புதன், ஜூலை 31, 2013

ஆடி கிருத்திகை

முருகன்!..

இந்த ஒற்றைச் சொல்லுடன் தான் தமிழர் தம் வாழ்க்கை முறை தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது. 


முருகப்பெருமானின் திருக்கரத்தினில் திகழும் ஆயுதங்களுள் மிகச் சிறப்புடையது வேல்!..

'' வெல்லுவது வேல்!..'' என்னும் சொற்குறிப்பினை உடையது.

வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன் 
வெற்றி பெறு  சுடராழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லாது எனக் கருதியே..

சங்க்ராம நீ சயித்து அருள் எனத்தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்

என முருகனின் வேலாயுதத்தினை, அருணகிரிநாதர் புகழ்ந்து பாடுகின்றார்.


வேல் - வெம்பகையை மட்டும் என்றில்லை!.. வெவ்வினையையும் வென்று தீர்ப்பது!.. அதனால் தான் -

 ''..வேலுண்டு வினையில்லை!..'' என்று இனிதாகச் சொல்லி வைத்தனர். 

வேலினை ஞானத்தின் அடையாளம் என வர்ணிப்பர்.

வேலனின் திருப்பெயர்கள் ஒன்றா!.. இரண்டா!.. - சொல்லச் சொல்ல இனிப்பவை. அல்லலுற்று - அவதுயுற்று அடைக்கலம் தேடி வரும் அன்பர் தம் மனக் குகையில் நித்ய வாசம் செய்து -  இருளினை ஓட்டி ஞானப்பிரகாசமாக விளங்குபவன். அதனால்  - குகன் எனப்பட்டவன். 

வேறு ஒன்றின் துணையில்லாமல் தானே ஒளிர்ந்து பிரகாசிப்பது எதுவோ அதுவே சுப்ரமண்யம்!. 

''..சேனாதிபதிகளுக்குள் நான் ஸ்கந்தனாக இருக்கின்றேன்!..'' -  என்கின்றான் பரந்தாமன்!.

ஏரகப்பதியில் - எம்பெருமானுக்குக் குருவாக அமர்ந்து ப்ரணவப் பொருளினை உரைத்து,

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க்கெல்லாம் இனிது

எனும் குறள் தோன்றுதற்கு காரணனாக விளங்கிய பூரணன்!.. 

யோகக்கலையில் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சகஸ்ராரத்தை நோகி மேலேறும் போது மணி பூரகச் சக்கரத்திற்கு அதிபதி மயில்வாகனன்!.. அதுமட்டுமின்றி ஆக்ஞா (நெற்றி) சக்கரத்தில் ஆறு பட்டைகளுடன் கூடிய ஒளிரும் மணியாக விளங்குகின்றான் என்கின்றனர் கற்றறிந்தோர்.

வேதம்  - ''சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்!'' - என்று முழங்குவதாக -  குருநாதராக விளங்கும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார். 

அருணகிரியார், அண்ணாமலையில் முருகப்பெருமானால் தடுத்தாட்க் கொள்ளப்பட்டு, சும்மா இரு சொல்லற என உபதேசம் பெற்று தியானத்தில் ஆழ்ந்து விடுகின்றார். அதன் பின்னர் முருகப்பெருமானால் - அட்சர  தீட்சை பெறுகின்றார். முத்தைத் தரு எனும் முதற் பாடல் பிறக்கின்றது. 

மீண்டும் தியானம். ''..வயலூருக்கு வா!..'' என பெருமானால் அழைக்கப்பட்டு அங்கேதான் திருப்புகழ் பாட அறிவுறுத்தப்படுகின்றார். அப்படிப் பாடுங்கால் - அங்கே வீற்றிருக்கும் பொய்யாக் கணபதியின் தாள் வணங்கிப் பாடுகின்றார். அந்தப்  பாடல் தான் - ''..கைத்தல நிறைகனி..'' எனத் தொடங்கும் இனிமையான பாடல். 


அதிலே, ''..வள்ளிநாயகியின் மீது கொண்ட காதலால் துயருறும் சுப்பிர மணியனின் துயர் தீர, தினைக் காட்டுக்குள் யானையாகத் தோன்றி - குறவர் தம் குலக்கொடியாகிய வள்ளி நாயகியுடன், உனக்கு இளையோனாகிய முருகனை மணமுடித்து வைத்த பெருமானே!..''- எனப் போற்றுவது சிந்திக்கத் தக்கது. 

அப்படி அருணகிரியாரால் உச்சரிக்கப்பட்ட திருப்பெயர் - மந்திரத்தின் மறு வடிவான சுப்ரமண்யம் என்பதாகும்!..

முருகன்  - தமிழருடன் இணைந்த ஒரு சொல் என்று சொல்லி விட்டு என்ன - வடமொழியை கொண்டு வந்து புகுத்துகின்றீர்களே!..

தேவாரத்தில் அப்பர் பெருமான் அழகாகச் சொல்கின்றார்.

ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே! (6/23/5)

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண்...

சிவனவன்காண் சிவபுரத்து எம்செல்வன் தானே! (6/87/1) 

அப்பனே அப்படி - சர்வ வியாபியாகத் திகழ்ந்து பரிபாலிக்கும் போது, மகன் மட்டும் என்ன  - தனித்தா இருப்பான்!... மொழிக்கெல்லாம் அப்பாற்பட்ட மூலப்பரம் பொருள் அல்லவா - முருகன்!..

அத்தகைய  அரும்பொருள் - ஆறுமுகத்தரசு - அருள் மழை பொழிய வேண்டும் என்று அன்பரெல்லாம் கூடிக் கொண்டாடும் நல்ல நாட்களுள் ஒன்றுதான் கிருத்திகை!.. 

அதிலும் ஆடிக்கிருத்திகை - அளவிடற்கரிய பெருமைகளை உடையது!..


ஐந்தாம் படைவீடாகிய திருத்தணிகையில் பெருந்திருவிழா நிகழ்கின்றது!.. லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடி மகிழ்கின்றனர். இந்த வேளையில் -

இருமலு ரோக முயலகன் வாத
எரிகுண நாசி விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறீளை எரிகுலை சூலை
பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே!.. 

வருமொரு கோடி அசுரபதாதி
மடிய அநேக இசைபாடி

வருமொரு கால வயிரவராட 
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் மணவாளா

சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!... 

- என, எல்லாம் வல்ல எம்பெருமானாகிய கந்தவேளின் மலர்த் தாமரைகளைச் சிந்தித்து - நோய் நொடியில்லாத நல்வாழ்வினைப் பெறுவோமாக!...

இந்தப் பதிவினை தட்டச்சு செய்யும் நேரம் -  இங்கே  - குவைத்தில் நள்ளிரவு 12.30. 

என்னைச் சுற்றிலும் சாம்பிராணி தூபத்தின் நறுமணம் கமழ்கின்றது!. இந்த நேரத்தில் சாம்பிராணி தூபம் இடுவோர் யாரும் இங்கே கிடையாது!..

இந்த மாதிரி - பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது. என் ஐயன் என்னுடன் இருந்து என்னை இயக்கிக் கொண்டு இருக்கின்றான் என்றே  உணர்கின்றேன்!..


எப்போதெல்லாம் என் மனம் சஞ்சலப்பட்டு துயருறுகின்றதோ -  அப்போது எல்லாம் சிந்தையை ஒருங்கு கூட்டி, நெற்றியில் சில நொடிகள் நிலைக்க வைத்து - நான் உச்சரிக்கும் மந்திரம் -   

சுப்ரம்மண்யோம்!.. சுப்ரம்மண்யோம்!.. 
சுப்ரம்மண்யோம்!..

6 கருத்துகள்:

  1. குறளோடு வசிக்கும் போதே ஒருவித பிரமிப்பு வந்து விடுகிறது ஐயா... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமரன், குறள் - இரண்டுமே தமிழரின் பிரமிப்பு தானே!.. அன்பின் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  2. தற்சமயம் வெளிநாட்டிலிருந்தாலும் மனம் என்னவோ இரண்டு நாட்களாக திருத்தனியையே சுற்றி வருகிறது.
    ஆடிக் கிருத்திகையன்று திருத்தணி முருகனைப் பற்றிய பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமே முருகனின் மயில் வாகனம்!.. எனவே முருகனைச் சுற்றி வருவதில் வியப்பில்லை!... தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. ஆடிக் கிருத்திகை இதைத் தேடிப் படிப்போர் மனம் குளிரும் !!
    வாழ்த்துக்கள் ஐயா .சிறப்பான படைப்பு இதற்க்கு .

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..