சனி, மார்ச் 09, 2013

சனிப் பிரதோஷம்

இன்று பிரதோஷம். 

நிகழும் நந்தன வருட மாசி மாதத்தில் இரண்டாவது சனிப் பிரதோஷம். 

நல்ல நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்திற்கும் நேரத்திற்கும் அதிக வலிமையுண்டு என்பார்கள். 

'' ஞாலம் கருதினும் கை கூடும் காலம் 
கருதி இடத்தாற் செய்யின் ''  

- என்று திருக்குறள் வழி காட்டுகின்றது.

எனவே நல்ல நேரத்தில் செய்யும் காரியங்களுக்கு நல்ல பயன் கிட்டும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும் எனினும் நல்ல நேரத்தில் நாளும் கோளும் பொருந்தி வருகின்ற நாட்களில் மனம் ஒன்றி வழிபட்டால், பலமடங்கு உயர்ந்த நல்ல பயன்கள் விளையும் என்பதும் கேட்டது கேட்டபடி கிடக்கும் என்பதும் அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

இத்தகைய நாட்களில் மனம் நிறைந்த அன்புடன் இறைவனை வழிபாடு செய்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் நீங்கி - பெருநலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. 

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் என - இருமுறை பிரதோஷம் நிகழும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும்தான். திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும்  பிரதோஷ காலமாகும்.

அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு -  தேவர்களும் அசுரர்களும் செய்த பிழையினால் விளைந்த - ஆலகால நஞ்சினை உண்டார் சிவபெருமான்.  ஈசன் நஞ்சினை உண்ட பொழுது, மேலிட்ட அன்பினால் அம்பிகை தன் வளைக்கரத்தினால் வருடி விட, நஞ்சு கண்டத்திலேயே  பொலிந்து நின்றது. 

பிரதோஷ காலத்தில் தான் நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனமாடி அருள் புரிந்தார். 

தாயும் நீயே!... தந்தையும் நீயே!...
அதனால் நாம் நன்றி மறவாமல் பிரதோஷ காலத்தில் சிவாலயத்திற்குச் சென்று நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானையும் அம்பிகையையும் வழிபடுதல் வேண்டும்.

பிரதோஷ தினத்தன்று வழிபடும்போது சோம சூக்த பிரதட்சணம் செய்வது சிறப்பு.

சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து, நந்தியம்பெருமானை வணங்கி, வலப்புறமாகச் சென்று அபிஷேக தீர்த்தம் வழியும் கோமுகி வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பி நந்தியம்பெருமானின் பின் நின்று மூலஸ்தானத்தில் சிவபெருமானை நோக்கி வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வலம் செய்து வணங்கும் முறை தான் சோம சூக்த பிரதட்சணம் எனப்படும். 

இப்படி பிரதோஷ தினத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்து வணங்கிட நன்மைகள் விளைகின்றன என்கிறார்கள் மெய்யன்பர்கள். 


பிரதோஷ காலத்தில் சிவாலயத்திற்குச் சென்று நந்தியம்பெருமானை - சுத்தமான நீரால் நீராட்டி, நல்லெண்ணெய் காப்பு செய்து, திரவியப்பொடி, மஞ்சள் பொடி, திருநீறு, இளநீர், பால், தயிர், தேன், நெய், பஞ்சாமிர்தம், சர்க்கரை, சந்தனம் - இவற்றால் பெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து,

நல்ல வஸ்திரங்களை  அணிவித்து  நறுமணமுள்ள மலர்களைச் சூட்டி அலங்கரித்து பழங்கள் சித்ரான்னங்களை -  அன்புடன் சமர்ப்பித்து,

மங்கள வாத்யங்களை முழக்கி, தேவார திருவாசகப் பண்ணிசைத்து - தூப தீப ஆராதனைகளுடன் வணங்கி ,

குறைகளை நீக்கிக் குறையாத நிறைவினை தரும் இறைவழிபாட்டினை முறையாக மேற்கொண்டு - எல்லா நற்பேறுகளையும்  எய்துவோமாக!..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்..

'' திருச்சிற்றம்பலம் ''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..