வியாழன், மார்ச் 07, 2013

நல்லக விளக்கு!.

சிவராத்திரி நெருங்கி வரும் வேளையில்
'' சிவாய நம '' என்று சிந்தித்திருக்க...

நற்றுணையாவது நமசிவாயவே!.
 திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம்,
நான்காம் திருமுறை. திருப்பதிக எண் - 11.
திருப்பதிகம்  - பொது.


சொற்றுணை வேதியன் சோதி வானவன்  
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே. - 1



பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம்  அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக்கு அருங்கல நம சிவாயவே. - 2


விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை  ஒன்று மில்லையாம்
பண்ணிய  உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சிவாயவே. - 3


இடுக்கண்பட் டிருக்கினும்   இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும்  அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நம சிவாயவே. - 4


வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நம சிவாயவே. - 5


சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன்  நாடொறு நல்குவான் நலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நம சிவாயவே. - 6


வீடினார்  உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார்  அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன்  ஓடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நம சிவாயவே. - 7


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே. - 8


முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல்  திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்த வர்க்கெல்லாம்
நன்னெறி யாவது நம சிவாயவே. - 9


மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நம சிவாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு  இடுக்கண் இல்லையே.
  - 10


தென்னாடுடைய சிவனே போற்றி!...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!...
திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..