சனி, ஜனவரி 10, 2015

மார்கழிக் கோலம் 26

குறளமுதம்

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். (934)  

பேருடைய ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி 
அவனுடைய புகழைக் கெடுப்பது சூது. 
சூதினைப் போல் வறுமையும் சிறுமையும் தரவல்லது 
வேறொன்றும் இல்லை.

நளமகராஜன் நாட்டை இழந்து மனைவி மக்களைப் பிரிந்து 
சிறுமையுற்று நின்றது சூதாடியதால் தான்!..
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 26


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *

ஆலய தரிசனம்
திருநாகை



மூலவர் - நீலமேகப்பெருமாள்
உற்சவர் -  சௌந்தரராஜன்
தாயார் - சௌந்தர்யவல்லி
உற்சவ திருமேனி - கஜலக்ஷ்மி
தீர்த்தம் - சாரபுஷ்கரணி
விமானம் - சௌந்தர்ய விமானம்

ப்ரத்யட்சம்
நாகராஜன், திருமங்கையாழ்வார்.

மூலவர் சௌந்தர்ய விமானத்தின் கீழ் - கதையுடன் நின்ற திருக்கோலம்.
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தன்னை வேண்டித் தவமிருந்த நாகராஜனுக்கு - நின்ற, கிடந்த, இருந்த - எனும் மூன்று திருக்கோலங்களிலும் சேவை சாதித்துள்ளார் - பெருமாள்.


நின்ற வண்ணம் நீலமேகன்,  இருந்த வண்ணம் கோவிந்தராஜன், 
கிடந்த வண்ணம் அரங்கநாதன் - என மூன்று திருக்கோலங்கள் திகழ்கின்றன.

ரங்கநாதர் சந்நிதியில் பிரகலாதன் தலையில் வலது திருக்கரத்தினை வைத்து ஆசீர்வதித்தருளும் அஷ்டபுஜ ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியை தரிசிக்கலாம்.

தாயார் சந்நிதிக்கு தனியே கொடிமரம். 
இதைப்போல ஆண்டாள் சந்நிதிக்கும் தனியாக கொடிமரம் திகழ்கின்றது.


சௌந்தரராஜனை - திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

நாகராஜனுக்குப் பிரத்யக்ஷம் ஆனதால் - தலம் நாகப்பட்டினம் என்றானது.

ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
நாகையில் நீலாயதாக்ஷி சமேத காயாரோகண ஸ்வாமி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றது. அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஒன்று.

நாகராஜன் தன் பிழை தீர்வதற்காக - மகாசிவராத்திரியின் நான்காம் காலத்தில் வழிபட்ட திருத்தலம்.

ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பதிகம் பாடிப் பரவிய திருத்தலம்.

நாகை - சோழர்களின் துறைமுகப்பட்டினம்.
பொன்னும் மணியும் கொழித்துக் கிடந்த நகரங்களுள் நாகையும் ஒன்று.

கல்வி கேள்விகளில்சிறந்து விளங்கிய நகரம். 

சோறு எங்கே விற்(க்)கும்?.. - எனக் கேட்ட கவி காளமேகப் புலவருக்கு,

தொண்டையில் விக்கும்!.. - என்று பதில் கூறி கவிஞரைக் கலங்கடித்தவர்கள் - நாகையின் சிறார்கள்.



நாகையின் வடக்கே நாகூர், தெற்கே வேளாங்கண்ணி - என புகழ்பெற்ற தலங்கள் அமைந்திருக்கின்றன.

தமிழகத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நாகைக்கு சிறப்பான பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில் மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா!.. (1762)
திருமங்கையாழ்வார் அருளிய திருப்பாசுரம்.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருஅம்மானை
 
ஸ்ரீ கும்பேஸ்வரர், குடந்தை.
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் 
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்கண் அம்மானாய்.. (7) 
* * *

திருக்கோயில்
திருநள்ளாறு


இறைவன் - தர்ப்பாரண்யேஸ்வரர்
அம்பிகை - போகமார்த்த பூண்முலையாள்
தீர்த்தம் - நளதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்
தலவிருட்சம் - தர்ப்பை

தலப்பெருமை
ஈசன் - தர்ப்பைப் புல்லில் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலம்.
நளனைத் தொடர்ந்திருந்த சனைச்சரன்
அவனை விட்டு விலகிய தலம்.

முசுகுந்த சக்ரவர்த்தி இந்திர லோகத்தில் இருந்து கொணர்ந்த ஏழு விடங்கத் திருமேனிகளுள் இங்கே விளங்குவது நக விடங்கர். உன்மத்த நடனம்.

சந்நிதிக்கு எதிரில் - நந்தியும் பலிபீடமும் சற்றே ஒதுங்கியிருக்கின்றன.

என்ன காரணம்!?..

அரசனின் ஆணையை மேற்கொண்டு - திருக்கோயிலுக்கு பக்தி சிரத்தையுடன் பால் அளந்து வந்தார் கோனார் ஒருவர்.

பாலின் அளவு குறைவதாக - ஒரு முறையீடு மன்னரின் அவைக்குச் சென்றது.

யாதொரு அறிவிப்பும் இன்றி - மன்னன் நேரில் வந்தான். 
பால் வழங்கும் கோனாரை திருக்கோயிலில் வைத்து விசாரித்தான்.

இவன் பாலில் களவு செய்தான்!.. - என்று கோயிலின் கணக்கன் கூறினான்.

யான் யாதொரு பிழையும் இழைத்திலனே!.. - கண்ணீர் வடித்தார் கோனார். 

பலமுறை கேட்டும் - கோனாரிடமிருந்து கண்ணீரைத் தவிர்த்து வேறெதையும் பெற முடியவில்லை.  

ஆத்திரமடைந்த மன்னன் - சவுக்கால் விளாசுமாறு ஆணையிட்டான்.

அந்த வேளையில் சந்நிதிக்குள்ளிருந்து மின்னலென பாய்ந்து வந்த திரிசூலம் - கணக்கனின் மார்பினுள் ஊடுருவி நின்றது.

ஆ!.. - எனக் கதறிச் சாய்ந்தான் கணக்கன்.

பால் அளப்பவனுக்குச் சாட்சிகள் இல்லை என - நான் தான் பாதகம் செய்தேன். நான்தான் களவாடினேன். கட்டளைக் கோனார் அளந்த பாலை நாடளக்கும் கோனார் அறியமாட்டார் என எண்ணினேன். ஆனால் படியளக்கும் கோனார் அனைத்தையும் பார்த்திருப்பார் என்பதை மறந்து போனேன்!.. பால் அளந்த கோன் நிரபராதி!..

 - என்று சொல்லியவாறு உயிரை விட்டான் கணக்கன்.

நந்தியும் பலிபீடமும் விலகி வழிவிட - சந்நிதிக்கு உள்ளிருந்து சூலம் பாய்ந்து வந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் திகைத்தான்.

மனம் உடைந்தான். நீதி தவறி விட்டோமே - என்று!..

எனது ஆட்சியும் நல்லாட்சியா?.. சீச்சீ!.. மக்களை வதைக்கும் வன்கணாளர் நிறைந்த முள்ளாட்சி!.. கறை படிந்த இந்த ஆட்சி இத்தோடு முடியட்டும்!..  

- என்றபடி, உடைவாளால் தன் உயிரை மாய்த்துக் கொண்டு வீழ்ந்தான்.
   
கூடியிருந்த அனைவரும் கதறினர்.

பால் அளந்த கோனார் - பரமனடி வீழ்ந்து பதறினார்.

ஏழைக்கு இரங்குக ஏந்தலே!.. தகைமையான மன்னவனை மீண்டும் தந்தருள்க. பிழை செய்த கணக்கனைக் கருணையுடன் பொறுத்தருள்க!..

கோனாரின் அன்புக்கு இரங்கியருளினான் - ஈசன்.

அந்த அளவில், மாண்டு கிடந்த மன்னனும் கணக்கனும் மீண்டு எழுந்தனர்.

குலத்தால் இடையராயினும் குணத்தால் கொடையராகினீர்.. கடையரான எம்மையும் கடைத்தேற்றிய நீவிர் வாழ்க பல்லாண்டு!..

- என, கோனாருக்குப் பெருஞ்சிறப்பு செய்தனர்.

கோனாரும் வாழ்வாங்கு வாழ்ந்து - திருக்கோயிலின் சந்நிதியில் சிலையாக நின்றார். திருக்கோயிலின் தென்புறம் உள்ளது - இடையனார் கோயில்.

இங்கு கோனாரும் அவர் மனைவியும் சிலையாகத் திகழ்கின்றனர்.
கோனாரால் பிழைத்தெழுந்த கணக்கனும் சிலையாக விளங்குகின்றான்.

நள தீர்த்தம்
நள தீர்த்தக்கரையில் - கலி தீர்த்த விநாயகர், வைரவர் சந்நிதிகள்.

நள தீர்த்தக்கரையில் எக்காரணம் கொண்டும் அழுக்குத் துணிகளைப் போட வேண்டாம். 

அழுக்குத் துணிகளை அங்கு போடாமல் வருவதே - புண்ணியம்!..

திருக்கோயிலில் - தல விநாயகர் ஸ்வர்ண விநாயகர்.

நான்முகன், திருமால் , இந்திரன், அகஸ்தியர், புலத்தியர், நளன், அர்ச்சுனன் - வழிபட்டு நலம் பெற்ற திருத்தலம்.

மூலவர் - தர்மத்தைக் காத்த தலைவனாக தர்ப்பாரண்யேஸ்வரர்.

சிவலிங்கத்திருமேனி பிரகாசிக்கின்றது.

சந்நிதியின் தென்பால் முசுகுந்த சக்ரவர்த்தி கொணர்ந்த நக விடங்கர் சந்நிதி.
இங்கே நாளும் மரகத லிங்கத்திற்கு பூஜை நடக்கின்றது.

திருச்சுற்றில் அறுபத்து மூவர்.  நிருதி கணபதி, சோமாஸ்கந்தர், வள்ளி தேவசேனாபதியாக சுப்ரமண்யன், மஹாலக்ஷ்மி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள்.

தேவகோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை..

வெளிச்சுற்றின் தென்புறம் அம்பிகையின் சந்நிதி.

அம்பிகை போகமார்த்த பூண்முலையாள்.
பிராணேஸ்வரி எனவும் பெயருண்டு.

மாமதுரையை சமண சமயத்தாரிடமிருந்து மீட்கச் சென்றார் ஞானசம்பந்தர்.

அங்கே - தங்கியிருந்த குடிலுக்கு தீவைக்கப்பட்டதிலிருந்து பல பிரச்னைகள்.

அவற்றுள் ஒன்று தான் அனல் வாதம்.

சமணர்கள் அவர்களுடைய வேத முழக்கங்கள் அடங்கிய ஓலையைத் தீயில் இட்டனர். அந்த ஓலை எரிந்து கருகிச் சாம்பலாகிப் போனது.

ஞான சம்பந்தர் - தன் அருகிலிருந்த சம்பந்த சரணாலயரை நோக்கினார். அவர் தன்னிடமிருந்த சுவடிகளில் ஒன்றைக் கொடுத்தார்.

அதிலிருந்து ஒரு ஓலையை உருவி அஞ்செழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறு கொழுந்து விட்டெரிந்த தீயிலிட்டார் - ஞானசம்பந்தர்.

தீயிலிடப்பட்ட ஓலை - சற்றும் கருகாமல் - பச்சைப் பசேலெனப் பொலிந்தது.

கூடியிருந்த மக்கள் - ஹரஹர மகாதேவ!.. - என முழங்கினர்.

தீயிலிருந்த எடுக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்டிருந்த பதிகம் திருநள்ளாற்றுக்கு உரியது.

தீயில் கருகாத அந்தப் பதிகம் அன்றிலிருந்து பச்சைப் பதிகம் எனப்பட்டது.
அந்தப் பதிகத்தின் முதல் பாடல் இது!..

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே!..(1/49)

கருணை பொங்கும் விழிகள் கொண்டு திகழ்கின்றாள் - பிராணேஸ்வரி.

அவளுடைய திருச்சந்நிதியில் பணிவுடன் நிற்கின்றோம்..

மகனே.. சனைச்சரனால் அல்லலுற்றாயா!.. அஞ்சேல்!..
-  என்கின்றனள் அன்னை!..

அன்னையின் ஆதுர மொழிகளைக் கேட்டு நமக்கு பேச்சு வரவில்லை!..
நா குழறுகின்றது. தொண்டையை அடைக்கின்றது.

முன் வினையால் அல்லவோ மூண்டெழுந்தது கஷ்டம்.. 
இதற்கு சனைச்சரன் மீது கோபம் எதற்கு!.. சனைச்சரன் நல்லவன். 

செய்த தவறுக்கு வருந்தி அதை மீண்டும் செய்யாதிருப்பதே அறிவுடைமை. 
பொறுமையினும் மேலான பொன் அணி வேறேதும் இல்லை. 

நள மகராஜனைப் பார். அவனைப் போல கஷ்டங்களை அனுபவித்தவர் யார்?.. பரிகாரம் அது - இது என்று அங்கும் இங்கும் அலைந்தானா அவன்!.. 

விதிக்கப்பட்டதைப் புன்னகையுடன் எதிர்கொண்ட நள மகராஜனுடைய மன உறுதியின் முன் கலி புருஷன் தோற்றான். நளனும் அழியாப் புகழ் பெற்றான். 

வறுமையிலும் செம்மை. அதுவே தாரக மந்திரம். வாழ்க வளமுடன்!..

மனம் திடுக்கிட்டு விழித்த போது -
அங்கே சந்நிதியில் கற்பூர ஜோதியில் அம்பிகையின் திருமுக தரிசனம்.

அம்பிகையின் சந்நிதியிலிருந்து வெளியே வரும் போது வலப்புறம் மாடத்தில் சனைச்சரன்!..

ஸ்ரீ சனைச்சரன்
அவரவர் விதைத்ததை அவரவரும் அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். 

ஆனால், பேரெல்லாம் - 
ஏழரை ஆண்டு கஷ்டப்படுத்தினான்!.. -  என்று சனைச்சரனுக்குத் தான்!..
   
கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்களேன்!.. - கைகள் குவிகின்றன.

அன்றைக்கு இரும்பு மனம் கொண்டு என்னவெல்லாம் செய்தாய் நீ!.. இன்று இரும்புச் சட்டியில் எள் விளக்கு ஏற்றி வைத்தால் மகிழ்ந்து விடுவேன் என்று நினைத்தாயா!.. செய்வதை எல்லாம் செய்து விட்டு பின்னாளில் சமாதானமா!..  

-  சூர்ய புத்திரனாகிய சனைச்சரன் புன்னகைத்தான் !..


ஓம்
காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ: மந்தப் ப்ரசோதயாத் 

நீலாஞ்சன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

ஸனைச்சராய ஸாந்தாய சர்வாபீஷ்ட பிரதாயினே
நம: சர்வாத்மனே துப்யம் நமோ நீலாம்பராய ச..

தெரிந்த ஸ்லோகங்கள் - சனைச்சரனுக்கு அர்ச்சனைப் பூக்களாயின.

அம்மையப்பனை மறவேல். ஹரிபரந்தாமனுக்கு அடிமை செய். அற்றார்க்கும் அலந்தார்க்கும் இயன்றதை வழங்கு. சுற்றுச் சூழலை வாழ வை. அண்டி வரும் உயிர்களை ஆதரி.. காத்து நிற்பாள் கரியவனின் சோதரி!..

வாழ்த்தினான் - சனைச்சரன்..

கொடிமரத்தடியில் வீழ்ந்து வணங்கினோம்.
தலைக்கு மேல் கரங்குவித்து விடை பெற்றோம்.

உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றைக் கமழ்சடை
நள்ளா றாஎன நம்வினை நாசமே!..(5/68)
அப்பர் சுவாமிகள்.

மறவனை அன்று பன்றிப் பின் சென்ற 
மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த
அறவனை அமரர்க் கரியானை
அமரர் சேனைக்கு நாயகனான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரியும் நள்ளாறனை அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே!.. (7/68)
சுந்தரர்.

திருச்சிற்றம்பலம் 
* * *

10 கருத்துகள்:

  1. தீயினுக்கு இறையாகாத திருநள்ளாறு பதிகம் அறிந்தேன்
    நன்றி ஐயா
    (எழுத்துப் பிழை காரணமாக முதற் கருத்தினை நீக்கி விட்டேன் ஐயா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருநள்ளாறு விளக்கம் மிகவும் அருமை ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. படங்களும் விளக்கமும் அருமை ஐயா...
    வாழ்த்துக்க்ள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார் ..
      இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  4. புகைப்படங்கள் மிகவும் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி ..
      தங்கள் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. கோயிலுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. தீர்த்தக்கரையில் அழுக்குத்துணியைப் போடவேண்டாம் என்ற செய்தி பயனுள்ளது. பலர் இதனைச் செய்துவருகிறார்கள். காசியிலும் இவ்வாறான நிகழ்வைப் பார்த்து அதிர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      பரிகாரத் தலங்கள் என்று கூறுவதே மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

      நல்ல ஆன்மீகத்தின் ஆரம்பம் -
      அடுத்த உயிர்களை அல்லல் படுத்தாமல் இருப்பது தான்..

      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..