சனி, ஜனவரி 04, 2014

மார்கழிப் பனியில் - 20

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை.
திருப்பாசுரம் - 20. 


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் 
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு 
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய் 
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் 
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் 
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை 
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமான் அருளிய 
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 7 - 8
 

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!. - 7

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்! - 8


ஆலய தரிசனம்

ஆதனூர்


எம்பெருமான் - ஆண்டளக்கும் ஐயன்
தாயார் - பார்கவி
தலவிருட்சம் - புன்னை மரம்
தீர்த்தம் - சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

பிரணவ விமானத்தின்  கீழ் எம்பெருமான் - சயனத் திருக்கோலம்.


தெய்வப் பசுவாகிய காமதேனு தன் மகள் நந்தினியுடன்  -  இங்கே பெருமாளைக் குறித்து தவம் இருந்து திவ்ய தரிசனம் பெற்றதாக ஐதீகம்.

திருமங்கை ஆழ்வார் - திருஅரங்கத்தில் திரு அரங்கனின் ஆலயத் திருப்பணியில் இருந்தபோது,  வணிகர் போல - ஏடும் எழுத்தாணியும் கையில் வெற்று மரக்காலும் கொண்டு வந்து திருவிளையாடல் புரிந்தார்  - பெருமாள். 

இந்த மரக்கால் கொண்டு - அளந்து கொடுத்தால் வேலை செய்தவர்களுக்கு உண்மையான கூலி கிடைக்கும் என்று கூறி  - மரக்கால் கொண்டு அளக்க, 

வேலையாட்கள் எல்லாருக்கும் ஆற்று மணலே கிடைத்தது. இதென்ன மாயம் என்று வெகுண்டெழுந்த திருமங்கை ஆழ்வார் மாயனைத் துரத்தினார். ஓரிடத்தில் அவருக்குத் தன் திவ்ய ஸ்வரூபத்தினைக் காட்டி அருள் புரிந்து அத்துடன் ஏட்டில் பிரணவம் எழுதி மந்திர உபதேசம் செய்வித்தார் - என்கின்றது கோயில் புராணம்.


திருமூலஸ்தானத்தில் ஆதிசேஷ அரவணையில் - ஆண்டளந்த மரக்காலைத் தலைக்கு வைத்தபடி -  இடது திருக்கரத்தில் ஏடும் எழுத்தாணியும் விளங்க பள்ளி கொண்ட திருக்கோலம். உடன் ஸ்ரீதேவி பூதேவி. நாபிக் கமலத்தில் - நான்முகன். பிருகு மகரிஷியும் காமதேனும் அருகிருக்கின்றனர்.

துர்வாச முனிவர் கொடுத்த பூமாலையை அலட்சியத்துடன் யானையின் மத்தகத்தில் வைத்த  - தேவேந்திரன் - ஆதனூருக்கு வந்து தரிசனம் செய்து பாவம் நீங்கப் பெற்றான் என்பது ஆன்றோர் திருக்குறிப்பு.


ஆதனூர்  - திருமங்கை ஆழ்வார் தம் திருவாக்கினால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவூர்.

வைகாசி மாதம் பத்து நாட்கள் - வெகு சிறப்பாக பிரம்மோற்சவம்.

கும்பகோணத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் நகரப்பேருந்துகள் - ஆதனூர் வழியாகச் செல்கின்றன.

மேலும் பாபநாசம் - கபிஸ்தலம் வழியாகவும் செல்லலாம். ஆனால் அவ்வழியில் பேருந்து வசதிகள் குறைவு!..

சுற்றிலும் பச்சைப்பட்டு விரித்தாற்போல வயல்வெளிகள் சூழ்ந்திருக்க - எழிலான கிராமம் ஆதனூர். 

ஆண்டளக்கும் ஐயன் எவ்விதக் குறைவும் இன்றி அவரவருக்கும்  - படி அளந்து கொண்டிருக்கின்றான்.

அருளொடு பெருநிலமளித்து - ஆண்டளக்கும் ஐயனைப் போற்றித் துதிப்போம்.

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுந்துயராயின எல்லாம் 
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் 
நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்!..
திருமங்கை ஆழ்வார்

ஓம் ஹரி ஓம்!..

16 கருத்துகள்:

  1. ஆதனூர் மேன்மை அறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும்
      அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. காமதேனு படம் கண்ணுக்குக் குளிர்ச்சியளிப்பதாக உள்ளது. பாராட்டுக்கள். பதிவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் -
      அன்பின் கருத்துரையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. ஆதனூர் பற்றிய தகவல்கள், சிறப்புகள் அனைத்தும் அருமை... நன்றி ஐயா...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும்
      அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. ஆதனூர் பற்றிய தகவல்களும் படங்களும் மிகச் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்.. தங்களின் வருகையும்
      கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. ஆதநூர் மகிமை பற்றிய தகல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி துரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  6. ஆதனூர் அரங்கத்தார் அற்புதங்களும் சிறப்புகளும்
    அறிந்துகொண்டேன் உங்கள் பதிவினால்...

    அழகிய படங்களும் மிகச் சிறப்பு!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும்
      கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  7. ஆண்டளக்கும் ஐயன் எவ்விதக் குறைவும் இன்றி அவரவருக்கும் - படி அளந்து கொண்டிருக்கின்றான்.

    அருளொடு பெருநிலமளித்து - ஆண்டளக்கும் ஐயனைப் போற்றித் துதிப்போம்.

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும்
      கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  8. நான் முன்பே குறிபிட்டதுபோல் காணக் கொடுத்து வைக்காத கோவில்கள் ஏராளம். ஆதனூர் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் வருகை தந்து
      கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..