வெள்ளி, ஜனவரி 10, 2014

மார்கழிப் பனியில் - 26

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 26. 


மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான் 
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
பாலன்ன வண்ணத்து உன்பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே 
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே 
கோல விளக்கே கொடியே விதானமே 
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 19 -20


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின் அன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கு இப்பரிசே எமக்குஎங்கோன் நல்குதியேல்
எங்கு எழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.- 19


போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.- 20

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் 
திருவடித் தாமரைகள் போற்றி!.. போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்

ஆலயதரிசனம்

தென்குடித் திட்டை


இறைவன் - ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை
தலவிருட்சம் - ஆதியில் செண்பகம், தற்போது வில்வம்.
தீர்த்தம் - சூல தீர்த்தம் எனும் சக்ர தீர்த்தம்.

ஆதிகல்பத்தில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பிரளய கால வெள்ளத்தினால் சூழப்பட்டு மூழ்கின. ஆனால் அந்தப் பேரூழிக் காலத்திலும் அழியாத பெருமை உடையது - திட்டை ஸ்தலம். 

கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களின் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத் தலமாக விளங்குவது திட்டை. 

பிரளய காலத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும்  நீர் சூழ்ந்தது. சூர்ய சந்திரர் இறைவனுடன் ஒன்றி விட்டதால் எங்கும் இருள் கவிந்தது. 

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு- இருளடைந்த பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர்.

அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளால் ஊழிப் பெரு வெள்ளத்தின் நடுவில்  மேடாக விளங்கிய திட்டு  ஒன்றினைக் கண்டு வியந்தனர். அந்த மேட்டுப் பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தோன்றிய தரிசனம் அளித்தது. அதனைக் கண்ட  மும்மூர்த்திகளும்  அதிசயித்துடன் பூஜித்தனர்.

இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்தார்.  அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, மந்த்ர, சாஸ்திர அறிவையும் அருளினார்.


இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலம்  தஞ்சை மாநகரை அடுத்துள்ள தென்குடித் திட்டை . 

பிரம்மன், மஹாவிஷ்ணு, முருகன், வசிஷ்டர், காமதேனு, ஆதிசேஷன் - ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.
 
திருஞான சம்பந்தப்பெருமான் - பாடிப் பரவிய திருத்தலம்.

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் . வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என - திருப்பெயர் கொண்டார்.  

காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும் ஜமதக்னி முனிவருடனும் பரசு ராமருடனும் ரேணுகாதேவி வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் புகழப்படுகின்றது.

இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் - பிரம்ம ரந்திரத்தில் - சந்திர காந்தக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.  இக்கற்கள் காற்றிலிருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்ப்பதால் ஒரு நாழிகைக்கு (24 நிமிடங்கள்) ஒரு துளி நீர் என சுவாமியின் மீது விழுகின்றது. 

இத்தகைய அமைப்பு மிக மிக அபூர்வமானதாகும்.

சூரிய பூஜை நிகழும் திருத்தலங்களுள் திட்டை திருத்தலமும் ஒன்று.  

ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் மீது, தன் கதிர்களைப் பரப்பி வழிபடுகின்றார்.  

நவக்கிரகங்களுள் ஒருவரான பிரகஸ்பதி எனும் வியாழ குரு தனி சந்நிதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்ற திருக்கோலத்தில் ராஜகுரு என அருள் பாலிக்கின்றார்

வடக்கே வெட்டாறும் தெற்கே வெண்ணாறும் பாய்ந்தோடும் சிறப்பினை உடைய திட்டை - காவிரி தென்கரைத் திருத்தலங்களுள் ஒன்றாகும். 

எல்லாத் திருத்தலங்களிலும் மூலமூர்த்தியே - வரம் பல தந்து தலநாயகர் என  விளங்குவார். ஆனால் திட்டைத் திருத்தலத்தில் சிவபெருமான், உமை, விநாயகர், முருகன் ஆகிய அனைவருமே தனித்தனியே அன்பர்களின் பொருட்டு அற்புதங்களை நிகழ்த்தி, அருள் பாலித்திருக்கின்றனர். 

சப்தரிஷிகளுள் ஒருவரான ஆங்கீரஸ முனிவரின் புத்ரர் தான் பிரகஸ்பதி எனும் வியாழன்.  வாழ்வில் உன்னத இடத்தை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் - கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார்.

அவருடைய தவத்துக்கு இரங்கிய எம்பெருமான் - திட்டை ஸ்தலத்தில் அவருக்குக் காட்சி கொடுத்தார்.

அதன் பயனாக - கிரக பதவி பெற்று - நவக் கிரகங்களில் சுபகிரகமாக ஏற்றம் பெற்றார்.

நவக் கிரகங்களுள் முதன்மையானதாக கருதப் படுபவர் தேவகுரு என்றும் பிரகஸ்பதி என்றும் அழைக்கப்படும் - வியாழன்.

மேலும் சுபக்கிரகமாக குரு பகவான் திகழ்கிறார்.

ஒருவருக்கு தலைமை பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், பிள்ளைப்பேறு ஆகியவை குரு பகவான் கருணை  மூலம் கிடைக்கிறது.

சிவபெருமானின் அம்சமான - குரு தட்க்ஷிணா மூர்த்தி வேறு.

நவக்கிரக மண்டலத்தினுள் தானும் ஒரு கிரகமாகத் திகழும் வியாழன் எனும் குரு வேறு என்பதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உலகம் முழுதும் உள்ள பொன் பொருள் விஷயங்களுக்கு குருவே அதிபதி என்பர். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவருடைய திருமணம் தடைப்படுமேயானால் - அதை நிவிர்த்தி செய்து அருள்பவர் - குரு.


குரு பகவான் ஒருவரே - நவக்கிரஹ மண்டலாதிபதிகளுள் - சுப கிரகம். எனவே தான் குரு பார்க்க கோடி நன்மை என்றனர் பெரியோர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 1 ஆண்டு காலம் தங்கியிருப்பார். 12 ராசிகளையும் அவர் கடந்து வர பன்னிரு ஆண்டுகள் ஆகும்  வியாழ வட்டமே  - மகாமகம் எனப்படுவது.

இத்திருக்கோயிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி அன்பர்கள் நலனுக்காக சிறப்பான முறையில் லட்சார்ச்சனையுடன் சிறப்பு அபிஷேக அலங்கார மகாதீபாராதனைகளும் நிகழும்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்வர்.

குருபெயர்ச்சியில் பங்கேற்று குருபகவானை தரிசிக்கத் திரளும் பக்தர்கள் வசதிக்கென  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.


திட்டை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு - கடந்த 2013 ஜூலை பதினைந்தாம் நாள் வெகு விமரிசையாக திருக்குடமுழுக்கு நிகழ்ந்தது.

இத்தகைய சிறப்பு மிக்க திட்டை ஸ்தலம் - தஞ்சை மாநகரின் வடகிழக்காக 6 கி.மீ தொலைவில் விளங்குகின்றது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து  -  திருக்கருகாவூர் செல்லும் நகரப் பேருந்துகளும் , ஆவூர் பட்டீஸ்வரம் வழியாக கும்பகோணம் செல்லும் புறநகர் பேருந்துகளும் திட்டை வழியே செல்கின்றன.

ரயில் வசதியும் உண்டு. மயிலாடுதுறை மார்க்கத்தில் - தஞ்சை ஜங்ஷனை அடுத்த ஸ்டேஷன். அனைத்து பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன.

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்தை உணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே(3/35)
திருஞான சம்பந்தப்பெருமான்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

12 கருத்துகள்:

  1. தென்குடித் திட்டை தகவல்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. தென்குடித் திட்டை தகவல்கள் படித்தேன். குரு நம் எல்லோரையும் பார்க்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அனைவருக்கும் குரு அருள் கிடைப்பதாக!..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. ஊழிப் பெரு வெள்ளத்தில் உதித்த சிவலிங்கத்தைக் காணக் கிடைத்த
    மகிழ்வு பெற்றேன் அருமையான படைப்பினூடாக !! வாழ்த்துக்கள்
    ஐயா .திட்டை என்றொரு ஆலயம் இருப்பதே தெரியாமல் இருந்த
    எனக்கும் உங்களால் அது பற்றிய தகவலையும் அறிய முடிந்தது இன்று .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. தென்குடித்திட்டை நான் 2-3 தடவைகள் போய் வந்துள்ள ஸ்தலம். பகிர்வுக்கு நன்றிகள். மற்ற அனைத்தும் வழக்கம்போல மிக அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. நவக்கிரகங்களுள் ஒருவரான பிரகஸ்பதி எனும் வியாழ குரு தனி சந்நிதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்ற திருக்கோலத்தில் ராஜகுரு என அருள் பாலிக்கின்றார்

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  6. சிறப்பானதோர் கோவில். திருக்கருகாவூர் சென்ற அன்று தான் இத்தலத்திற்கும் நாங்கள் சென்றோம். மீண்டும் அந்த நினைவுகளை வரவழைத்தது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..