வியாழன், நவம்பர் 14, 2013

திரு ஐயாறு

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார் வீதித்
தேந்தாம் என்று அரங்கேறிச் சேயிழையார் நடம் ஆடும் திருஐயாறே!..(1/130)

- என்று திருஞான சம்பந்தர் புகழும் திருத்தலம்.

சோழமண்டலத்தில் உள்ள வளமான ஊர்களுள் - ஒன்று!..


நீர் வளமும் நில வளமும் நிறையப் பெற்று - மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றினாலும் சிறந்து விளங்கும் - திருத்தலம்.

தஞ்சையில் இருந்து வடக்கே 10 கி.மீ. தொலைவில், வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, மற்றும் காவிரி எனும் ஐந்து ஆறுகளை உடையதாலும், 

கங்கை, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி,  நந்தி வாய் நுரை (பாலாறு) மற்றும் நந்தி தீர்த்தம் எனும் ஐந்து தீர்த்தங்களை உடையதாலும், 

திருஐயாறு - எனப்பட்ட புண்ணிய திருத்தலம். 

வேலவன் - வில் ஏந்தியபடி - தேவியருடன் விளங்கும் திருத்தலம்.

திருக்கடவூரில் - மார்க்கண்டேயருக்காக ஈசன் - காலனைக் கடிந்ததைப் போல,

ஆட்கொண்டார் சந்நிதி
இங்கும் - ஏழைச் சிறுவன் ஒருவனின் உயிரினைப் பறிக்க வந்த யமனை தண்டித்து, தெற்கு கோபுர வாயிலில் ஆட்கொண்டார் என எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

சமயக்குரவர்கள் நால்வர் திருவாக்கிலும் நலம் கொண்டு திகழ்ந்த திருத்தலம்.


''மாதர்ப் பிறைக் கண்ணியானை..'' - என்று திருப்பதிகம் பாடி, அப்பர் பெருமான் - திருக்கயிலாய தரிசனம் பெற்ற திருத்தலம்.

கடக்க இயலாதபடி - பெரும் வெள்ளப்பெருக்குடன் கரை புரண்டோடிய காவிரியைக்  கண்ட  சுந்தரமூர்த்தி சுவாமிகள் - இறைவனை ஓலமிட்டு அழைக்க,

அதைக் கேட்டு  - பிள்ளையாரும் பெருங்குரலுடன் ஓலமிட்டு அருளினார்.

அந்த அளவில் - காவிரி தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு - சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கடந்து சென்று கரையேறும் படி வழி விட்ட அற்புதம் - நிகழ்ந்தது திருவையாற்றில் எனும் போது,

''தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!..''  

- என ஒளவையார் அருளிய திருவாக்கின் பெருமையும் விளங்குகின்றது.

இத்திருத்தலத்தில் தல விருட்சம் - வில்வம்.




எம்பெருமான் - ஐயாறப்பர் -  பஞ்சநதீஸ்வரர் எனவும்

அம்பிகை - அறம்வளர்த்த நாயகி - தர்மசம்வர்த்தனி எனவும்

அருளாட்சி புரியும் திருத்தலம்.

அதிகார மூர்த்தியாகிய - திரு நந்திதேவர் - 

சிலாத முனிவருக்கு அன்பு மகனாகப் பிறந்து - வியாக்ரபாதரின் அன்பு மகள் - சுயசாதேவியை - திருமழபாடியில் திருமணம் கொண்டு இறைவனுக்கும் இறைவிக்கும் சுவீகார புத்ரனாக பேறு பெற்று - ஏழூர் வலம் வந்தருளும் திருத்தலம்.


இதனையே - ''..நந்தி அருள் பெற்ற நன்னகர்!..'' - என தெய்வச் சேக்கிழார் புகழ்கின்றனர்.



இத்திருத்தலத்தில் - வெள்ளிக்கிழமை தோறும் மஹாலக்ஷ்மி - திருவுலா எழுந்தருளுள்கின்றனள்.

இவை மட்டுமா!..


இன்னும் பற்பல சிறப்புகளையும் உடைய திருஐயாற்றில் - இந்த வருடம் துலா ஸ்நானம் செய்யும் பெரும் பேற்றினைப் பெற்றேன். 

அப்போது எடுக்கப்பட்ட படங்களில் சிலவற்றை இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்.


தீபாவளியை ஒட்டிய தினங்களில் கரை புரண்டு ஓடிய காவிரி - சில தினங்களாக - சல சல என இன்னிசை எழுப்பியவாறு - சிலு சிலு என குளிர்ந்த மனத்தினளாக ஓடிக் கொண்டிருக்கின்றாள்.

பாவங்களைக் கரைக்கும் பாகீரதி எனும் கங்கையும்,

பொன் என வளங்குவிக்கும்  பொன்னி எனும் காவிரியும் - 

கலந்து பெருகி - பெரும் பேறளிக்கும் புண்ணிய ஐப்பசியில் - காவிரி நீராடி ,

செம்பொற்சோதியாகிய - ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் வலம் வந்து அனைவருடைய நலன்களுக்கும் வணங்கி நிற்கும் பேறு பெற்றேன்.

தென் கயிலை
யான் பெற்ற பேறு - 

வலைத் தள அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உரித்தாக, 
அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பரும் நல்லருள் புரிவார்களாக!..

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே 
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாசமலர் எலாம் ஆனாய் நீயே 
மலையான் மருகனாய் நின்றாய் நீயே 
பேசப் பெரிதும் இனியாய் நீயே 
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே 
தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே 
திருஐயாறு அகலாத செம்பொற்சோதீ!..(6/38/)

சிவாய திருச்சிற்றம்பலம்!..

12 கருத்துகள்:

  1. நன்கு ரஸித்தேன். மிக அருமையான பகிர்வு. படங்களும் வெகு பொருத்தம். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. திருவையாறு பெருமை அறிந்தேன். காவேரி சலசலவென்று ஓடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. திரு ஐயாறு திருத் தலத்தின் பெருமை தனை எடுத்துரைத்த
    அருமையான இப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .கூடவே இத்
    தலத்தில் துலா ஸ்நானம் செய்யும் பெரும் பேற்றினைத் தாங்கள்
    பெற்றமை குறித்து என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியினையும்
    தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா .மீண்டும் மீண்டும் தங்களுக்கு
    இப் பாக்கியம் கிட்டிட வேண்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று உய்வடைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.
      தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. திருத்தலத்தின் பெருமையை அழகான படங்களுடன் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. திருவையாற்றினைப் பற்றி அழகுற பகிர்ந்தமைக்க நன்றி. எனது சொநத ஊர் திருவையாறு. மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!..''

    பெருமை மிக்க அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..