சனி, ஜனவரி 26, 2013

தைப்பூசம்

தை 14 (27 - 01 - 2013 ) ஞாயிற்றுக்கிழமை

மகர மாதமாகிய தை மாதத்தில் நிகழ்வுறும் திருநாட்களுள் பூசம் சிறப்பானது. தமிழகம் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் விசேஷமாக கொண்டாடப்படுவது தை பூசம் ஆகும். 

தமிழகத்தின் பல சிவாலயங்களிலும் தனித்து விளங்கும் முருகன் திருக்கோயில்களிலும் அன்பர்கள் குடும்பத்துடன் சென்று வழிபடுவதைக் காணலாம். 

பக்தி பூர்வமானதும் ஆன்மீக நாட்டமுடைய அடியார்கள் இல்லங்களில் அன்புடன் அனுசரிக்கப்படுவதும் தை பூசம் ஆகும். தை மாதத்தில் பெளர்ணமி திதி - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்குரிய பூச நட்சத்திரத்துடன் கூடி வரும் நாளே தை பூசம்.

எனவே ஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக இந்நாளினைக் கொண்டு, அடியார்கள் விரதமிருந்து காவடி சுமந்தும் பால்குடம் தாங்கியும் முருகன் திருக்கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். 

thanjavur14
அருள்மிகு தண்டாயுதபாணி, பழனி
தமிழகத்தில் பழனியம்பதியில் தை பூசம் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பழனியம்பதி வாழ் பாலகுமாரனுக்கு நேர்ந்து கொண்டு ஆயிரம் ஆயிரமாய் -  மயில்காவடி, மச்சக்காவடி, சர்க்கரைக்காவடி, சந்தனக்காவடி, பால் காவடி, பன்னீர் காவடி என எடுத்து வந்து மலையேறி தரிசனம் செய்து இன்புறுகின்றனர்.   

தை பூசத்தன்று பழனி முருகனைத் தரிசனம் செய்ய - தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகத் திரண்டு வருகின்றனர்.

சிவனடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்தசஷ்டிக் கவசம் - என புனிதநூல்களைப் பாராயணம் செய்து - மாலையில் மனைவி மக்களுடன் ஆலய தரிசனம் செய்து சிறிது உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - சிவநடனம் காண வேண்டித் தவமிருந்த வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவருக்கும் தை பூச நாளில் பகல் பொழுதில் - அம்பிகையுடன் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்.

இலங்கையிலும், சிங்கப்பூரிலும் மலேசியாவில் பத்துமலை முருகன் திருக்கோயிலிலும் மற்றும் தண்ணீர்மலை  முருகன் திருக்கோயிலிலும் வெகு சிறப்பாக தை பூசப் பெருவிழா நடைபெறுகிறது. நம்மைப் போலவே சீனப் பெருமக்களும் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதை காணலாம்.  

தை பூசத் திருவிழா - சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசு விடுமுறை நாள்.

லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸில் - அங்கு வாழும் தமிழ் மக்களால் தை பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில் - 1874 தை 19 - பூச தினத்தில்  சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். வள்ளல் பெருமானை நினைவு கூர்ந்து  தை பூசத்தில் அதிகாலை - ஞான சபையில் ஜோதி தரிசனம்  நிகழ்வுறும்.

தஞ்சை - கரந்தையில் உள்ள அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் தை பூச தினத்தன்று மாலை,

thanjavur14
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் - பெரிய நாயகி அம்பாள்
அருள்மிகு  வசிஷ்டேஸ்வர ஸ்வாமி - பெரியநாயகி அம்மனுக்கும்,

thanjavur14
அருள்தரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மை
வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மைக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது.

ஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக விளங்கும் இந்நாளில், கை நிறைய மலர்களைக் கொண்டு, முருகனின் திருப்பாத மலர்களைப் போற்றி வணங்குவோமாக!... 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!.....

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..