வியாழன், ஆகஸ்ட் 15, 2013

அருள் தரும் ஆவணி

சூரியன்  சிம்மராசியில் பிரவேசித்திருக்கும் மாதம் - ஆவணி. 

இதனால், சூரியன் ஆட்சி பெறும் ஆவணியில் செய்யப்படும் வழிபாடுகள் எல்லாவித யோகங்களையும் தரவல்லது என்கின்றனர் பெரியோர். 


மேலும் ஆவணி மாத ஞாயிறு - சூரியனுக்குரிய விரத நாள் என்கின்றனர். முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகள் சூரிய விரதத்திற்கு உகந்தவை என்று குறிப்பிடுகின்றனர். 

பொதுவாக சூரிய வழிபாடு எல்லாவித பிதுர் தோஷங்களையும் நீக்கவல்லது. பொதுவாகவே, ஞாயிற்றுக் கிழமைகளில்  சூர்யோதயத்திற்கு முன் விழித்து நீராடி, உதயத்தைக் காணும்படியாக வெட்டவெளியில் கிழக்கு நோக்கி அமர்ந்து  - எந்த தெய்வ வடிவத்தையும் தியானிக்க அருள் பெருகும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. 

பித்ரு தோஷம் இருப்பதாக அறிந்தால் - இந்த வகையான தியானம் அனுகூலமான நன்மைகளை வாரித் தரும். 


பஞ்சாங்கத்தில் ஞாயிறு அன்று சூர்யோதயம் எத்தனை மணிக்கு என்று தெரிந்து கொள்ளவும். விடியலில் நீராடி, தூய ஆடை அணிந்து வழிபாட்டுக்குத் தயாராகி,

சூர்யோதய  வேளையில் - செம்பிழம்பாக சூரியன் உதித்து வருகையில், இலுப்பை எண்ணெயில் அகல் விளக்கு ஏற்றி, சர்க்கரை கலந்த தேங்காய் துருவலை நிவேத்யமாக சமர்ப்பித்து - தூப, தீபத்துடன் கற்பூரம் ஏற்றி வழிபடலாம். இந்த வழிபாட்டினால் கண்பார்வை பலப்படும். கண்களுக்கு நேரும் கேடுகள் அகலும். கோதுமை தானம் தரலாம். 

சூர்ய காயத்ரி.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
பாஸ ஹஸ்தாய தீமஹி 
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்:

தியான ஸ்லோகம். 
ஓம் ஜபாகுஸும ஸங்காசம் 
காச்ய பேயம் மஹாத்யுதிம் 
தமோரிம் ஸர்வ பாபக்னம் 
ப்ரணதோ (அ)ஸ்மி திவாகரம். 

சூர்ய வழிபாட்டினால் உளமும் உடலும் ஒளி பெறும் என்பது ஐதீகம்.


முழு முதற்பொருளான விநாயகப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது ஆவணி - சுக்ல பட்ச சதுர்த்தியில்!..

விநாயக சதுர்த்தி  - சிறப்புடன் கொண்டாடப்படுவதை அறியாதவர் யார்!...

மேலும்  - ஸ்ரீமந் நாராயணனின்  திருஅவதாரம் நிகழ்ந்ததும் - ஆவணியில்!.. 


கோகுலாஷ்டமி என மக்கள் குதுகலத்துடன் கொண்டாடி மகிழவும் , எண்ணிலா லீலைகளுடன்,  யமுனையில் ஆடி - கோபியரின் உடைகளுடன் உள்ளங்களைக் கொள்ளையிடவும், 

''..கோவிந்தா!..'' எனக் கதறிய - பாஞ்சாலியின் மானங்காக்கவும், பஞ்சவர்க்கு தூது நடக்கவும், பார்த்தனுக்குத் தேரோட்டவும்,  கீதை எனும் மாபெரும் பொக்கிஷத்தை அருளவும் - 

பரந்தாமன் பாலகனாகப் பிறந்து - ஆவணி மாத ரோகிணியில்!..
 
எளியோர்க்கு எளியோனாக - ஈசன் இரங்கி வந்து, நிகழ்த்திய அருள் விளையாடல்கள் அறுபத்து நான்கு!.. அவற்றுள் -

உயர்ந்ததாகக் கொள்ளப்படுவது -  நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு, குதிரைச் சேவகனாக வீதியில் வந்த திருவிளையாடல்!..


அது நிகழ்ந்த நாள்  - ஆவணி மூலம்!..

அந்த நாளை அனுசரித்து, மதுரையம்பதியில் - சீரும் சிறப்புமாக பன்னிரண்டு நாட்களுக்குப் பெருந்திருவிழா நிகழ்வதும் ஆவணியில்!..

வைதீக சம்பிரதாயப்படி பூணூல் தரிக்கின்றவர்கள் அனைவரும் , பூணூல் மாற்றிக் கொள்வதும் ஆவணி - அவிட்டம் எனும் நாளில்!..

எல்லாவகையான செல்வத்துக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியைக் குறித்து வரலக்ஷ்மி நோன்பு நோற்பதும் ஆவணியில்!..


அகமும் புறமும் தூய்மையாகி, மனநிறைவுடன் கொள்வதும் கொடுப்பதும் வரலக்ஷ்மி நோன்பின் அடிப்படை.

மங்கலமாக வாழ்வதென்பது  பெறுதற்கரிய பேறு. கணவன் பூரண நலத்துடன் வாழ்வாங்கு வாழ்வதே எல்லாப் பெண்களுடைய வேண்டுதல். 

மனைவிக்காக கணவனும் கணவனுக்காக மனைவியும் வாழ்வதென்பதே - நமது பண்பாட்டின் அடிப்படை. அந்த அடிப்படையில்,

சர்வ மங்கலங்களையும் தந்தருளும் 
இறை வழிபாட்டில் மனம் ஒன்றும் போது - 

தெய்வம் தேடி வந்து அருள் புரியும்!.. 

4 கருத்துகள்:

  1. அருள் தரும் ஆவணி பற்றி அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள்.


    -=-=-=-=

    அன்புடையீர்,

    வணக்கம்.

    என் வலைத்தளத்தில் “ஆடி வெள்ளிக்கிழமை” யாகிய இன்று

    ”அறுபதிலும் ஆசை வரும்”

    என்ற தலைப்பினில் ஓர் சிறப்புப்பதிவு
    வெளியிடப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

    இந்த என் பதிவு டேஷ் போர்டில் ஏனோ தெரியாமல் இருப்பதால் தங்களுக்கு இந்த மெயில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    செளகர்யப்பட்டால் வ்ருகை தந்து கருத்துக்கள் கூறுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
    வை. கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. அருள் தரும் ஆவணி பற்றி
    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..