திங்கள், ஜூன் 23, 2014

கவியரசர்

ஜூன் - 24.

கவியரசர் கண்ணதாசன் (24 ஜூன் 1927) அவர்களின் பிறந்த நாள்.
மேலும் கவியரசருடன் -  கிருஷ்ணகானம் இசைத்த மெல்லிசை மன்னர்  M.S.விஸ்வநாதன் (24 ஜூன் 1928) அவர்களின் பிறந்த நாள். 

தமிழ்த் திரை உலகம் எத்தனை எத்தனையோ -  மகத்தான கலைஞர்களைக் கொண்டிருந்தாலும்,

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இணையான ஒருவரைக்  கண்டதும் இல்லை.. இனிக் காணப்போவதும் இல்லை!..

அவர் அளித்தவற்றுள் முத்துக்கும் முத்தான பாடல்கள் ஆயிரம்.. ஆயிரம்!..

அவற்றுள், இன்றைய காலகட்டத்திற்கென சிந்திக்கத் தகுந்தது எனக் கருதிய ஒரு பாடல் - இன்றைய பதிவில்!..


உயிர் ஒன்று நிம்மதியாகத் தூங்குவதற்காக -  எந்த உயிர் தன் தூக்கத்தை துறக்கின்றதோ - அந்த உயிர் தான் தாய்மை!..  

நம்மை உறங்கச் செய்வதும்,  நம்மை நம்முள்ளிருந்து உயிர்த்தெழச் செய்வதும் தாய்மையே!..

அந்தத் தாய்மை  தனித்துவமாக நின்று - தான் வளர்க்கும் கன்றுக்கு நல்லுரை கூறும் போது எப்படியிருக்கும்!?..

அப்படிப்பட்ட தாயாகி நின்று - தங்கத் தமிழ் கொண்டு - தமிழ் கூறும் நல்லுலகிற்கு கவியரசர் அளித்த கொடை!..

இதோ - அந்தப் பாடல்!..

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை..
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ராரீஆரீராரோ.. ஓ..
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீரோ..

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச்
சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்

எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி - தீராத தொல்லையடி..

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கம் என்பதேது?

தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது?
கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன்
வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது? - கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே!..

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் - கண்ணுறக்கம் போகும்

கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம்
தானாக சேரும் - தானாக சேரும்

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே!..

ஆரீராரீரீ ஆரீராராரோ ராரீஆரீராரோ.. ஓ..
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீரோ..
ஆரீராரீராரோ..

சித்தி எனும் திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்.

அழும் குழந்தை உறங்குதற்குத் தேவை ஒரு தாலாட்டு தான்!..

ஆனால், அதை தத்துவப் பெட்டகமாகத் தந்தவர் கவியரசர்.

வாரியார் ஸ்வாமிகளுடன்
தாலாட்டுப் பாடலையும் - நுட்பமான அர்த்தங்களுடன் நூற்றுக் கணக்கான சுவை முத்துக்கள்  நிறைந்த மாதுளங்கனி எனத் தந்தவர் கவியரசர்.

பெண்களுக்குத் தூக்கம் என்பது குழந்தைப் பருவத்தில் மட்டுமே!.. 

பெண் வளர வளர - அவளுக்கு வகுக்கப்பட்ட பருவங்கள் ஏழிலும் அவளது தூக்கம் தொலைந்து விடுகின்றது!..

பெண் எப்படியெல்லாம்  குடும்பத்திற்காக தூக்கத்தைத் தொலைக்கிறாள்!..

- என்பதை,  கவியரசர்  தானே அனுபவித்தது போல  சித்தரித்தார்.

மெல்லிசை மன்னருடன்
அந்தச் சித்திரத்துக்கு இசையாலும் இனிய குரலாலும் உயிரூட்டியவர்கள் -  மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களும் திருமதி P. சுசீலா அவர்களும்..

பாடலின் முழுப் பொருளும் இயக்குனர் திலகம் K.S.கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் அற்புத நடிப்பில் வெளிப்பட்டிருக்கும். 


குழந்தைக்குப் பாடிய தாலாட்டில் - அந்தக் குடும்பத்தின் மூத்தவரான (சுந்தரி பாய்) மூதாட்டியும்  தூக்கத்தில் ஆழ்வதாகக் காட்சியமைத்து (5.33) மகிழ்ச்சி கொண்டார்  இயக்குனர் திலகம். 

இப்பாடலைக் கேட்கும் எவருக்கும் அவரவர் தாயின் முகம் நிச்சயம் நினைவுக்கு வரும்.

பக்தி இலக்கியங்களில் கூட - நாயகி பாவத்தில் பற்பல பாடல்களை நாம் காணலாம். 

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே 
இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுஉச்சி கொண்டதாலோ 
வரவும் காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய 
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே!..
இரண்டாம் பத்து/ இரண்டாம் திருமொழி

 - என, பெரியாழ்வாரும் தானொரு தாயாகி - இளங்கண்ணனை அமுது உண்ண அழைத்துக் கொஞ்சுகின்றார். 

அப்படியொரு பாவனையில் - 

இப்போதே தூங்கிக் கொள்ளடி என் மகளே!. இதை விட்டால் - இனி தூங்குதற்கு நேரம் கிடைக்காது?.. 

- என்று  இனிமையான தாலாட்டுப் பாடலில் எடுத்துரைத்தார் - கவியரசர்.

இப் பாடலின் பொருள் உணர்ந்து கேட்கும் எவர்க்கும் - எந்த சூழ்நிலையிலும் பெண்மைக்கு இடையூறு செய்ய எண்ணம் வரவே வராது என்பது திண்ணம்.


கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 24.. 
கவியரசரை நினைவில் கொள்ளும் வேளையில்,

அவருக்கு உற்ற தோழனாக இருந்த 
மெல்லிசை மன்னர் அவர்களுக்கும் ஜூன் 24 பிறந்த நாள்!..
அவர்கள் பூரண நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!.. 

தூக்கம் துறந்த தூய்மை!.. 
அதுவே உன்னதமான தாய்மை!.. 
அதுவே உலகத்தின் வாய்மை!.. 

அதனை நாம் உணரும்படி செய்த  
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் புகழ் வாழ்க!..


நீ நிரந்தமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை!..
* * *

23 கருத்துகள்:

  1. கண்ணதாசன் குறித்துச் சொல்லி அழகான பாடலைப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா...

    எம்.எஸ்.விக்கும் பிறந்தநாள் என்பதையும் சேர்த்து சொன்னது இன்னும் சிறப்பு....

    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. கண்ணதாசனுக்கும் எம்.எம்.வி அவர்களுக்கும் பிறந்த நாள் ஒரே நாள் என்பதை இதுவரை அறியேன்.
    இருவரின் நினைவினையும் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  3. ஆகா...! ஆகா...!

    விரும்பி இருமுறை வாசித்தேன் ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. கண்ணதாசன் எனது கவிதை வழிகாட்டி. வசன நடையின் ஆசான். அவரது நினைவைப் போற்றுவோம். அதேபோல் அவரது பல பாடல்களை உயிருள்ளவையாக மாற்றிய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.அவர்களையும் போற்றுவோமாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் கருத்து உண்மையே!..
      கவியரசர் பலருக்கும் முன்னோடி.. ஆசான்!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, தாங்கள் கவிஞரைப் பற்றிய எழுதிய பதிவினுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
    சித்தி திரைப்படப் பாடலோடு ஒன்றிப் போய் விட்டீர்கள்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு உரிய சரியான கவுரவத்தை இந்த நாடு இன்னும் தரவில்லை என்பதே உண்மை.

    கவிஞர், இசையமைப்பாளர் இருவரது பிறந்தநாளில் இன்னிசையில் அவர்களை எந்நாளும் மறவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மெல்லிசை மன்னருக்கு உரிய கௌரவம் இன்னும் வழங்கப்பட வில்லை எனும் தங்களின் கருத்து உண்மையே!..

      கவியரசரையும் மெல்லிசை மன்னரையும் மறக்கவும் கூடுமோ!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. உள்ளம் தொட்ட பதிவு ஐயா!..

    எத்துணை உண்மை! தாயன்பு பற்றி அவர் பாடல்கள் எத்தனை... கேட்கக் கேட்க ஒருபோதும் சலிக்காது.

    //இப்பாடலைக் கேட்கும் எவருக்கும் அவரவர் தாயின் முகம் நிச்சயம் நினைவுக்கு வரும்//
    நினைவு எமக்குத் தப்பும் வரை நீங்கா நினைவில் இருப்பவள் அன்னை அல்லவா..

    அருமையான பாடல். எமக்கும் பார்க்கக், கேட்கப் பகிர்ந்தமைக்கு விசேட நன்றி ஐயா!

    நண்பர்களான கவியரசினதும், மெல்லிசை மன்னரதும் பிறந்த நாட்களும் ஒன்றா...
    அருமை! இதுவல்லவோ இறைவன் விளையாட்டு!

    அருமையான பதிவும் பகிர்வும் ஐயா!
    நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      நினைவு எமக்குத் தப்பும் வரை நீங்கா நினைவில் இருப்பவள் அன்னை அல்லவா!.. - சிறப்பான வார்த்தை!..

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  7. இன்னும் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் காலத்தால் நிற்ககூடிய தத்துவங்களை பாடல்களாய் வடித்தவர் கண்ணதாசன் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கவியரசரின் பாடல்கள் காலத்தை வென்றவை.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  8. அர்த்தமுள்ள இந்து மதம் அனைத்து தொகுதிகளையும் நான் இதுவரை பல முறை படித்துள்ளேன். பல்துறை அறிவு கொண்ட அக்கவிஞர் என்றும் நம்முடன் இருக்கிறார் என்பதை அவருடைய உயிரோட்டமான பாடல்கள் உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அர்த்தமுள்ள இந்து மதம் - வாராவாரம் கட்டுரையாக வெளியாகும் போதே ஆர்வமுடன் படித்து மகிழ்ந்ததை மறக்க முடியுமா!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  9. கண்ணதாசன் அவர்களைப் பற்றிய அருமையான பகிர்வு.
    பெண்மை,தாய்மையை போற்றும் அருமையான பாடல் பகிர்வு.
    கண்ணதாசன் அவர்களும், எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களும் சேர்ந்து கொடுத்த பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள்.
    திரு எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் சொல்வது உண்மைதான். அவர்கள் வழங்கியவை காலத்தால் அழியாத பாடல்கள்.. தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  10. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/2.html?showComment=1403913354053#c858988773780526037

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதை தெரிவித்த அன்பினுக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அருமையான பதிவு. எத்தனை காலமானாலும் மறக்க முடியாத மனிதர்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  12. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    http://blogintamil.blogspot.in/2014/06/2.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு - அன்புடன் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..