வியாழன், ஜூன் 05, 2014

நம்மாழ்வார்

ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கள்ளர் பிரானும்,
ஸ்ரீ வரகுணமங்கையிலிருந்து எம் இடர் களைவானும், திருப்புளியங்குடியிலிருந்து காய்சின வேந்தனும்,
தொலைவிலி மங்கலம் எனும் இரட்டைத் திருப்பதியிலிருந்து
தேவர் பிரானும் செந்தாமரைக் கண்ணனும், 
திருக்குளந்தையிலிருந்து மாயக்கூத்தனும், 
தென் திருப்பேரையிலிருந்து நிகரில் முகில் வண்ணனும்,
திருக்கோளூரில் இருந்து வைத்த மாநிதிப் பெருமானும் 

- ஆகிய எட்டு திருமேனியரும் கருடாரூடராக - திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரியை நோக்கிப் புறப்படுகின்றனர்.

ஏன்!..

திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரியில் - 


சடகோபன், பராங்குசன்,  வகுளாபரணன், குருகூர் நம்பி - என்றெல்லாம் கொண்டாடப்பட்ட நம்மாழ்வார் ஸ்வாமிகளின் திருவாய்மொழியினைக் கேட்டு மகிழ்வதற்காக!.. 

பொய்நின்ற ஞானமும் பொல்லாஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாமுறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே!..
திருவிருத்தம்/முதல்திருமொழி (2478)

ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளும் திருமூர்த்திகளை -  பொலிந்து நின்ற பிரான் எதிர் கொண்டழைக்கின்றார். 


பின், பொலிந்து நின்ற பிரானும் கருட வாகனத்தில் எழுந்தருள - 

மகோன்னதமான - ஒன்பது கருடசேவை சாதிக்கப்படுகின்றது.

காலையில்  - ஹம்ஸ வாகனத்தில் ஆரோகணிக்கும் ஆழ்வாரைக் கண்டு அவர்க்கு அருளி - அமுதத் தமிழ்  திருப்பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்று, இரவில் கருட வாகனத்தில் சேவை சாதித்து திருவீதி எழுந்தருள்வர். 

திருஅந்திக்காப்புக்குப் பிறகு திரும்பவும் பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று விடை கொள்வர்.

ஆச்சாரியன் -  பெருமாளின் திருப்பாதங்கள் என்பது தாத்பர்யம்.

அறியாத ஜீவன் ஆவலுற்றுத் தவிக்கும் போது - ஆச்சார்யனே அவ்விடத்தில் எழுந்தருளி -  இறைவனின் திருப்பாதங்களை நம்மிடம் சேர்ப்பித்து நம்மை உய்வித்து அருள்கிறார் என்று நம்பிக்கை.

இதுவே பெருமாள் சந்நிதிகளில் - நம் சிரசில் சூட்டும் சடாரியின் தத்துவம்.

இந்த சடாரிக்கு ஸ்ரீசடகோபம் எனும்  திருப்பெயரும் உண்டு.

அஞ்ஞானம் எனும் மாயையை நீக்குவது - சடாரி என்பர்.

கர்ப்பத்தினுள் ஊறிக் கிடக்கும் குழந்தையை, நிறை மாதத்தில் - உலக மாயைக்குள் ஆட்படும்படி - உந்தித் தள்ளும் வாயு சடம் எனப்படும். 

பிள்ளைகள் அத்தனையும்  சடத்தினால் உந்தப்பட்டு பிறக்க - ஒரு குழந்தை மட்டும்  சடம் எனும் அந்த வாயுவுக்கு ஆட்படாமல் கோபித்து  - அதனை வென்று நின்றதாம். 

அந்தக் குழந்தை -

திருக்குருகூர் எனும் புண்ணிய க்ஷேத்ரத்தில் - காரி எனும் உத்தம வைணவ நம்பிக்கும் உடைய நங்கை எனும் மாதரசிக்கும் திருமகவாக வைகாசித் திங்கள் விசாக நன்னாளில் தோன்றியவர். 

இவருக்கு பெற்றோர் இட்ட திருப்பெயர் மாறன் சடகோபன்.  

குழந்தைக்கு நான்கு வயதாகியும் -   மற்ற பிள்ளைகளைப் போல் அழாமலும் விரும்பி அமுதருந்தாமலும் கிடந்தது. மனம் வருந்திய பெற்றோர் - 

திருக்குருகூர் க்ஷேத்ரத்தில் குடிகொண்டருளும் ஸ்ரீ ஆதிநாதன் சந்நிதியில் கைகூப்பி நின்றனர். 

ஸ்தலவிருட்சம் - திருப்புளி
க்ஷேத்ரத்தில் ஆயிரமாயிரம் வருடங்களைக் கடந்து - தழைத்து நிற்கும் புளிய மரத்தில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை இட்டனர். அந்தக் குழந்தை தொட்டிலை விட்டிறங்கித் தவழ்ந்து - திருப்புளியின் கண் இருந்த ஒரு பொந்தினுள் புகுந்தது. யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தது. 

பிள்ளையின் தன்மையினைத் தெளிவாக உணர்ந்து கொண்டனர் பெற்றோர். காலச்சக்கரம் விரைந்தோடியது. 

இச்சமயத்தில் - திருக்கோளூரில் பிறந்தவரான மதுரகவி என்பவர் - வயலில் மேய்ந்த பசுவை - கோல் கொண்டு விரட்ட - அந்தப் பசு வெருண்டு ஓடி -  இடறி வீழ்ந்து மடிந்தது. 

பசுவின் மரணம் கண்டு அஞ்சிய மதுரகவி - அந்தப் பழி தீரவேண்டும் என்று கங்கைக் கரையில் தவத்தில் ஆழ்ந்தார். 

ஒருநாள் தென் திசை வானில் பேரொளியினைக் கண்டார். அதனைக் கண்டு ஆவலுற்ற மதுர கவி அதனைத் தொடர - அது அவரை திருக்குருகூரில் ஆதிக்ஷேத்ரம் எனப்படும் ஆதிநாதன் திருக்கோயிலுக்கு  அழைத்து வந்தது. 

அங்கே - திருப்புளியினுள்  ஞான ஒளியாகப் பிரகாசித்த குருகைப் பிரானைக் கண்டார். அவரிடம் தமக்கு ஞானோபதேசம் அருளும்படி கேட்டுக் கொள்ள - ஆழ்வார் - திருவாய் மொழியினை அருளிச் செய்ததாக ஸ்தலபுராணம்.

உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் 
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி 
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்க அவனூர் வினவி 
திண்ணமென் இளமான் புகுமூர் திருக்கோளூரே!..
திருவாய்மொழி/ ஆறாம் பத்து/ஏழாம் திருமொழி (3517)

பராங்குசன், குருகைப் பிரான், வேதம் தமிழ் செய்த மாறன் என்றெல்லாம் புகழப் பெற்ற நம்மாழ்வார் ஸ்வாமிகள் அருளிச் செய்தவை -  திருவிருத்தம் , திருவாசிரியம் , பெரிய திருவந்தாதி , திருவாய்மொழி , திருஎழுகூற்றிருக்கை. 

நம்மாழ்வார் மங்களாசாசனம் பெற்ற தலங்கள் முப்பத்தாறு. 

முப்பத்தோரு வருடங்கள் திருப்புளியின் கீழிருந்த ஸ்வாமிகள் தனது முப்பத்தைந்தாம் வயதில் பரமபதம் எய்தினார்.  அவரது திருமேனியினை நிலைப்படுத்தி சந்நிதி எழுப்பி - வைகாசி விசாகத்தில் ஆச்சார்யனின் அவதார  வைபவத்தினைக் கொண்டாடினார் மதுரகவி.

இவரும் பின்னாளில் மதுரகவி ஆழ்வார் என புகழப்பெற்றார்.

ஆழ்வார் திருநகரியில் நிகழும் திருவிழாக்களுள் - வைகாசிப் பெருந்திருவிழா சிறப்பானது. 


ஒவ்வொரு நாளும் ஆழ்வார் - வெள்ளி இந்திர விமானம், தங்க புன்னை மரம், தங்கத் திருப்புளி, வெள்ளி யானை வாகனம், சந்திரப்பிரபை, பூப்பல்லக்கு,  தங்கக்குதிரை, வெட்டிவேர் சப்பரம் - என, வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றார். 

வைகாசி பூசம் (ஜூன்/2) முதல் நிகழும் வைகாசிப் பெருந்திருவிழாவில் -

ஐந்தாம் திருநாள் ஆகிய நாளை (ஜூன் - 6 ) ஒன்பது கருட சேவை.

ஒன்பதாம் திருநாளன்று  (ஜூன் -10 ) திருத்தேரோட்டம்.


ஓடியோடிப் பல்பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம் 
பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழியேறிக் கண்டீர் 
கூடி வானவரேத்த நின்ற திருக்கூரதனுள் 
ஆடுபுட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவதே!..
திருவாய்மொழி/ நான்காம் பத்து/பத்தாம் திருமொழி (3336)
 
க்ஷேத்ரம் : திருக்குருகூர், ஆழ்வார் திருநகரி.
மூலவர் : ஸ்ரீ ஆதிநாதன். உற்சவர் : ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
தாயார் : ஸ்ரீ ஆதிநாத நாயகி, ஸ்ரீ திருக்குருகூர் நாயகி. 

தீர்த்தம் - தாமிரபரணி. 
ஸ்தல விருட்சம் - இரவிலும் இலை மூடாது விளங்கும் திருப்புளி. 

ஆதியில்  தோன்றியதால் - ஆதிக்ஷேத்ரம்.  இதனால் ஆதிநாதன், ஆதிப்பிரான் எனத் திருநாமம்.  

ஒரு சமயம் பூதேவிக்கு ஸ்ரீவராக மூர்த்தியாகத் தோன்றி - ஞான உபதேசம் செய்ததால்  - வராஹ க்ஷேத்ரம். 

திருப்புளி - இளையபெருமாள் லக்ஷ்மணன் அம்சம். எனவே - சேஷ க்ஷேத்ரம்.

பெருமாள் - பிரம்மனுக்குக் குருவாக வழிகாட்டியதால் குருகூர் என்ற பெயர்.
ஆற்றில் வந்த சங்கு (குருகு) பெருமாளை வழிபட்டு முக்தி அடைந்ததாலும் குருகூர் என்பர். சங்கு மோட்சம் பெற்றதால்  திருச்சங்கணித்துறை என்றும் பெயர் வழக்கு.

புண்ய நதியாகிய தாமிரபரணியின் கரைகளில் விளங்கும் நவதிருப்பதிகளுள்  - குரு அம்சம் கொண்டு விளங்குவதால் -  வியாழ க்ஷேத்ரம்.

ஸ்ரீநம்மாழ்வார் ஸ்வாமிகள்
 திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது - ஆழ்வார் திருநகரி -

வாழ்த்தி அவனடியைப் பூப்புனைந்து நிந்தலையைத் தாழ்த்தி இருகைகூப்பென்றால் கூப்பாது - பாழ்த்தவிதி 
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் நெஞ்சமே 
தங்கத்தானாமேலும் தங்கு!..
பெரியதிருஅந்தாதி/ ஒன்பதாம் திருமொழி (2668)

ஆழ்வார் - அஞ்ஞானம் எனும் சட வாயுவினை வென்றதால் சடகோபன்!.. அஞ்ஞானத்தை அழித்து ஞானம் அருளும் சடாரியின் பெயரும் சடகோபம்!.. 
வைணவ மரபில் நம்மாழ்வார் தான் ஆதிகுரு!.. அவர்தான் சடாரி!..


ஆழ்வாரே - இறைவனின் திருப்பாதங்களாகி, சடாரியாக இருந்து அவன் திரு அருளை  நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து நம்மை உய்விக்கிறார்!.. 

ஆழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சூட்டப்படுகிறது.

திவ்ய தரிசனத்திற்குப் பிறகு - சேவார்த்திகள் அனைவருக்கும் எவ்வித பேதமும் இல்லாமல் - தீர்த்தமும்  ஸ்ரீசடாரியும் சாதிக்கப்பட்டு திருத்துழாய் பிரசாதம் வழங்கப்படும். 

அவ்வண்ணமே -
ஆச்சார்யராகிய ஆழ்வாரின் நல்லாசிகளும்!..
ஆழ்வார் திருவடிகள் போற்றி!.. போற்றி!..
* * *

17 கருத்துகள்:

  1. ஒவ்வொரு நாளும் ஆழ்வார் - வெள்ளி இந்திர விமானம், தங்க புன்னை மரம், தங்கத் திருப்புளி, வெள்ளி யானை வாகனம், சந்திரப்பிரபை, பூப்பல்லக்கு, தங்கக்குதிரை, வெட்டிவேர் சப்பரம் - என, வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றார்.

    திவ்ய தரிசனமாய் அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நமாழ்வார் சரித்திரம் படித்தேன். பல சந்தேகங்கள் எனக்கு நிவர்த்தியானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நம்மாழ்வார் பற்றிய பல தகவல்கள் அறியாதவை ஐயா...

    சிறப்பான பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  4. நம்மாழ்வாரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் புதியவை நிறைய தெரிந்துகொண்டேன்.... எனது பதிவிற்க்கு வந்து எனக்கு ஆதரவாக கன்னடக்குரல் கொடுத்ததற்கு நன்றி ஐயா.
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பில் இணைந்த வலைத் தள உறவுகளுக்குள் - ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டியது நமது கடமையல்லவா!.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. இந்த ஒன்பது கருட சேவை தொலைக்காட்சியில் பார்த்த நினைவு. நிச்சயமாகத் தெரியவில்லை. ஒன்றா இரண்டா இந்தக் கடவுளரை நினைக்க. . உங்களால் எப்படி முடிகிறது.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. ஐயா..

      நீக்கு
  6. நம்மாழ்வார் அறிந்து கொண்டேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நம்மாழ்வார் பெயர் அறிந்துள்ளேன் இவைகள் புதிய தகவல்கள்.
    நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. விடுமுறை நாள்களில் தேவாரப்பதிகத்துடன் திவ்யப்பிரபந்தத்தை கடந்த ஓராண்டிற்கும் மேலாகப் படித்துவருகிறேன். இன்னும் நம்மாழ்வார் பாசுரங்களைப் படிக்கவில்லை. படிக்கும் ஆசையை த்ங்களின் பதிவு மேம்படுத்தியது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இந்தப் பதிவின் போது தான் - நம்மாழ்வார் அருளிய திருப் பாசுரங்களைப் படித்தேன். மனம் உருகுகின்றது ஐயா...
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. நம்மாழ்வார் பற்றிய தகவல்களும், சடாரியின் மகிமையும் தெரிந்து கொண்டேன்..... தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..