சனி, அக்டோபர் 12, 2013

திருமலையில் திருவிழா

விஜய வருடத்தில் நிறைவாகும் புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை - இன்று!.

இந்த மாதத்தில் இதுவரை - எம்பெருமானின் திருவருள் துணை கொண்டு இயன்றவரை பெருமாளை சிந்தித்தும் வந்தித்தும் அவன் நினைவில் திளைத்தோம். இனியும் சிந்திப்போம்!..


அவனுடைய பெருங்கருணையால் - திருஅரங்கம், தஞ்சை மாமணிக்கோயில், மன்னார்குடி, திருக்குடந்தை என நான்கு திவ்யதேசங்கள்  தரிசனம். 

எளியேன் - சென்று தரிசனம் செய்த திருத்தலங்களை மட்டுமே பதிவில் குறிக்கும் வழக்கம். ஆயினும் சூழ்நிலை கருதி - தரிசனம் செய்யாமலேயே - திருமருகல் எனும் திருத்தலத்தைப் பற்றி, முன்பு பதிவிட நேர்ந்தது. 

அதுபோல் திருமலை திருப்பதியை இன்னும் தரிசனம் செய்ததில்லை.

ஆயினும், அடியேன்  பெருமாளின் மீது கொண்ட அன்பினால் - புரட்டாசி மாதத்தில் மூன்று பதிவுகள் செய்தேன்.

''என்ன குற்றம் செய்திருப்பினும் பொறுத்தருளி -  எம்பெருமானே!.. எனக்கு நல்லருள் புரிக!..'' - என்று வேண்டிக் கொண்டு - நான்காவது பதிவு.

வழித்துணையாய் வருவன - திருமழிசை ஆழ்வார் அருளிய திருப்பாசுரங்கள்!..


புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம் 
பரிந்து படுகாடு நிற்ப - தெரிந்தெங்கும் 
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே 
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு!..

மூன்றாவது சனிக்கிழமையன்று - இங்கே குவைத்தில் - வசிப்பிடத்தில் அன்பர் பலர் சூழ்ந்திருக்க, அனந்தனை அச்சுதனை ஆனந்த கோலாகல கோவிந்த ராஜனை ஆராதித்து தீர்த்தம் அளிக்கும், அரும் பேற்றினை - அவனே நமக்கு அளித்தான். அதுவே பெரும் பாக்யம்!... 

ஐந்து வகை சித்ரான்னங்களுடன் கனிகளும் பெருமானுக்கு சமர்ப்பித்து -

''..கடல் தாண்டி வந்தும் கருணைக்கு நின்றோம்!..'' -  என, பணிந்து வணங்கினோம்.

பெருமானின் ஆராதனையில் சமய வேறுபாடு இன்றி  கலந்து கொண்டனர். எங்களுடன் உணவருந்தினர்.  அது - எம்பெருமானின் திருவிளையாடல்.

அந்த மகிழ்ச்சியில் மீண்டும் திருமலை தரிசனம்!.. 

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி 
தந்நோ: விஷ்ணு ப்ரசோதயாத்.

திருவேங்கமுடையானுக்கு அனுதினமும் நிகழும் முதல் கற்பூர ஆரத்தி -  கர்நாடக அரசின் உபயம் . இது இன்று நேற்றல்ல!.. 

மாமன்னர் கிருஷ்ணதேவராயர் காலம் தொட்டு நிகழ்வதாகும். பெருமாளின் மீது கொண்ட அதீத பக்தியினால் கிருஷ்ணதேவராயர் ஏற்படுத்தி வைத்த கட்டளையாகும்.

கடந்த ஐந்தாம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய பிரம்மோற்சவம் எதிர் வரும் பதின் மூன்றாம் தேதி வரை நிகழும். 


முக்கிய நிகழ்வான ஐந்தாம் நாள் (9.10) கருடசேவையன்று காலை மோகினி அலங்காரத்தில் - ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கோதை நாச்சியார் சூடிக் கொடுத்த மாலைகளுடனும் அலங்காரக் கிளியுடனும் வீதி வலம் வந்தருளினார்.

அன்று - இரவு  தங்கக் கருட வாகனத்திலும் பெருமான் சேவை சாதித்தார்.


பாரம்பர்யமாக,  சென்னை -   இந்து தர்மார்த்த சமிதி சார்பில்  வழங்கப்படும்  திருக்குடைகள் சூழ்ந்து வர -   மஹாலக்ஷ்மி ஹாரம், சகஸ்ர நாம ஹாரம் என உயர்ந்த ஆபரனங்களுடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.



நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் 
பொன்மணியும் முத்தமும் பூமரமும் - பன்மணிநீ 
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் 
வேடு முடை வேங்கடம்!..

மலையப்ப ஸ்வாமி - வஜ்ர கிரீடத்துடன் மூலவருக்கு அணிவிக்கப்படும் மஹாலக்ஷ்மி ஹாரம், சகஸ்ர நாம ஹாரம், மகர கண்டி எனும் அற்புத ஆபரணங்கள் தரித்து  சுடர்க் கொடியாள் சூடிக் கொடுத்த  மாலையும் கிளியும் தாங்கி சேவை சாதிப்பதால் - மூலவரே கருட சேவையன்று வீதியுலா வருவதாக ஐதீகம்.


இந்த கருட சேவையைத் தரிசிப்பதால் பீடைகள் விலகி அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும் எனும் நம்பிக்கையில் தான்  - என்றுமில்லாத அளவுக்கு திருமலையில் பக்தர் கூடுகின்றனர்.


ஆறாம் திருநாளின் போது (10.10)  தேவஸ்தானம் புதிதாக வடிவமைத்த - 32 அடி உயர தங்க ரதத்தில் பெருமாள் எழுந்தருளினார். 

ஏழாம் திருநாள் (11.10) அன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கண்டு மகிழ, வைர வைடூர்ய ஆபரணங்களுடன் - செம்பட்டு உடுத்தி சூர்ய ப்ரபையில் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி எழுந்தருளினார். பின் ஸ்ரீதேவி பூதேவியருடன் ரங்கநாயகி மண்டபத்தில் ஆஸ்தானம்.  ஊஞ்சல் மண்டபத்தில் மங்கலகரமாக ஊஞ்சல் சேவை. பின்னர்  இரவில்  - வெண்பட்டு உடுத்தி சந்த்ர ப்ரபையில் பெருமான் வீதி வலம் எழுந்தருளினார்.


இன்று (12.10) எட்டாம் திருநாள். காலையில் மகா ரதஉற்சவம். மாலையில் ஊஞ்சல் சேவைக்குப் பின் தங்கக் குதிரை வாகனத்தில் பெருமான் வீதியுலா வருகின்றார். 

பெருமான் வீதி வலம் போது அலங்கரிக்கப்பட்ட யானைகளும் குதிரைகளும் முன் செல்கின்றன. அன்பர்கள் திருப்பாடல்களைப் பாடித் துதிக்கின்றனர்.



இளம் பெண்கள் பெருமானின் பேர் பாடி, கோலாட்டம் கும்மி என விளையாடி மகிழ்கின்றனர். மற்றும் நடனக் கலைஞர்களும் ஆடியும் பாடியும் ஐயனைக் கொண்டாடுகின்றனர்.

எங்கும் கோலாகலமாக ஆனந்தப் பரவசம் திகழ்கின்றது. ஐயனின் அன்பினில் அனைவரும் பூரிக்கின்றனர்.


வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் 
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும் - வேங்கடமே 
தானவரை வீழத்தன் ஆழிப்படை தொட்டு 
வானவரைக் காப்பான் மலை!.. 

எல்லாம் - தானாகி,  எம்பெருமான் விளங்கும் மாமலை திருமலை!..

எம்மையும் ஆண்டு கொள்ள வேண்டுமென அடி பணிவோம்!..

ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை!.. 
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!..

10 கருத்துகள்:

  1. புரட்டாசி சனிக்கிழமைக்கு ஏற்ற அருமையான பதிவு + படங்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!..

      நீக்கு
  2. அருமையான படங்களுடன் அனைத்தும் சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி!..

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அருமை...
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமது வலைத் தளத்தில் தஞ்சையம்பதிக்கும் இணைப்பு கொடுத்த - அன்பின் திரு. குமார்... தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!..

      நீக்கு
  4. புரட்டாசி சனிக்கிசமைக்கேர்ற பதிவு. கிருஷ்ண தேவராயரின் பக்தி உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. எங்கும் கோலாகலமாக ஆனந்தப் பரவசம் திகழ்கின்றது.
    ஐயனின் அன்பினில் அனைவரும் பூரிக்கின்றனர்.

    அருமையாக திருவேங்கட பிர்ம்மோற்சவத்தை காட்சிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..