புதன், ஜனவரி 07, 2015

மார்கழிக் கோலம் 23

குறளமுதம்

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. (542) 

உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் வான் மழையை
எதிர் நோக்கி வாழுகின்றன.

அதைப் போலவே அரசனின் செங்கோலை
எதிர் நோக்கி மக்கள் மட்டுமல்ல
ஏனைய உயிரினங்களும் வாழ்கின்றன.

திருஆரூரில், கன்றை இழந்த பசு 
நீதி கேட்டு மணி அடித்தது - அதனால் அல்லவா!.. 
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 23


மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *

ஆலய தரிசனம்
திருக்கண்ணபுரம்


மூலவர் - நீலமேகப்பெருமாள்
உற்சவர் - சௌரிராஜன்
தாயார் - கண்ணபுர நாயகி
தீர்த்தம் - நித்யபுஷ்கரணி

ப்ரத்யட்சம்
கருடன், கண்வ மகரிஷி, தண்டக மஹரிஷி, விபீக்ஷணன்.

கிருஷ்ணாரண்யம் என்று புகழப்படும் திவ்ய க்ஷேத்ரம்.
விபீக்ஷணனுக்கு நடையழகு சாதித்த திருத்தலம்.

ஸ்ரீமந் நாராயணன் தனது எல்லா அட்சரங்களிலும் சாந்நித்யம் கொண்டு விளங்கும் திருத்தலம்.

அதனால் மஹா மந்த்ர க்ஷேத்ரம் எனப் பெயர் பெற்ற திருத்தலம்..

பெருமாள் - திருமங்கையாழ்வாருக்கு திருமந்த்ர உபதேசம் செய்வித்த தலம்.

உத்பலாக விமானத்தின் கீழ் கிழக்கே திருமுகங்காட்டி நின்ற திருக்கோலம்.
எம்பெருமான் வரத ஹஸ்தத்துடன் பிரயோக சக்ரம் ஏந்தியிருக்கின்றனன்..

தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அரக்கனை சம்ஹரித்ததும் - பிரயோக சக்கரத்துடன் முனிவர்களுக்கு தரிசனம் அளித்தார் - பெருமாள்.

பக்தவத்ஸலனின் தரிசனம் கண்டு மகிழ்ந்த முனிவர்கள் -
இவ்வண்ணமே இங்கு விளங்க வேண்டும்!.. -  என கேட்டுக் கொண்டனர்.

அவ்வண்ணமே - இன்று நாம் காணும் தரிசனம்!.


முன்பு ஒரு சமயம் தனக்கு அளிக்கப்பட்ட மாலையில் நீளமான தலைமுடி இருப்பதைக் கண்டு அதிர்ந்தான் அர்த்தஜாம பூஜையை தரிசிக்க வந்த மன்னன்.

மாலையில் தலைமுடியைக் கண்டு நடுங்கிய பட்டர் -
பெருமாளின் முடியலங்காரத்தினை நாளை காலையில் தரிசிக்க வருக!.. - என்று கூறினார்.

ஆத்திரத்தின் உச்சியில் இருந்த மன்னன் -
அதையும் பார்க்கலாம். காலையில் கூந்தல் காணப்படாவிடில்!.. - கர்ஜித்தான்.

மன்னனின் பின்னால் இருந்து யாரோ - விஷூக்!.. - என்று ஒலி எழுப்பினர்.

பட்டரின் கண்கள் கலங்கின. ஆறாகக் கண்ணீர் வழிந்தது.
கண்ணீர் விடும் சந்தர்ப்பம் இதுதான் கடைசியோ!?..

பெருமாளை ஒருதரம் ஆசைதீர பார்த்துக் கொண்டார்.

பெருமாள் - திடீரெனத் தன்முன் தோன்றி, அஞ்சாதே!.. - என ஆறுதல் கூறுவார் என பட்டர் எதிர்பார்த்தார்.

அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.

நடையைச் சாத்திவிட்டு - இல்லந்தேடி நடையைக் கட்டினார்.

போகாத இடந்தனிலே போக வேண்டாம் என்று பெரியோர்கள் சொன்னதைக் கேட்டால்தானே!.. 

பிரயோகச் சக்கரத்துடன் சேவை சாதிக்கும் பெருமாளுக்கு சேவை புரிந்தும்  நல்ல புத்தி வரவில்லையே நமக்கு!.. 

பிரயோக சக்கரத்தின் அர்த்தம் நாளை காலையில் தெரிந்து விடும். 

கொஞ்சம் கூட கூசாமல் பெருமாள் சந்நிதியில் பொய் - பெருமாள் கூந்தலை நாளைக்கு வந்து பார்!.. - என்று.. 

நாளைக்குக் கூந்தல் முடிய நமக்குக் கொடுத்து வைக்குமோ தெரியவில்லை!..

இரவெல்லாம் தூக்கம் இல்லை. புரண்டார். உருண்டார். அழுதார்.

பெருமாளே என்னை மன்னித்துவிடு!.. - மனம் உருகித் துதித்தார்.

பொழுது விடியும் நேரம். அரண்மனைக் காவலர்கள் வந்து எதிரில் நின்றனர்.

பட்டருக்கு எல்லாம் புரிந்து விட்டது. நீராடி முடித்தார். மங்கலங்களைத் தரித்தார். ஓட்டமும் நடையுமாக கோயிலை அடைந்தார்.

இன்னும் கோபம் தணியாமல் நின்றிருந்தான் மன்னன்.

அவனுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு சந்நிதி நடை திறந்தார்.

பட்டரை நன்றாகச் சோதித்த பின்னரே சந்நிதிக்குள் அனுப்பினர்.

தீபங்களைத் துலக்கி தூண்டி விட்டார்.
திரைச்சீலையை நீக்கி - தீப தரிசனம் செய்வித்தபோது -

ஆ!..ஆ!.. - என பேரொலி. திடுக்கிட்டு வெளியே நோக்கினார்.

சந்நிதிக்கு வெளியே நின்றிருந்த மன்னனும் மற்றோரும் ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

ஒன்றும் புரியாத பட்டர் - பெருமாளின் பாதாதி கேசமாக நோக்கினார்..

சப்த நாடியும் ஒடுங்கியவராக பெருமாளின் பாதங்களில் விழுந்தார்.

காரணம் -

ஸ்ரீ ஹரிபரந்தாமன் திருத்துழாய் தொங்கலுடன் அன்றலர்ந்த மலர்களும் துலங்க - சேவை சாதித்துக் கொண்டிருந்தான். அவனது கேசக் கற்றைகள் காற்றில் இங்கும் அங்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தன.

கண்டேன்.. கண்டேன்.. காணற்கரிய காட்சி கண்டேன்!.. என மன்னவன் மகிழ, தன் தலை காப்பாற்றப்பட்டதை உணர்ந்து நெகிழ்ந்தார் பட்டர்.

இப்படியாக - தன்னை ஆராதிக்கும் பட்டர் செய்த பிழையினை - தயாள குணத்துடன் பொறுத்துக் கொண்ட பெருங்கருணையாளன் - சௌரிராஜன்.


ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் - மாசிமகத்தன்று தீர்த்தவாரிக்கென - 20 கி.மீ. தொலைவிலுள்ள திருமலை ராயன் பட்டினத்திற்கு எழுந்தருள்வார்.

ஏன் அவ்வளவு தூரம்?..

மாசி மகம் கொண்டாட -  மாமனார் வீட்டுக்கு அல்லவா செல்கின்றார்!..

முன்னொரு சமயம், தன்மீது பேரன்பு கொண்டு விளங்கிய பத்மினி எனும் மீனவ குலத் திருமகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால்!..

திருமலைராயன் பட்டினம் கடற்கரையை நோக்கி - 
பல்லக்கில் புறப்படுகின்றார் ஸ்ரீ செளரிராஜன். 
மாப்பிள்ளைத் தோழனாக திருமருகல் ஸ்ரீ வரதராஜன்.
இவர்கள் இருவரையும் திருமலைராயன் பட்டினம் - 
ஸ்ரீ வீழிவரதராஜன்ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசன், ஸ்ரீ ரகுநாதன்,

நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கம் 
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணம் 
கோவில்பத்து ஸ்ரீ கோதண்ட ராமன்

- ஆகிய அறுவரும் எதிர் கொண்டழைக்க,


மீனவ கிராமமான பட்டினச்சேரி வழியே கடற்கரைக்குச் செல்கின்றனர்.

வழிநெடுக - மீனவ குல பெருமக்கள் - வாங்க.. மாப்பிள்ளை வாங்க!..  - என்று வரவேற்கின்றனர். 
   
மாப்பிள்ளை சாமி!.. மாப்பிள்ளை சாமி!.. - என கொண்டாடி மகிழ்கின்றனர். 

பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி பட்டு வஸ்திரம் அணிவித்து தரிசனம் செய்கின்றனர்.

பின்னர் - அஷ்டாட்சரம் என - எட்டு பெருமாள் தரிசனத்துடன் கடற்கரையில் தீர்த்தவாரி கோலாகலமாக நிகழ்கின்றது.

ஸ்ரீராமபிரானாகப் பாவித்து குலசேகர ஆழ்வார் தாலாட்டு பாடி மகிழ்ந்தது  - கண்ணபுரத்துக் கருமணியாகிய  - ஸ்ரீசெளரிராஜனுக்குத் தான்!..

ஸ்ரீசெளரிராஜனைத் தரிசிப்பதற்கு என்று - திருக்கண்ணபுரத்தைத் தேடி வரும் எவர்க்கும் வைகுந்தம் நிச்சயம் என்பதால் - இத் திருக்கோயிலில் சொர்க்க வாசல் கிடையாது.

நாகப்பட்டினத்திலிருந்து  நன்னிலம் செல்லும் வழித்தடத்தில் - திருப்புகலூர்   பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவு!..

அப்பர் ஸ்வாமிகள் முக்தி எய்திய திருத்தலம் - திருப்புகலூர்.

ஒரே நாளில் திருப்புகலூர் ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமியையும் திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.

மங்களாசாசனம்
ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட பெருமை.
பெரியாழ்வார், ஆண்டாள்,
குலசேகராழ்வார், திருமங்கைஆழ்வார்,நம்மாழ்வார்.

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ!..
குலசேகராழ்வார் அருளிய திருப்பாசுரம் (728)

தொண்டீர் உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்கமுன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன்
வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள்
கண்டு கொண்டு கந்த கண்ணபுரம்நாம் தொழுதுமே!..
திருமங்கையாழ்வார் அருளிய திருப்பாசுரம் (1698)  
* * *

சிவ தரிசனம்


மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருப்பொன்னூசல்
திருப்பாடல் 2

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித்து அமுதூறித் தான்தெளித்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தரகோச மங்கைக்
கோந்தங்கு இடைமருது பாடிக் குல மஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ!..
* * *

திருக்கோயில்
பூங்கோயில் - திருஆரூர்


இறைவன் - வன்மீகநாதர், தியாகராஜர்
அம்பிகை - அல்லியங்கோதை, கமலாம்பிகை
தீர்த்தம் - கமலாலயம்
தலவிருட்சம் - பாதிரி

தலப்பெருமை
எண்ணற்ற பெருமைகளுடன் திகழும் திருத்தலம்.

பஞ்ச பூத திருத்தலங்களுள் பிருத்வி தலம்.
மூலட்டானத்தில் ஈசன் புற்றுருவாகத் திகழ்வதால் 
மண்ணுக்குரிய தலமாகின்றது.

தில்லை - பொற்கோயில். திருஆரூர் - பூங்கோயில். 

பிறக்க முக்தி எனப்படுவது - திருஆரூர்.

ஆதிசோழர்களின் தலைநகரம் இதுவே.
முசுகுந்த சக்ரவர்த்தி ஆட்சி செய்த திருத்தலம்.

முசுகுந்த சக்ரவர்த்தி பிரதிஷ்டை செய்த ஏழு விடங்கத் தலங்களுள் - ஆரூர் மூலாதாரமாக விளங்குவது.

இங்கே திகழ்பவர் வீதி விடங்கர். அஜபா நடனம்.

தேவர்களும் கணங்களும் தியாகராஜப் பெருமானைத் தரிசிக்க திரண்டு வருவதால் - நந்தியம்பெருமான் நின்றபடி சேவை செய்கின்றார்.

வீதிவிடங்கர் - எட்டு கணங்களுடன் திருவீதி எழுந்தருள்வதாக ஐதீகம்.
திருஆதிரைத் திருவிழா - இத்தலத்திற்கே உரிய சிறப்பு.

இங்கே நீதி வழுவா நெறி முறையில் ஆட்சி செய்தவன் மனுநீதிச் சோழன்.

கன்றை இழந்த பசுவிற்காக - தன் மகனை தேர்க்காலில் இட்ட பெருமைக்கு உரியவன்.

இதை  இளங்கோவடிகள் - கற்பின் கனல் கண்ணகியின் மூலமாக - எடுத்துக் காட்டுகின்றார்.

தியாகேசர் முன்பாக சுந்தரரும் பரவை நாச்சியாரும்

திருநாவலூரில் அவதரித்த சுந்தரரின் அபிமானதிருத்தலம். 
சுந்தரரின் மனையாள் - பரவை நாச்சியார் அவதரித்த திருத்தலம்.

திருஒற்றியூரில் பார்வையிழந்த சுந்தரர் தட்டுத் தடுமாறி - காஞ்சியில் ஒரு கண்ணைப் பெறுகின்றார். மறுவிழியில் பார்வை பெற்றது - திருஆரூரில்.

சுந்தரருக்காக - பரவையார் மனைக்கு இறைவன் தூது நடந்த திருத்தலம்.


வெளித்திருச்சுற்றில் நிறைந்த சிவ சந்நிதிகளுடன் திகழ்வது.
வாயு மூலையில் திகழும் ஆனந்தீஸ்வரர் கோயில் சிறப்புடையது.
இங்கே சித்தர் கமலமுனி ஜீவசமாதி ஆகியுள்ளார்.

ஆனந்தீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் திகழும் ஸ்ரீஜேஷ்டாதேவி வரப்பிரசாதி.
அல்லலைப் போக்கி அனுதினமும் உற்ற துணையாய் இருப்பவள்.
பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவுகளை நீக்குவதில் வல்லவள்.


அம்பிகை அல்லியங்கோதை - நீலோத்பலாம்பாள் - என விளங்குகின்றாள்.
அன்னையின் அருகில் பாலமுருகனுடன் சேடிப் பெண் நிற்கின்றாள்..\

கமலாம்பிகை - பூங்கோயிலுக்கு வடபுறம் கிழக்கு முகமாக தனிக்கோயில் கொண்டு விளங்குகின்றாள்.

திருஆரூர் -கமலை பீடம் எனப்படும். அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஒன்று.

கமலாம்பிகையின் சந்நிதியின் கன்னி மூலையில் அட்சர பீடம் திகழ்கின்றது. 


திருஆரூர் கோயில் ஐவேலி. குளம் ஐவேலி. செங்கழுநீர் ஓடை ஐவேலி எனும் சிறப்பினை உடையது. 

விருத்தாசலத்தில் ஈசன் வழங்கிய பொற்காசுகளை அங்கே ஆற்றில் போட்டு விட்டு, இங்கே - கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொண்டார் சுந்தரர். 

அதையும் உரசிப் பார்த்து மாற்று சரிதான் எனக் கூறியவர் பிள்ளையார். கமலாலயக் குளக்கரையில் வீற்றிருக்கின்றார்.


திருஆரூர் தேர் ஆழித்தேர் எனப்படுவது. இதனை தமது திருப்பதிகத்தில் குறிக்கின்றார் - திருநாவுக்கரசர்.

சிவனடியார்களைத் தொகுத்து சுந்தரர் பாடியது இங்கே தான்.

திருஆரூர் பெற்ற தேவாரத் திருப்பதிகங்களின் எண்ணிக்கை 34.

ஞானசம்பந்தர் - 5, திருநாவுக்கரசர் - 21, சுந்தரர் - 8 என 34 திருப்பதிகங்களை உடையது.

திருஆரூர் பெருங்கோயிலின் உள்ளேயே ஆரூர் அறநெறி எனும் மற்றோர் திருக்கோயிலும் உள்ளது. அப்பர் பெருமான் பதிகம் பாடியுள்ளார்.

நமிநந்தியடிகள் நீரால் விளக்கெரித்த கோயில் இதுவே.

மேற்கு நோக்கிய திருக்கோயில். இங்குதான் மாதாந்திர பிரதோஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

ஆரூரின் பெருமைகளைச் சொல்லி முடிக்க யாரால் இயலும்!..

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!..  
என மாணிக்க வாசகர் போற்றுகின்றார்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வெண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி 
ஆரூரனை மறக்கலுமாமே!.. (7/59) 
சுந்தரர்.  

சோலையில் வண்டினங்கள் சுரும்போடிசை முரலச்சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய்முகில் தோயும்ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே!.. (1/105) 
திருஞானசம்பந்தர்.

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவமான நாளோ
கருவனாய் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ 
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகம் 
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்டநாளே!.. (6/34) 
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம்.  
* * *

10 கருத்துகள்:

  1. ஒரே நாளில் பல கோயில்களுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. உடன் வருகிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. குறளமுதத்துடன் மார்கழிக் கோலத்தையும் கலந்து தருவதற்கு முதலில் தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா! பல கோயில்களின் தகவல்கள் அருமை ஐயா. நிறைய தெரிந்து கொண்டோம்.

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தரிசனத்திற்கு நன்றி ஐயா...

    தகவல்கள் அனைத்தும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!

    இறையருளை அள்ளி வாரி வழங்குகின்றீர்கள் தினந்தினம்!
    அள்ளிடவும் அனுபவித்திடவும் வரம் வேண்டியிருக்கிறது எனக்கு!..

    அருமை ஐயா! நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  5. தங்கள் தளத்திறக்கு வந்ததால் திருத்தலம் காண்கிறேன் நண்பரே,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..