புதன், ஆகஸ்ட் 27, 2014

திருமுறை தந்த கணபதி

விடிவதற்கு இன்னும் சிறு பொழுது தான் இருக்கின்றது.

இன்னும் ஒரு முடிவுக்கு வர அவரால் இயலவில்லை.

அவர் - அனந்தேச குருக்கள்.


நாளும் தவறாது முப்போதும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் தம் திருமேனி தீண்டி  பூஜா கைங்கர்யங்களைச் செய்து வரும் சிவநேசச் செல்வர்.

வாசல் தெளித்துக் கோலமிட்டு விட்டு மாடத்தில் திருவிளக்கேறி வணங்கிய பின் அகத்தினுள் நுழைந்த - அவரது இல்லத்தரசி கல்யாணி - அனந்தேச குருக்களை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

ஏன்னா!.. நீங்க இன்னுமா கிளம்பலை!?..

நம்பி சின்னக் குழந்தைடி!.. அவன் எப்படி பூஜை செய்வான்னு தான்!..

அவனுக்கும் நாலு விஷயம் தெரிய வேண்டாமோ!.. எல்லாம் சரியாகச் செய்வான். மனசைப் போட்டுக் குழப்பிக்காம -  நீங்க புறப்படுங்கோ!..

அந்த வேளையில் கிணற்றடியில் குளித்து விட்டு ஓடி வந்தான் நம்பி..

நம்பி!.. - என்றார் அனந்தேச குருக்கள்.

என்னப்பா!..

பிள்ளையாருக்கு பூஜை எல்லாம்... -

நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம்!.. நான் ஸ்லோகம் எல்லாம் சரியா சொல்லி பூஜை செஞ்சிடுவேன் அப்பா!..

மகனின் மொழி கேட்டு தந்தைக்கு நிம்மதியாயிற்று.  உச்சி பொழுதிற்குள் வந்து விடுவதாக  - அந்த விடியற்காலைப் பொழுதில் அடுத்திருந்த ஊருக்குப் புறப்பட்டார்.

கூவின பூங்குயில். கூவின கோழி. குருகுகள் இயம்பின. இயம்பின சங்கம்!..

திருநாரையூர் திருக்கோயில்
நம்பீ!.. இதோ இருக்கிறது பிரசாதமெல்லாம்!.. அப்பா மாதிரி கவனமாக பூஜை செய்யணும் .. தெரியறதா!..

தாயின் அறிவுறுத்தலைக் கேட்ட மகன் - சரி அம்மா!.. - என்றான்.

வழி நெடுக, நம்பியின் மனதில் - கணேச சிந்தனைதான்!..

பொள்ளாப் பிள்ளையாரின் சந்நிதியை அடைந்தான்.

இதோ.. வந்துட்டேன்!.. - குடத்தை எடுத்துக் கொண்டு கிணற்றடியை நோக்கி ஓடினான்.

குறுக்குக் கட்டையில் உட்கார்ந்திருந்த சிட்டுக் குருவிகள் எல்லாம் நம்பியைக் கண்டதும் விருட்டென எழுந்து அவன் தலையைச் சுற்றிப் பறந்து விட்டு செம்பருத்திச் செடிக்குள் புகுந்து கொண்டன.

கர கர  - என்று கிணற்று நீரை இழுத்தான்.  திருக்கோயிலின் வாசலை சுத்தம் செய்தான். சின்னதாக கோலமிட்டு ஒரு பூவை வைத்தான்.

மீண்டும் குடத்தை நிரப்பிக் கொண்டு சந்நிதிக்குள் ஓடினான்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே..

- என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டான்.


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..


தோத்திரங்களைச் சொல்லியபடி குளிர்ந்த நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்தான்..

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் காப்பு செய்து திரவியப் பொடியாலும் மஞ்சள் பொடியாலும்  நீராட்டினான்.

கையில் கொண்டு சென்ற - காராம் பசுவின் பாலைக் கொண்டு கற்பக மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வித்தான்.  கருவறைக்குள் சந்தனப் பொடி இருந்தது. சந்தனத்தைக் கரைத்து அபிஷேகித்தான். நெற்றியில் திலகம் வைத்து கற்பூர தீபம் காட்டினான்.

மீண்டும் சுத்த நீரால் பெருமானை நீராட்டினான் - நம்பி.

பெருமானின் அருகிருந்த நாகராஜனும் எதிரில் இருந்த மூஷிகமும் சுறுசுறுப்பாக நீராடிக் கொண்டனர். பலி பீடத்திலும் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றினான்.

கணபதியின் மேலிருந்த பழைய வஸ்திரத்தைக் களைந்து விட்டு புதிய வஸ்திரத்தை அணிவித்தான்.

வக்ர துண்ட மஹாகாய கோடி சூர்ய ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூ ஸர்வதா..

பக்தி சிரத்தையுடன் ஸ்லோகத்தைச் சொல்லியபடி திருநீறு சாற்றி சந்தனம் குங்குமம் அணிவித்தான்.


தென்னங்குடலையில் இருந்த பூமாலையை சூட்டினான். பூச்சரங்களைத் திருமேனியில் சாற்றினான். திருவிளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரிகளைத் தூண்டி விட்டான்.

சந்நிதி ஒளிமயமாக இருந்தது கண்டு நம்பிக்கு ஏக சந்தோஷம்.

ஓம் ஸுமுகாய நம:
ஓம் தூம கேதவே  நம:
ஓம் ஏக தந்தாய நம:
ஓம் கணாத்யக்ஷாய நம: 
ஓம் கபிலாய நம:
ஓம் பாலசந்த்ராய  நம:
ஓம் கஜகர்ணாய  நம:
ஓம் கஜானனாய நம:

ஓம் லம்போதராய  நம:
ஓம் வக்ரதுண்டாய  நம:
ஓம் விகடாய  நம:
ஓம் சூர்ப்ப கர்ணாய  நம:
ஓம் விக்னராஜாய  நம:
ஓம் ஹேரம்பாய  நம:
ஓம் கணாதிபாய  நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித  பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தேங்காயை உடைத்தான். பிரசாதங்களை வெல்லம், பழங்கள், தாம்பூலம் இவற்றுடன் நிவேதனம் செய்து தீர்த்தம் கொடுத்து - தூப தீப ஆராதனைகளைச் சமர்ப்பித்தான் நம்பி!..

ஆர்வம் மீதூற பிள்ளையாரின் திருமுகத்தையே பார்த்திருந்த நம்பியின் கண்களில் சற்றைக்கெல்லாம் நீர் திரண்டது.

ஏன் இன்னும் பிள்ளையார் சாப்பிடவில்லை!.. - பிஞ்சு மனம் பேதலித்தது.

அம்மா அன்புடன் செய்து கொடுத்த நைவேத்தியம்தானே இது!.. இத்தனை நாள் தந்தையின் கையினால் நிவேத்யம் சாப்பிட்ட பிள்ளையார் இன்று ஏன் இன்னும் வரவில்லை?..  - மனம் குழம்பினான்.

பெருமானை சாப்பிடும்படி வேண்டினான். நேரம் தான் ஆனது. பிள்ளையார் வந்து சாப்பிடக் காணோம்.

கண்கள் பெருக்கெடுத்தன. 

தான் ஏதோ தவறு செய்து விட்டதால்தான் - தான் படைத்த உணவை பிள்ளையார் ஏற்க மறுக்கிறார் என்று எண்ணினான் நம்பி. வேதனை மிகவானது. மன்றாடினான். தரையில் விழுந்து புரண்டு அழுதான். தொழுதான்.

இத்தனை நாழி ஆகியும் நீ வந்து சாப்பிடலைன்னா என்ன அர்த்தம்?.. பகவான் வந்து பிரசாதமெல்லாம் சாப்பிட்டுட்டார்ன்னு அப்பா சொன்னது பொய்யா?.. இத்தனை நாள் அப்பா செஞ்ச பூஜைக்குப் பழியாயிடுத்தே.. என்னால கெட்ட பெயர் வந்துடுத்தே!.  நீ சாப்பிடாத பட்சணங்களோட ஆத்துக்குப் போனா அடிப்பாளே!.. ஆத்துக்குப் போய் அடி வாங்கறதை விட - இங்கேயே உன் காலடியிலேயே முட்டிக்கிறேன்!..   - என்றபடி கல்லில் முட்டிக் கொண்டான்.

அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் -  ஐங்கரனின் மனம் இளகியது.


தன் திருவடிகளில் முட்டிக் கொண்ட நம்பியைத் தம் திருக்கரத்தால் தாங்கிக் கொண்டார்.

நம்பி பொறு!.. - எனக் கூறியபடி நிவேத்யங்களை அனுக்கிரகித்தார்.

துதிக்கையை வலஞ்சுழித்த வண்ணம் வள்ளல் பெருமான் உண்பதைக் கண்ட நம்பி தன்னையே மறந்தான்.

தன்யன் ஆனேன் ஸ்வாமி!.. - என்றபடி வலம் வந்து விழுந்து வணங்கினான்.

மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினான் நம்பி. தாய் ஆவலுடன் கேட்டாள்.

நம்பி!.. நிவேத்ய பாத்ரம் இங்கே இருக்கின்றது. நிவேத்யம் எல்லாம் எங்கேயடா?..

அதான் நிவேத்யம் ஆகிடுச்சே!.. அம்மா!..

நிவேத்யம் ஆகிடுச்சு.. சரி!.. நிவேத்யம் எங்கேயடா!..

நிவேத்யம் தான் ஆகிடுச்சே.. அம்மா!..

எப்படிடா.. ஆகும்!.. நிவேத்ய பட்சணமெல்லாம் எங்கே!?..

நிவேத்ய பட்சணமா!.. அதான் பிள்ளையார் வந்து தின்னுட்டாரே!..

என்னது பிள்ளையார் வந்து தின்னுட்டாரா?. மயக்கம் வந்தது அந்தத் தாய்க்கு!.

என்னடா.. சொல்றே!.. கோயில்ல எதையாச்சும் பார்த்து பயந்துட்டாயா?..

விஷயத்தைத் தாயிடம் சொன்னான். அவளால் நம்ப முடியவில்லை. தன் அன்பு மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றே அஞ்சினாள்.

உச்சி வெயிலில் அரக்கப் பரக்க வந்த அனந்தேச குருக்கள் - மகனின் பூஜா விதானத்தைக் கேட்டு அயர்ந்து விட்டார்.

மகனின் காதைப் பிடித்து இழுத்து செல்லமாக முதுகில் தட்டினார்.

பிள்ளையாரைப் பூஜிக்கிறவா பொய் சொல்லப்படாது!.. எங்கே மறுபடி சரியாச் சொல்லு!..  நிவேத்ய பட்சணமெல்லாம் எங்கே?.. கீழே போட்டு விட்டாயா?...

இல்லை.. அப்பா!. நான் பொய் சொல்லலை!.. ஸ்வாமி வந்து இன்னும் சாப்பிடலயேன்னு நான் அழுதேனா!. அப்ப பிள்ளையார் வந்து - நம்பி அழாதேடா.. அப்படின்னு சொல்லிட்டு பட்சணம் எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டார்!.. - என்றான்.

தந்தைக்கும் தாய்க்கும் தலை சுற்றியது.

தினந்தோறும் நைவேத்தியத்தைக் கோயிலில் விநியோகம் செய்து விட்டு பிரசாதம் கேட்கும் பிள்ளையிடம், பிள்ளையார் சாப்பிட்டு விட்டார் என்று சொன்னேனே!.. அதை அப்படியே மனதில் வைத்துக் கொண்டானோ!.. ஸ்வாமியாவது வந்து சாப்பிடுவதாவது!..- தவித்தார் குருக்கள்.

அதற்குள்ளாக  குருக்கள் மகனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று ஊர் திரண்டு வந்து விட்டது.

ஒருவழியாக இரவாகி பொழுதும் விடிந்தது. குருக்கள் ஒரு முடிவெடுத்தார்.

திருநாரையூர் கணபதி
அதன்படி மறுநாள் காலையில் மீண்டும் - நம்பியின் கைகளில் நிவேத்ய பட்சணங்கள் கொடுக்கப்பட்டன.  துள்ளிக் கொண்டு செல்லும் செல்லப் பிள்ளையைப் பின் தொடர்ந்தனர் பெற்றோர். குருக்கள் மகனுக்கு உண்மையில் என்ன ஆயிற்று எனத் தெரிந்து கொளும் ஆவலுடன் ஊரும் பின் தொடர்ந்தது.

கோயிலைத் திறந்து சந்தோஷமாக அபிஷேக ஆராதனைகளைச் செய்தான் நம்பி. சந்நிதிக்குத் திரையிட்டான். சாம்பிராணி வாசம் எங்கும் கமழ்ந்தது. தேங்காய் உடைபடும் சத்தம் கேட்டது. கண கண என மணியோசையும் கேட்டது. சற்று நிசப்தம்!..

ஆவலுடன் பிள்ளையாரை வரவேற்கும் நம்பியின் குரல் கேட்டது.

ஊரும் உறவும் ஆவலுடன் ஒளிந்திருந்து நோக்குவதைக் கண்டு நகைத்த விநாயகப் பெருமான் - ஒரு கணம் அனைவருக்கும் தரிசனம் தந்து மறைந்தார்.

தன் பிள்ளை சமர்ப்பித்த நிவேத்யத்தை  தலைப்பிள்ளை உண்டு மகிழ்வதைக்  கண்டு பெற்ற மனம் குளிர்ந்தது. மகனைக் கட்டியணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர் தாயும் தந்தையும்.

அற்புதம் நிகழ்ந்ததைக் கண்ட மக்கள் ஆரவாரித்தனர். அகமகிழ்ந்து கொண்டாடினர்.

நம்பியின் அன்புக்கு இரங்கிய விநாயகப் பெருமான் - சகல கலைகளையும் நம்பிக்குப் பிரசாதித்தார்.

என்னை நினைந்தடிமை கொண்டுஎன் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான். 

நம்பி - விநாயகரைப் போற்றி இரட்டை மணிமாலை பாடினார். மேலும் பல ஞானப் பனுவல்களையும் இயற்றினார்.

நம்பியும் - நம்பியாண்டார் நம்பி என புகழப்பட்டார்.

நாளடைவில் விஷயம் நாடாண்ட வேந்தனுக்குச் சென்றது. ஒருகணம் திகைத்த மன்னவன் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கூத்தாடினான்.

அவன் - திருச்சிற்றம்பலமுடைய சிவபெருமானுக்கு தக்ஷிண மேரு எழுப்பிய சிவபாத சேகரன் - ஸ்ரீராஜராஜ சோழ மாமன்னன்!..


வண்டி வண்டியாக - பழங்களையும் பல்வகையான பட்சணங்களையும் பொன் மணி முத்து என சீர்வரிசைகளையும் ஏற்றிக் கொண்டு தஞ்சையில் இருந்து திருநாரையூருக்கு வந்தான்.

நம்பியாண்டார் நம்பியைப் பணிந்த மும்முடிச் சோழ வேந்தன்  பிள்ளையாரை வணங்கி நின்றான்.

பெருமான் திருவமுது செய்தருளல் வேண்டும்!.. - மன்னன் வேண்டிக் கொண்டான். பிள்ளையார் பெருங்கருணையுடன் அனுக்கிரகித்து அருளினார்.

மாமன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மனம் நிறைந்து நின்றான்.

ஐயனே!.. என் ஆவல் ஒன்றினை நிறைவேற்றித் தருதல் வேண்டும்!..

சக்ரவர்த்தியின் விண்ணப்பம் பெருமானின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

மன்னனின் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்த விநாயகப்பெருமான் -

நீ தேடி வந்த திருமுறைச் சுவடிகள் - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் தென் மேற்கு மண்டபத்தில்  கிடைக்கும்!.. -  என திருவாக்கு அருளினார்.

திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப்பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் பற்றிய செய்திகளைத் தேடி வந்த மன்னனுக்கு நல்லருள் புரிந்தவர் நாரையூர் பிள்ளையார். 

பின்னும் - தில்லைத் திருக்கோயிலின் உள்ளே  தென்மேற்கு மண்டபத்தில் எந்த அறையில் என்று தெரியாமல் திகைத்தபோது மீண்டும் விநாயகர் அடையாளம் காட்டியருளினார்.

இன்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் மேற்கு பிரகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி விளங்குகின்றது.

அதற்குப் பிறகு பலவாறு போராடி - பூட்டிக் கிடந்த அறைக்குள் செல்லரித்துக் கிடந்த ஏடுகளைக் கண்ணீருடன்  சேகரித்த இராஜராஜ சோழன், திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றைத்  திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான்.

இன்று நாம் பாடி மகிழும் தேவாரத் திருப்பதிகங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமானவர் -  திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்.

தவறு செய்த கந்தர்வன் நாரை வடிவம் பெற்று சாபம் தீர சிவபூஜை செய்த திருத்தலம் - திருநாரையூர்.

இறைவன் ஸ்ரீ சௌந்தர்யேஸ்வரர். அம்பிகை  ஸ்ரீ திரிபுரசுந்தரி.
தல விருட்சம் - புன்னை. தீர்த்தம்  காருண்ய தீர்த்தம்.


ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

பொள்ளாப் பிள்ளையார் எனில் உளி கொண்டு செதுக்கப்படாத - சுயம்பு என்பது பொருள்.

ஆனால்  - நல்லது செய்த பிள்ளையாருக்கு நம்மால் ஆன காணிக்கை - என்று பொல்லாப் பிள்ளையார் என தவறாக திரித்துச் சொல்கின்றனர்.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் தொழுது வணங்கிய தலம். 

கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கூடிய திருக்கோயில்.

சுவாமி சந்நிதி மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுடன் - நம்பி, நாரை, இராஜராஜ சோழன் திருமேனி கொண்டு விளங்குகின்றனர்.

பொள்ளாப் பிள்ளையார் மகாமண்டபத்தில் நம்பியாண்டார் நம்பியும், இராஜராஜ சோழனும் காட்சி தருகிறார்கள்.

கோயிலுக்கு அருகில் நம்பியாண்டார் நம்பி அவதரித்த இல்லம் இருந்த இடத்தில் நம்பியாண்டார் நம்பியின்  சந்நிதி விளங்குகின்றது.

ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்
விநாயகப் பெருமானுக்கு - நம்பி திருஅமுதளித்த நிகழ்வினைப் போற்றி வள்ளலார் ஸ்வாமிகள்  - திருஅருட்பாவில் புகழும் திருப்பாடல் இதோ!..

நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே!.

தினசரி ஐந்துகாலப் பூஜைகளுடன் - சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கிருத்திகை, கந்த சஷ்டி , பிரதோஷம், மகா சிவராத்திரி  முதலிய விசேஷங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

திருநாரையூர் எனும் திருத்தலம், சிதம்பரம் – காட்டுமன்னார் கோவில் சாலையில் உள்ளது.

வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பு அண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநம் சிந்தையமர் வான்.

அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!.. 
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்!..

ஓம் கம் கணபதயே நம:
* * *

18 கருத்துகள்:

  1. மூத்தோனின் அன்பை விளக்கிட முடியாது. அற்புதங்கள் நிகழ்த்தும் வள்ளல்! நம்பியின் வரலாறை அறியாதோருக்கும், அழகு நடையுடன், இறை மாண்பினையும் அடியாரின் பெருமையும்....ஆஹா,,,அற்புத உன்னத பகிர்வு!...வாழ்த்துக்கள் அய்யா!
    http://www.krishnaalaya.com/2014/08/blog-post_81.html
    http://www.krishnaalaya.com/2014/08/2.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய கருத்துரை மேலும் ஊக்கம் அளிக்கின்றது..
      அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. gam ganapathaye namaha

    All the Best will be showered on you and your family By the Benevolence of Lord Vinayaka.

    subbu thatha.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் அன்பான நல்வாழ்த்துக்களுக்கு உளம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும்!..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    விக்கினம் தீர்க்கும் விக்னநாதன் அருமை பெருமை கூறும்
    பதிவு இன்று. அற்புதம்!

    பொள்ளாப் பிள்ளையார் - பொல்லாப் பிள்ளையார் திரிபு
    விளக்கமும் அருமை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      வார்த்தைகளின் திரிபினால் - அர்த்தம் மாறிப் போகின்றது.
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. நம்பியாண்டார் நம்பி பற்றி அறிந்து கொண்டேன். பொல்லாப் பிள்ளையார் பெயர் விளக்கமும் தெரிந்தது. நன்றி துரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அனைத்தும் நானறியாத விசயங்கள் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. நாங்களும் சமீபத்தில் சென்று தரிசனம் செய்து வந்தோம். பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு விழாவை முன்னிட்டு தருமபுர ஆதீன குருமகாசன்னிதானம் அவர்கள் திருநாரையூர் வந்து இருந்து திருமுறை உரை நூல்களின் ஊர்வலம் நிகழ்த்தினார்கள். பின்னர் அவை சிதம்பரம் ஆயிரம்கால் மண்டபத்தில் வெளியிடபட்டன. அதைப்பற்றிய பதிவை பின்னர் எழுத வேண்டும்.

    உங்கள் பதிவு மிக அருமையாக இருக்கிறது.
    பொள்ளாபிள்ளையார் பெயர் விளக்கம் அருமை.
    படங்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.
    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  7. ஆர்வம் மீதூற பிள்ளையாரின் திருமுகத்தையே பார்த்திருந்த நம்பியின் கண்களில் சற்றைக்கெல்லாம் நீர் திரண்டது.

    பதிவு அகக்கண்களில் காட்சியாய் விரியும் வகையில் அருமையாகப் படைத்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் பாரட்டுரைக்கு நன்றி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி ..

      நீக்கு
  8. அற்புதம் நிகழ்ந்த கோவிலை தரிசிக்கும் பாக்கியமிதுவரை வாய்க்கவில்லை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நிச்சயம் தங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும்..
      தங்களின் இனிய வருகைக்கு நன்றி..

      நீக்கு
  9. நல்ல பகிர்வு ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..