செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

கற்பக விநாயகர்

பிள்ளையார் பட்டி - கற்பக விநாயகர் திருக்கோயில்!..

தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் இத்திருக்கோயிலை அறியாதவர் யாரும் இருக்கமுடியாது.

தொன்மையான குடைவறைக் கோயில்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு!..

ஆதியில் மருதமரங்கள் அடர்ந்திருந்த வனம். எனவே மருதங்குடி என்பது திருப்பெயர்.

குடைவறையில் விநாயகர் கம்பீரமாக ஆறடி உயரத்துடன் திகழ்கின்றார்.


அங்குச பாசங்கள் இன்றி - வலஞ்சுழித்த துதிக்கையுடன் வலது திருக்கரத்தில் மோதகத்துடன் இடது திருக்கரத்தை இடையில் வைத்தபடி - குடைவறை மூர்த்தியாக வடக்கு நோக்கித் திகழ்கின்றனர்.  

குடைவறைக் கோயிலில் மகாதேவர் - சிவகாமி அம்மை விளங்குகின்றனர். 

பின்னாளில் - குடைவறைக் கோயிலைச் சார்ந்ததாக -  அழகான சிவாலயம் எழுப்பப்பட்டது. 

இறைவன் - மருதங்குடி ஈசர். அம்பிகையின் திருப்பெயர் வாடாமலர் மங்கை.
தலவிருட்சம் - மருதமரம். 

ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருள்வார். திருக்கோயில்  பிரகாரத்தில் உலா நிகழும்.


பெருமை வாய்ந்த பிள்ளையார்பட்டியில், விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருடந்தோறும் வெகுசிறப்பாக பத்து நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 

நிகழும் வருடத்தின் சதுர்த்திப் பெருவிழா நாளை  (ஆகஸ்ட்/20 புதன்) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் திருவீதி எழுந்தருள்கின்றார்.


இரண்டாம் திருநாளான வியாழன் (ஆகஸ்ட்/21) முதல் எட்டாம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளிக் கேடயத்திலும்,

இரவில் - மூஷிகம், சிம்மம், பூதம், கமலம், ரிஷபம் என பல்வேறு வாகனங்களிலும்  திருவீதி உலா எழுந்தருள்கின்றார். 

ஆறாம் திருநாள் (ஆகஸ்ட்/25) மாலைஆறு மணியளவில் கஜமுகாசூர சம்ஹாரம் நிகழ்கின்றது. அதன்பின் இரவு திருவீதி உலா.  

ஏழாம் திருநாளன்று மயில் வாகனத்திலும் எட்டாம் திருநாள் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா நிகழும். 

ஒன்பதாம் திருநாள் (ஆகஸ்ட்/28) காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல். 

கற்பக விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனக் காப்பு ஒன்பதாம் திருநாள் அன்று நடைபெறும்.

  
கணபதி என்றிட கலங்கும் வல்வினை 
கணபதி என்றிட காலனும் கைதொழும் 
கணபதி என்றிட கருமம் ஆதலால் 
கணபதி என்றிட கவலை தீருமே!..

அன்று மூலவருக்கு மகாஅபிஷேகம் நிகழும். மாலை சந்தனக்காப்பு  தரிசனம். மஹாதீபாராதனை.

சந்தனக் காப்பு அலங்காரத்தில் இரவு பத்து மணி வரை பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். 

மாலை நான்கு மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்கத் தேரோட்டம் நடைபெறும். 

இரவு விநாயகர் யானை வாகனத்தில் எழுந்தருள - திருவீதி உலா நிகழும். 

பத்தாம் திருநாளான (ஆகஸ்ட்/29) சதுர்த்தியன்று காலை ஒன்பது மணி அளவில் திருக்கோயில் புஷ்கரணியில் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். 

நடுப்பகலில் மூலவருக்கு பிரம்மாண்டமான முக்குறுணிக் கொழுக்கட்டை நிவேத்யம் செய்து சிறப்பு அலங்கார தீபாராதனை. 

குறுணி எனப்படுவது ஆறுபடி. முக்குறுணி எனில் பதினெட்டுப்படி.  

பதினெட்டுப்படி அரிசி மாவுடன் நாற்பது கிலோ வெல்லம் இரண்டு படி எள் ஆறுபடி கடலைப் பருப்பு  ஆகியவற்றைச் சேர்த்து அத்துடன் ஐம்பது தேங்காய்களைத் துருவிப் போட்டு அதற்குத் தக்கபடி ஏலக்காயும் சேர்த்து ஒரே கொழுக்கடையாகச் செய்து - அவித்து - பெரிய தடிக் கம்பில் தொட்டில் காவடி போல சந்நிதிக்கு எடுத்து வருவர் என்று அறியமுடிகின்றது.

அன்று இரவு பதினோரு மணியளவில் - தங்க, வெள்ளி வாகனங்களில் பஞ்ச மூர்த்தி திருவீதி எழுந்தருளல்.


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் - குமரன் கொலு வீற்றிருக்கும் குன்றக்குடிக்கு அடுத்ததாக உள்ளது - பிள்ளையார்பட்டி.

பலமுறை தரிசித்த திருக்கோயில். 

குன்றக்குடியில் குமரனையும் பிள்ளையார் பட்டியில் பெருமானையும் கண்குளிரத் தரிசிப்பது சுகமானதொரு அனுபவம்.

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசரர் ஆதார மாகிய - பெருமாளே!..

இத்தலத்தை விநாயகமலை எனக் குறிப்பிட்டு அருணகிரி நாதர் முருகப் பெருமானை வழிபடுகின்றார்.


இன்னும் பத்து நாட்களில் விநாயக சதுர்த்திப் பெருவிழா!..

உள்ளங்களும் இல்லங்களும் துலங்க -  துங்கக் கரிமுகத்துத் தூமணியான் எழுந்தருளி - சங்கத் தமிழ் மூன்றும் தந்தருளும் நாள்!..

கவலைகள் தீர்த்து வைக்கும் கரிமுகத்துக் கணபதி கற்பக விநாயகனைப் போற்றி கவியரசர் கண்ணதாசன்  புகழ்ந்துரைக்கும் பாடல் இதோ!..

அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்! பொய்யில்லை கண்ட உண்மை!..

ஓம் கம் கணேசாய நம:
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

16 கருத்துகள்:

  1. வருடா வருடம், தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று செல்லும் கோயில்தான் பிள்ளையார் பட்டி
    இன்று உங்களால் பிள்ளையார் பட்டி தரிசணம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பிள்ளையார்பட்டி விநாயகனை
    தரிசித்த மகிழ்ச்சியில்
    இன்று அல்ல என்றுமே
    நான் இருப்பேன்.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. கற்பக விநாயகர் அருளும் அற்புதப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது பிள்ளையார்பட்டி. ஒரு முறை நகரத்தாரின் எல்லாக் கோவில்களுக்கும் சென்றபோதும் இன்னும் இருமுறையும் கற்பகவிநாயகரை தரிசித்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நகரத்தார் பராமரிப்பில் விளங்கும் கோயில்களுள் ஒன்று..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  6. அடுத்த வாரம் வரவிருக்கும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலைப் பற்றி சிறப்புக் கட்டுரை. நான் இந்த கோயிலுக்கு இரண்டு தடவை சென்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  7. விநாயகர் சதுர்த்தி வருவதற்கு முன்பாக விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. பல முறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். தங்களின் பதிவு மூலமாக சில புதிய செய்திகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் பெருமை தேவகோட்டைக்காரனாகிய எனக்கு தெரியும் என்றாலும் தங்களது பதிவின் மூலம் கூடுதல் விபரம் தெரிந்து கொண்டேன் நண்பரே,,,,

    கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதைக்கு வாருங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..