வியாழன், பிப்ரவரி 28, 2013

பிள்ளைத் தமிழ்

பகழிக் கூத்தர் அருளிய 
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் 
அந்த அமுதத்தில் இருந்து சிறப்பு மிக்க ஒரு பாடல்.

- : முத்தப்பருவம் : -

thiruchendur

கத்துந் தரங்கம் எடுத்தெறியக் 
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள் 
கரையில் தவழ்ந்து வாலுகத்திற் 
கான்ற மணிக்கு விலையுண்டு !...

தத்துங் கரட விகடதடத் 
தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை
தரளந்தனக்கு விலையுண்டு
தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத்தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரு நித்திலந்தனக்கு
கூறுந்தர முண்டு - உன் கனிவாய்

முத்தம் தனக்கு விலையில்லை
முருகா முத்தம் தருகவே!...
முத்தம் சொரியும் கடலலைவாய்
முதல்வா! முத்தம் தருகவே!...

கடுமையான கருவினைத் தாங்கி வருத்தமுற்று, அலை முழங்கும் கடலினுள் இருந்து வெளியேறி மணற்பரப்பில் தவழ்ந்து வலம்புரிச்சங்குகள் ஈன்றெடுத்த முத்துக்களுக்கு மதிப்பும் விலையும் உண்டு.

எந்நேரமும் விகடக்கூத்தினைப் போல தலையினை ஆட்டிக்கொண்டிருக்கும் மாமதயானையின் - பிறைச்சந்திரனைப் போல வளைந்த தந்தத்தினுள்ளிருந்து விளையும்  முத்தினுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.

பசுமையாய் வளர்ந்து, கொத்து கொத்தாக விளைந்து, அடர்ந்து வளைந்த செழுங்கதிர்களில் நிறைந்த நெல்மணிகளுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.

நீருண்டு வந்த கார்மேகங்கள் - ''...நிலம் செழிக்க என்று...'' பொழியும் மழை முத்துக்களுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.

ஆனால் - 

கனிந்த இதழ்களால் நீ தரும் முத்தத்தினை - மதிப்பிடமுடியுமோ!...
அதற்கு ஒரு விலையும் உண்டோ?...

முத்துக்களை வாரி இறைக்கும் அலைவாயில் அமர்ந்த முருகா!...
செங்கனி எனச் சிவந்த இதழ்களால் முத்தம் தருக!...

முருகா!... முத்தம் தருக!...
திருச்செந்தில் முதல்வா!... முத்தம் தருக!...

* * *
மகப்பேறின்றி மனம் வாடும் தம்பதியினர், சஷ்டி விரதமிருந்து ஒருமித்த சிந்தையராகி,  இத்திருப்பாடலை நாளும் பாராயணம் செய்வராயின் வேண்டிய நலம் எய்தப் பெறுவர் என்பது திருக்குறிப்பு!...

வேலும் மயிலும் துணை!..
* * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..