செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

கண்டறியாதன கண்டேன்

கயிலாய மாமலையே உருகிற்று!..

ஏன்?..


திருக்காளத்தி மலையில் தரிசனத்தை முடித்துக் கொண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் - ஸ்ரீசைலம், திருக்கோகரணம் என - தொடர்ந்து நடந்து, வாரணாசி வந்தடைந்தார்.  காசிநாதனைக் கண்குளிரத் தரிசித்தார்.

அங்கிருந்தபடியே - வடதிசையில் அமைந்து விளங்கும் சிவ தலங்களுடன்  திருக்கயிலாய தரிசனமும் பெற விழைந்தார். 

உடனிருந்தவர்கள் அதிர்ந்தனர். ''..அவ்வளவு தூரம் - தனியாகச் செல்லவா முடிவெடுத்தார் சுவாமிகள்?.. அவருடைய உடல் நிலை நீண்ட பயணத்திற்கு ஒத்துழைக்குமா?..'' தங்களுக்குள் குழம்பியபடி - ''நாங்களும் வருகின்றோம்!..'' - என்றனர்.

சுவாமிகள் அதை மறுத்து, அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு - தன் தனி பயணத்தைத் தொடர்ந்தார். அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. வழித்துணையாக - வள்ளல் பெருமான் உடன் வருவான் என்பதில்!..

திருக்கடம்பூரில் சிவதரிசனம் செய்தபோது - 

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்கடன் அடியேனையுந் தாங்குதல் 
என்கடன் பணி செய்து கிடப்பதே!.. (5/19)

- என்று உறுதி பட மொழிந்தவராயிற்றே!..

தான் தளரும் நிலையில் தன்னைத் தாங்கிக் கொள்ளாமல் போய்விடுவானா?.. தலைவன்!.. - என்ற அழுத்தமான நம்பிக்கை - அப்பர் சுவாமிகளுக்கு!..

ஆனால்  - அதுவும் பொய்த்துப் போகுமோ எனும் சூழ்நிலை!.. 

திருக்கேதாரம் (1882)
கெளரி குண்டம், திருக்கேதாரம், இந்திர நீலபருப்பதம் முதலான திருத் தலங்களைத் தரிசித்து உள்ளம் பேரானந்தம் எய்திய நிலையில் இருந்தாலும்  - சுவாமிகளின் உடல் நிலையோ மேலும் தளர்வுற்று இருந்தது. 

தளராத மனத்தினராய் - எவ்விடத்தும் தங்காது நடந்தார். நடந்தார். நடந்து கொண்டேயிருந்தார். 

உண்ணவில்லை. ஓரிடத்தில் இருந்து உறங்கவும் இல்லை!.. விளைவு!.. 

நடந்ததால் பாதங்கள் தேய்ந்தன. அதன் பின் கைகளை ஊன்றிச் செல்ல -  கைகளும் தேய்ந்தன.  

பகல் இரவு என்று கருதாது, கயிலை நோக்கிச் செல்லும் சுவாமிகளின் மன உறுதியைக் கண்ட -  வன விலங்குகள் அஞ்சி வழி விட்டு விலகிச் சென்றன. 

கொடிய நஞ்சுடைய நாகங்கள் -  தம் படங்களில் உள்ள சுடர் மணிகளை ஒளியாக ஏந்தி இரவில் வழிகாட்டி - தம் வினை தீர்த்துக் கொண்டன. 

கைகளும் பயனற்றுப் போக - நிலத்தில் ஊர்ந்ததால், மார்புத் தசைகள் தேய்ந்து சிதற,  எலும்புகளும் முறிந்தன.  

இந்நிலையில் தான், நாவுக்கரசரின் நெஞ்சுரம் கண்டு கயிலை மாமலையும் உருகியது. 


கயிலை மாமலையே  - உருகிய போது கருணை வடிவான கயிலை நாதனின் நெஞ்சம் உருகாமல் இருக்குமா!.. உருகிற்று!.. வேறு உருக் கொண்டு நாவுக்கரசரை அணுகிற்று.

''..உடலெல்லாம் காயப்பட்ட நிலையில் இங்கு என்ன காரணம் கொண்டு வந்தீர்?..''  - என வினவிற்று!..

''..வண்டுலாவும் மலர்க் கூந்தல் உமாதேவியுடன் , எம்பெருமான் கயிலையில்  வீற்றிருக்கும் திருக்காட்சியினைத் தரிசிக்க விருப்புற்று வந்தேன்!..'' - என்றார் அப்பர்.

''..தேவர்களுக்கே அரிதானது கயிலை!.. அதனை நாடி வந்து இத்தனை துன்பம் அடைகின்றீரே!.. உம் போன்ற மானுடர்க்கு அது அத்தனை எளிதல்ல!.. எனவே
இங்கிருந்து மீண்டு செல்வீராக!..'' - என்றார் தவயோகி என வந்த பரம்பொருள்.

''ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை காணாமல், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்!..'' - என மறுத்து உரைத்தார் - சுவாமிகள்!..

தன் அடியாரின் மன உறுதியைக் கண்டு - ஆதியும் அந்தமும் இல்லாது  ஜோதியாய் நின்ற சிவப் பரம்பொருள் பெருமிதம் கொண்டது.

''நாவுக்கரசரே!.. இதோ இந்தப் பொய்கையுள் மூழ்கிக் கயிலைக் காட்சியினைக் காண்பீராக!..'' - என மொழிந்து மறைந்தார். 

அந்த அளவில் வந்தது இறை என்றுணர்ந்து , அகமகிழ்ந்து - திருப்பதிகம் பாடித் துதித்தவாறே, கயிலை மாமலைச் சாரலில் இருந்த பொய்கையில் மூழ்கிய அப்பர் பெருமான் - எழுந்தபோது அவர் கண் முன் தெரிந்தது - திருஐயாறு.


பஞ்சநதீஸ்வரத்தின் தீர்த்தத்திலிருந்து எழுந்த - பெருமானின் முன், திருக் கயிலைக் காட்சி பேரானந்தப் பெருங்காட்சியாக விரிந்தது!..

கணபதி, கந்தன், திருமால், நான்முகன், இந்திரன் முதலானவர்கள் அன்பு கொண்டு  வழிபடவும், 

ஏனைய தேவர்கள் , அசுரர்கள், சித்தர்கள், மகாமுனிவர்கள், வித்தியாதரர்கள் , யட்சர்கள்,  நாகர்கள் என  அனைவரும் எங்கும் திரண்டு நின்று வணங்கவும்,  

தேவ மகளிரின் பாடலும் ஆடலும் முழவு ஒலியும் எழுகடலின் ஓசையைப் போல எங்கும் கேட்கவும், 

கங்காதேவி மங்கல நீர் வார்க்கவும் சிவகணங்களும் பூதவேதாள கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைத்துப் போற்றவும்,

இறைவனின் ஆணைப்படி, வருபவர்க்கு வழிபாடு செய்விக்கும் பொறுப்பினை உடைய நந்தியம் பெருமான் நடுவில் நின்று விளங்கவும், 



வெள்ளி மலையென விளங்கும் விடை வாகனத்தின் மீது உமா தேவியுடன் - வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு கை தொழுது வணங்கி இன்புற்றார்.  

அது மட்டுமா!...

அம்மையும் அப்பனும் ஆனந்த ஸ்வரூபமாக - ஆடி வருவதைக் கண்டு இன்புற்றார்.

நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்கள் அனைத்தும், சக்தியும் சிவமும் ஆகிய தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டார். 

திருநாவுக்கரசு சுவாமிகள்  பாடினார். ஆடினார். அழுதார். தொழுதார். 

''சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தனவற்றை யார் சொல்ல வல்லார்?.  எவரும் இலர்!..'' - என்கின்றார் சேக்கிழார் பெருமான்.
 
காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.(4/3)

பேடை மயிலொடுங் கூடி
வண்ணப் பகன்றிலொடு ஆடி
நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
அப்பர் பெருமான் கண்ட கயிலாயத் திருக்காட்சி ஆடி அமாவாசை தினத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். அவ்வண்ணமே - ஆடி அமாவாசையன்று திருஐயாற்றில் பெருங்கோலாகலமாக நிகழ்ந்தேறும். 

திருநாவுக்கரசர்
''அபிஷேகத்திற்கு நீரும் அர்ச்சனைக்குப் பூவும் - தலையில் சுமந்து செல்லும் அடியார் தம் திருக்கூட்டத்துடன் புகுந்து - யாதும் சுவடு படாமல் (தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல்) - ஆரவாரமின்றி திருக்கோயில் அடைகின்ற'' -  பாங்கினை அப்பர் பெருமான் சொல்லியருளியபடி - 

நாமும் சென்று தரிசிப்போம்!..

திருஐயாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் என்பர். இங்கு வந்து தரிசனம் செய்தவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் என்பது திண்ணம். 

திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தைப் பாராயணம் செய்தபடி - நாள்முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலினுள் குழுமியிருக்க, மாலையில்  - திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் வைபவம் நிகழ்வுறும்.

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீஐயாறப்பருடன் வலம் வந்து அருளும் - பக்திப் பரவசமான காட்சியினைக் காணக் கண்கோடி வேண்டும். 

அடியார்களாகிய நம் பொருட்டு  - ஐயன் விடை வாகனத்தில் எழுந்தருளி வரந்தரும் வைபவம் இது. 

கண்டு தரிசிப்போம்!..  கண் கொண்ட பயனைப் பெறுவோம்!..
 
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்!.
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!.

''சிவாய திருச்சிற்றம்பலம்!..''

7 கருத்துகள்:

  1. கயிலாயத்திற்கு போய் அம்மையப்பனைப் பார்த்தது போலிருந்தது உங்கள் பதிவு.
    திருச்சிற்றம்பலம்.

    பதிலளிநீக்கு
  2. அப்பர் பெருமான் காட்டிய உயர் நெறியில் நின்றால் மனிதம் உய்வடையும் என்பது சர்வ நிச்சயம்!.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. மறுபடியும் ஒரு அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் மேலான பராட்டுதல்களுக்கும் மிக்க மகிழ்ச்சி!...

      நீக்கு
  4. சிறப்பான பகிர்வு ...கண்டறியாதன கண்டேன் எனப்பாடி
    கயிலாய மாமலையே உருகிற்று!..


    http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_5.html

    கண்களிக்கும் கயிலாயக்காட்சி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் வருகை தந்து பாராட்டும் போது மனம் மிக மகிழ்கின்றது !...

      நீக்கு
  5. அன்பின் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வணங்கி வரவேற்கின்றேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..