சனி, செப்டம்பர் 21, 2013

திருவேங்கடம்

''வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்!..''

ஈராயிரம் வருடங்களுக்கு முன் -

தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய, பனம்பாரனார் எனும் பெரும் புலவர் - குறிப்பிடும் தமிழகத்தின் எல்லைகள். 


இதில் வடவேங்கடம் என்பது  - திருமலையையும் தென்குமரி என்பது இன்றைய குமரி முனையையும் குறிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இளங்கோவடிகள் - சிலப்பதிகாரத்தில் -  

நீலமேகம் நெடும்பொற்குன்றத்துப்
பால்விரிந்தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் 
திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் 

- என்று திருஅரங்கத்தையும்,


வீங்கு நீரருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு

நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையினேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

- என்று திருவேங்கடத்தையும்

- மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்  குறிப்பிடுகின்றார்.

நீலத் திரைக் கடல் ஓரத்திலே நின்று 
நித்தம் தவஞ் செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் 
மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!..

- என்று, மகாகவி பாரதியார் குதுகலிக்கின்றார்.


கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் ஒன்று இல்லாமையால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்து அறியேன்
குன்றேய் மேகம்அதிர் குளிர் மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!.. 1030

திருவேங்கடமுடையான். இது திருவேங்கடம் எனும் திருமலையினை உடையவர் என்ற பொருளில் அமைந்த காரணப்பெயர். இன்று வழங்கும் ஸ்ரீஸ்ரீநிவாசன் எனும் திருப்பெயரும் 500 வருடங்களாகத்தான்!..


தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா
அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!.. 1034

திருவேங்கட மாமலையில் , திருக்கோயிலின் வடமேற்குத் திசையில் - சற்று தொலைவில் ''சிலாதோரணம்'' எனும் பாறைகள் அமைந்துள்ளன. இந்தப் பாறைகளில் இருந்தே பெருமான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். பெருமானின் திருமேனியும் இந்தப் பாறைகளும் ஒரே விதமாக விளங்குகின்றன. உலகில் இங்கு மட்டுமே உள்ள இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடங்கள்.

கண்ணார் கடல்சூழ் இலங்கைக்கு இறைவன்தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய 
அண்ணா! அடியேன் இடரைக் களையாயே!.. 1038

பெருமானுடைய திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் உஷ்ணத்திலேயே உள்ளது. ஆனால் மூவாயிரம் அடி உயரத்திலுள்ள திருமலை குளிர் பிரதேசம். அதிகாலையில் குளிர்ந்த நீர், பால் கொண்டு அபிஷேகம் செய்து முடித்தவுடன் பெருமான் திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. வியாழன்று அபிஷேகத்திற்கென ஆபரணங்களைக் கழற்றும் போது - அவை சூடாக இருக்கின்றன. 


நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏர்ஆலம் இளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய 
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!.. 1040

வியாழன்று அபிஷேகங்கள் முடிந்ததும் - ஆபரணங்கள் ஏதுமின்றி வேஷ்டி அங்கவஸ்திரத்துடன் பெருமான் திருக்காட்சி அருள்வார். ஸ்வாமியின் நெற்றியில் மெல்லிய நாமம் மட்டுமே விளங்கும். 

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே
விண்தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா! அடியேனுக்கு அருள் புரியாயே!.. 1041

பெருமாள் ஆனந்த விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக அருள்பாலிக்கின்றார். பதினான்காம் நூற்றாண்டில் அன்னியர் திரண்டு வந்து திருவரங்கத்தைக் கொள்ளையடித்தபோது, அரங்க நாதனின் உற்சவத் திருமேனி - திருமலையில் தான் - பாதுகாப்பாக இருந்தது. அந்த இடமே ரங்க மண்டபம்.


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!..இனியான் உன்னை என்றும் விடேனே!.. 1046

புரட்டாசி சனிக்கிழமை விரதம் - திருவேங்கடம் உடைய பெருமானைக் குறித்தே அனுசரிக்கப்படுகின்றது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடி தரிசிக்கும் -  புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. அப்போது மூலவரின் திருமேனியில் திகழும் மஹாலக்ஷ்மி ஆரத்தினை உற்சவ மூர்த்தியாகிய மலையப்ப ஸ்வாமி அணிந்து வருகிறார்.

இப்பதிவில் - திருமங்கை ஆழ்வார் அருளிய திருப்பாசுரங்கள் - வழி நடைத் துணையாய் வந்தன 

சீரார் திருவேங்கட மாமலை மேய 
ஆரா அமுதே!.. அடியேற்கு அருளாயே!..
பெருமானே சரணம்!..
பெருமாளே சரணம்!..

4 கருத்துகள்:

  1. வியக்க வைக்கும் தகவல்களுடன் பகிர்வு மிகவும் சிறப்பு... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. புரட்டாசி சனிக்கிழமை அன்று அருமையாய்
    வேங்கடவனை தரிசிக்க வைத்தமைக்கு இனிய நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..