வெள்ளி, ஜனவரி 02, 2015

மார்கழிக் கோலம் 18

குறளமுதம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி. (226)

ஏழை எளியவரின் பசி தீர்க்கும் அறச்செயல் தான்
ஒருவன் தனக்கென அருள் சேர்த்து வைத்துக் கொள்ளும்
பொக்கிஷமாகும்.

* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 18



உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
திருக்கோழி - உறையூர்



மூலவர் - அழகிய மணவாளர்
தாயார் - கமலவல்லி
தீர்த்தம் - கமலபுஷ்கரணி

பிரயோக சக்கரத்துடன் வடக்கு முகமாக நின்ற திருக்கோலம்.
நாச்சியாருக்குத் தனி சந்நிதி இல்லை. 

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பிரத்யட்சம்.

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்.

ஸ்ரீ கமலவல்லி
நேற்று திவ்யதேசங்களில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நிகழ்ந்திருக்க -

திருக்கோழி என வழங்கப்படும் உறையூரில் மட்டும் 
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் - தனக்கென ஒரு மகாத்மியமாக 
மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் - தானே உற்சவ மூர்த்தியளாக - 
மக்களோடு மக்களாக சொர்க்க வாசலை கடந்து 
மக்களைக் கரையேற்றுகின்றாள்..

என்னே ஒரு வாத்சல்யம்!..

ஏன் அப்படி!..

கமலவல்லி ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அம்சம். நங்க சோழன் எனும் மன்னனுக்காக தானும் ஒரு மழலையாக - பங்குனி மாதத்தின் ஆயில்ய நட்சத்திரத்தன்று - தாமரை மலரினுள் மலர்ந்தவள்..

மன்னனின் மகள் என்றாலும் - மக்களோடு மக்களாக வளர்ந்தவள்.

காலமும் நேரமும் கூடி வந்த வேளையில் இவளது பொற்கரத்தைப் பற்ற வேண்டும் எனத் திரு உளங்கொண்ட திரு அரங்கத்துக் கள்வன் - கருடனைக் குதிரையாக மாற்றி அதன் மீது ஆரோகணித்து காவிரிக் கரையின் வடகரையில் அப்படியும் இப்படியுமாக நடை பயின்றான்.

மணற்பாங்கான காவிரியின் ஊடாக தோழியருடன் மலர்ப்பந்து விளையாடிக் கொண்டிருந்த கமலவல்லியின் மனதைக் கொள்ளை கொண்டான்..

காதல் மீதூறி கன்னி மாடம் வரைக்கும் வந்து சென்றான்..

விஷயம் அறிந்த மன்னன் - கள்வனைத் தேடிக் கண்டுபிடித்து சிறை செய்து வரும்படி ஆணை பிறப்பித்தான். 

காவலர்களுக்கு அந்தக் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பாத - கருணை வள்ளல் - தானே முன் வந்து முன் நின்றான். சிறை செய்யச் சென்ற தளபதி சிந்தித்தான்.

பால் வடியும் முகத்தினன். பாராளும் களை தெரிகின்றது. இவனா - கள்வன்!?.. இவன் நமது கமலவல்லி நாச்சியாரின் மனதைக் கொள்ளை அடித்தான் எனில் - இளவரசியார் மிகவும் கொடுத்து வைத்தவர்!.. 

- என மருகினான். உள்ளம் உருகினான். 

அரசனிடம் சென்று விஷயத்தைப் பக்குவமாகக் கூறினான்.

மனம் தடுமாறிய சோழமன்னன் - தான் வணங்கும் ரங்கநாதப் பெருமானின் அடி தொழுது நின்றான். 

உள்ளும் உள்ளத்தினுள் உவந்துறையும் உலகளந்த மூர்த்தி தன் திருவுரு காட்டி நின்றான்.

அரங்க நாதனே அழகிய மணவாளனாக வந்திருக்கின்றான்!.. -  என்பதை உணர்ந்து கொண்ட மன்னன், 

எம்மை உய்யக் கொண்டருளும்!.. - என தாழ்ந்து நின்றான்.

அழகியமணவாளனின் கரம் பற்றிய கமலவல்லி அரங்கனுடன் சுடராக ஒன்றி உடனானாள்.

அழகிய மணவாளனுக்கும் கமலவல்லி நாச்சியாருக்கும் உறையூரில் சிறப்பான ஆலயம் எடுப்பித்த அரசன் -  கால சூழ்நிலையில் - 

ஹரிபரந்தாமனைச் சிந்தித்திருந்து பரம பதம் சென்றடைந்தான்.

பங்குனி சேர்த்தி
ஸ்ரீரங்கத்தில் - பங்குனி உத்திரத் திருவிழாவின் ஆறாம் திருநாள் ஆயில்ய நட்சத்திரத்தன்று நிகழும்.
  
அன்றைய தினம் - காவிரி, குடமுருட்டியைக் கடந்து நம்பெருமாள் உறையூருக்கு எழுந்தருள்கின்றான்.

தங்கள் மாப்பிள்ளையை மகிழ்ச்சிப் பெருக்குடன் வரவேற்கின்றது - உறையூர்.

திருக்கோயிலில் கமலவல்லித் தாயாருடன் சேர்த்தை வைபவம் கண்டருளும் அரங்கன் - இரவு பதினோரு மணிக்கு மேல் அரங்க மாநகர் திரும்புகின்றான். 
வழியில் அரங்கனின் கணையாழி ஒன்று தொலைந்து விடுகின்றது.

அது - ஸ்ரீரங்கநாயகி - தன் தாய் வீட்டு சீதனமாக அணிவித்த கணையாழி!..

இல்லம் திரும்பும் அரங்கனை உள்ளே விடாமல் - திருக்கதவைப் பூட்டிக் கொண்டு விடுகின்றாள் - ரங்க நாயகி.

வெண்ணையையும் பூக்களையும் எடுத்து அரங்கனின் மீது எறிகின்றாள்.

இதுதான் சந்தர்ப்பம் என - எல்லாவற்றுக்கும் சேர்த்து மட்டையடியும் கிடைக்கின்றது.
   
அரங்கனுக்கு நிகழ்ந்ததை அறிந்து நம்மாழ்வார் வந்து - ரங்கநாயகியை சாந்தப் படுத்துகின்றார்.

அதன்பின் அரங்கனும் ரங்கநாயகியும் ஆழ்வாருக்கு மரியாதை செய்து -  பங்குனி உத்திர சேர்த்தி அருள்கின்றனர்.

இனிய இல்லறம் பிரதிபலிக்கும் திவ்ய தேசம் - உறையூர்.

யானையைச் சேவல் எதிர்த்து விரட்டியடித்ததால் திருக்கோழி எனவும் பெயர்


கமலவல்லி நாச்சியார் அவதரித்த தலம் என்பதால் இங்கு அவளே பிரதானம். 

திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார் அவதரித்த தலமும் இதுவே..
கார்த்திகையில் ஆழ்வார் திருவைபவம் கண்டருள்கின்றார்.

ஆதியில் சோழர்களுக்கு தலைநகராக விளங்கிய உறையூர் இன்று திருச்சி மாநகருக்குள் சிறப்புற்று விளங்குகின்றது.

திருஞானசம்பந்தர் தரிசித்த  ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலும் -
ஸ்ரீவெக்காளி அம்மன் திருக்கோயிலும் உறையூரில் தான் உள்ளன.
   
கோழியும் கூடலும் கோயில்கொண்ட கோவலரேஒப்பர் குன்றமன்ன
பாழியந்தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணமெண்ணில் மாகடல் போன்றுளார் கையில்வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்குபற்றி அச்சோ ஒருவர் அழகியவா!.. (1762)
திருமங்கை ஆழ்வார்.

ஸ்ரீகமலவல்லி சமேத அழகிய மணவாளன் 
திருவடிகள் போற்றி!..
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 17



செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருஎறும்பூர்
  
இறைவன் - எறும்பீஸ்வரர், மதுவனேஸ்வரர்
அம்பிகை - நறுங்குழல்நாயகி, சௌந்தரநாயகி
தீர்த்தம் - பிரம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

தலப்பெருமை
தேவேந்திரன் எறும்பு வடிவாக சிவபூஜை செய்த திருத்தலம்.

வழக்கம் போலவே - தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் பிரச்னை. அடிதடி. வெட்டு குத்து!..

தமது பாதுகாப்பிற்காக தேவேந்திரனும் மற்றவர்களும் எங்கே சென்று எதைச் செய்தாலும் அங்கேயெல்லாம் தவறாமல் வந்து புகுந்து தடங்கல் செய்து கொண்டிருந்தனர் - அசுரர்கள். 

மண்டை காய்ந்து போன தேவேந்திரன் - அசுரர்கள் கண்டறியக் கூடாது என ஒரு எறும்பாக உருமாறி - பிரம்ம லோகத்திற்குச் சென்றான். 

நான்முகனைச் சந்தித்து தன் வேதனையைச் சொல்லிக் கண்ணீர் வடித்தான். 

வானுயர ஆளுமை கொண்ட தேவேந்திரன் வடிவிழந்து - உருமாறி - எறும்பாக நின்றிருந்த கோலத்தைக் கண்ட பிரம்மனின் நான்கு சிரங்களுக்குள்ளும் ஏக காலத்தில் மின்னல்!..

தேவேந்திரா!.. உனது கோலம் எனக்குப் பிடித்திருக்கின்றது!..
என்ன ஸ்வாமி!.. நீங்களும் என்னை ஏளனம் செய்வதா?..

நான் சொல்வதைக் கவனமாகக் கேள்!.. இன்னும் சில காலத்திற்கு நீயும் உன் சகாக்களும் தலைமறைவாக இருந்தே தீர வேண்டிய சூழ்நிலை. எனவே - உனக்கு இந்த எறும்பு உருவமே பாதுகாப்பு!.. நீயும் மற்ற தேவர்களும் எறும்பு வடிவாகவே சென்று கங்கையினும் புனிதமான காவிரிக்குத் தென்பால் உள்ள மதுவனத்தில் ஈசனைத் தொழுது நலம் பெறுவீர்களாக!.. - என்று அறிவுரை கூறினார்.

பிரச்னை எப்படியாவது தீர்ந்தால் சரி!.. ஆனால் - 

ஐராவதம் எனும் வெள்ளை யானையின் மீதேறி அலங்காரமாக வந்த எனக்கு இந்த சிற்றெறும்பு உருவம் தேவைதானா!?..

இந்திரன் தடுமாறினான்.

என்ன!?.. ஐராவதத்தின் மீதேறி அலங்காரமாக வந்தாயா?.. அகங்காரமாக அல்லவா வந்தாய்!.. 

நான்முகன் எதிர்கேள்வி தொடுத்தார்.

சரி.. சரி.. பழையனவற்றைக் கிளறாதீர்கள். இருப்பினும் தாங்களும் வந்து எங்களுக்கு உதவவேண்டுமே!.. - விண்ணப்பித்துக் கொண்டான் இந்திரன்.

அவனுக்காக மனம் இரங்கிய நான்முகன் - மதுவனத்தில் பிரம்ம தீர்த்தத்தினை உருவாக்கிக் கொடுத்தார்.

தேவேந்திரனும் மற்ற தேவர்களும் தத்தமது சுற்றம் சூழ - பிரம்ம தீர்த்தத்தில் நீராடி - மதுவனத்தில் சிவபூஜை செய்து துதித்தனர்.

சிறுசிறு மணல்துகள்களால் சிவலிங்கத்தை வடிவமைத்து நாளும் துதித்து நின்றனர்.

தேவேந்திரனுடைய வழிபாட்டில் மனம் மகிழ்ந்த ஈசன் - அரக்கர்களை வெல்லும் வழிமுறைகளை அருளியதாக ஐதீகம்.

எறும்புகளால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கம் என்பதால் புற்று வடிவாக சிவலிங்கத் திருமேனி விளங்குகின்றது. நித்ய அபிஷேகங்களுக்குப் பதிலாக எண்ணெய்க் காப்பு மட்டுமே!..

வேறொரு விளக்கமும் உண்டு.

தேவர்களாகிய எறும்புகள் - தன் மீது ஊர்ந்து செல்வதற்கு எளிதாக -

ஈசன் தனது திருமேனியை வன்மீகம் எனப்படும் புற்றுருவாக மாற்றிக் கொண்டதோடு இடப்புறம் சற்றே சாய்ந்து விளங்கினார் என்பதாகவும் ஐதீகம்.


இன்றும் திருக்கோயிலினுள் சர்வ சாதாரணமாக எறும்புகள் இழைந்து திரிகின்றன.

மதுவனம் எனில் - தேன் ததும்பும் மலர்கள் நிறைந்த நந்தவனம் என்பது பொருள்.

இங்கே விநாயகர் - செல்வ விநாயகர் என விளங்குகின்றார்.

செல்வம் எனில் பொருள் என்பதல்ல!..

அறிவு - ஞானம் இவற்றை வழங்கும் மூர்த்தி என்பதாக திருக்குறிப்பு.


அத்தகைய நறுமலர்களைக் கார்குழலில் சூடிக் கொண்டிருப்பதால் - அம்பிகை நறுங்குழல் நாயகி.

ஸ்வாமி மூலஸ்தானத்தின் இருபுறமும் காவலிருக்கும் துவாரபாலகர்களில் ஒருவர் ருத்ர அம்சமாகவும் மற்றவர் சாந்த அம்சமாகவும் விளங்குகின்றனர்.

திருச்சுற்றில் திருக்கோட்டத்தில் சங்கர நாராயணத் திருக்கோலம் இலங்குகின்றது.

திருச்சுற்றில் இரண்டு- காசிவிஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளன.
மத்தியில் வள்ளி தேவயானையுடன் ஸ்ரீ முருகப்பெருமானின் சந்நிதி.

திருச்சுற்றில் நவக்கிரகங்களுடன் - காலபைரவர் எழுந்தருளியுள்ளார்.

திருஎறும்பூர் திருக்கோயில் சிறிய குன்றின் மீது இருக்கின்றது.

ஒரு சமயம் - ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் நடந்த சண்டையில் மேரு மலையில் இருந்து சிதறியவற்றுள் ஒரு சிறு பகுதி என்கின்றார்கள்..

திருப்பாற்கடலுள் ஹரிபரந்தாமனுக்குப் படுக்கையாக இருக்கக் கூடிய ஆதிசேஷன் - வாயு தேவனுடன் எதற்காக சண்டைக்குப் போனான் என்று தெரியவில்லை. 

வைகாசியில் விசாகத்தை அனுசரித்துப் பெருந்திருவிழா நிகழ்கின்றது.

ஆணவத்தால் அகம்பாவத்தால் அதிகாரத்தால் - மற்றவர்களைத் துன்புறுத்திய பாவங்கள் தொலையும் திருத்தலம்.

ஈசன் படைத்த உயிர்களை - சிற்றெறும்பு முதல் குஞ்சரம் வரை என்பர்.

யானை முதலா எறும்பு ஈறாய!.. - என்பது மாணிக்க வாசகரின் திருவாக்கு!..


பல்குஞ்சரந் தொட்டு எறும்பு கடையானதொரு பல்லுயிர்க்கும்!.. - என்பது அபிராம பட்டரின் அருள்வாக்கு!..

குஞ்சரம் என்றால் - யானை.

கொடியுடன் குடை கொண்டு குஞ்சரத்தில் ஊர்ந்த கோமகனும் - சிறப்பிழந்து சிற்றெறும்பாக ஊர்ந்து திரியும் காலம் வரக்கூடும் என்பது நிதர்சனம்.

நாம் நமது பிழைகளை உணர்ந்து திருத்திக்கொள்ள முன்வருவோமேயானால்,

ஈசனே தன்னிலையில் இருந்து மாறி - குழைந்து வந்து நமது குறைகளைத் தீர்த்து அருள்கின்றனன் என்பதை திருஎறும்பூர் திருத்தலத்தின் தலபுராணம் உணர்த்துகின்றது.



தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது திருஎறும்பூர்.

திருச்சி மாநகரின் பலபகுதிகளில் இருந்தும் திருஎறும்பூருக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

அப்பர் பெருமான் இரண்டு திருப்பதிகங்களால் பாடிப் பரவிய திருத்தலம்.

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே!..(5/74/2)

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்பு ரிந்தருள் வெய்தஎம் அங்கணன்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே!..(5/74/4)
அப்பர் ஸ்வாமிகள்.

திருச்சிற்றம்பலம்  
* * *

16 கருத்துகள்:

  1. திருப்பாணாழ்வார் தகவல் உட்பட அனைத்தும் சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க வளமுடன்!..

      நீக்கு
  2. தரிசித்து அறியாதன அறிந்து மகிழ்ந்தோம்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மூத்தோராகிய தங்களுக்கு வணக்கம்.

      தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்..
      வாழ்த்துரையில் மனம் நெகிழ்ந்தேன்

      தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் -
      எல்லா நலனும் பெற்று இனிதே வாழ நல்வாழ்த்துக்கள்!

      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  3. யானையை கோழி விரட்டியடித்த விபரம் அறிந்தேன். இறைவன் அருள் இருந்தால் எளியவரும் வலியவர் ஆகலாம் என தெரிகிறது.
    திருக் கோழி கோவில் பெருமாள் தரிசனம் கிடைத்தது.

    திருஎறும்பூர் மிக அழகான கோவில் இரண்டு, மூன்று தரம் போய் இருக்கிறேன்.
    நம் பிழைகளை உணர்ந்து திருத்திக் கொள்ள முன் வந்தால்
    இறைவன் மனம் இரங்கி அருள்புரிவார் என்பது உண்மைதான்.

    படங்கள், பாடல் விளக்கம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரை இனிமை!..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!

    தொகுத்து வைத்து அங்கு இந்தியாவிற்கு வரும்போது
    கோவிற் தரிசனம் செய்ய நல்ல உதவியாகும்
    ஆன்மீகக் களஞ்சியம் உங்கள் பதிவுகள் ஐயா!..

    மிக அருமை! நல்ல விளக்கமும் படங்களும் அற்புதம்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    படங்களும் தொகுப்பும் மிகவும் அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. உறையூரில் நாச்சியார் கோவில் என்ற பெயர்தான் பிரசித்தம் வெக்காளி அம்மன் கோவிலுக்குப் போகும்போது நாச்சியார் கோவிலுக்கும் சென்றதுண்டு. திருக்கோழி என்னும் பெயர் இருப்பது அறியாத தகவல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. ஆன்மீகத் தகவல்கள் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான தகவல்கள்..... திருவெறும்பூர், உறையூர் என இரண்டுமே பார்த்த் இடங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..