திங்கள், ஜனவரி 13, 2014

மார்கழிப் பனியில் - 29

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 29. 


சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் 
பொற்றாமரை அடியே போற்றும்பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு 
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் 
மற்றைக் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 30.


வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை 
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி 
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் 
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன 
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!.. 


திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே 
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..








இந்த அளவில் திருப்பாவை பாடல்கள் நிறைவடைகின்றன.

என் இல்லத்தில்
சுடர் விளக்கேற்றி வைத்த சுடர்க்கொடியாளே
ஏழேழ் பிறவிக்கும் - என் சிந்தை உன் திருவடியில்!..

அரங்கன் திருவடிகளே சரணம்!..
ஆண்டாள் திருவடிகளே சரணம்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

தஞ்சை தளிக்குளம் - தஞ்சாவூர்

  
இறைவன் - ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருவுடையார்
அம்பிகை - ஸ்ரீபிரகந்நாயகி - பெரியநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சிவகங்கை

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் (6/51/8) - தாம் சமணர் தம் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடந்தபோது தன்னை மீட்டெடுத்த சிவபெருமான் - உறையும் திருத்தலங்களைக் குறிப்பிட்டுக் கூறும் போது தஞ்சைத் தளிக்குளத்தார் என போற்றிப் புகழ்வதனைக் கொண்டு  - தஞ்சையின் பழைமையினை அறிந்து கொள்ளமுடியும். மேலும் -

இறைவன் விரும்பி உறையும் தலங்களைப் புகழ்ந்து -

கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
குளம் களம் கா என அனைத்துங் கூறுவோமே!.. 

- என, அப்பர் பெருமான் திருத்தாண்டகத்தில்  திருத்தலங்களை குறிக்கும் போது -  தஞ்சை (6/70/8) எனவும் தளிக்குளம் (6/71/10) எனவும்  அருள்கின்றார்.

திருஞானசம்பந்தப்பெருமான் தாம் பாடியருளிய க்ஷேத்ர கோவையில் குளம்   என மறைபொருளாக தளிக்குளம் குறிப்பிடப்படுவதாகக் கருதுவர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் க்ஷேத்ர கோவையில் (7/12/9) குறிப்பிடும் தஞ்சை -  இன்றைய தஞ்சை அல்ல..  அது வேறு ஒரு ஊர் - என்று வாதிடுவோர்களும் உண்டு.

மகா நந்தி
ஆழ்வாராதிகள் - திருப்பாசுரம் பாடி - திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தருளும் போது - திருமங்கையாழ்வார் - மாமணிக்கோயில் விளங்கும் திருத்தலத்தினை - 

வம்புலாம் சோலை மாமதில் தஞ்சை - என்று புகழ்கின்றார். 

சைவ வைணவ நெறிகளில் சற்றே மாற்றத்துடன் குறிப்பிடப்படுகின்றது -  தஞ்சையின் தலவரலாறு. 

அரக்க குணம் படைத்த தஞ்சகன் (தஞ்சன்),   தன் பெயராலேயே இந்த ஊர் விளங்க வேண்டும் - என வீர நரசிங்கப் பெருமாளிடம் (கோடியம்மனிடம்) கேட்டுக் கொண்டதாலேயே - தஞ்சாவூர் என வழங்கலாயிற்று என்பதே ஐதீகம். 

எனினும் - பராசரர் பர்ணசாலை அமைத்து தவம் இயற்றியதால்  பராசர க்ஷேத்ரம் எனவும், மஹாவிஷ்ணு வராக மூர்த்தியாகி தண்டகனை அழித்ததால் வராஹ க்ஷேத்ரம் எனவும், குபேரன் வழிபட்டதால் அளகாபுரி எனவும், இத்தலத்தில் அனைத்து உயிர்களும் ஈசனை தஞ்சமடைந்து நின்றதால் தஞ்சபுரி எனவும் - வழங்கப்பட்ட பெருமையினை உடையது தஞ்சை.

இத்தனைப் புகழுடைய தஞ்சையில்  - தஞ்சைத் தளிக்குளம் எனும் திருக் கோயில் எங்கே இருக்கின்றது என்றால் - யாரும் அறிய மாட்டார்கள்!..

சிவகங்கை குளம்
பலரும் கூறுகின்றார்கள் - இன்றைய தஞ்சையில் சிவகங்கைப் பூங்காவில் - சிவகங்கைக் குளத்தின் நடுவில் உள்ள திட்டில் அமைந்துள்ள சிவலிங்கமும் நந்தியுமே - தஞ்சைத் தளிக்குளம்!.. - என்று. இந்தக் கூற்றும் ஒரு யூகம் தான்!..

இன்னொரு புறம்  - தஞ்சையின் தனிப்பெரும் அடையாளமாக வானுயர்ந்து விளங்கும் ராஜராஜேஸ்வரம் எனும் பெரிய கோயிலின் மேற்குத் திருச்சுற்றில் - விளங்கும் சிவலிங்கங்கங்களுக்கு மத்தியில் நடுநாயகமாக  -

அம்பிகை அருகிருக்க நந்தியுடன் ஒரு சிவலிங்கத்திருமேனி திகழ்கின்றது. 
இத்திருமேனிதான் - தளிக்குளத்தார் - எனவும் கூறுவர்!.. எது எப்படியோ -

''..ராஜராஜனே!.. உன் பெயரை நம்நாட்டு மக்கள் மட்டுமன்றி  இந்த உலகமே போற்றிப் புகழ வேண்டும்.  தஞ்சை மும்முடிச் சோழமண்டலத்தின் தலைநகர் என தலைநிமிர்ந்து விளங்குவதைப் போல தஞ்சையில் விளங்கும் தளிக் குளத்தார் திருக்கோயிலும்  சைவசமயத்தாரும் கலைவல்லுனரும் போற்றும் படிக்கு வானளாவ உயர்ந்து விளங்க வேண்டும்!..'' 

- என , குந்தவை நாச்சியார் தன் தம்பியிடம் அன்புடன் கேட்டுக் கொண்டதன் விளைவே -
 
ஸ்ரீ தட்க்ஷிண மேரு

ஸ்ரீ தட்க்ஷிண மேரு   - என வானாளவ விளங்கும் தஞ்சை ராஜராஜேஸ்வரம்!..

நோக்கும் இடம் எங்கும் நீர் வளமும் நில வளமும் நிறையப் பெற்று - பச்சைப் பசேல் என விளங்கும் - குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்டிருந்ததால் - 
 தண் (குளிர்ந்த) + செய் (வயல்) தண்செய் = தஞ்சை.

சோழர் தம் வரலாறு புராணத்துடன் இணைந்த முசுகுந்த சக்ரவர்த்தி புறாவினுக்காக தன் சதையை அரிந்து கொடுத்த சிபி சக்ரவர்த்தி நீதியின் பொருட்டு தன்மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன் ஆகியோருடன் தொடங்கி - 

இளஞ்சேட்சென்னி, கரிகாலன், கிள்ளிவளவன், கோச்செங்கணான், பெருநற்கிள்ளி - எனத் தொடர்ந்து -  அதன் பின் ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் புகழ் மங்கிக் கிடந்து,

கி.பி. 848ல் விஜயாலய சோழன் தஞ்சையைத் தனது தலைநகராகக்  கொண்டான். 

அலங்கார ஸ்வரூபிணி
அதன் பின்  இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக  அஷ்ட லக்ஷ்மிகளும் சோழர் பக்கமே இருந்தனர்.

கி.பி.985ல் பட்டமேற்று அரியணையில் அமர்ந்த ராஜராஜ சோழ மாமன்னன் - தனது இருபத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் எழுப்பியதே

தஞ்சை ராஜராஜேஸ்வரம்!..

நர்மதைக்குத் தெற்கே இருந்து  குமரி முனை வரையிலான தமிழகத்திற்கும் கடல் கடந்த ஈழத்திற்கும் முன்னீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம் எனப்பட்ட மாலத்தீவுகளுக்கும் - 

தலைநகராக விளங்கியது - தஞ்சை மாநகர்!..

தஞ்சை மாநகரில் ராஜராஜ சோழன் எழுப்பிய திருக்கோயிலின் அருமை பெருமைகள் முழுமையாக இதுவரையிலும் சொல்லப்படவில்லை.

பார்க்கும் இடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்து விளங்கும் பரிபூரணனாகிய பரம் பொருள் -  திருக்கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் - ஒவ்வொரு முறையும் - ஒரு உன்னதத்தினை உணர்த்திக் கொண்டிருக்கின்றார்.

பசித்துக் கிடந்தவனுக்கு - பாற்கடல் அமுதம் கிடைத்தாற்போன்றதொரு பரவசம்!..

கி.பி. 1003ல் திருக்கோயில் பணிகள் தொடங்கப் பெற்றன. பச்சைமலையில் இருந்தும் நார்த்தாமலையில் இருந்தும் கொண்டு வரப்பட்ட கருங்கற்கள் கலை வடிவங்களாக வானுயர்ந்து எழுந்த வேளையில் -


நர்மதை நதியில் இருந்து பெறப்பட்ட பாணம்!.. ஆவுடையில் சரியாகப் பொருந்தியும்  - அஷ்டபந்தன மருந்து இறுகாமல்  - இளகி நின்றது.

பெருந்தச்சனாகிய வீரசோழ குஞ்சரமல்லனும் மற்றையோரும் தவித்தனர்.

இவர்களுடைய தவிப்பினை -  இமாசலத்தில் பனிமலைச் சிகரத்தில் நிஷ்டையிலிருந்த ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி அறிந்தார். பழனியில் ஸ்ரீ தண்டாயுதபாணியின் சந்நிதியில் யோகநிலையில் இருந்த சித்தர் பெருமான் போகர் அறிந்தார்.

ஸ்ரீ வராஹி அம்மன்
இருவரும் பரிபாஷையில் கலந்தனர். போகர் தனது மாணாக்கராகிய கருவூராரை அழைத்தார். அவரிடம் மறை பொருள் உணர்த்தி  - அஷ்ட பந்தனம் இறுகுவதற்கான மாற்று  ஒன்றினையும் வழங்கினார். 

வான மார்க்கமாக - தஞ்சைக்கு விரைந்து வந்த கருவூரார் - கருவறைக்குள் நுழைந்து -  இறுகாமல்  அடம் பிடித்துக் கொண்டிருந்த அஷ்ட பந்தனத்தில் தனது வாயிலிருந்த தாம்பூலத்தினை உமிழ்ந்தார். அனைவருக்கும் அதிர்ச்சி!..

ஆனால் - அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே - இளகி இழைந்த அஷ்ட பந்தனம் - இறுகியது.

ஐயன் கருவூரார்
ஒரு கணம்!.. பிரமிப்பின் எல்லைக்குச் சென்ற அனைவரும் ஐயன் கருவூரார் திருவடிகளில் ஹரஹர மகாதேவா என்று முழங்கியபடி வீழ்ந்து வணங்கினர்.

ஐயன் கருவூராரோ - இறைவனை வணங்கும்படிக்கு  காட்டினார்.

அஷ்டபந்தனம் இறுகுவதற்கென போகர் வழங்கிய குளிகை - மகத்தானது. மகா வீரியமானது. அதைக் கையாளும் திறன் படைத்தவர் கருவூரார் ஒருவரே!..

அந்த குளிகையுடன் நீரோ காற்றோ பட்டால் - விபரீத விளைவுகள் உண்டாகும். எனவே தான் அந்தக் குளிகையை தாம்பூலத்துடன் தனது வாய்க்குள் வைத்துக் கொண்டார் கருவூரார்.

இத்திருத்தலத்தில் - அருட்சித்தரான கருவூரார் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு அளவேயில்லை.

வெள்ளையம்மாள்
தஞ்சை ஸ்ரீராஜராஜேஸ்வரமுடைய பெருமானை - திருஇசைப்பா எனும் பத்துப் பாடல்களால் புகழ்ந்து பாடினார் கருவூரார்.

அன்று முதல் ஆயிரம் ஆயிரமாய் அன்பர்கள்  -  தரிசனம் செய்தாலும் அவர்கள் கண்களில் நிறைவது - திருக்கோயிலின் பிரம்மாண்டமே!..


ஆயினும்  - இத்திருக்கோயிலில் அபூர்வ  ரகசியங்கள் நிறைந்திருக்கின்றன.
உணர்வு ஒன்றி உள்குவார்க்கு அவை - உணர்த்தப்படுகின்றன.

ஸ்ரீ பிரகந்நாயகி உடனாகிய பிரகஹதீஸ்வரர் திருக்கோயிலைப் பற்றி இன்னும் எழுத வேண்டும். அதற்கு அந்த பெருமானே அருள் புரிய வேண்டும்.

பன்நெடுங்காலம் பணி செய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித்து இருக்க
என்நெடுங்கோயில் நெஞ்சு வீற்றிருந்த 
எளிமையை என்றும் நான் மறக்கேன் 
மின்நெடும் புருவத்து இளமயில் அனையார் 
விலங்கல் செய் நாடக சாலை 
இன்நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை 
இராசராசேச்சரத்து இவர்க்கே!..
கருவூரார்

சிவாய திருச்சிற்றம்பலம்.

10 கருத்துகள்:

  1. திருப்பாவை பாடல்கள் தொடர் தொகுப்பும், ஒவ்வொரு நாளும் சிறப்பான கோயிலின் விளக்கமான தகவல்களும் மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  2. அருட்சித்தரான கருவூரார் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு அளவேயில்லை.//

    அபூர்வ ரகசியங்கள் நிரம்பிய
    அருமையான பெரிய கோவில்பற்றிய தகவல்கள் பிரமிப்புதருகின்றன..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி!..

      நீக்கு
  4. தஞ்சை பெரிய கோவில் பற்றி பல தகவல்கள் அறியாதவை.....

    மிகச் சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தொடர்ந்து வரும் நாட்களில் - இறையருள் கூடி வர
      மேலும் எழுதுதற்கு எண்ணம் உள்ளது.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  5. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வலைச்சர அறிமுகத்திற்காக -
      வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..