ஞாயிறு, மே 04, 2014

தங்கமே.. தங்கம்.

அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும்!..

இது, கடந்த பதினைந்து - இருபது ஆண்டுகளாக மக்களிடையே ஏற்படுத்தப் பட்டிருக்கும் நம்பிக்கை.


ஆனால், அதற்கு முன்பாக இந்த அக்ஷய திரிதியை என்ற தினம் இருந்ததா!..

இருந்தது.

விவரமறிந்தவர்கள் திருக்கோயில்களில் கூடினர். இறைவனைத் தொழுதனர்.  தான தர்மங்களைச் செய்தனர்.

ஆனால் -

அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்ற மாயையை - தமது விருத்திக்காக  நகைக்கடைகள் அறிமுகப்படுத்தின!..

உண்மையாகவே அக்ஷய திரிதியை என்றால் என்ன!..

க்ஷயம் என்றால் தேய்தல் என்று பொருள். அக்ஷய என்றால் தேயாமல் வளர்தல் என்று பொருள். 
சித்திரை மாத  வளர்பிறையின்  மூன்றாவது நாள் அக்ஷய திரிதியை.

கிருத யுகம் தோன்றியது இந்த அக்ஷய திரிதியையில் என்பது  நம்பிக்கை.


தன்னைப் பார்க்க வந்தவன் கொண்டு வந்த அவலில் மூன்று பிடியைத் தின்று விட்டு, அதற்கு பதிலாக கோடி என - கொட்டிக் கொடுத்து, அவனை குபேரன் ஆக்கிய திருநாள்  - அக்ஷய திரிதியை!..

அவல் கொண்டு வந்தவன் - குசேலன்!..
அருள் வாரித் தந்தவன் - ஸ்ரீகிருஷ்ணன்!..

துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் நாடு துறந்தனர். வனவாசத்தை மேற்கொண்ட சூழ்நிலையில், ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப் படக்கூடாது என்று எண்ணிய ஸ்ரீகிருஷ்ணன் -

சூரியனிடமிருந்த  அக்ஷய பாத்திரத்தினை வாங்கி திரௌபதியிடம்  வழங்கிய நாள் - அக்ஷய திரிதியை!..

அக்ஷய பாத்திரம் என்பது அள்ள அள்ளக் குறையாத  அன்ன பாத்திரம்.

இந்த நன்னாளில் புதிய பொருள்களை வாங்கினால், வாய்ப்பும் வசதியும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையே தங்கம் வாங்க வேண்டும் என்பதன் அடித்தளம்.

அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கி - வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதால் தான் இந்த தினத்தில் நகைக் கடைகளில் ஜனத்திரள்..

தினமலர் செய்தி
அக்ஷய திரிதியையின் அலைகள் இன்னும் ஓய்ந்து போகாத நிலையில் - அடுத்து ஏதாவது ஒரு நல்ல சூழலில் நகை வாங்கவேண்டியதாக இருக்கும்.

அந்த இனிய சந்தர்ப்பத்தில் - நினைவில் நிற்கட்டும் என  - இந்தப் பதிவு!..
தினமணி (30 ஏப்ரல் 2014) வழங்கியுள்ள செய்திகளைக் கொண்டு விழிப்புணர்வு பெறுவோம்.

தினமணிக்கு நன்றி.. நன்றி!..

தங்க விற்பனையில் நடக்கும் நூதன முறை மோசடிகள்!..
ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான பல விளம்பரங்களைக் கொடுத்து நூதன முறையில் மோசடி செய்யப்படுகிறது.


அத்தகைய நகைகளை அதிக லாபத்தில் வாங்குவதாக எண்ணிக் கொண்டு பலர் ஏமாந்து போகின்றனர். எனவே அத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அதில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.

கல் வைத்த நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லின் எடையை அதிகரித்து, தங்கத்தின் விலைக்கே அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் உள்ளனர்.

அத்தகைய நகைகளை வாங்கும்போது கல் மற்றும் தங்கத்தின் எடையைத் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

மேலும் படிக்க -  தங்க விற்பனையில் நடக்கும் மோசடிகள்!..

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!..
தங்க ஆபரணங்கள் வாங்கும்போது  கட்டாயம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளை வாங்குவது முக்கியம். அந்த நகைகளிலும் ஐந்து முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.


நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ - என எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடியும். இதனால் மெருகேற்றி விற்கப்படும் - பழைய நகைகளைத் தவிர்க்கலாம்.

நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த முத்திரையின் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.

மேலும் படிக்க -  தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!..

நம்மில் பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நகைகள் வாங்கி விட்டு, சில நூறுகளை சேமிப்பதற்காக ரசீது வாங்குவதில்லை.

தங்க நகைகளைப் பொருத்த வரையில் ஒரு சதவீதம் மட்டுமே விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு ஒரு பவுன் நகை வாங்கினால் வாடிக்கையாளர்கள் ரூ.220 மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

அதை சேமிப்பதற்காக நாம் ரசீது இன்றி நகை வாங்கக் கூடாது.

நகை திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ ரசீது இன்றி எந்த வழக்கையும் பதிவு செய்யமுடியாது.

எனவே, ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் மறவாது ரசீதைக் கேட்டுப் பெற வேண்டும்.


அக்ஷய திரிதியை நன்னாளில்  - கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் பன்னிரண்டு கருடசேவை சிறப்பாக நடந்துள்ளது.


அலங்காரப் பந்தலில் - ஸ்ரீசாரங்கபாணி, சக்ரபாணி, ராமஸ்வாமி, ஆதிவராக ஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி,  அக்ரஹாரம் பட்டாபி ராமன், சோலையப்பன் தெரு ராமஸ்வாமி, சந்தான கோபாலகிருஷ்ணன்,


புளியஞ்சேரி வேணு கோபாலன், கொட்டையூர் நவநீதகிருஷ்ணன் , மேலக் காவேரி வரதராஜ பெருமாள், அகோபிலமடம் லட்சுமி நரசிம்மர் - ஆகிய திருக்கோயில்களின் உற்சவமூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

இந்த மூர்த்திகளுக்கு எதிரே ஆஞ்சநேயர் எழுந்தருள, பன்னிரு கருட சேவையை ஆயிரக்கணக்கான அன்பர்கள் கண்டு இன்புற்றனர்.


இதேபோல - அக்ஷய திரிதியை நன்னாளில்,

தஞ்சை கரந்தை  யாதவக் கிருஷ்ணஸ்வாமி, கரந்தை படித்துறை வெங்கடேச பெருமாள் -  கருட வாகனத்தில் வலம் வந்தருளினர்.

தஞ்சை மேலராஜவீதியில் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் அவல் முடிப்பு வைபவம் நடைபெற்றது.

ஒரு சதுரமான புதுத்துணியில் - நம்மால் இயன்ற அளவு  - அவலை முடித்து, அதனை மூலஸ்தானத்தில் பகவானின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும் .

பட்டாச்சார்யார் - அந்த அவல் முடிப்புக்குப் பதிலாக - பகவானின் திருவடிகளில் வைக்கப்பட்டிருக்கும் வேறு ஒரு அவல் முடிப்பை பகவானின் பிரசாதமாகத் தருவார். இந்த அவல் முடிப்புடன் திருக்கோயிலை வலம் செய்து வணங்கிட - இல்லத்தில் பணப் பிரச்னைகள் தீர்ந்து வளம் சேரும் என்பது ஐதீகம்.

நீங்காத திரு உடையவன் இறைவன்  - என்பது திருக்குறிப்பு. 
திரு என்பது தழைத்திருக்கும் செல்வ வளம் என்பது மட்டுமல்லாமல் - அதற்கும் மேலான ஒன்று!..

அந்தத் திருவினை அடைய முயற்சிப்போம்!..
முயற்சி திருவினையாக்கும்!..

சிவாய திருச்சிற்றம்பலம்..

18 கருத்துகள்:

  1. அக்ஷய திருதியை உண்மையை அருமையாய் விளக்கியுள்ளீர்கள் ஐயா.
    அக்ஷயதிருதியை கூட வணிகர்களின் வியாபார யுக்தியாகிவிட்டது.
    நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பினுக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. எல்லாமே பணம் என்றாகி விட்டது... ம்...

    பன்னிரண்டு கருடசேவை சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அக்ஷய திருதியை விளக்கம், நகைகடைகள் பற்றியும், நவநீதகிருஷ்ணன் கோவில் அவல் முடிப்பு பற்றி எல்லாம் தெரிந்து கொண்டோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  4. அவல் கொடுத்து குபேரன் ஆனான் குசேலன் ,நான் என் அவளுக்கு வாங்கிக் கொடுத்தே .......!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.. ஜி..
      கவலையே வேண்டாம்!..
      மறுபடியும் அவல் வாங்கிக் கொடுத்தால் சரியாகி விடுமே!.. எல்லாம் ஒரு சுழற்சி தானே..

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. நகைக் கடை பற்றிய எச்சரிக்கைகளுக்கு நன்றி துரை சார். குசேலன் குபேரன் ஆனதும் இன்று தான் என்ரம் தெரிந்து கொண்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  6. அட்சய திருதி, அட்சய பாத்திரம் – நல்ல விளக்கம் தங்கம் பற்றிய விழிப்புணர்வு தகவலகள் மைதாஸ் மனதினருக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பாருங்களேன்.. 1500 கிலோ - தமிழகத்தில் மட்டும்!..
      மைதாஸ் - அவனே வந்து சொன்னாலும் திருந்துவார்களா?.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. ஐயா..

      நீக்கு
  7. அட்சய திருதி பற்றியும் தங்கம் பற்றியும் அறியத்தந்தமை சிறப்பே அட்சய பாத்திரம் பற்றிய விபரம் கொடுக்கும் போது தான் குறையாமல் வளரும் என்பதை உணர்த்துகிறது.கிருஷ்ணருக்கு விரும்பிய அவல் படைப்பதும் விசேஷமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
    நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  8. நல்லதோர் விழிப்புணர்வு பதிவு.... தங்க மோகம் அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தாங்கள் சொல்வது உண்மையே..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. பேராசை பெருநஷ்டம். ஏமாறுபவர் இருகும்போது ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வர். உரத்த குரலில் கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அளவுக்கு மேல் தங்கத்தை வாங்கிக் குவித்து -
      அதை அடை காப்பதில் இத்தகையவர்களுக்கு மகிழ்ச்சி!..
      இவர்கள் திருந்துவது சந்தேகம் தான்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி ஐயா!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..