திங்கள், அக்டோபர் 07, 2013

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தனி

மூன்று திருவிழிகளுடனும் பதினெட்டு கரங்களுடனும் அன்னை எழுந்தாள். அவளுடைய திருக்கரங்களில் இலங்கியவை-

வாள், ஜபமாலை, தாமரை, அம்பு, கதை, வஜ்ரம், சூலம் ,மழு, சக்கரம்,
சங்கு, பாசம், மணி, சக்தி, தண்டம், வில், கபாலம், கமண்டலம், கேடயம் - என்பன.


செந்தணலின் நிறத்தினளாக திரிமூர்த்திகளின் அம்சங்களுடன் விளங்கினாள்.

ஏன்?..

முன்பொரு சமயம் , வரமுனி எனும் -  தவ வலிமை மிக்க முனிவர் ஒருவர் இருந்தார். 

அவர் மற்ற எல்லா முனிவர்களையும் விட தனித்தன்மையுடன் விளங்கி,  அதீத சக்திகள் உடையவராக இருந்ததால் - சக முனிவர்கள் அவருக்கு உரிய மரியாதை அளித்து மதித்து வந்தனர். 

இதனால் நாளடைவில் - தனக்கு நிகர் யாரும் இல்லை எனும் ஆணவம் வரமுனியின் மனதில் எழுந்தது. தவ வலிமையால் தலை சிறந்த இடத்தைப் பெற்றும் - ஆணவத்தால் - சராசரி பாமரனுக்கும் கீழாக - தலைகீழாக - ஆனார். 

இதனால் பின்னொரு காலத்தில் - தன் தலை தனியே போகப் போகின்றது என்பதை அப்போது அவர் உணர்ந்தாரில்லை. 

இந்நிலையில் அந்த வரமுனி தவமியற்றும் தபோவனத்திற்கு மகாமுனிவராகிய அகத்தியர் பெருமான் வருகை தருகின்றார் என தகவல் கிடைத்ததும் அவரை வரவேற்று மகிழ - மற்ற முனிவர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர். 

அதை வரமுனியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

''வானவரும் என்னை மதித்துப் போற்றுகின்றனர் என்றால் - நான் எப்பேறு பெற்றவன். அப்படிப்பட்ட நான் - அகத்தியரை வரவேற்க வேண்டும்!..''

நினைக்கும் போதே வரமுனியின் காதுகளில் இருந்து கனல் பீறிட்டுக் கிளம்பியது. 

''வரட்டும் வரட்டும்!..'' - என்று மதர்ப்புடன் மனதில் மருகியபடி இருந்தார் வரமுனி. 


சற்று நேரத்தில் தபோவனத்தின் மற்ற முனிவர்கள் - அகத்திய மாமுனிவரை அன்புடன் வரவேற்று  அழைத்து வந்தனர் 

வரமுனியோ இறுகிய முகத்துடனும் கருகிய மனத்துடனும் மதர்த்து இருந்தார். அகத்திய மகரிஷியை ஏறெடுத்து நோக்கவில்லை. இன்சொல் கூறவில்லை. முகம் கடுத்து இருந்தார். அடுத்து நடக்க இருப்பதை உணராமல்!.. 

அகத்திய மாமுனிவரோ - சிந்தித்தார். அவருக்கு விளங்கியது. இனியொரு நாடகம் அரங்கேற இருப்பதை. இறையுள்ளம் அதுவாயின் அவ்வண்ணமே ஆகுக!.. எனத் தெளிந்து வரமுனியுடன் நட்பு பாராட்டினார். நல் வார்த்தைகளுடன் நலம் கேட்டார். 

தம்மைத் தேடி அகத்திய மகரிஷி வந்திருப்பதையும் அவருக்கு நல்வரவு கூறும்படியும் மற்ற முனிவர்களும் வரமுனிக்கு நினைவு கூர்ந்தனர்.  எதற்கும் அசைந்து கொடுக்காத வரமுனி தனக்குத் தானே வினை விதைத்துக் கொண்டார். 

விளைவு - மதர்த்த மனத்தினராய் மகரிஷிகளை அவமதித்ததால் - மகிஷமாகப் போவது என சாபம் கிடைத்தது. 

அந்த காலகட்டத்தில் ரம்பன் என்ற அரக்கன், வழக்கம் போல வித விதமான வரங்களை வேண்டி - அக்னி தேவனை நோக்கி கடுந்தவத்தில் இருந்தான். அக்னி தேவனும் ப்ரத்யக்ஷமாக - சகல லோகங்களையும் அடக்கி ஆள,  சர்வ வல்லமை கொண்ட மகன் ஒருவன் எனக்குப் பிறக்க வேண்டும் - என வரம் கேட்டான். 

நீ எந்தப் பெண்ணைக் கண்டு மோகிக்கின்றாயோ அவள் மூலமாக உனக்கு நீ கேட்டபடி மகன் பிறப்பான் என்று அக்னியும் வரம் அளித்தான். வந்த வேகத்துக்கு கேட்டதைக் கொடுத்த அக்னி அப்புறம் தான் சிந்தித்தான்  - அசுரன் சகல லோகங்களையும் அடக்கி ஆண்டால் அதற்குள் நாமும் அல்லவா - சிக்கிக் கொண்டோம்! - என்று. 

அதன் பிறகு - தவம் நிறைந்து எழுந்த ரம்பன் மகிழ்ச்சியுடன் அசுர லோகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விதியின் வசமாக அங்கே ஒரு எருமை மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். மூடனின் மனம் மோகம் கொண்டு மூர்க்கமானது. தானும் எருமையாக உருமாறினான். அகத்தியரின் சாபம் பெற்ற வரமுனி ரம்பனின் மகனாக மகிஷாசுரனாகத் தோன்றினான். 

நன்மக்கட்பேறு வாய்க்க நல்ல எண்ணங்கள் மிக மிக அவசியம் என்பதை உணர்த்தும் சம்பவம் இது. 

ரம்பன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. அப்புறம் என்ன!.. அவனுடைய முன்னோர்களைப் போலவே பத்தாயிரம் ஆண்டுகள் பிரம்மனைக் குறித்து கடுந்தவம் இயற்றினான். ஒரு கன்னிப் பெண்ணால் அன்றி வேறு எவராலும் எதாலும் மரணம் சம்பவிக்கக்கூடாது என வரம் பெற்றுக் கொண்டான். 

அதன் பின் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. மற்ற தோழர்களான சும்பன், நிசும்பன், தூம்ர லோசனன், ரக்த பீஜன் - முதலானோர்களுடன் கூடி தேவ லோகத்தை துவம்சம் செய்தான். அஞ்சி நடுங்கிய தேவர்கள் உயிரோடு வைகுந்தத்துக்கு ஓடினர். 

மஹாவிஷ்ணு புன்னகைத்தார். மகிஷனுக்குப் பெண்ணால் தான் மரணம். எனவே அன்னை பராசக்தியை சரணடையுங்கள் என்றார். 

அங்கிருந்து தலை தெறிக்க ஓடிய தேவர்கள் - திருக்கயிலாய மாமலையின் தலைவாசலில் நின்று கதறினர். நந்தியம்பெருமான் அவர்களை திருமாமணி மண்டபத்துக்கு அழைத்துச் சென்று சிவதரிசனம் செய்வித்தார். 

காவாய் கனகத் திரளே போற்றி!.. 
கயிலை மலையானே போற்றி!.. போற்றி!..

கண்ணீருடன் நின்றவர்களைக் கண்டு அன்னை இரக்கங் கொண்டாள்.

ஞானசரஸ்வதியுடன் நான்முகனும் மஹாலக்ஷ்மியுடன் பரந்தாமனும் அங்கே எழுந்தருளினர். முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் கந்தர்வர்களும் கூடி நின்று துதித்த வேளையில், அண்டசராசரங்கள் அனைத்தும் நடுநடுங்கியது. 


கோடானுகோடியாய்த் திகழ்ந்த சூர்யப் பிரகாசத்தின் உள்ளிருந்து, அன்னை பராசக்தி -  வாலை எனும் இளங் கன்னியாய்த் தோன்றினாள். அவளுடைய திருமேனியில் அங்கேயிருந்த அனைவரும் தம்மைக் கண்டனர். அப்போது அவள் - லக்ஷ்மி,சரஸ்வதி - எனும் தேவியரின் அம்சங்களுடன் திகழ்ந்தாள். 

செந்தாமரைப் பூவில் நின்ற அவளை  - பொற்றாமரைப் பூக்களைத் தூவிப் போற்றினர். துக்கங்களை அழிக்க வந்தவள் என்பதனால் துர்கா என்று வாழ்த்தினர். மூன்று விழிகளுடன் திகழ்ந்த அவளைக் கண்டு மகிழ்ந்தனர். 

துர்கையின் முன் நாமெல்லாம் சாதாரணம் என்பதை உணர்ந்த தேவர்கள் அனைவரும் தத்தம் படைக் கலன்களை - இவை எம்மிடம் இருப்பதை விட,  தாயே!.. உன்னிடம் இருப்பது தான் சாலச் சிறந்தது - என்று அவளிடமே சமர்ப்பித்து விட்டனர். 

புன்னகைத்த துர்கா அந்த படைக் கலன்கள் அனைத்தையும் தானே ஸ்வீகரித்துக் கொண்டாள். அளப்பரிய சக்தி உடையவளான துர்கையின் கரங்களில் அமர்ந்ததும் அந்த ஆயுதங்கள் மீண்டும் வலிமை பெற்றன. 

மகிஷனைச் சம்ஹரிக்க - அம்பிகை, சர்வாங்க பூஷிதையாகப் புறப்பட்டாள். ஆர்ப்பரித்து வந்த அசுரன் அம்பிகையுடன் கடும் போர் புரிந்தான். 


அவனுடன் சேர்ந்து போரிட்ட ரக்தபீஜனின் உடலில் இருந்து சிந்திய ரத்தத் துளிகள் அசுரர்களாக உருமாறியதால் பராசக்தியிடம் இருந்து காளி வெளிப்பட்டு ரத்தத் துளிகளை தன் நாவினால் உறிஞ்சி உயிர்க் குலத்தினைக் காத்து நின்றாள். 

 

எட்டாம் நாள் போர் மிக உக்ரமாக இருந்தது. ஒரு கணம் சிவ தியானத்தில் நின்ற அம்பிகை - சீற்றம் பொங்க திரிசூலத்தை மகிஷன் மீது பிரயோகித்தால். மகிஷன் வீழ்ந்தான். 

அம்பிகை ஆரோகணித்து வந்த சிங்கம் - கர்ஜித்தவாறு கீழே வீழ்ந்த எருமையின் மீது பாய்ந்து கூரிய நகங்களால் கீறிக் கிழித்தது.  தன் திருக்கரத்தில் ஒளிர்ந்த பொன் வாளால் மகிஷத்தின் தலையைச் சேதித்தாள் அம்பிகை.   


அசுரனாக அலைந்த மகிஷத்தின் தலை மீது தன் பத்ம பாதங்களைப் பதித்து அருளினாள். மூர்க்கனாகத் திரிந்த வரமுனி- அம்பிகையின் பாத ஸ்பரிசத்தால் நற்கதி அடைந்தார். 


முப்பத்து முக்கோடிதேவர்களும் ஒன்று கூடி நின்று, 

அயிகிரி நந்தினி நந்தித மேதினி 
விஸ்வ விநோதினி நந்தநுதே 
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸிநி 
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே 
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி 
பூரி குடும்பினி பூரிக்ருதே 
ஜய ஜய ஹே மகிஷாஸுரமர்த்தனி 
ரம்ய கபர்த்தினி சைலஸுதே!..

என்று ஆரவாரித்து - போற்றி மகிழ்ந்தனர்.

பல்வேறு திருநாமங்களுடன் போரிட்ட அம்பிகை அசுரன் வீழ்ந்ததும் ஸ்ரீ துர்கா  -   தன்னுள் விளங்கும் வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசுரி துர்கா - எனும் நவ அம்சங்களுடன்  விஸ்வரூபங் கொண்டு நின்றாள். 

அன்னையின் திருத்தோற்றங்களைக் கண்டு அண்டசராசரமும் மகிழ்வெய்தியது. 

எல்லாவற்றையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஈசன் எம்பெருமான்  - அன்புடன் அம்பிகையின் திருக்கரம் பற்றினார். அன்னையும் மனக்குளிர்ந்து ஐயனின் திருமார்பினில் சாய்ந்து கொண்டாள். 

உயிர்க் குலமும் அந்த அளவில் இன்புற்று மகிழ்ந்தது. 

இந்த வைபவத்தை அப்பர் பெருமான் தம் திருவாக்கினால், 

''..போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்!..'' - 

என்று புகழ்கின்றார். மோடி என்பது துர்கையின் திருநாமங்களுள் ஒன்றாக தேவாரத்தினுள் இலங்குகின்றது. 

சிவமும் துர்க்கையும் வேறு வேறு அல்ல!.. சிவபெருமானின் சக்திகள் நான்கு. அவை - அருட் சக்தி, புருஷ சக்தி, போர் சக்தி, கோப சக்தி என்பன. 

அருட் சக்தி  - பரமேஸ்வரி எனவும், புருஷ சக்தி - ஸ்ரீமஹாவிஷ்ணு எனவும், கோப சக்தி ஸ்ரீ காளி எனவும் -  விளங்கும் போது போர் சக்தி ஸ்ரீ துர்கா என திகழ்கின்றது. 

 

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் வழிபாடு ஒன்றினால் தான் - முற்பிறவியில் நாம்  செய்த வினையின் விளைவுகள் அழிகின்றன என்பது ஆன்றோர் வாக்கு. 

அபிராமி அந்தாதியில் அபிராமிபட்டரும் அதையே கூறி அருள்கின்றார்.

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம் 
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் 
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே (8)

ஜய ஜய தேவி.. ஜய ஜய தேவி.. துர்கா தேவி சரணம்!.. 
ஜய ஜய தேவி.. ஜய ஜய தேவி.. துர்கா தேவி சரணம்!..

10 கருத்துகள்:

  1. அறிய வேண்டிய... உணர வேண்டிய சம்பவங்கள்... சிறப்பான படங்களுடன் விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன். எல்லாருக்கும் அன்னை நல்லருள் பொழிவாளாக!..

      நீக்கு
  2. அனைவருக்கும் துர்கா பரமேஸ்வரியின் அருள் கிடைக்கச் செய்த நல்ல காரியத்திற்கான பலன் உங்கள் ஒருவறை மட்டுமே சேருவதாக! -கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. வணக்கம். தங்களுடைய ஆவல் மகத்தானது. இருப்பினும்,
      நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!.. - என்பது தான் குறிக்கோள். பெய்யும் மழையும் பெருகும் வளமும் எல்லாருக்குமாகட்டும்!.. அன்னையின் அருள் பொங்கிப் பெருகுவதாக!..

      நீக்கு
  3. படங்களும் விளக்கங்களும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக நன்றி!..

      நீக்கு
  4. ஐயா.. மேலோட்டமாக அறிந்த வரலாறு இன்றுதான்
    உங்களின் இப்பதிவினூடாக நிறையத் தெரிந்து கொண்டேன்.

    மட்டற்ற மகிழ்ச்சி! அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. வாழ்க.. வளமுடன்!..

      நீக்கு
  5. அருட் சக்தி - பரமேஸ்வரி எனவும், புருஷ சக்தி - ஸ்ரீமஹாவிஷ்ணு எனவும், கோப சக்தி ஸ்ரீ காளி எனவும் - விளங்கும் போது போர் சக்தி ஸ்ரீ துர்கா என திகழ்கின்றது.

    அன்னையின் அருட்கனலை அருமையாக
    தாங்கிவந்த் சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்!.. தங்களின் மேலான வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..