ஞாயிறு, ஜனவரி 04, 2015

மார்கழிக் கோலம் 20

குறளமுதம் 

ஞாலம் கருதினும் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். (484)

காலத்தை ஆய்ந்து அறிவதோடு அறநிலை எனும் இடத்தில் இருந்து
ஒரு செயலைச்செய்யும் போது
அதன் நோக்கம் உலகமே என்றாலும் கைகூடி வரும்.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 20 


முப்பத்து மூவர் அமரர்க்கும் முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
திருஅல்லிக்கேணி


மூலவர் - வேங்கடகிருஷ்ணன்
உற்சவர் - பார்த்தசாரதி
தாயார் - ருக்மணி
தீர்த்தம் - அல்லிக்கேணி
தலவிருட்சம் - மகிழ மரம்

ஆனந்த விமானத்தின் கீழ்நின்ற திருக்கோலம்.
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

ப்ரத்யட்சம் 
மார்க்கண்டேய மகரிஷி, பிருகு மகரிஷி, அர்ச்சுனன், சுமதி.

வேங்கட மாமலையில் - ஸ்ரீநிவாசப்பெருமாளை நாளும் தரிசனம் செய்து வந்த மன்னன் சுமதி என்பவன் - அர்ஜூனனுக்கு ஹரிபரந்தாமன் தேரோட்டிய திருக் கோலத்தைக் காண விரும்பினான்.

ஸ்ரீ பார்த்தசாரதி
அவன் பொருட்டு ஸ்ரீநிவாசன் - பிருந்தாரண்யம் எனப்பட்ட அல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகத் தரிசனம் தந்தார்.

வேங்கடவன் - கிருஷ்ணனாக எழுந்தருளியதாலேயே மூலவர் ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் எனத் திருப்பெயர் கொண்டார்.


மூலவர் சந்நிதியில் ருக்மணி தேவியுடன் வலப்புறம் பலராமன் இடப்புறம் சாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் - ஆகியோரும் விளங்குகின்றனர்.

மூலஸ்தானம் தவிர - மேலும் நான்கு சந்நிதிகள் மூலமாக விளங்குகின்றன.

ஸ்ரீரங்க நாதன் கிழக்கு முகமாக புஜங்க சயனத்திலும்,

சீதா, லக்ஷ்மணன், பரத சத்ருக்னர் ஆஞ்சநேயருடன் ஸ்ரீராமபிரான் தெற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்திலும்,

ஸ்ரீவரதராஜர் கிழக்கு முகமாக கருடன் மீது அமர்ந்த திருக்கோலத்திலும்,

ஸ்ரீநரசிம்மர் மேற்கு முகமாக வீற்றிருந்த திருக்கோலத்திலும் திகழ்கின்றனர்.

ஆனந்த விமானம் தவிர - பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானங்கள் விளங்குகின்றன.

ஸ்ரீரங்க நாதர் சந்நிதியில் ஸ்ரீ வராஹ மூர்த்தியும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும் வீற்றிருக்கின்றனர்.

ஸ்ரீரங்க நாதரின் தேவியாக - வேதவல்லி நாச்சியார் தனி சந்நிதியில்!..

வேதவல்லி நாச்சியார் வெளியே உலா எழுந்தருள்வது இல்லை.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரத்திலும் வெள்ளிக்கிழமைகளிலும் உள் சுற்று புறப்பாடாகி ஊஞ்சலில் சேவை சாதிக்கின்றாள்.

அர்ஜுனனுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி - ஆயுதம் எடுக்காமல் பாரதப் போரை நடத்தியதால் -

பெருமான் - இரண்டு திருக்கரங்களுடன் சக்கரம் இன்றி - பாஞ்சஜன்யத்துடன் திகழ்கின்றார்.

உற்சவ மூர்த்தி -  ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி.



மேலும் அர்ஜுனனுக்குத் தேரோட்டியபோது பீஷ்மரின் கணைகளைத் தாங்கிக் கொண்ட - பார்த்தசாரதி முகமெங்கும் தழும்புகளுடன் காணப்படுகின்றான் !..

இங்கே - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் சந்நிதியும் விளங்குகின்றது.


சித்திரையில் பெருருந்திருவிழா சிறப்புடன் நடக்கின்றது.

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு

சென்னை மாநகர மக்களுக்கு செல்லப் பிள்ளை - ஸ்ரீ பார்த்தசாரதி!..

மகாகவி பாரதியார் திருஅல்லிக்கேணியில் குடியிருந்தபோது பார்த்தசாரதிப் பெருமானை நித்ய தரிசனம் செய்திருக்கின்றார்.

கோயில் யானையுடன் நட்புடன் இருந்த வேளையில் தான் - ஒரு நாள் எதிர்பாராத விதமாக யானையால் தாக்கப்பட்டார். அப்போது உடனிருந்து காப்பாற்றிய நண்பர் - குவளைக் கண்ணன்.

யானையின் தாக்குதலால் நிலை குலைந்து அதிர்ச்சியடைந்த மகாகவி - உடல் நலம் குன்றி - பார்த்தசாரதியின் திருவடிகளில் அடைக்கலமானார்.


சென்னை என உருவாகும் முன்னர் - திருமயிலை, திருஅல்லிக்கேணி, திருமுல்லைவாயில், திருஒற்றியூர், திருவான்மியூர் ஆகிய திருத்தலங்கள் இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களாக இருந்திருக்கின்றன.

ஆனால் - இன்றைக்கு இயற்கையும் இல்லை. எழிலும் இல்லை..

மக்கள் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்ட திருத்தலங்கள் பலவும் இயற்கையை இழந்து விட்டன.

நடை திறந்திருக்கும் நேரமெல்லாம் மக்களால் சூழப்பட்டிருக்கின்றது.


தற்போது வைகுந்த ஏகாதசி இராப்பத்து வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


அல்லிக்கேணி - திருமங்கைஆழ்வார், பேயாழ்வார், திருமழிசைஆழ்வார் - என மூன்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்.

ஒரு சிறு குறிப்பு.

இந்தப் பதிவை - இன்று காலையில் வெளியாகுமாறு - நேற்று இரவு அமைத்து வைத்தேன். நேற்றிரவு வேலைக்குச் சென்ற பின் காலையில் திரும்பியதும் வழக்கம் போல Facebook - ல் நுழைந்ததும் எனக்கு வந்திருந்த படம் இது..


திருஅல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம்!..
இதோ - உங்களுக்கும்!..


தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்..

அப்பர் ஸ்வாமிகள் ஸ்ரீபரமேஸ்வரனுக்காக 
அண்ணாமலையில் கூறிய வாக்கு..

 அதன்படி - நம்மை ஆட்கொள்வதற்கு
அல்லிக்கேணியிலிருந்து
ஸ்ரீஹரிபரந்தாமன்
நாடி வந்திருக்கின்றான்!..
(4/1/2015 காலை 6.15)
* * *

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திருஅல்லிக்கேணிக் கண்டேனே!..
திருமங்கை ஆழ்வார் அருளிய திருப்பாசுரம் (1069). 

வந்துதைத்த வெண்திரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளங்கும் அணிவிளக்காம் - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர்மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று..  
பேயாழ்வார் அருளிய திருப்பாசுரம். (2297)  

தாளால் உலகம் அளந்த அசைவேகொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை.. 
திருமழிசை ஆழ்வார் அருளிய திருப்பாசுரம். (2416)
   
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 19 



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லாதோர் தோள்சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்கு ல்பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
அண்ணாமலை


இறைவன் - அண்ணாமலையார், அருணாசலேஸ்வரர்
அம்பிகை - உண்ணாமுலையாள், அபீதகுஜாம்பாள்
தீர்த்தம் -  பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் -  மகிழ மரம்

தலப்பெருமை
நினைக்க முக்தி அருளும் திருத்தலம்.
பஞ்ச பூதத் தலங்களுள் அக்னியாக விளங்கும் திருத்தலம்.
நான்முகனுக்கும் நாரணனுக்கும் இடையில் ஜோதியாய் தோன்றிய மலை.

அருணாசல மலையே சிவலிங்க வடிவம் என்பர்.

அகத்தியர், விஸ்வாமித்ரர், பதஞ்சலி வியாக்ர பாதர் - வழிபட்ட திருத்தலம்.

காத்திகை தீபத் திருநாளின் பெருமையைத் தனக்காகக் கொண்டது அண்ணாமலை.

அருணகிரி நாதரின் வாழ்வில் ஞானஒளி ஏற்றிய எழில் மலை.

அண்ணாமலையார் திருக்கோயில் ஏழு திருச்சுற்றுகளை உடையது.
217 அடி உயரமுடைய கிழக்கு ராஜகோபுரத்துடன் ஒன்பது கோபுரங்கள்.


முருகப் பெருமான் - அருணகிரிநாதருக்கு காட்சி நல்கிய கம்பத்திளையான் மண்டபம் சிறப்பானது.

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் பின்புறம் மலையடிவாரத்தில் சற்று உயரத்தில் அருளாளர்கள் ஆகிய குகை நமசிவாயர் மற்றும் அவரது சீடர் குரு நமசிவாயர் ஆகியோர் வாழ்ந்த குகை உள்ளது.

அடியேன் ஒரு முறை குகையினுள் சென்று தரிசித்துள்ளேன்.

குகை நமசிவாயர் - தனது மாணாக்கன் ஞானம் அடைந்து விட்டான் என்பதை அறிந்து - திரு அண்ணாமலையிலிருந்து தில்லைக்கு அனுப்பிவைக்கின்றார்.

செல்லும் வழியில் குரு நமசிவாயருக்கு பசிக்கின்றது. வனாந்தமான அந்தப் பகுதியில் ஒரு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து உண்ணாமுலை அம்பிகையைத் தியானித்தார்.

அவரது திருவாக்கிலிருந்து ஒரு பாடல் பிறந்தது.

அண்ணா மலையார் அகத்துக் கினியாளே 
உண்ணா முலையே உமையாளே - நண்ணா
நினைதொறும் போற்றிசெய நின்னடி யாருண்ண
மனைதொறும் சோறுகொண்டு வா.

அந்த அளவில் - மனம் உருகிய அம்பிகை ஐயன் சந்நிதியில் நிவேதனம் செய்யப்பட்டிருந்த சர்க்கரைப் பொங்கலை தங்கத் தாம்பாளத்துடன் குரு நமசிவாயருக்குக் கொண்டு வந்து கொடுத்ததாக வரலாறு.

அத்துடன் அவர் தில்லைக்குப் போய்ச் சேரும் வரை பசித்த வேளைகளில் எல்லாம் அந்தந்த ஊர்களில் திகழும் அம்பிகை வடிவாக வந்து உணவு வழங்கியதாக திருக்குறிப்புகள் உள்ளன.

அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருந்தார் குருநமசிவாயர்.

உண்ணாமுலையாளிடம் சோறு கேட்டு விருத்தாசலத்தில் பாடிய பாடல் இது.

முத்தநதி சூழும் முதுகுன் றுறைவாளே
பத்தர் பணியும் பதத்தாளே
அத்தர் இடத்தாளே மூவாமுலை மேலெழிலார
வடத்தாளே சோறு கொண்டு வா.

சிவனடியார்கள் சிந்திக்கும் திருப்பாடல்களுள் இதுவும் ஒன்று. இல்லத்தில் உணவுக்குக் குறை வராது என்பது மனதில் பொருந்தியிருக்கும் நம்பிக்கை.

குரு நமசிவாயர் தில்லைக் கோயிலுக்கு அளித்த அறக்கட்டளைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இன்றளவும் உள்ளன.

இப்படி எத்தனையோ நலன்களை வாரித் தருபவள் உண்ணாமுலையாள்..


பதினான்கு கிமீ., சுற்றளவை உடைய கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் வேறு சில கோயில்கள் அறச்சாலைகள் ஆஸ்ரமங்கள் ஆகியன உள்ளன.


அண்ணாமலையின் பின்புறம் -
அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. மாணிக்க வாசகப்பெருமான் இங்கு தங்கியிருந்தார் என்பர்.

அண்ணாமலையைச் சுற்றியுள்ள வனத்தில் சாதாரணமாக யாரும் நுழைதல் ஆகாது. ஏனெனில் இன்னும் அறியப்படாத குகைகளும் இருள் வழிகள் உள்ளன.

மானிடர்களுடன் தொடர்பே இல்லாது மலைக்குகைகளுக்குள் வசிக்கும் சித்தர் பெருமக்கள் பலர் இங்கே இருக்கின்றனர்.

ஈசன் அருளிருந்தால் மட்டுமே - அவர்களைச் சந்திக்கக் கூடும்.

எளியேன் இருமுறை மனைவி மக்களுடன் சாதாரண நாட்களில் நள்ளிரவுப் பொழுதில் கிரி வலம் செய்திருக்கின்றேன்.

அப்போது நிகழ்ந்த அனுபவங்கள் அபூர்வமானவை.

மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்றனாலும் பெருமை உடைய தலம்.

மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளியதும் அருணகிரிநாதர் திருப்புகழ் கந்தர் அனுபூதி ஆகியன பாடியதும் இங்கே தான்!..



சேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீரமணர், யோகி ராம் சுரத்குமார் - என புண்ணியர் பலர் உலவிய புனித பூமி - திருஅண்ணாமலை.


இன்றும் எண்ணற்ற சித்தர்களும் அருளாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் திருத்தலம் - திருஅண்ணாமலை.

நினைக்க முக்தி என்பது சொல்வழக்கு
நாமும் தான் நினைத்திருப்போமே!..

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!.. (1/10) 

பூவார்மலர்கொண்டு அடியார் தொழுவார்புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொருவின் நிறையோடும்
ஆமாம்பிணை வந்துஅணையும் சாரல் அண்ணாமலையாரே!.. (1/69) 
திருஞானசம்பந்தர்.

மத்தனை மதயானை உரித்தஎஞ்
சித்தனைத் திருஅண்ணா மலையனை
முத்தனை முனிந்தார் புரமூன்றெய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ!.. (5/4) 

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே!.. (5/5) 
அப்பர் ஸ்வாமிகள்.

திருச்சிற்றம்பலம்
* * *

14 கருத்துகள்:

  1. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தேடி சென்றால் நாடி வருவான் என்பது உண்மைதான்.
    பார்த்தசாரதி தரிசனம் மிக அருமை.

    சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை தரிசனம் மிக அழகு.
    யோகி ராம்சுரத்குமார் அவர்களை தரிசனம் செய்து ஆசி பெற்று இருக்கிறேன்.

    பாடல்கள் படங்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கிரிவலம் செல்லும் போது அதிர்ஷ்டம் இருந்தால் சித்தர்களைத் தரிசிக்கலாம். அதைப் பற்றியெல்லாம் நிறைய சொல்ல வேண்டியிருக்கின்றது.

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. இப்போதெல்லாம் திருவண்ணாமலையில் மலைஏறும் பாதையில் போதைப் பழக்கத்துக்கு ஆளானோரை சந்திக்கும் வாய்ப்புகள் நிறையவே இருப்பதாகக் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இருமுறை கிரிவலம் செய்த போதும் - அபூர்வ நிகழ்வுகள் தான்..
      மற்றபடி எந்த ஒரு சங்கடங்களையும் எதிர் கொண்டதில்லை.

      நாளடைவில் இப்படியெல்லாம் கூட இருக்கலாம்.
      யார் இவர்களைத் திருத்துவது?..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வணக்கம்!
    ஹரியும் சிவமும் ஒன்று என்று உணர்த்த வந்த பதிவு மெய் மறந்து ரசித்தோம்!
    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    ( (நண்பரே குழலின்னிசை தங்களை வரவேற்கின்றது வலைப் பூ நோக்கி! நன்றி!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அண்ணாமலைக்கு அரோகரா....
    அருமையான தகவல்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும்
      கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான அறிந்திராத தகவல்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர்.
      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..