வெள்ளி, மே 03, 2013

திருநாவுக்கரசர்

பனி படர்ந்த திருக்கயிலாயப் பெருமலை. வெள்ளியினை வார்த்தது போல்  பிரகாசப் பேரொளி.  அவ்வப்போடு மின்னும் பொன் என சூரிய கதிர்களின் தழுவுதலினால் தங்க மலை எனவும்  திகழ்ந்து - தகதகத்து  கொண்டிருந்தது.

வானில் இந்திரனின் யானையாகிய ஐராவதம் தன் இனத்தாருடன் ஓடித்திரிவதைப்போல மேகக்கூட்டங்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.... 


அடிவாரத்தில் மானசரோருருவ ஏரியின் - தெள்ளிய நீரலைகள் கடுங்குளிரான பனிக் காற்றினால் மென்மையாக வருடப் பெற்று ததும்பிக் கொண்டிருந்தன.

மலைச் சரிவில் உறைந்து - படர்ந்திருந்த பனிப்பொழிவின் ஊடாக - நடக்க இயலாத சிவனடியார் ஒருவர் ஊர்ந்தபடி வந்து கொண்டிருந்தார். பழுத்த பழமான  அவர் திருமேனியெங்கும் சிராய்ப்புக் காயங்கள்.. இரத்தச் சுவடுகள். இத்தனை சிரமத்துடன் எங்கே செல்கின்றார்?..

கயிலாய நாதனைக் காண!.. அவர்தம் கண்களில் கண்ணீர்... கருணை கடலான இறைவனைக் காணக்கூடுமோ.. என்று..

மிக மிக நலிவடைந்து விட்டது அவர் நிலைமை. அது அவருக்கே நன்றாகப் புரிகின்றது.  ஆயினும் தன் எண்ணத்தில் மாற்றமின்றி ... திண்ணமாய்த் திருவடிகளைக் கண்டு விடவேண்டும் என்ற பேராவலினால் உந்தப்பெற்று மேலும் ஊர்ந்து செல்கின்றார். ஆனால் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.

ஊர் ஊராய் தமிழகம் முழுதும் நடந்து - ஊர்கள் தோறும் குடியிருக்கும் தேவதேவனை - திருமறை நாயகனைக் கண்டு கைகாள் கூப்பித் தொழீர் - என கைகூப்பித் தொழுதவர் .

கயிலாயம் கண்டு இன்புற வேண்டுமென புறப்பட்டார். உடல் தளர்ந்தார்.  ஆனாலும் உள்ளந்தளராதவராக பனிக்கட்டிகளின் ஊடாக - மேலும் ஊர்ந்து செல்கின்றார்.

அவர் துயரங்கண்டு பதைத்த வெண்மேகங்கள் ஒருகணம் விக்கித்து நின்றன. அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்த ஏரியின் வெள்ளலைகள் விதிர்த்து நின்றன.  இவையெல்லாம் அசையாது நின்றாலும்  -

அசையும் பொருளின் இசையும் ஆகிய தயாபரன் அசையாது இருப்பானோ..  அசைந்தான்... அடியவர்க்கு அருள் புரிய இசைந்தான்..

''..பெரியீர்!.''  - என மொழிந்தவாறு அவர் முன் எழுந்தான்.

ஊர்ந்து கொண்டிருந்த பெரியவர் உளத் தெம்புடன் அண்ணாந்து நோக்கினார்.

கற்றை முடியுடன் காதுகளில் குண்டலங்கள் ஆட - அண்டங்களை ஆட்டி வைக்கும் ஐயன் அருள் ததும்பும் பார்வையுடன் - தாமும் ஒரு சிவனடியார் போல வேடந்தாங்கி - எதிர் நின்று கொண்டிருந்தான்.

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின் நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் - என்று அண்ணாமலையில் பதிகம் பாடியது அவருடைய நினைவுக்கு வந்தது. 

''..திருச்சிற்றம்பலம்..'' - எனத் திருநாவினால் உச்சரித்தார் பெரியவர். ஆம். இறைவனால் பெரியீர் என விளிக்கப்பட்ட பெரியவர் - திருநாவுக்கரசர்.

''.. எங்கே செல்கின்றீர்?..''

''.. என் ஐயனைக் காண.. திருக்கயிலாய மாமலைக்கு..''

''..ஐயா!. இந்த நிலையில் இன்னும் எவ்வளவு தொலைவு செல்வீர்?. உம்மால் ஆகுமா?.. திரும்பிச் செல்வீர்!..'' - வழிகாட்டும் சிவம் இப்படிக் கேட்டதும்... சொன்னதும்... அதிர்ந்தார் திருநாவுக்கரசர்.

நீற்றறைச் சிறையில் இட்டபோது மீட்டருளிய தலைவனை , வஞ்சனைப் பால் சோறாக்கி   நஞ்சு கலந்து  கொடுத்தபோது காத்தருளிய கடவுளை ,  இடறும்படி ஏவி விட்ட யானையையும் திரும்பி ஓடச்செய்த இறைவனை,  கற்றுணைப் பூட்டி கடலிற் பாய்ச்சியபோது நற்றுணையாகிய சிவபெருமானைக் காணாது -

திரும்பிச் செல்வதா!...திகைத்தார் திருநாவுக்கரசர்.

''..மாளும் உடல் கொண்டு மீளேன்! பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கனின் திருவடிகளைக் காணாமல் இங்கிருந்து மீளேன்!..'' அழுத்தம் திருத்தமாக வந்தது பதில் அடியாரிடமிருந்து.

ஆனந்தத்தால் பூரித்தான் ஆடவல்லான்..

''..அப்படியெனில், இதோ இந்தத் தடாகத்தில் மூழ்குவீராக!.. நீர் கூறும் நிமலனின் திருவடிகளை நீரில் மூழ்கி எழுந்து எளிதில் காண்பீராக!..''

''ஆ!. சிவமே வந்து வரம் அளித்தாற்போல் உள்ளதே!. நன்றி.. ஐயா மிக்க நன்றி.. திருச்சிற்றம்பலம்!.'' - பெருமகிழ்வுடன் பேசியவாறு - ஊர்ந்து வந்து தடாக நீரில் மூழ்கினார் திருநாவுக்கரசர். எழுந்தார்.. திகைத்தார்..

''..என்ன இது! பனி படர்ந்த மலை எங்கே?. தென்றல் தவழும் தென்னஞ் சோலைகள் திகழும் திருஐயாறு அல்லவா! இது?.. இறைவா!.. திருக் கயிலையில் மூழ்கி திருஐயாற்றில் எழுந்தேனே!.. உன் திருக்காட்சி காணத் தகுதியற்றவனோ யான்?..'' கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

''..நாவுக்கரசரே!. யாமே உம்மைத் தேடி வந்தோம்!. நீர் காண விழைந்த திருக்கயிலாயம் இதோ... கண்டு கொள்ளும்!...''

ஞானப் பெருமலையாகிய திருக்கயிலாயம் திருஐயாற்றில் எழுந்தது.. அங்கே அம்மையும் அப்பனும் சிவசக்தி ஐக்கிய வடிவாகி அண்ட சராசரங்களில் வாழும் அனைத்து உயிர்க்குலங்களின் தோற்றங்களில் திருக்காட்சி அருளினர். அல்லலில் வழிந்த கண்ணீர் - ஆனந்தக் கண்ணீரானது - திருநாவுக்கரசருக்கு. அவ்வளவு தான் -

அமுதத்தமிழ் மடை திறந்த வெள்ளமாகப் பிரவாகித்தது.

''...கண்டேன் அவர் திருப்பாதம்!.. கண்டறியாதன கண்டேன்!...'' - எனக் கசிந்து உருகினார்.

''.. நாவுக்கரசரே!. மேலும் சிலகாலம் இம்மண்ணில் வாழ்ந்து செயற்கரிய செய்து எம்மை அடைவீராக!..'' - இறைவன் நல்லாசி புகன்றான்..

அதன் பின்,  நாவுக்கரசரில் திருப்பணியால் தமிழும் தமிழ் மண்ணும் மேலும் சிறப்புற்று செழித்தோங்கியது.

இவர் ஆற்றிய உழவாரத் திருப்பணிச் சிறப்பின் பொருட்டு அல்லவோ - திருப்பைஞ்ஞீலி எனும் தலத்தில் இவர் பசியால் தளர்ந்திருந்த வேளையில்  கட்டுசோறு தாங்கி வந்து பரிமாறி மகிழ்ந்தான் இறைவன்.

இவர் தம் தன்னலம் கருதாத தகைமையின் பொருட்டல்லவோ - திங்களூரில் அப்பூதி அடிகளின் திருமகன் நாகம் தீண்டி இறக்க, அவனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினான்.

இவர் மொழிந்த செந்தமிழின் பொருட்டல்லவோ - திருமறைக்காட்டில் வேதங்களால் அடைக்கப்பட்ட - கதவுகளின் தாள் திறப்பித்து அருளினான்.

இவர் ஆற்றிய திருத்தொண்டின் பொருட்டு அல்லவோ - வா என்று அழைத்து திருவாய்மூரில்  திருக்கோலக்காட்சியினை அருளினான்.

இவர் ஆற்றிய உழவாரத் திருப்பணியின் பொருட்டு அல்லவோ - திருவீழிமிழலையில் பஞ்சம் வந்துற்றபோது, மக்களுக்கு அன்னதானம் செய்வதற்கென மாசு மருவற்ற பொற்காசினை வழங்கி அருளினான்.

இவர் ஆற்றிய உழவாரத் திருப்பணியினை சிறப்பிக்கும் பொருட்டு அல்லவோ - திருநல்லூரில் பூதகணங்களின் மூலமாக இவர் தோள்களில் ரிஷபம், சூலம் -  எனும் அடையாளங்களைத் தந்தருளினான்.

இவர் ஆற்றிய சமுதாய நற்பணியினை சிறப்பிக்கும் பொருட்டு அல்லவோ - திருப்பெண்ணாகடத்தில் குருவடிவாகி  திருவடி தீட்சை தந்தருளினான்.

சிவநெறிச் செல்வர்களான பெரியோர்களுள் அப்பர் சுவாமிகள் என அன்புடன் போற்றப்படும் திருநாவுக்கரசரின் பெருமைகளை விரித்துக் கூறவும் ஒருநாள் போதுமோ!..


ஊர்கள் தோறும் சென்று செந்தமிழால் பாடிப் பரவியும் திருக்கோயில்களை உழவாரங் கொண்டு தூய்மைப்படுத்தியும்  மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கியும் சைவத் திருப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

தனது முதிர்ந்த வயதில், பாலகராயிருந்த திருஞானசம்பந்தருடன் சேர்ந்து திருத்தல யாத்திரைகள் செய்தார். ஞான சம்பந்தப்பெருமானால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார்.

இவர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் சிறப்பிக்கப்பட்டார்.

கி.பி. 7,8 ஆம் நூற்றாண்டுகளில்  திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் போன்ற அருளாளர்கள் சிவ தத்துவத்தை எடுத்துரைத்து சைவசமயத்தை வளர்த்தனர்.

இவர் பாடிய  திருப்பதிகங்களே தேவாரம் எனப்படுபவை. அவை பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.  

என்கடன்பணி செய்துகிடப்பதே என சிவத்தொண்டு புரிந்த அப்பர் சுவாமிகள், ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கிய உயர் மனத்தினராக, தமது எண்பத்து ஒன்றாம் வயதில் திருப்புகலூரில் சித்திரை மாதம் சதய நாளில் சிவனடிக்கீழ் முக்தியடைந்தார்.

திருநாவுக்கரசர் குருபூஜை 4.5.2013 (சித்திரை - சதயம்) சனிக்கிழமை அன்று இறையன்பர்களால் திருக்கோயில்களில் அனுசரிக்கப்படுகின்றது. 

திருநாவுக்கரசர் நமக்கெல்லாம் காட்டியருளிய சிவநெறிகளின்படி - நாம், நம் வாழ்வினை நலமாக அமைத்துக் கொள்வோம்.

ஆழிமிசை கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி!...

2 கருத்துகள்:

  1. திருநாவுக்கரசரின் சிறப்பு பகிர்வுக்கு நன்றி...

    அவரைப் பற்றி எழுத ஒரு பகிர்வு போதாது என்பதும் உண்மை... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி..திரு.தனபாலன் அவர்களே!.. அப்பர் பெருமானின் பெருமைகள் அளவிடற்கரியன.அந்தக் காலத்திலேயே சாதிக் கொடுமைகளை எதிர்த்தவர்.. சத்யாகிரகம் செய்தவர்..சமுதாய நற்பணிகள் செய்த தன்னலமற்ற திருத்தொண்டர்.. அவருடைய நல்லாசிகள் பெற்று எல்லோரும் நலமடைவோமாக!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..