பத்ரம், பலம், புஷ்பம், தோயம்!..
இந்நான்கும் தன்னை வழிபடுவதற்கு உகந்த காரணிகளுள் எளியனவாக பரந்தாமன் பார்த்தனுக்கு அருளியவை!..
பத்ரம் - இலை
பலம் - கனி
புஷ்பம் - மலர்
தோயம் - தண்ணீர்.
இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படும் இவற்றுள் முதலாவதாக குறிக்கப்படும் இலை என்பது ஏதாவதொரு இலை அல்ல!..
சமர்ப்பிக்கப்படும் அதனால் - செய்வானுக்கும் செயப்படுவானுக்கும் பலன் ஏற்பட வேண்டும்.
அப்படி எனில் பயனுள்ளை இலைகள் - தளிர்கள்!..
எனில் நிவேதனமாவது ஏதாவது ஒரு கனியா? ஏதாவது ஒரு மலரா?..
நாம் விரும்புவது எந்த வகையான கனியையும் மலரையும்!?..
நல்ல தரமுள்ள சுவையான கனிகளையும் அழகான வாசமிகு மலர்களையும் அல்லவோ!..
அப்படியே - நாம் அருந்த விரும்புவது - ஒரு துளியாயினும் நல்ல நீரைத் தானே!..
இவற்றுள் இலை எனக் குறிப்பிடுவனவற்றுள் சிறப்பானவை -
அருகம்புல், பன்னீர் இலை, வேப்பிலை, வில்வ தளம்.
அருகு விநாயக மூர்த்திக்கும் பன்னீர் இலை செந்திலாதிபனுக்கும் வேப்பிலை அன்னை பராசக்திக்கும் வில்வ தளம் சிவபெருமானுக்கும் உகந்தவையாக ஆன்றோர்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன.
இந்த வகையில் - வைணவத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து துதிக்கப்படுவது,
ஸ்ரீ துளசி!..
துளசி தளத்தினைக் கொண்டு பரந்தாமனைத் துதிக்க - அந்தப் புண்ணியம் - துதிப்பவரது முன்னோர்களை பிறவித் தளைகளில் இருந்து விடுவிக்கின்றது.
துளசிச் செடியின் அருகில் அமர்ந்து ஒருவன் ஸ்ரீ கிருஷ்ணனை தியானித்தான் எனில் - அவன் அடையும் பேறுகளை அளந்து கூறுவது என்பது அரிது!..
இந்தத் துளசி அடர்ந்து வளர்ந்திருக்கும் வனங்களில் பிரவேசிப்பவரது பாவங்கள் - தீயில் விழுந்த சருகாகின்றன.
துளசி தழைத்திருக்கும் இல்லத்தினைக் கண்டு தீய சக்திகள் அஞ்சுகின்றன.
துளசி மணிகளால் ஆன மாலையை அணிந்திருப்பவரை தீய எண்ணங்கள் அணுகுவதில்லை.
துளைசியை பக்தி சிரத்தையுடன் வளர்த்துப் பராமரிப்பவர் - தம் மனம் வாக்கு காயம் - இம்மூன்றும் சித்தியாகின்றன.
பவித்ரமான துளசியின் தளிரில் பிரம்மனும் மத்தியில் மஹாவிஷ்ணுவும் வேரில் சிவபெருமானும் நிலைத்திருக்கின்றனர்.
அதனால் - மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் துளசியை ஏனைய முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னிரு சூரியரும் பதினோரு ருத்ரரும் அஷ்ட வசுக்களும் அஸ்வினி தேவர் இருவரும் சூழ்ந்து துதித்திருப்பதாக ஐதீகம்.
துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணனின் பாதார விந்தங்களில் சமர்ப்பிப்பவர் - பூவுலகின் எல்லா மலர்களையும் சமர்ப்பித்த நற்பலனை எய்துவர் என்று புகல்வது - ஸ்ரீ பத்ம புராணம்.
துளசி இல்லையெனில்
ஸ்ரீகிருஷ்ண வழிபாடு நிறைவடைவதில்லை.
பலவகையான சித்ரான்னங்களையும் கனிவர்க்கங்களையும் நிவேதித்தாலும் துளசியுடன் கூடிய நிவேதனமே ஏற்புடையது.
நிவேதனத்திற்கு உணவோ கனியோ இல்லை எனில் துளசியே நிவேதனம்!..
அதனால் தான் -
அன்புடன் அளிக்கப்படும் ஒரு தளிரில் நான் மகிழ்வேன்!..
- என்று இதயபூர்வமான எளிய வழிபாட்டினை நமக்குக் காட்டுகின்றான்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது அதனுள்ளிருந்து முதலில் விஷம் தோன்றியது.
அதன் பின் - காமதேனு, கற்பகத்தரு, ஐராவதம், உச்சைசிரவஸ், கௌஸ்துபம், தன்வந்திரி,சந்திரன், மஹாலக்ஷ்மி எனும் மங்கலங்களுடன் அமிர்தம் தோன்றியது.
அச்சமயம் மஹாவிஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீரின் ஒரு துளி - அமிர்தத்தில் விழுந்தது.
அப்போது அமிர்த கலசத்தினின்று ஒளிரும் பச்சை வண்ணத்துடன் ஸ்ரீ துளசி தோன்றினாள்.
துளசியுடன் கௌஸ்துபமும் லக்ஷ்மியும் மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன.
ஏனையவை தேவர்களுக்கு உடைமையாயின.
துளசிச் செடியினை வீட்டில் வளர்ப்போர் - இறைவனுக்கு சமமாக அதனை பாவிக்கின்றனர். துளசி மாடம் கோயிலுக்கு நிகரானது.
துளசி மாடத்தில் பக்தி பூர்வமாக பூஜை செய்தால் - சர்வமங்கலங்களையும் பெறலாம் என்பது நிதர்சனம்.
வைணவத் திருக்கோயில்களில் மிக உயர்ந்த ஒன்றாகத் திகழ்வது திருத்துழாய் எனப்படும் ஸ்ரீதுளசியே!..
துளசி தழைத்திருக்கும் இடம் - மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் நித்ய வாசம் செய்யும் திருத்தலம்!..
பெருமாளை துளசி தளம் கொண்டு பூஜித்தால் ஆயிரத்தெட்டு பால் குடங்களை நிவேதனம் செய்ததற்கு சமம்!..
பெருமாள் சந்நிதிகளில் பிரசாதம் எனில் துளசியும் துளசி தீர்த்தமுமே!..
துளசிக்கும் துளசி தீர்த்தத்திற்கும் ஈடு இணை இல்லை.
இத்தகைய துளசியின் அவதாரம் பல்வேறு விதமாகக் கூறப்படுகின்றது.
சங்கசூடன் என்பவன் எவராலும் வெல்ல முடியாதவனாக விளங்குகின்றான்.
சங்கசூடனின் மனையாள் துளசி. அவளுடைய கற்பின் திறன் அரணாக நின்று அவனைக் காக்கின்றது.
அசுர குணங்களுக்கு ஆட்பட்ட அவன் தேவர்களுக்கும் சகல உயிர்களுக்கும் தீராத பிரச்னையாகின்றான்.
அவனால் சர்வ லோகமும் இன்னலுக்கு ஆளாகின்றது. தேவர்கள் அவனை அழிக்க எண்ணி அவனுடன் போர் தொடுத்தனர்.
முடிவில் தேவர்கள் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவுகின்றனர்.
அவர்கள் ஒன்று கூடி சிவபெருமானிடம் அடைக்கலமாகின்றனர்.
துளசியின் பிறப்பு இரகசியம் அறியப்படுகின்றது.
மீண்டும் போர் ஆரம்பமாகின்றது.
முற்பிறவியில் அவள் மஹாவிஷ்ணுவை மணாளனாக அடைய வேண்டி கடும் விரதங்கள் ஏற்றவள்.
அதைக் கருத்தில் கொண்டு - மாலவன் துளசியின் இல்லம் சென்று அவளைப் புகழ்ந்துரைக்கின்றார்.
பரமனின் புகழுரையில் மயங்கிய துளசி தன்னிலை மறந்து நெஞ்சம் நெகிழ்ந்து மாலவனைப் போற்றிப் புகழ்ந்து பாத பூஜை செய்கின்றாள்.
அந்தத் தருணத்தில் - வேண்டுவன கேள்!.. - என்றான் பரந்தாமன்.
வரம் என்று தருவதாயின் - நின் மார்பில் என்றும் நீங்காது இனிதாக வாசம் செய்யும் வரத்தினைத் தந்தருள வேண்டும்!..
- எனக் கேட்கிறாள் துளசி. அந்த வரம் அவளுக்கு அனுக்கிரக்கிக்கப்பட்டது.
துளசியின் ஆன்மா பரந்தாமனின் பாதக் கமலங்களை ஸ்பரிசித்தது.
பரந்தாமனுடன் துளசி ஒன்றி உடனானாள்.
அந்த வேளையில் - அங்கே யுத்த களத்தில் சங்கசூடன் வீழ்த்தப்படுகின்றான்.
துளசியின் சரீரம் கண்டகி நதியானது. எந்நாளும் அவள் ஆரத் தழுவி மகிழும் வண்ணம் கண்டகி நதியினுள் சாளக்ராம கற்களானான் - ஹரி பரந்தாமன்.
சங்கசூடனின் மேனி பாற்கடலுள் வீழ்ந்தது.
அவனே வலம்புரி இடம்புரி எனும் சங்குகளாக ஆனான்.
இந்த வைபவம் வைணவத்தில் சொல்லப்படுவதை அனுசரித்தது.
துளசியின் வைபவம் - சைவத்திலும் பயின்று வருகின்றது.
வைணவ திவ்ய தேசங்களுள் முதன்மையானது - திருஅரங்கம்!..
அங்கே, தல விருட்சமாகத் திகழ்வது - ஸ்ரீ வில்வம்.
மஹாலக்ஷ்மி நித்ய வாசம் செய்யும் மங்கலங்களுள் வில்வமும் ஒன்று.
வில்வதள அர்ச்சனை கோடி மகா யாகங்களுக்குச் சமமானது என்பது சைவம்.
இத்தகைய வில்வத்தினை ஈசனின் திருவடிகளில் சேர்த்து வணங்குபவரை - தன்னுடன் சேர்த்துக் கொள்கின்றான் என்பது தாத்பர்யம்!..
ஈசன் எம்பெருமான் நிகழ்த்திய வீரட்டங்கள் எட்டு!..
அவற்றுள் ஒன்று சலந்தராசுர வதம்!..
இந்த சலந்தரனின் மனைவி பிருந்தை எனப்பட்ட துளசி!..
சலந்தராசுர வதம் நிகழ்ந்த தலம் - திருவிற்குடி!..
ஈசனின் - வீரட்டானேஸ்வரர்.
அம்பிகை - ஏலவார்குழலி.
தீர்த்தங்கள் - சங்கு தீர்த்தம், சக்ர தீர்த்தம்.
திருவிற்குடியின் தலவிருட்சம் - ஸ்ரீ துளசி!..
திருஞான சம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற தேவாரத் திருத்தலம்.
சைவம் மற்றும் வைணவம் இரண்டிலும் தனித்த சிறப்புடையது ஸ்ரீ துளசி!..
வேண்டுவார் தம் உள்ளத்தின் பிணிகளையும் உடற்பிணிகளையும் ஒருங்கே தீர்ப்பதில் கண் கண்ட வடிவமாகத் திகழ்பவள் - ஸ்ரீ துளசி!..
ஆம்!..
நம்முடைய கண்ணெதிரே தோற்றங்கொண்டு வாழ்பவள் - ஸ்ரீ துளசி!..
நம்மை வாழ்விக்கும் காரணிகளுள் முதன்மையானவள்.
மற்றெந்தச் செடியும் வெளியிடும் பிராணவாயுவை விட - துளசி வெளியிடும் பிராண வாயுவின் அளவு அதிகமாம்.
பாழ்பட்டுள்ள சுற்றுச் சூழலில் நம்மைச் சூழ்ந்துள்ள காற்றைச் சுத்தம் செய்யும் வரப்பிரசாதி - ஸ்ரீ துளசி!..
விடியற்காலைப் பொழுதில் துளசிச் செடியினைச் சுற்றிலும் அமிர்தமாகிய ஓசோன் நிறைந்துள்ளது.
அதனால் தானே விடியற்காலையில் குளித்து விட்டு - துளசி மாடத்தைச் சுற்றி வருபவர் தமக்கு உண்மையான மங்கலங்கள் நிறைந்து விளங்குகின்றது!..
நம் உடல் நலமாக இயங்குவதற்குத் தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட நற்காரியங்களை செய்வது - கல்லீரல்!..
ஓரளவில் - கெட்டுப் போனாலும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி செயல் படுவது - கல்லீரல்!..
கல்லீரல் சிதைவதற்கான காரணிகளுள் முக்கியமானவை - புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மித மிஞ்சிய அசைவ கொழுப்பு உணவுகள்!..
இத்தகைய பழக்கங்களில் இருந்து விலகி மீண்டு வருவோர்க்கு மாமருந்தாகத் திகழ்வது துளசி தளமும் துளசி தீர்த்தமும்!..
துளசியின் அருமையும் பெருமையும் அளவிடற்கரியவை!..
துளசி, சங்கு, சாளக்கிராமம் - இம்மூன்றும் மகத்தானவை.
ஸ்ரீ ஹரியின் வடிவமாகவே திகழ்வது - சாளக்கிராமம்.
இதனைப் பூஜிப்பதற்கு குருபாரம்பர்யமான உபதேசங்களும் பயிற்சிகளும் இன்றியமையாதவை!..
சிவ பூஜையில் முதன்மையானது - சங்கு.
ஈசனுக்குச் செய்யும் அபிஷேகங்களில் மிக உயர்ந்தது சங்காபிஷேகம். இதற்கும் முறையான வழிமுறைகள் உள்ளன.
எளியோர்க்கு ஏற்ற எளிமையாய் திகழ்வது - துளசி.
ஏற்றுத் தொழுபவர் தமக்கு விருந்தாக மருந்தாகத் திகழ்வது துளசியே!..
புண்ணிய புரட்டாசி மாதப் பதிவுகளின் தொடர்ச்சியாக -
இந்தத் துளசியினை மீண்டும் சிந்திப்பதற்கு சித்தம் கொண்டு மனோபாவமாக ஒரு துளசி மஞ்சரியினை பரந்தாமனின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்!..
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..
ஓம் ஹரி ஓம்..
* * *
ஒப்பிலியப்பன் கதையில் வரும் துளசி வேறா?அரிய செய்திகள் அடக்கியபதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஒப்பிலியப்பன் கோயிலின் தலபுராணமும் துளசி மகாத்மியமும் மாறுபாடாகத் தான் இருக்கின்றன. இன்னும் வேறு சில கதைகளும் தென்படுகின்றன. இயற்கையாய் பொருந்தி வருபவைகளின் மையக் கருத்தினை கவனமாகக் கையாண்டிருக்கின்றேன்..
தங்கள் வருகையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
ஹப்பா! எத்தனைத் தகவல்கள்! துளசிதளத்தைக் குறித்து! அதன் மருத்துவ குணங்கள் அதிகம் என்பதாலோ சைவம், வைணவம் இரண்டும் அதைக் கொண்டாடுவது!!?
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குஅருமையும் பெருமையும் மிக்கது துளசி!..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
துளசி மகிமை சொல்லும் பதிவு. துளசி கண்டகி நதியானாள் என்னும் உண்மை அறிந்து கொண்டேன். நன்றி பகிர்விற்கு.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதூயவன் சாளக்கிராமமாக, துளசி கண்டகி நதியாக - என்றும் பிரியாதிருக்கின்றனர்.
அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி.
எளியோர்க்கு ஏற்ற எளிமையாய் திகழ்வது - துளசி.
பதிலளிநீக்குஏற்றுத் தொழுபவர் தமக்கு விருந்தாக மருந்தாகத் திகழ்வது துளசியே!..
சிறப்பான ஆக்கம்.பாராட்டுக்கள்.
அன்புடையீர்..
நீக்குதுளசிக்கு நிகர் துளசியே!..
அன்பின் வருகையும் பாரட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
எத்துனை அரிய தகவல்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குஇளங்காலைப் பொழுதில் தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மனம் மகிழ்கின்றது.. தீபாவளியின் போது சந்திப்போம்!..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதுளஸியின் அருமை பெருமை நிறைந்த பதிவு!
மிகச் சிறப்பு! இங்கு நான் வாழும் நாட்டில் நல்ல கோடை காலத்தில் வீரியமாக வளர்ந்து குளிர்காலம் வந்தவுடன் (வீட்டுக்குள் தொட்டியில் வைத்திருந்தும்) இலை கொட்டிக் காய்ந்து பட்டே போகிறது. மன வருத்தமாகிவிடுகிறது ஐயா!
வீட்டினுள்ளே ஹீட்டர் குளிகாலத்தில் இருக்கின்றது. ஆனாலும் சூரிய வெளிச்சமோ வெய்யிலையோ காண்பது அரிகிவிடுவதால் இச்செடி முளைத்தும் நீண்ட காலத்திற்கு நிற்குதில்லை.
அருமையான தகவல்கள்! நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குதாங்கள் வசிக்கும் நாட்டின் தட்பவெப்ப நிலை துளசி செடிக்கு ஏற்றதாக இல்லை போலிருக்கின்றது. இருப்பினும் வளரும் காலம் வரைக்கும் துளசி வளரட்டுமே!..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி
துளசியின் மகிமை பற்றி அழகான விளக்கம். நீங்கள் சொன்னது போல் துளசியின் வரலாறு நிறைய இருக்கிறது ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு மாதிரி துள்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்.,
நீக்குஅனைவருக்கும் ஸ்ரீதுளசி தேவி சர்வ மங்கலங்களைத் தந்தருள்வாள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
Super Super Super
பதிலளிநீக்குfrom Devakottai
அன்பின் ஜி.,
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் ஐயா...
பதிலளிநீக்குதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html
நன்றி
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி..
வாழ்க நலம்..