திங்கள், மே 27, 2013

திருஞானசம்பந்தர்


சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் - ஆளுடைய பிள்ளையாக -  தன் மூன்றாம் வயதில் - 

தோணிபுரம் எனும் சீர்காழியில் திருக்குளக் கரையினில் நீராடுதற்கு என தண்ணீரில் மூழ்கிய தந்தையைக் காணாது மனம் தவித்து அம்மே...அப்பா!.. என அரற்ற, 

அது பொறுக்க மாட்டாது எந்தை ஈசனுடன் விடை வாகனத்தில் தோன்றிய அம்பிகை, அளப்பரிய கருணை உணர்வினால் உந்தப்பட்டவளாய் பெருகி வழிந்த திருமுலைப்பாலினை பொற்கிண்ணத்தில் ஊட்ட - 

அந்த ஞானப்பாலினை அருந்தியதால் - சிவஞானம் நிரம்பப் பெற்றவர் திருஞான சம்பந்தப்பெருமான்.. 

ஞானசம்பந்தப் பெருமான் செல்லும் வழியெங்கும் அற்புதத்திற்கு மேல் அற்புதங்கள் நிகழ்ந்தன..


திருத்தலங்கள் தோறும் ஞானசம்பந்தப் பெருமான் அம்மையப்பன் மேல் அன்பெனும் வெள்ளம் கரை புரள  - திருப்பதிகம் பாடி மகிழ்ந்து - வணங்கி இன்புற்றனர்.

ஞானசம்பந்தப் பெருமான் தோணி புரத்து அம்மையப்பனின் புத்திரராக விளங்கி நாடெங்கும் சிவதரிசனம் செய்து திருக்கடைக்காப்பு எனும் தமிழ் அமுதினைப் பொழிந்தார்..

திருக்கோலக்காவினில் பொற்றாளமும்
பட்டீச்சுரத்தில் முத்துப்பந்தரும் வழங்கப் பெற்றன..

இவர் பொருட்டு வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி,  நெய்தலாகி -  பின் மருதமாயிற்று.  திருப்பாச்சிலாச்சிராமத்தில் முயலகம் எனும் நோயால்  - நெடுநாளாக உணர்வற்றுக் கிடந்த மழவனின் மகள் நோய் நீங்கப் பெற்றாள்.

திருச்செங்கோட்டுக்கு வருகை புரிந்தபோது கொங்கு நாடெங்கிலும் பரவிக் கிடந்த குளிர் காய்ச்சல் - இவர் தம் திருப்பதிகத்தால் நீங்கி ஒழிந்தது.

திருமருகலில் வணிகர் குலமகளின் காதல் மணாளன் நாகந்தீண்டி இறக்க, கதறி அழுத அவளின் கண்ணீர் ஓயும் வண்ணம் மணாளனை உயிர்ப்பித்து மணம் முடித்து அருளினார்.  

திருநாவுக்கரசருடன் இணைந்து தலயாத்திரை செய்யுங்கால் -
திருவீழிமிழலையில் ஏற்பட்ட பஞ்சம் நீங்க இறைவனிடம் படிக்காசு பெற்று மக்களின் துயர் தீர்த்ததுடன்,  


திருமறைக்காட்டில் வேதங்களால் அடைத்துத் தாழிடப்பட்ட திருக்கோயிலின் கதவுகளைத் திறந்தும் அடைத்தும் மக்களுக்கு உதவினார். 

மதுரையில் சமணத்தை வென்று சைவம் நிலை நாட்டினார். அத்துடன் பாண்டியனின் கூன் நிமிரப் பெற்றது. மன்னனும்  நின்றசீர் நெடுமாறன் ஆகினான். 

திருக்கொள்ளம்பூதூரில் முள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஆளில்லா ஓடத்தை அதுவாகவே செல்லும்படிக்கு  இயக்கி - அக்கரைக்கு அன்பர்களை அக்கறையுடன் சேர்த்தருளினார்.

தொண்டை நாட்டில் திருஓத்தூர் எனும் தலத்தில் இறைபணிக்காக வளர்க்கப் பட்ட பனைகள், ஆண்பனைகள் ஆகிவிட, அவற்றை அன்பர்களின் பொருட்டு பெண்பனைகளாக்கி அருளினார்.  

திருமயிலையில் பெருவணிகரான சிவநேசஞ் செட்டியார் என்பவர் தம் மகள் பூம்பாவையை ஞானசம்பந்தப் பெருமானுக்குக் கன்னிகா தானம் செய்து கொடுப்பதாக அறிவித்து வளர்த்து வரும் போது ஒருநாள் பூவனத்தில் நாகந்தீண்டி இறந்து விடுகின்றாள் அந்தக் கன்னி. 

மனம் வருந்திய செட்டியார் தன் அன்பு மகள் பூம்பாவையின் அஸ்தியை ஒரு  கலசத்திலிட்டு கன்னி மாடம் அமைத்து அங்கே பாதுகாத்து வைத்தார் - ''என்றேனும் பெருமான் வருகை தரும் போது அவரிடம் சாம்பலையாவது ஒப்படைப்போமே'' - என்று!..   

திருமயிலைக்கு எழுந்தருளிய வேளையில் இந்தச் செய்தியறிந்த ஞான சம்பந்தர் திருப்பதிகம் பாடியருள  -  அஸ்திக் கலசத்திலிருந்து அன்றலர்ந்த தாமரையாக மீண்டும் உயிர் பெற்றெழுந்தாள் பூம்பாவை.  

அன்பு மீதூறிய - சிவநேசஞ் செட்டியார்,  பூம்பாவையை மனையாளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டபோது ''பூம்பாவை என்மகள்'' என்று கூறி ஆசி வழங்கி அருளினார் ஞானசம்பந்தப் பெருமான்.

இப்படியெல்லாம் தமிழுடன் தண்கருணையையும் சுரந்த திருஞானசம்பந்த மூர்த்தி - நம் பொருட்டு அருளிய திருப்பதிகங்கள் - நாளும் பாராயணம் செய்வோர்க்கு எல்லா நலன்களையும் வழங்கவல்லவை. 

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.. 

- பில்லி, சூனியம், மாந்திரீகம், பரிகாரம், அது, இது - என நாம் - நம் மதி மயங்கி, அங்குமிங்கும் அலைந்து திரிந்து அல்லல் அடையாதபடிக்கு - ஞானகுருவாக நல்லவழி காட்டியருளியவர்.

திருஞானசம்பந்தப் பெருமான் - திருநல்லூர்ப் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் என்பாருடைய திருமகளை திருமணம் புரியுங்கால்- திருநீலநக்க நாயனார் திருமண மங்கலங்களை இயற்றினார்.  மற்றும் முருக நாயனார், சிவபாத இருதயர், நம்பாண்டார் நம்பி திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலானோரும் பெருந்திரளான மக்களும்  கூடியிருந்தனர். அப்போது -


ஞானசம்பந்தர் - ''..காதல்மனையாளொடு சிவனடி சேர்வன்!..'' என்று திருஉளங் கொண்டார். இறைவனை நோக்கித் திருப்பதிகம் பாடியருளினார். 

அவ்வண்ணம் -  ஆங்கு அருட்ஜோதி மூண்டெழுந்தது.  

அதனுள் சிவத்தினைக் காட்டிய ஞானசம்பந்தர், திருமணம் காணவந்தார் எல்லாருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தினை ஓதுவித்தார். 

தம் மனையாளின் திருக்கரம் பற்றியபடி - ஜோதியினுள் பிரவேசிக்க -  அனைவரும் சிவஜோதியுள் கலந்து  சிவசாயுஜ்யம் அடைந்தனர். 

இன்று  - வைகாசி மூலம். திருஞானசம்பந்தப் பெருமான் சிவசாயுஜ்யம் பெற்ற நாள். சிவாலயங்களில் இறையன்பர்கள்  குருபூஜை அனுசரித்து சிவதரிசனம் செய்வர். 

நாமும் திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கி இறையருள் பெறுவோம்.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருவடிகளைத் 
தலைமேற் கொள்வோம்!..

குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகுகேதுபெயர்ச்சி - 
என்று மனம் தடுமாறாமல் 
திருஞான சம்பந்தப்பெருமான் - தம் தமிழ் கொண்டு, 
நமக்குக் காட்டி அருளிய தடத்தினைப் பற்றிக் கொண்டு 
பிறவி எனும் பெருங்காட்டினைக் கடப்போம்!..

காதலாகிக் கசிந்து கண் ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமசிவாயவே. (3/49/1)  

திருச்சிற்றம்பலம்!...

3 கருத்துகள்:

  1. அற்புதமான தகவல்களோடு பகிர்வு சிறப்பு... நன்றி ஐயா...

    திருச்சிற்றம்பலம்...!

    பதிலளிநீக்கு
  2. நன்றி..திரு.தனபாலன்...பெண்ணில் நல்லாளுடன் இருந்த பெருந்தகையாகிய சிவபெருமானைப் பணிந்து வணங்கினால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - என்பதே திருஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு!. திருச்சிற்றம்பலம்!..

    பதிலளிநீக்கு
  3. திரு.Aasai தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. விரைவில் திரட்டியில் இணைக்கப்படும். மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..