திங்கள், மார்ச் 10, 2014

பூச்சொரிதல்

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் நேற்றிலிருந்து -

நமக்காகவும்  நம் சந்ததிக்காகவும் பட்டினி விரதம்  ஏற்றிருக்கின்றாள்.


ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறன்று தொடங்கி -  பங்குனி  கடைசி ஞாயிறு  வரை இருபத்தெட்டு நாட்கள் - அன்னை நோன்பு நோற்கின்றாள்.

அதனை முன்னிட்டு -  திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா  நேற்று (மார்ச்.9) தொடங்கியது. 


ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் மாலை வரை கூடை, கூடையாக பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.

அருள் மிகும் சமயபுரம் மாரியம்மன் - வரப்ரசாதியானவள். 

சாதாரணமாக - தினமும் ஆயிரக்கணக்கானவர் சமயபுரத்தாளைத் தரிசனம் செய்கின்றனர்.  

திருவிழா நாட்கள் - எனில் லட்சக்கணக்கில் திரண்டு வருகின்றனர்.


திருநீறும் மங்கலக் குங்குமமும் விளங்கும் திருமுகத்தினளாக - முண்ட மாலை அணிந்து - மூலஸ்தானத்தில்  வீற்றிருக்கின்றாள் - அன்னை!.

திருச்செவிகளில் சடாட்சர தாடகங்கள். ஒளி வீசும் முக்குத்திகளுடன் வைர புல்லாக்கு. திருக்கழுத்தில் அட்டிகை. வைர வைடூர்ய ஹாரங்கள் திருத்தன பாரங்களில் இலங்க, முத்து வளையல்கள் - திருக்கரங்களில். 

ஒல்கு செம்பட்டு உடையாளின் - உதர பந்தனமாக ஒட்டியாணம்

மந்தகாசத்துடன் புன்னகை பூத்தவளாக - எட்டுத் திருக்கரங்களுடன் -  வலது திருவடியால் அசுரனின் தலையை மிதித்த வண்ணம் காட்சியளிக்கிறாள். 

அன்னையின் திருக்கரங்களில் - கத்தி, சூலம், தாமரை, உடுக்கை,   பாசம், வில், மணி, கபாலம் - ஆகியன திகழ்கின்றன.

அக்னி கேசம் - அவளுடைய கோபத்தைக் குறிக்கின்றது. 
கொதிக்கும் எரிமலை அவள். ஆயினும் - தண்ணிலவு என குளிர்ந்திருக்கின்றாள். 

ஐந்தலை அரவு - அன்னைக்குக் கொற்றக்குடை!..

அன்னையின் வஜ்ர பீடத்தில் - வலப்புறம் எப்போதும் குங்குமச்சிமிழ் இருக்கும். 

சங்கடங்களைச் சங்கரிக்கும் சங்கரியின் திருமுகத்தை நாள் முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  அத்தனை அழகு. பேரழகு. 

பசி தாகம் - என எதுவுமே தோன்றாது!..


அன்னைக்கு - பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு, திருக்கோயிலில் அதிகாலை விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகிய பூஜைகள் நடந்தன. 

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் திருப்பாவாடை சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

காப்பு கட்டியவுடன் அம்மன் பச்சைப் பட்டினி விரதத்தை தொடங்கினாள். 

பூச்சொரிதல் விழாவும் தொடங்கியது.


காலை எட்டு மணியளவில் மூங்கில் தட்டு மற்றும் கூடைகளில் பூக்களை எடுத்துக் கொண்டு - மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்து,

ஒன்பது மணி அளவில் திருக்கோயில் கட்டளையாக, அம்மனுக்கு பூக்களால் முதல் அபிஷேகம் செய்தனர். 

இது முதல் வார பூச்சொரிதல் ஆகும்.

விரத நாட்களில்  வழக்கமான நைவேத்தியம் இல்லாமல்,

நீர்மோர், பானகம், இளநீர், கரும்புச்சாறு, துள்ளுமாவு - ஆகியனவே அன்னைக்கு நிவேதனம்.

தன் பிள்ளைகள் அனைவரும் - தீவினைகள் நீங்கப் பெற்று நோய் நொடி இல்லாமல் சகல செல்வங்களுடன் சுகமாக வாழ்வதற்கென - 

தாயாகிய தயாபரி - இருபத்தெட்டு நாட்கள் பச்சைப் பட்டினி  இருப்பதாக ஐதீகம்.

தேவஸ்தானம் சார்பில் முதலில் புஷ்ப அபிஷேகம் நடைபெற்றதும், தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் செய்தனர்.


அன்றைய தினம் மதியம் மூன்று மணி முதல்  சாத்தப்பட்டிருந்த திருநடை - நான்கு மணிக்குத் திறக்கப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. அதன்பின் - மறு நாள் வரை  பக்தர்கள் தரிசனத்திற்காக சந்நிதி நடை திறந்திருந்தது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள்  அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கூடை, கூடையாக பூக்களை கொண்டு வந்து விடிய விடிய அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் செய்து வழிபட்ட வண்ணம் இருந்தனர்.

பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை - இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வார பூச்சொரிதல் விழாக்கள் சிறப்புற நடைபெறும்.

பச்சைப் பட்டினி விரதத்தை அம்மன் தொடங்கியதைத் தொடர்ந்து பக்தர்களும் மஞ்சள் ஆடை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.  

அன்னை அவளுடன் நாமும் விரதம் இருக்க வேண்டும் என்று - என்னுள்ளும் தணியாத தாகம் ஒன்று உண்டு.

ஆனால் - கடல் கடந்து இருக்கும் சூழ்நிலையில் - முழுதுமாக உணவைத் தவிர்த்து விட்டு - நீர் மற்றும் பானகத்தை மட்டும் அருந்துவது என்பது - மிக மிகக் கடினம்.

அன்னை - அவள் அனைத்தும்  அறிவாள்.  பின்வரும் நாட்களில் -
என் எண்ணம் ஈடேற அவளே நலம் புரிவாள்.

தங்கப்பூ முகங்காட்டி தயவுடனே வாருமம்மா
வெள்ளிப்பூ  நகைகாட்டி நாயகியே வாருமம்மா!..
நீலப்பூ விழிகாட்டி வீதிவழி வாருமம்மா
கோலப்பூ முற்றத்திலே குடியிருக்க வாருமம்மா!..
 
தாழம்பூ குங்குமத்தை தந்தவளே சீதனமா
தாமரைப்பூ குங்குமத்தை தந்தவளே பெருந்தனமா!..
மகிழம்பூ குங்குமத்தை தந்தவளே மாரியம்மா
செண்பகப்பூ குங்குமத்தை தந்தவளே நீலியம்மா!..

மஞ்சளையும் தந்தவளே மாதரசி வாருமம்மா 
கொஞ்சுங்கிளி ஆனவளே கோடிநலம் தாருமம்மா!..
வேப்பிலையில் இருப்பவளே வித்தகியே வாருமம்மா
அருங்கனியில் இருப்பவளே ஆண்டருள வாருமம்மா!..

கார்மேகம் திரண்டுவர கருணையுடன் வாருமம்மா
காவிரியும் புரண்டுவர கனிவுடனே வாருமம்மா!..
ஊரெல்லாம் விளைந்திருக்க ஓங்காரி வாருமம்மா
நாடெல்லாம் வளர்ந்திருக்க நாயகியே வாருமம்மா!..

பொங்கிவரும் பொங்கலிலே பூவழகி முகங்காட்டு
எங்கிருந்து நெனைச்சாலும் நேசமுடன் வழிகாட்டு!..
முத்தெடுக்கும் வித்தகியே முத்தழகி முகங்காட்டு
மூண்டு வரும் தீவினையை முன்னிருந்து நீஓட்டு!..


ஆடிவரும் கரகத்தில ஆடிவரும் மாரியம்மா
கைகொடுக்க வாருமம்மா!.. காத்தருள வாருமம்மா!..
தேடிவரும் நேரத்தில ஓடிவரும் மாரியம்மா
திருநீறும் தாருமம்மா!.. தீவினையத் தீருமம்மா!..

மாசியில பட்டினியா மாதரசி நீயிருப்பாய்
வந்தவினை அத்தனையும் வடிவழகி நீதடுப்பாய்!..
பங்குனியில் பட்டினியா மகராசி நீயிருப்பாய்
வந்தபிணி அத்தனையும் கோலவிழி நீதடுப்பாய்!..

தலைமேல பூக்கூடை தாழம்பூ மரிக்கொழுந்து
தாமரையும் மல்லிகையும் பிச்சிப்பூ செண்பகமாம்!..
பூவனத்தில் மலர்ந்தவளே பூவரசி மாரியம்மா
காவனத்தில் நடந்தவளே காத்தருள வேணுமம்மா!..

வண்ண வண்ண பூவெடுத்து வந்ததுவும் வாசலுக்கு
நல்லநல்ல பூவெடுத்து வந்ததுவும் கோயிலுக்கு!..
பூவனத்தாள் மனங்குளிர மலராலே அபிஷேகம்
பூவரசி முகம்மலர பூவாலே அபிஷேகம்!..

நல்ல நல்ல பூவெடுத்து நாயகிக்கு அபிஷேகம்
நானும்வந்து சந்நதியில் செய்வதுவும் வேணுமம்மா!..
சின்னச்சின்ன சொல்லெடுத்து செய்வதுவும் அபிஷேகம்
தாய்மடியில் தவழும்பிள்ளை ஏற்றுக்கொள்ள வேணுமம்மா!..

ஓம் சக்தி ஓம்

22 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா
    அம்மனின் மகிமையை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பதிந்து விட்டீர்கள். பாடல் ரசிக்க வைக்கிறது. படங்கள் காட்சியைக் கண்முன்னே காட்டுகின்றன. சமயபுரம் நமக்கு அருகில் என்பதால் அவசியம் சென்று வருவேன். நினைவூட்டலுக்கு நன்றீங்க ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாண்டியன்..
      தங்களுடைய வரவும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அருமையான பகிர்வு .இப் பகிர்வினை வாசிக்கும் போது ஒவ்வொரு நொடியும்
    அம்பாளின் திருவுருவம் கண்முன் வந்து மறையக் கண்டேன் .நோன்பு இருக்கும்
    தாயிடம் வேண்டி நிற்கும் வரங்கள் யாவும் கிடைக்கப் பெற்று அனைவரும்
    மகிழ்வாய் வாழ வழி பிறக்கட்டும் .அருமையான பாடற் பகிர்வு! .வாழ்த்துக்கள்
    ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பு கொண்ட நெஞ்சமெல்லாம் அன்னையின் வீடு.
      தங்களுடைய அன்பிற்காக அல்லவா - அன்னை அவள் முன் வந்து முகங்காட்டுகின்றாள்.
      தங்களுடைய வரவும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. மிகுந்த வரப்பிரசாதியான சமயபுரம் அம்மனின் பச்சைப்பட்டினி விரதம் பற்றிய புனிதமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய அன்பான வரவும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்..

      நீக்கு
  4. நமக்காக விரதமிருக்கும் அம்பாளின் கருணை தான் என்னே! சமயபுரம் அம்பாளின் தரிசனம் மனதிற்கு நிறைவு. நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாய்க்கும் தாயான தயாபரி அவள் அல்லவா!..
      அவளே அனைத்தும் ஆனவள்!..
      தங்களுடைய வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. திருச்சியை விட்டு வந்தபின் ஆண்டு ஒன்றில் ஒருமுறையாவது அன்னையை தரிசிக்கச் செல்வது வழக்கம் இவ்வாண்டும் அதை நிறைவேற்ற அன்னையை யாசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா!..
      தங்களுடைய விருப்பம் நிறைவேற அன்னை நல்லருள் புரிவாள்..
      தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  6. தெரியாத தகவலுடன் அன்னையின் படங்கள் அருமை...
    அன்னையை தரிசித்த அனுபவம் கிடைத்தது,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. அருமையான படங்களுடன்
    சமயபுரம் பற்றிய பதிவு அருமை.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  8. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களை அந்த இடத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகின்றன. கடல் கடந்து இருந்தாலும் எழுத்தில் மிக நெருக்கமாக எங்களோடு இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

  9. சமயபுரம் மாரியம்மன் கோவில் எங்கள் குல தெய்வங்களில் ஒன்றாம்.

    இந்தக் கோவிலில் நான் முடி இறக்கிக் கொள்வதாக வேண்டிக்கொண்டு இருக்கிறேன். எப்பொழுது செல்லமுடியும் என்றே தெரியவில்லை.

    உங்கள் பாடலை மனமார ஒரு தடவை அல்ல பல தடவைகள் பாடி என் மனதுக்கு ஆறுதலை தேடி இருக்கிறேன்.
    https://www.youtube.com/watch?v=HKnDp8xkFNk

    பாடல் அருள் மயமாக இருக்கிறது.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      என்ன தவம் செய்தேன் - நான்!..
      தங்களுடைய வாக்கில் - எனது வார்த்தைகள் இடம் பெறுவது பெரும் பேறு.
      அனைத்தும் அன்னையின் அருள்விளையாடல்!..
      ஓம் சக்தி ஓம்!..

      நீக்கு
  10. பூச்சொரிதல் விழா.... திருச்சி மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்கள் எல்லாவற்றிலிருந்தும் கூடை கூடையாக பூக்கள் வந்த வண்ணமே இருக்கும். திருவரங்கத்திலிருந்து ஊர்வலமாகச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்....

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தாங்கள் கூறுவது உண்மையே.
      தைப்பூசத்தினை ஒட்டி விழாக்களின் போது திருஅரங்கத்திலிருந்து அரங்கன் - சமயபுரம் மாரியம்மனுக்கு சகோதரன் என - சீர் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  11. பூசொரிதல் விழா, பச்சைபட்டினி விரத செய்திகள் எல்லாம் அருமை.
    உங்கள் பாடல் மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாயாகிய தயாபரி அனைவரையும் வாழவைக்க வேண்டும்!....
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..