ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

மாசி மகம்

எல்லாம் வல்ல இறைவனின் தனிப்பெருங்கருணையினாலும் அன்பு நிறை நெஞ்சங்களின் நல்லாசிகளினாலும் எனது அன்பு மகளின் திருமணம் - சிவகாசி நகரில் - பிப்ரவரி ஒன்பதாம் நாள் ஞாயிறன்று இனிதே நிகழ்ந்தது.

அந்த நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முன்பாக இனியதொரு பதிவு..

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி வருடாந்திர சுழற்சியாக ஒரு ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மாசி மகம். 

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மகாமகம்.  


வியாழ வட்டம் எனப்படும் சுழற்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்.

மகாமகம் எனப்படும் திருநாள் எதிர்வரும்  2016 - ல் நிகழ இருக்கின்றது. 

ஆயினும் - இப்போது மிதுன ராசியில் குரு விளங்க - வழக்கம் போல மாசி மகம் அனுசரிக்கப்படுகின்றது.

இன்று பிப்ரவரி 15. மாசி மகம்.

முன்னொரு சமயம் - 

ஊழிப் பெருவெள்ளம் கொண்டு  உலகைப் புனரமைக்க விரும்பிய ஈசன் - நான்முகனை அழைத்து சிருஷ்டிக்கான ஜீவ அமுதத்தினை ஒரு கும்பத்தில் நிறைத்து வழங்கினார்.

அதனை ஊழிப் பெருவெள்ளம் ஏற்படும் போது அதில் மிதக்க விட்டு - அந்தக் கும்பம் எவ்விடத்தில் தங்குகின்றதோ அங்கே அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி ஆணையிட்டார்.

பிரம்மனும் அவ்வாறே செய்ய  - ஈசன் வேட வடிவங்கொண்டு எய்த அம்பினால்   - கும்பம் உடைந்து அதிலிருந்த அமுதம் பூமியில் பரவி ஓரிடத்தில் திரண்டு நின்றது. 

அதுவே - மகாமகத் தீர்த்தம். கும்பம் தங்கிய திருத்தலம் - கும்பகோணம்.

அமுதம் ஊறிக் கிடந்த மண்ணில் இருந்து  சுயம்புவாகத் தோன்றிய லிங்க வடிவத்தினுள் - உலகம் உய்யும் படிக்கு ஈசன் ஜோதி வடிவாக நிறைந்தார்.


எனவே, ஈசன்  - ஸ்ரீகும்பேஸ்வரர் என  விளங்குகின்றார்.

அம்பிகை சர்வ மங்களங்களையும் அருளும் ஸ்ரீ மங்களாம்பிகை.

பின்னொரு சமயம் -

மக்களின் பாவங்களை சுமந்ததால் - களையிழந்த நதிகள் அனைத்தும் கங்கையின் தலைமையில் காசி விஸ்வநாதரிடம் முறையிட்டன. 

கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரை, கிருஷ்ணை, சரயு -

எனும் நவ கன்னியரின் அல்லலைப் போக்குதற்கு - சிவபெருமான் தாமே அவர்களை அழைத்து வந்து அடையாளங்காட்டியருளிய தீர்த்தம் - மகாமகத் தீர்த்தம். 

ஐயன் அருளியபடி,  அவர்கள்  தீர்த்தத்தில் நீராடி தமது பாவங்களைத் தொலைத்த நாள்  - மகாமகத் திருநாள்.

இந்தத் திருநாள் - திருக்குடந்தையில் சகல சிவாலயங்களிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது

சிலவருட இடைவெளிக்குப் பின் - இந்த வருடம் மாசி மகத்தின் போது தஞ்சையில் இருக்கும் பேற்றினைப் பெற்றேன். 

இன்று மாலையில் கும்பகோணம் சென்று -

ஸ்ரீ உச்சிப் பிள்ளையார் திருக்கோயில்,
ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ தேனார்மொழி சோமசுந்தரி சமேத ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ பிரஹந்நாயகி  சமேத ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், 
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீஅபிமுகேஸ்வரர் திருக்கோயில் 

- என  ஆலய தரிசனம் செய்து அனைவருடைய நலனும் வாழ்க என்று வேண்டிக் கொண்டு மகாமகத் திருக்குளத்தை வலஞ்செய்து வணங்கினேன்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில - இன்றைய பதிவில்!..

பதிவில் உள்ள படங்கள் கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவை.

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ சார்ங்கபாணி தெப்போற்சவம்
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்
ஸ்ரீ உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
ரிஷப வாகனத்தில் பெருமான்
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ வடிவேல் குமரன்
வெள்ளி விமானத்தில் பெருமான்





திருக்கயிலாய சிவகண வாத்ய முழக்கத்துடன் , மகாமகக் குளக்கரையில் பெருமான் வலம் வந்தருளிய போது -

அப்பகுதியே - சிவலோகம் என விளங்கியது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் - என மூன்றினாலும் சிறந்து விளங்கும் திருத்தலம்  - கும்பகோணம்.

திருக்குடந்தையைக் கண்டு தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

16 கருத்துகள்:

  1. அன்பு மகளின் திருமணம் இறைவன் அருளால் இனிதாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. மணமக்கள் எல்லா நலன்களும், எல்லா வளங்களும் பெற்று வாழ எங்கள் ஆசிகள்.
    சிவகாசி என்றவுடன் முன்பு மூன்று வருடங்கள் அந்த ஊரில் இருந்த சிறுவயது நினைவுகள் வருகிறது. அருமையான கோவில்கள், திருவிழாக்கள், தெருபொங்கல், எல்லாம் மிக அருமையான நினைவுகள். அங்குள்ள மக்கள் அன்பு நிறைந்தவர்கள்.

    உங்கள் மாசிமகத்திருநாள் பதிவு கண்டு மகிழ்ச்சி. எல்லா தெய்வங்களையும் உங்கள் படங்கள் மூலம் தரிசனம் பெற்றேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து என் மகளை அன்புடன் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

      சிவகாசியில் உள்ள திருக்கோயில்கள் பலவும் - சமுதாய அமைப்பினரால் நிர்வகிக்கப்படுபவை.

      தூய்மையுடனும் நேர்த்தியுடனும் விளங்கும் திருக்கோயில்கள் -
      மனம் நிறைய மகிழ்ச்சியையும் அமைதியையும் வாரி வழங்குகின்றன என்பதே உண்மை.

      நீக்கு
  2. அருமையான படங்கள் மூலம், நாங்களும் மாசி மகத்திருநாளில் கலந்து கொண்டோம் ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  3. தங்கள் அருமை புத்திரியின் திருமணம் இனிதே நடந்தது மகிழ்ச்சியே.
    அவர் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வழ்த்துகிறேன்...!
    தங்கள் தயவில் மாசி மகத்திருவிழாவை கண்டு களித்தேன் மிக்க மகிழ்ச்சி ..!
    நன்றி வாழ்கவளமுடன்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      மனம் நிறைந்த வாழ்த்துகளைக் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. தங்கள் அன்பு மகளின் இனிதான திருமண நிகழ்ச்சிகளுக்கு
    மனம் நிறைந்த வாழ்த்துகள்..!

    பல்லாண்டு பல்லாண்டு இனிது வாழ பிரார்த்தனைகள்..!

    மாசி மகம் திருநாள் பற்றி அற்புதமான சொற்சித்திரங்களும் , படங்களும் நிறைவளித்தன..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      தங்களின் வருகையும் வாழ்த்துகளும் கண்டு மனம் மகிழ்கின்றது. மிக்க நன்றி..

      நீக்கு
  5. தங்களின் அன்பு மகளுக்கு என் வாழ்த்துக்களும், ஆசிகளும் பலப்பல. எல்லா வகை செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

    திருமான் வேலைகளுக்கு நடுவே பதிவு எழுதி பிரமிக்க வைக்கிறீர்கள். மாசிமகம் பற்றிய செய்திகள், படங்கள் அற்புதம்.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் மனம் நிறைந்த வாழ்த்துகளும்
      கண்டு மனம் நெகிழ்கின்றது. மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  6. தங்கள் அருமை மகளின் திருமணம் இனிது நடைபெற்றது அறிந்து மகிழ்ந்தேன் ஐயா.

    மணமகளாரே, மணமகனாரே
    இணைந்தின் புற்றுநன் மக்களை ஈன்று
    பெரும்புகழ் பெற்றுநீ டூழி
    இருநிலத்து வாழ்க இனிது.
    எனும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளால் மணமக்களை மனதார வாழ்த்துகின்றேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் வாழ்த்தும் கண்டு மனம் மகிழ்ந்தேன்.
      என்றும் அன்பின் நன்றிகளுடன்..

      நீக்கு
  7. கும்ப கோணம் என்று இதுவரை கேள்வியுற்றதோடு சரி அதன்
    காரணப் பெயரை இன்று தான் தங்களின் ஆக்கத்தினூடாக
    அறிந்து கொண்டேன் .மக்களின் திருமண வாழ்வு சிறக்கவும் என் மனதார
    வாழ்த்துகின்றேன் ஐயா .பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து மணமக்களின் திருமணவாழ்வு சிறக்க நல்வாழ்த்து கூறியமைக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

      நீக்கு
  8. மணமக்களுக்கு எனது வாழ்த்துகளும்.....

    சிறப்பான படங்கள், தகவல்கள் என அருமையான பகிர்வினை அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      மணமக்களை வாழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி!..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..