புதன், ஜனவரி 08, 2014

மார்கழிப் பனியில் - 24

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 24. 


அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி 
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி 
பொன்றச் சகடம் உதைத்தாய் போற்றி 
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி 
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி 
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் 
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 15 - 16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். - 15

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர்  எம்பாவாய். - 16

திருச்சிற்றம்பலம்

ஆலயதரிசனம்

திருக்கண்டியூர்

 
இறைவன் - ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டேஸ்வரர், வீரட்டானேசர்
அம்பிகை - மங்கலநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், நந்தி தீர்த்தம் மற்றும் குடமுருட்டி நதி.
 
அட்ட வீரட்ட தலங்களுள் முதன்மையான வீரச்செயல் நிகழ்ந்த திருத்தலம். 

நானே முதற்பொருள் என்று உரைத்து - மஹாவிஷ்ணுவுடன் நான்முகன் பிணங்கி நின்றபோது  நடுநாயகனாய் வந்தருளினர் வைரவமூர்த்தி. 

அப்பெருமானை யாரென்று உணராத நான்முகன் -  வா.. என் மகனே!.. என்று செருக்குடன் அழைக்க - வெகுண்டெழுந்த வைரவமூர்த்தி, நான்முகனின் அகங்காரத்திற்குக் காரணமான ஐந்தாவது தலையைத் தன் கை விரலால் கிள்ளித் துணித்தார் என்பது புராணம்.

இப்படியான -  வீரட்டச் செயலை, 
பண்டு அங்கு அறுத்ததோர் கையுடையான் படைத்தான் தலையை -  என்று,  அப்பர் பெருமான் திருப்பதிகத்தில் குறிப்பிட்டு போற்றுகின்றார்.

தனது தலை அறுபட்டதும் - அகங்காரம் நீங்கியவரான -  நான்முகன் தன் பிழைக்கு மனம் வருந்தியவராக வில்வ வனத்தினிடையே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் தவம் இருந்தார். தன் நாயகனின் தவத்தின் பொருட்டு அன்னை சரஸ்வதியும் வந்து அருகே அமர்ந்தாள்.

நான்முகனின் தவத்திற்கு இரங்கிய - பெருமான் அவருக்கு காட்சியளித்து - மீண்டும் சர்வ ஜீவராசிகளையும் சிருஷ்டிக்கும் பணியையும் வழங்கினார்.
 

திருக்கோயிலில் நான்முகனுக்குத் தனி சந்நிதி உள்ளது.  

அருகினில் கலைமகள் திகழ - செருக்கு அடங்கி ஞானம் விளைந்த சிந்தையராகத் திகழும்  நான்முகனின் திருமேனி மிக்க வனப்புடையது. திருக்கரங்களில் மலரும் ஜபமாலையும் கொண்டு திகழ்கின்றார்.


இத் தலத்தில் நான்முகனையும் கலைமகளையும் வேண்டித் தொழுவோர் - கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. தேர்வு நேரங்களில் மாணவச் செல்வங்கள் திரளாக வந்து - கலைமகளையும் நான்முகனையும் வணங்கிச் செல்கின்றனர். 

மேலும், பெரும் பிழைகளைச் செய்து  - சட்டப்படி தண்டனை பெற்றாலும் - செய்த பிழைக்காக மனம் வருந்துவோர் - இங்கே வந்து தொழ ஆறுதலும் தேறுதலும் பாவ விமோசனமும் கிடைக்கின்றது என்கின்றனர்.

இங்கே அழகே உருவானவளாகத் திகழும் ஸ்ரீ துர்க்கை - பிரயோக சக்கரத்துடன் விளங்குகின்றனள். 

அம்பிகை ஸ்ரீமங்கலநாயகி மாங்கல்ய பாக்யம் அருள்பவள். தனியே கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்றனள். 

இவளே கலைவாணியின் அன்பினை ஏற்று - நான்முகனின் மீது பெருமான் கொண்டிருந்த கோபத்தினைத் தணித்தவள். தவறிழைக்கும் கணவன் திருந்தவேண்டும் என வேண்டி நிற்கும் பெண்களின் கண்ணீரைத் துடைத்து - அவர்தம் வாழ்வினில் ஒளியேற்றுபவள் - என்பது நிதர்சனம்.


காணக் கிடைக்காத கவின்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தினைத் திருச்சுற்றில்,  தரிசிக்கலாம்.  

வெளிப் பிரகாரத்தில் ஸ்ரீபத்ரகாளி சந்நிதி கொண்டு அருள்கின்றனள்.

மேற்கு நோக்கிய திருக்கோயில். 

சூரியன் வணங்கி வழிபட்டு மகிழும் திருத்தலங்களுள் கண்டியூரும் ஒன்று. 

சூரிய வழிபாடு ஒவ்வொரு வருடமும், மாசி மாதத்தில் -   13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நிகழும். இந்த மூன்று நாட்களிலும் சூரியனின் கதிர்கள் மாலை 5.45 முதல் 6.10 வரை சிவசந்நிதியில் படர்ந்து சிவலிங்கத்துடன் ஒன்றுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.


சித்திரை மாதத்தில் - திருவையாற்றில் நிகழும் சப்த ஸ்தானப் பெருந் திருவிழாத் தலங்களுள் கண்டியூர் ஐந்தாவது தலமாகும். 

சப்த ஸ்தானத் திருவிழாவில் ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகி தம்பதியினர் - தாம் அழைத்து வரும் புது மணத் தம்பதியினரான நந்தியம் பெருமான் - சுயசாதேவியுடன்  இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறுவர். 


இளைப்பாறிய பின் கண்டியூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது சதாதப முனிவர் - நந்தியம்பெருமானின் தந்தையான சிலாத முனிவரின் சகோதரர் என்னும் முறை கொண்டு,   கட்டுச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக - தயிர்சாதம், புளியோதரை - என சித்ரான்னங்களுடன் தெய்வத் தம்பதியினரை அனுப்பி வைப்பது மரபாக இருந்து வருகின்றது. 

இப்படி சித்ரான்னங்கள் வழங்கி உபசரிக்கும் சதாதப முனிவர் ஒவ்வொரு நாளும் நித்ய பிரதோஷ வேளையில் - காளஹஸ்தி சென்று திருக்காளத்தி நாதனைப் பணிந்து வணங்கி வரும் வழக்கமுடையவர். 

ஒருநாள் இவரால் செல்ல முடியாத சூழ்நிலையில், தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்க - இவர் பொருட்டு - 

திருக்கண்டியூர் வீரட்டம் ஸ்ரீகாளஹஸ்தியாகப் பொலிந்து விளங்கியது என்பது ஐதீகம். இவருடைய சிலாரூபம்  திருக்கோயிலில் விளங்குகின்றது.

கண்டியூர் வீரட்டத் திருக்கோயிலுக்கு சற்று அருகிலேயே - 

ஸ்ரீ ஹரசாப விமோசன பெருமாள்
ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. பஞ்ச கமல க்ஷேத்ரம் எனப்படும் திவ்யதேசம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பெற்ற பெருமையை உடையது.

காவிரியின் தென்கரைத் திருத்தலமான கண்டியூர் - திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் திருப்பதிகம் பாடி வழிபட்ட திருத்தலம். 

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு, திருமானூர், திங்களூர், திருக்காட்டுப்பள்ளி - செல்லும்  நகரப் பேருந்துகள் கண்டியூர் வழியாகச் செல்கின்றன.  திருக்கோயிலின் அருகேயே பேருந்து நிறுத்தம். 

சிந்தையும் செயலும் சீர் பெற்று விளங்க
கண்டியூர் எம்பெருமானைக் கை தொழுவோம்!..

பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத்தான் தலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியுங்
கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண்டீர் அண்ட வாணர் தொழுகின்றதே!(4/93)
திருநாவுக்கரசர்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

8 கருத்துகள்:

  1. திருக்கண்டியூர் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு... படங்களும் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

  2. காணக் கிடைக்காத கவின்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தினைத் திருச்சுற்றில், தரிசிக்கலாம்.

    சிறப்பான ஆலய தரிசனம்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும்
      இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. காணக் கிடைக்காத கவின்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் + திருப்பாவை + திருவெம்பாவை அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  4. திருக்கண்டியூர் தகவல்கள் சிறப்பு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..