ஞாயிறு, ஜனவரி 13, 2013

திருப்பாவை - 29

ஆண்டாள்  அரளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 29
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை டியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர்  ம்பாவாய்!...


மங்களகரமான வைகறைப் பொழுதில், உடலும் குளிர உள்ளமும் குளிர அடியார்களுடன்  அடியாராய் கூடி வந்து  - உன்னைத் தேடி வந்து, உன்னையும் உன் மெய்யடியாரையும் சேவித்து , உந்தன்  பொற்றாமரைத் திருவடிகளைப் போற்றி வணங்கி , நிற்பதன் பொருள் கேளாய்!....பெருமாளே!..  

''செல்வப் பசுக்களை மேய்த்து வாழும் வாழ்வே செல்வம்'' - என்று வாழும்  எங்கள் குலத்தில் பிறந்தருளிய பெருமானே!... 

உனக்கு - உன் திருவடிகளுக்கு -  நாங்கள் செய்யும் கைங்கர்யங்களை - அவை குறை உடையதாக இருப்பினும் - எங்கள் அன்பினை உணர்ந்து அவற்றை  நிறை எனக் கொண்டு - 

நீ - ஏற்றுக் கொள்வதாகிய பேற்றினை எங்களுக்குத் தந்தருள வேண்டும்!...

இத்தனை பொழுதும் நாங்கள் உன்னிடம் கேட்டுப் பெற்ற பறை எனும் மங்கலப் பொருள்களுடன் நிறைவடைந்து விடக்கூடிய பந்தமோ - சொந்தமோ இல்லை இது!.... 

உன்னிடமிருந்து மங்கலப் பொருள்களைப் பெற்றுக் கொண்டதும் உன்னை விட்டுச் செல்வதற்காகவா நாங்கள் இங்கு வந்தோம்?... இந்த மங்கலம் எனும் நன்கலம் தந்த உனக்கு நன்றிக் கடன் ஆற்றவேண்டாமா!...

காலம் உள்ளவரை - கடல் வானம் உள்ளவரை உன்னுடன் இருப்பதற்கும் உன் காலடியில் கிடப்பதற்கும் ஆகிய வரத்தினைப் பெறவே நாங்கள் வந்தோம்!...

ஏழேழ் என இன்னும் எத்தனைப் பிறவிகள் வந்து உற்றாலும் அத்தனையிலும் உன்னுடைய உற்றாராகவே பிறப்போம்!..

உனக்கே பணி செய்து உன் காலடியிலேயே கிடப்போம்!... 

கோவிந்தா!... உன்னைப் பற்றியுள்ள பற்று, எம்மையே பற்றி நிற்கும்படிக்கு நீ அருள வேண்டும். இது தான் எங்கள் விருப்பம்.    

உனக்கே உறவாக அமைய வேண்டும்!.. உன்னோடு உற்ற உறவு இவ்வுலகில் என்றைக்குமே ஒழிக்க முடியாது!  

இந்த விருப்பம் இனி வரும் காலங்களில் எம்மை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். உனையல்லாத வேறெதையும் எங்கள் நெஞ்சம் அணுகாமல் இருக்க வேண்டும். அப்படியேதும் நேருமாயின் மாறும் விருப்பங்களை எல்லாம் நீ தான் மாற்றி அருளவேண்டும்!...
உனக்கே ஆட்செய்வோம்
பெரும்பறை தனைத் தந்த பெருமானே!... 
பரம்பரை பரம்பரையாய் உன்னை - 
உன்னையே துதிக்கும் 
பெரும்பறை தனைத் தருவாய் பெருமாளே!...

உனக்கே ஆளாக இருக்கும் எங்களை 
ஏற்றுக்கொள்! பெருமாளே! ஏற்றுக்கொள்!
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..