சனி, ஏப்ரல் 20, 2013

குன்றிலிட்ட விளக்கு


தமிழகத்தில்  பட்டிதொட்டியெங்கும் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி - எளிய தமிழில் பத்திரிக்கையை வழங்கிய பெருமையை உடைய - ''தினத்தந்தி'' நாளிதழின் அதிபர் -

உயர்திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் அமரத்துவம் எய்தினார். அவருக்கு வயது 76.


திருச்செந்தூருக்கு அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் -

சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனார் - கோவிந்தம்மாள் தம்பதியருக்கு - 1936 செப்., 24ல், இரண்டாவது மகனாகப்  பிறந்தவர் சிவந்தி ஆதித்தனார். 

சிவந்தி ஆதித்தனார் - கல்வியாளர், தொழிலதிபர், பத்திரிகையாளர், ஆன்மிக வாதி, விளையாட்டு ஆர்வலர், விளையாட்டு நிர்வாகி -  என  பன்முக அடையாளத்துடன் திகழ்ந்தவர். 

கடந்த சில வாரங்களாக  உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த சிவந்தி ஆதித்தனார்  நேற்று இரவு காலமானார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ., படிப்பை முடித்தவர். கல்லூரியில் தேசிய மாணவர் படைத் தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்கும்  தலைவராக நியமிக்கப் பட்டார்.

தமிழகத்திலும் தமிழர் வாழும்  பிற மாநில நகரங்களிலும் பிரபலமானது, "தினத்தந்தி'' நாளிதழ்.

அவரது தந்தை தொடங்கிய  ''தினத்தந்தி'' நாளிதழை, பொறுப்புடன் சிறப்பாக வளர்த்தார். நாளிதழ் அதிபரின் மகனாக இருந்த போதிலும், அச்சுக் கோர்ப்பவராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டுபவராக, பிழை திருத்துபவராக, நிருபராக, துணை ஆசிரியராக -  அனைத்து துறைகளிலும் -  பயிற்சி பெற்று தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

மதுரையில் 1942ல் தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளிதழின் நிர்வாகப் பொறுப்பை - 1959ல்  ஆதித்தனார் தன் மகனிடம் ஒப்படைத்தார். அச்சமயத்தில், மதுரை, சென்னை,  திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் இருந்து மட்டுமே  வெளிவந்து கொண்டிருந்த - தினத்தந்தி .

இவர்தம் நிர்வாகத் திறமையில் தற்போது - கோவை, சேலம்,  திருநெல்வேலி, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், ஈரோடு, வேலூர், கடலூர்,  புதுச்சேரி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து  - மொத்தம் 15 பதிப்புகளாக வெளியிடப்படுகிறது.

மாலைமலர், ராணி, ராணி முத்து, கோகுலம் கதிர், தினத்தந்தி TV, AMN TV,  ஹலோ FM ஆகியன  - தினத்தந்தி நிர்வாகத்தின் இணை ஊடகங்கள்

சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்ட சிவந்தி ஆதித்தனார் -  ஏழை மாணவர்கள் கல்வி பயில பல்வேறு உதவிகளை செய்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவுகளில் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் பரிசுத்தொகை வழங்கி சிறப்பித்தவர்.  

பல்வேறு சமூக பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாகச் செய்து,  தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அறிஞர்களுக்கு பரிசுத்தொகையும், பொற்கிழியும் கொடுத்து அவர்களை கெளரவித்துள்ளார். 

திருச்செந்தூரில் ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் வண்ணம் பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்டு - இயங்கி வரும் ஆதித்தனார் கல்வி நிறுவன  அறக் கட்டளையில், 

தற்போது ஏழு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு சிவந்தி ஆதித்தனார் தலைவராக இருந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தமிழகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் கல்வி பங்களிப்பு  போற்றத்தக்கது. 

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக,  கடந்த 2008ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனத் தலைவராகவும்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேலும் இவரது கல்வி சேவையைப் பாராட்டி,  மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,  அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  சென்னை பல்கலைக் கழகம் ஆகியன கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்ந்துள்ளன.

சிவந்தி ஆதித்தனார் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். பத்து ஆண்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.  

தொடர்ந்து இரண்டு முறை (1982, 1983) சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டு சிறந்த சேவை புரிந்துள்ளார்.

1989ல்  சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு -  இவரது சேவையை பாராட்டி தங்க பதக்கம் வழங்கியது. மேலும் விளையாட்டு துறையில் இவரது சேவையைப் பாரட்டி, "ஒலிம்பிக் ஆர்டர் பார் மெரிட்' என்ற விருதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது.

''தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவு பத்திரிகைத் துறை மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கு பேரிழப்பு'' - என தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உள்பட அனைத்து முக்கிய பிரமுகர்களும் புகழஞ்சலி செலுத்தி யுள்ளனர்.  

தினமலர், தினமணி, ஆனந்தவிகடன், நக்கீரன் - ஆகிய சகோதர இதழ்களும் அவரைச் சிறப்பித்து அஞ்சலி செலுத்தியுள்ளன.


சில ஆண்டுகளுக்கு முன் தென்காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு சென்றிருந்த போது -  அங்கே

 ''வருங்காலத்தில் இந்த கோவில் ஏற்படும் பழுதுகளை திருத்தி , சீரமைப்பவரை  தலைவணங்குகிறேன்!..'' 

என்ற பொருளில் அரிகேசரி பாரக்கிராம பாண்டியன் என்கிற மன்னனால் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டினைக் கண்டேன்.   

அத்தகைய - தென்காசி திருக்கோயிலின்  திருப்பணிப் பொறுப்பினை  ஏற்று -  இடி விழுந்து சிதைவுற்றிருந்த - மிகப் பெரிய ராஜகோபுரத்தினை மீண்டும் பொலிவுடன் எழுப்பி கும்பாபிஷேகம் நிகழ்த்தியவர் திரு.சிவந்தி் ஆதி்த்தனார். 

நல்ல மனிதர். எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். பெருமைக்கு உரிய பதவிகளை வகித்த நிலையிலும் பக்தியோடும் தன்னடக்கத்தோடும் திகழ்ந்தவர் எனப் புகழாரங்கள் சூட்டப்படுகின்றன..

ஒரு சமயம் சென்னையில் நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் லாரியில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் ஒருவரை - கூடியிருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க -

அந்த வழியாக வந்த சிவந்தி ஆதித்தனார் அவர்கள் கோர விபத்தில் சிக்கிக் கொண்டவரை விபத்திலிருந்து மீட்டு, தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் பணம் செலுத்தி அனுமதித்து உயிர் அளித்துக் காத்த உத்தமர் என்று குறிப்பிடப்படும் பொழுது அவர் வாழ்வாங்கு வாழ்ந்தமை புலனாகின்றது.

தன் அருங்குணத்தால் குன்றிலிட்ட விளக்காகத் திகழ்ந்து சரித்தி்ரத்தி்ல் இடம் பெற்ற  பெருந்தகையாளர் - 

உயர்திரு.சிவந்தி் ஆதி்த்தனார்  அவர்கள்,   

தென்காசி விஸ்வநாதர் தம் திருவடி நிழலில் இளைப்பாற - எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சிவந்தி ஆதித்தனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(நன்றி: தகவல் தொகுப்பில் உதவி - தினமலர் மற்றும் ஆனந்த விகடன்)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும்..

2 கருத்துகள்:

  1. சிவந்தி ஆதித்தனார் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கம், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. நல்ல மனிதர்களை வானகமும் வையகமும் என்றும் மறப்பதில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..