வியாழன், ஜூன் 19, 2014

கருடசேவை 2

தஞ்சையில் இருபத்து மூன்று கருட சேவை!..

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் நீலமேகப்பெருமாள்
திருமங்கை ஆழ்வாரால்  - 

''வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயில்!''.. 

- என போற்றி வணங்கப்பட்ட திவ்ய தேசமாகிய தஞ்சையின் மகத்தான கருட சேவைப் பெருவிழா நேற்று மங்கலகரமாக வெகு சிறப்புடன் நிகழ்ந்திருக்கின்றது.

அன்ன வாகனத்தில் திருமங்கை ஆழ்வார்
திருமங்கைஆழ்வார் அன்னவாகனத்தில் மங்களாசாசனம் செய்தபடி முன் செல்ல, 

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளுடன் ஸ்ரீநீலமேகப்பெருமாளும்   
ஸ்ரீமணிக் குன்றப் பெருமாளும் 
யாளி நகர் ஸ்ரீவீரநரசிம்ஹப் பெருமாளும் 

- தனித்தனியே கருட வாகனத்தில் ஆரோகணித்து வீதிவலம் வந்தருளினர். 





அவர்களுடன் - மாநகரில் திகழும் மற்ற திருக்கோயில்களில் இருந்தும் கருடாரூடராக பெருமாள் எழுந்தருள - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர். 

அன்ன வாகனத்தில் முன் சென்ற  திருமங்கை ஆழ்வாரைத்  தொடர்ந்து இருபத்து மூன்று கருட வாகனங்களின் வீதி உலா கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 





கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டிருந்தனர். 

காலையில் இருந்தே ராஜவீதிகளில் ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் - பகல் பொழுதில் - ஒவ்வொரு திருக்கோயிலின் பெருமாளையும் ஆத்மார்த்தமாக - கருட வாகனத்தில் தரிசித்து, எழுந்தருளும் ஆச்சார்யராகிய நம்மாழ்வார் அம்சம் எனும் சடாரி  சூட்டப் பெற்று மனம் நிறைவாகினர்.


தஞ்சையைச் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அன்பர்கள் திரண்டு வந்திருந்தனர். 

மகத்தான இருபத்து மூன்று கருடசேவையைக் கண்டு வணங்கிட - வெளி மாவட்டங்களில் இருந்தும் - திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்ததாக அறிய முடிகின்றது. 



ராஜவீதிகளின் பல இடங்களிலும் பக்தர்களுக்கு -  நீர்மோர், பானகம் - என வழங்கப்பட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் திருவிழா வெகு சிறப்பாக நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.



ஆதியில் பராசர மகரிஷிக்கும், பின்னாளில் திருமங்கை ஆழ்வாருக்கும் ப்ரத்யட்க்ஷமாகிய கருட வாகன தரிசனம் - 

எண்பது ஆண்டுகளுக்கு முன், தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த - ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகளுக்கு மீண்டும் அருளப்பெற்றது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  - என, பன்னிரு கருட சேவையை, ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகள் தான் தஞ்சை மண்ணில் துவக்கி வைத்து மக்கள் உய்யும் வழியைக் காட்டினார். 

அந்த மகத்தான அருளாளர் தொடங்கிய கருட சேவை - இன்று பரமன் அருளால் இருபத்து மூன்று கருட சேவை என தழைத்து விளங்குகின்றது.



தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சன சபையினர் இணைந்து விழாவினை சிறப்பாக நடத்தியுள்ளனர்.

இந்தப் பெருவிழாவினை அடுத்து -  நாளை (ஜூன்/20) வெள்ளிக் கிழமை அனைத்துத் திருக்கோயில்களிலும் நவநீத சேவை.

இதேபோல் - நான்கு ராஜவீதிகளிலும் வெண்ணெய்த் தாழியுடன் பெருமாள் எழுந்தருள்வார்.


இப்பெருவிழா சிறப்புடன் நிகழ்வதற்கு பலவகைகளிலும் உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றிகளும்!..

திருவிழாவின் படங்களை வழங்கிய - Thanjavur City Pages , திருஐயாறு சிவசேவா சங்கத்தினர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!..


இருப்பினும் - இந்த வைபவத்தில் கலந்து கொள்ள இயலாதவாறு மிகவும் நலிவடைந்த நிலையில் சில திருக்கோயில்களும் நகரில் உள்ளன.

எதிர் வரும் ஆண்டுகளில் அந்தத் திருக்கோயில்களில் இருந்தும் பெருமான் - திருவீதி எழுந்தருள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை. 

அத்துடன் வேறொரு விருப்பமும் மனதில் உண்டு. உலகளந்த மூர்த்தி உள்ளுறையும் எண்ணம் ஈடேறிட அருள வேண்டும்.

பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வதன் 
உட்பொருள் மகத்தானது.

அழைத்தவர் குரலுக்கு வருபவன் - அவன்!..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிபவன்  - அவன்!..

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளும் தண்பொருப்புவேலை - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்!.

பூதத்தாழ்வார். 
* * *

10 கருத்துகள்:

  1. தங்களின் புன்னியத்தில் நாங்களும் கருட சேவையை கண்டு களித்தோம் அருமையான படங்கள் . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சொக்கன்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. குவைத்தில் இருந்து கொண்டு 23 கருட சேவை பற்றிய பதிவை நீங்கள் எழுதும்போது மானசீகமாக தஞ்சையில் இருந்திருப்பீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே ஐயா..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
    2. பிரத்யட்சமாய் கருடவாகன தரிசன்ம் கிடைத்த நிறைவு.. பாராட்டுக்கள்.!

      நீக்கு
    3. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கனிவான கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. கருட சேவை படங்களும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கருடசேவையை நேரில் பார்த்த நிறைவு ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.
    படங்கள் எல்லாம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..