அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய தலம்.
நவ கயிலாயத்துள் முதலான திருத்தலம். 

பார்வதி பரமேஸ்வரர் திருமண வைபவத்தின் போது ஈறேழு பதினான்கு புவனங்களும் கூடியதால் வடகோடு தாழ்ந்து - தென்கோடு உயர்ந்தது.

அந்த வேளையில் - அகத்தியரைக் கும்பத்திலிருந்து உருவாக்கினார் ஈசன்.

தெற்கை நிலைப்படுத்துமாறு அகத்தியரைப் பணித்தார்.

ஈசனின் ஆணையை சிரமேற்கொண்டாலும் அகத்தியர் - மனம் வருந்தினார்.

பெருமானே - அண்டப் பிரபஞ்சமும் தங்களது திருமணக் காட்சியைக் கண்டு இன்புறும் போது எனக்கு மட்டும் அந்தப் பேறு இல்லையா?..

பொதிகை மலையில் அகத்தியனின் விரும்பும் ஈடேறும்!.. - என்று அருளினன்.

அந்த அளவில் தென்னகத்துக்கு வந்த அகத்திய மகரிஷிக்கு பொதிகை மலையில் திருமணக் காட்சி அருளப்பட்டது.


அது தவிர - அகத்தியர் விரும்பும் போதெல்லாம் அவருக்கு ஈஸ்வர தரிசனம் கிடைத்தது.

உரோமசர் என்ற முனிவர் முக்திப் பேற்றை எண்ணித் தவமிருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய இறைவன் - குருவருள் பெற்று உய்க!.. என்று அருளினன்.

அது கேட்டு மகிழ்ந்த முனிவர் - அகத்திய மாமுனிவரை அணுகி தம்மை சீடனாக ஏற்றும் உய்விக்க வேண்டுமெனப் பணிந்தார்.

தமது உள்ளக் கிடக்கையையும் கூறினார்.

அவருக்கு ஞான உபதேசம் செய்வித்த அகத்தியர், தாம் தாமிரபரணியில் ஒன்பது தாமரைப் பூக்களை மிதக்க விடுவதாகவும் - அந்தப் பூக்கள் கரை ஒதுங்கும் இடத்தில் எல்லாம் சிவ பூஜை செய்தால் முக்தி நலம் எய்தலாம் என்றும் அருளுரை வழங்கி ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விட்டார். 

உரோமச முனிவரும் குருநாதர் கூறியபடியே வழிபட்டார். சூரியன் முதல் கேது வரையிலான எல்ல கிரக தோஷங்களும் நீங்கிய நிலையில் முக்தி நலம் எய்தினார் என்பது ஐதீகம்.

தாமரை ஒதுங்கிய தலங்களே நவ கயிலாயங்கள் என போற்றப்படுகின்றன.

பாபநாசம் திருக்கோயில்
அவற்றுள் முதல் பூ ஒதுங்கிய தலம் - பாபநாசம்.

வடக்கிருந்து தெற்காக ஓடி வரும் தாமிரபரணி - திருக்கோயிலின் வாசலில் கிழக்கு முகமாகத் திரும்புகின்றது.

திருக்கோயிலில் உச்சிகால பூஜை முடிந்ததும் - இந்த துறையில் தான்  மீன்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகின்றது.

சற்றே ஆபத்தான இடம். ஐயனின் அருளால் பயமில்லை. எனினும் இரும்புக் கம்பிகள் தடுப்பாக உள்ளன.

தாமிரபரணியில் மூழ்கி எழும் போதே அகமும் புறமும் குளிர்கின்றது.

இங்கே பிதுர் தோஷம் நீங்குகின்றது. நவக்கிரகங்களுள் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் இங்கு நீங்குகின்றன.

நான்காண்டுகளுக்கு முன் அகத்தியர் அருள் வாக்கின்படி - குடும்பத்துடன் பாபநாசம் சென்றிருந்தோம். 

அந்த நாள் ஞாயிறும் அமாவாசையும் கூடி வந்த நாள்.

தாமிரபரணியில் நீராடி அங்கேயே தர்ப்பணம் செய்தேன்.
அம்மைக்கும் அப்பனுக்கும் வஸ்திர உபசாரம் செய்து அர்ச்சித்தோம்.

மூலஸ்தானத்தில் எம்பெருமானை வணங்கி வலம் வரும்போது திருச்சுற்றில் திருக்கல்யாணக் கோலங் கொண்டு - ரிஷப வாகனத்தில் விளங்குகின்றனர்.

உலகம்மை சந்நிதியின் முன்பாக பெரிய கருங்கல் உரலும் உலக்கையும் இருக்கின்றது. அதில் மஞ்சளை இட்டு இடித்து அம்பிகைக்கு கொடுக்கச் சொன்னார்கள். 

அப்படியே செய்தோம். நிறைய பெண்கள் அவ்வாறு செய்கின்றனர்.


சிவதரிசனம் முடிந்தது வெளியே வந்தபோது கோயிலின் எதிரில் இருந்த மண்டபத்தில் அகத்திய மாமுனிவரது திவ்ய தரிசனம் கிடைத்தது. குருவை வணங்கி அருளாசிகளைப் பெற்றோம். வாழ்வின் பொன்னான தருணம் அது.

திருக்கோயிலிலிருந்து மேலே அகத்தியர் அருவி இருக்கின்றது.

தனியார் வாகனங்கள் இயங்குகின்றன. அங்கேயும் சென்றோம்.

அகத்தியர் அருவியில் நீராடி விட்டு - அவர் வழிபட்ட முருகன் கோயிலில் ஆனந்த தரிசனம்.

இங்கிருந்து மலைக்கு மேலேதான் கல்யாண தீர்த்தம். புகழ் பெற்ற சொரிமுத்து ஐயனார் திருக்கோயில் விளங்குவதும் அங்கேதான்.

சபரி மலைக்குச் செல்லும் போது சொரிமுத்து ஐயனாரைத் தரிசனம் செய்துள்ளேன்.

தைப் பூசத்தன்று நந்திக்கு சந்தனக்காப்பு செய்விக்கப்படுகின்றது.

சித்திரையில் பெருந்திருவிழா.

சித்திரை முதல் நாள் கல்யாண சுந்தரராக அகத்தியருக்குத் திருமணக்காட்சி.


பொதிகை மலைச் சாரலில் உள்ள திருத்தலம்.

பாவநாசம்,பொதியின் மலை என்றெல்லாம் அப்பரும் ஞானசம்பந்தரும் திருப் பதிகங்களில் குறிப்பிடுகின்றனர்.

நேரிடையான திருப்பதிகம் கிடைக்காததால் வைப்புத் தலம் என்றாகின்றது.

நெல்லையிலிருந்து பாபநாசத்திற்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ 
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 
நற்றுணை யாவது நமசிவாயவே!.. (4/11/1) 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே!.. (4/11/8)
அப்பர் பெருமான்.
   
திருச்சிற்றம்பலம் 
* * *

12 கருத்துகள்:

  1. கணினி கோளாறு காரணமாக தொடர்ந்து வருகை தர இயலவில்லை ஐயா.
    இன்னும் முழுமையாக கணினி சீர்செய்யப்ட வில்லை
    இரண்டொரு நாளில் முழுமையாகும் என எண்ணுகின்றேன்
    அதன் பின் தொடர்ந்து வருகை தருவேன் ஐயா
    தமிழர் திரு நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையே மகிழ்ச்சி..
      தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  2. குருவாயூர் சென்றுள்ளோம். பாபநாசம் சென்றதில்லை. செல்வோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக குருவாயூர் சென்றபோது மிகவும் நிம்மதியாக இறைவனைப் பார்த்தேன். பின்னர் போகப் போக அங்கு செல்வதே விருப்பம் இல்லாத அளவு ஆகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்றபோது கிட்டத்தட்ட 1 கிமீ தூரத்திற்கு வரிசையில் நின்று சிரமப்பட்டு வழிபட வேண்டியிருந்தது. பெரும்பாலும் முக்கியமான பெரிய கோயில்கள் இப்போது இவ்வாறு ஆகிவிட்டன என்பது வேதனைக்குரியதே. கட்டுப்பாடின்றி வரிசையில் விட்டாலே நீண்ட வரிசை வர வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நெடுநேரம் வரிசையில் நிற்பதென்பது எல்லோராலும் இயலாது.
      நீங்கள் சொல்வது சரியே..கட்டுப்பாடு இன்றி சீராக விட்டாலே போதும். கூட்டத்தை வைத்துக் காண்பிப்பதில் திருப்தி போலும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. குருவாயூர் மறுபடியும் சென்று வந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. குருவாயூர் மற்றும் பாபநாசம் - சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  5. குருவாயூர் மூன்று முறை சென்று இருக்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  6. விவேகானந்தர் சிந்தனை அருமை.
    குருவாயூர் கண்ணன், பாபநாசம் பற்றிய செய்திகள், படங்கள் எல்லாம் கலந்த பதிவு மிக அருமை. செய்திகளை தொகுத்து தினம் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..