வியாழன், டிசம்பர் 26, 2013

மார்கழிப் பனியில் - 11

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 11. 


கற்றுக் கறவையினங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் 
குற்றம் ஒன்றுமிலாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் 
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட 
சிற்றாதே பேசாதே, செல்வ பெண்டாட்டி நீ!..
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திரு நாகைக்காரோணம்

எம்பெருமான் - ஸ்ரீகாயாரோகணேஸ்வரர்.
அம்பிகை - ஸ்ரீநீலாயதாட்சி.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி - எனும் இந்த சிறப்பான வரிசையில் நாகை நீலாயதாட்சி!..

நாகை  - அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஒன்று.

கீழ் கோபுரத்தை அடுத்து - க்ஷேத்திர விநாயகர் நாகாபரணம் பூண்டு விளங்குகின்றார்.


ஆதிசேஷன்  - தன் பிழை தீர  - சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம். 

சிவராத்திரியின் நான்காம் காலத்தில்  - இங்கே ஆதிசேஷன் வழிபடுவதாக ஐதீகம்.

தீர்த்தம் தேவ தீர்த்தம். தல விருட்சம் மாமரம். அதன் கீழ் நலம் தரும், மாவடிப் பிள்ளையார் அருள் புரிகின்றார்.

இத்தலத்தில்  புண்டரீக முனிவர் செய்த  பெருந்தவத்தில் -  அகமகிழ்ந்த  ஈசன் முனிவரை ஆரத் தழுவிக் கொண்டதால் - இத்திருப்பெயர் வழங்குகின்றது. 

அகத்திய மாமுனிவர் ஈசனின் திருக்கல்யாண தரிசனம் பெற்ற திருத் தலங்களுள் இதுவும் ஒன்று. மூலஸ்தானத்தில் சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் சோமாஸ்கந்த திருமேனி சுதை வடிவாக விளங்குகின்றது.


சப்த விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள் - நாகையும் ஒன்று. 
இங்கே சுந்தர விடங்கர். நடனம்  - பாராவார தரங்க நடனம். எனில் கடலில் எழும்பித் தவழும் அலைகளைப் போன்ற  திருநடனம்.

மீனவப் பெருங்குலத்தில் அதிபத்த நாயனார் தோன்றி ஈசனை வழிபட்டு இறை தரிசனம் பெற்று முக்தி எய்திய திருத்தலம். 

தேவார மூவராலும் போற்றித் துதிக்கப்பட்ட திருத்தலம். 

திருநாவுக்கரசு சுவாமிகள்  அருளிய  - 

கலங்கள் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்காரோணம் - எனும் திரு வாக்கினால் சோழ மாமன்னர்களின் காலத்துக்கு முன்பிருந்தே  - கடல் வாணிகத்தில் தலைசிறந்து விளங்கிய  நாகை மாநகரின் பெருஞ்சிறப்பினை  அறிகின்றோம்.

கற்றார் பயில் கடல்நாகை - என திருஞான சம்பந்தப் பெருமானால் புகழப்பட்ட திருத்தலம். 

இத்திருத்தலத்தில் தான் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருப்பதிகம் பாடி - நவமணிகளுடன் பொன்னும் பொருளும் குதிரையும் பெற்றனர்.

மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சிக் காலத்தில் மாபெரும் புத்த விஹாரம் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

சம்பந்தப்பெருமானின் திருவாக்கிற்கு ஏற்ப - பின்னாளில் கவி காளமேகப் புலவரிடம்  - சொல் விளையாட்டு நிகழ்த்திய  சிறுவர்களின் - குறும்பினையும் அறிய முடிகின்றது.

ஒரு சமயம் நாகைக்கு - பசி மயக்கத்துடன் வந்த காளமேகப்புலவர் - அங்கே விளையாடிக் கொண்டிருந்த பாலகர்களிடம்-

''சோறு எங்கே விற்கும்?..'' - எனக் கேட்க - சிறுவர்களோ,

''தொண்டையில் விக்கும்!..'' - எனக் கூறி நகையாடினர். 

இதனால் எரிச்சலுற்ற காளமேகம் சிறுவர்களை வசை பாடுதற்காக - 

பாக்குத் தரித்து விளையாடும் பாலகர்க்கு - என சுவற்றில் எழுதியதோடு மேலும் களைப்பாகினார்.

அத்துடன், அருகே விசாரித்துச் சென்று கிடைத்த உணவை உண்டபின் தெம்பாக வந்து - முன்பு சுவற்றில் எழுதியதைப் பார்க்க -

நாக்குத் தமிழுரைக்கும் நன்நாகை!.. - என நிறைவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அகமகிழ்ந்தார் என ஒரு கதை உண்டு.


இதன்படிக்கு, மாபெரும்  தமிழறிஞர்  மறைமலையடிகள் பிறந்ததும் நாகை - காடம்பாடியில் தான்!..

அருணகிரிநாதர்  - திருப்புகழ் பாடிப் போற்றிய  திருத்தலம்.

ஆடி - தை அமாவாசை தினங்களிலும் மாசி மகத்தன்றும் கடலில் தீர்த்தவாரி நிகழும் திருத்தலம்.  வீதி விடங்கராகிய தியாகராஜப் பெருமானுக்கு பங்குனி உத்திரத்தில் பெருவிழா.

நாகை நகரின் காவல் தெய்வமாக கோதண்ட ஐயனார் விளங்குகின்றனர்.

நாகைக்கு தெற்கே - வேளாங்கண்ணியில் ஆரோக்யமாதா திருத்தலமும், 



வடக்கே - நாகூரில் தவசீலரான நாகூர் ஆண்டவர் தர்ஹாவும்

எல்லாரும் கொண்டாடுவோம்!.. - என சிறப்புற்று விளங்குகின்றன.

தமிழகத்தின் எல்லா நகரங்களில் இருந்தும் நாகைக்கு பேருந்து மற்றும் இரயில் வசதி உண்டு.

பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.(6/22)
திருநாவுக்கரசர்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

8 கருத்துகள்:

  1. ஆண்டாள் பாசுரமும் ஆலய தரிஸனங்களும் வழக்கம்போல அருமையோ அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான பகிர்வு......

    நாகை பக்கம் இதுவரை சென்றதில்லை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  4. திருப்பாவையோடு, காளமேகம் கவிதையுடன் ஒரு தமிழ் விருந்து. நாகையின் பெருமை குறித்த தகவல்கள் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..