வெள்ளி, ஜனவரி 25, 2013

தை வெள்ளி - 02

காஞ்சி காமகோடி ஸ்ரீ காமாட்சி அன்னை.

மங்களகரமான தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை இன்று. 

இல்லங்கள் தோறும் பெண்கள் விரதமிருந்து - சுப செளக்கிய,  செளபாக்கியங்களை வேண்டி தீபங்களை ஏற்றி வைத்து அம்பிகையின் பொற்பாதங்களைப் பணியும் நாள். 

கிராமங்களிலும் , நகரங்களிலும்  - ஆங்கே வீற்றிருந்து அருள் புரியும் அம்பிகையின் சன்னதிகளில் சிறப்பாக , அபிஷேக அலங்காரம் என வழிபாடுகளை நடத்தி மகிழும் நாள். 

நாமும் நம் தளத்தில் அம்பிகையை அலங்கரிப்போம்...

காஞ்சி காமாட்சி அன்னை
அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஸ்ரீகாமகோடி பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்பவள் ஸ்ரீகாமாட்சி அன்னை. ஐப்பசி மாதத்தில் பூர நட்சத்திரம் அன்னையின் அவதார நாள். துர்வாச முனிவர் அம்மனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது தல புராணம்.  பரசுராமரும் தசரதரும் வழிபட்ட தலம். ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பெற்ற பெருமையினை உடையவள் அன்னை காமாட்சி.. 

மக்கள் அறியாமையினால் உயிர்களை வதைத்து பலியிட்டு நிகழ்த்திய வழிபாடுகளினால் கோபமடைந்து உக்ரத்துடன் இருந்த காமாட்சி அம்மனை - ஆதிசங்கரர் சாந்தப்படுத்தி, ஸ்ரீ சக்கரம் வடிவமைத்து அதனை அம்மனுக்கு முன்னால் பிரதிஷ்டை செய்து, உக்ர சக்தியை அருள் சக்தியாக மாற்றி -  ''ஆனந்தலஹரி'' பாடிப் புகழ்ந்தார். 

வைணவத் திவ்ய தேசங்கள் 108 என அறிந்துள்ளோம். அவற்றினுள் ஒன்றான அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உள்ளே விளங்குகின்றது. 

தன் அழகின் மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமி - தன்னை உணரும் வண்ணம் அவளை விட்டு அழகு நீங்கும்படி மகாவிஷ்ணு சபித்தார். இதனால் மனம் கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து, இத்தலத்திற்கு அரூபமாக வந்து தங்கி அன்னையைப் பணிந்து  மனதார விஷ்ணுவை வணங்கி வந்தாள்.

தவத்தின் பயனால் அரூப வடிவம் மாறி -  முன்னைவிட அழகுடன் திகழ்ந்த மகாலட்சுமியை, குறும்புடன் கள்ளத்தனமாக மறைந்திருந்து பார்த்ததனால் விஷ்ணுவுக்கு இத்தலத்தில்  "கள்ளப் பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. அண்ணனும் தங்கையும் விளங்கும் திருக்கோயில் இது.

சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கியவளாக - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன்  எனும் பஞ்சப் பிரம்ம ஆசனத்தில், யோக நிலையில் -

திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் ஏந்தி, சந்திர கலையினைச் சூடியவளாக  காட்சி அளிக்கின்றாள். அன்னையின்  வலக் கரத்தினில் கிளி ஒன்றும் திகழ்கின்றது. காமாட்சி அன்னைக்கு திரிபுரை, லலிதா, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீசக்கரநாயகி என்ற திருப்பெயர்களும் உண்டு.

காஞ்சியில் உள்ள சிவபெருமானின் திருக்கோயில்கள் எதிலும் அம்பிகையின் சன்னதி கிடையாது. அனைத்தினுக்கும்  ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையே பிரதான சக்தி என விளங்குகின்றாள்.. 

பங்காரு காமாட்சி, தஞ்சை
இங்கு காமகோடி காமாட்சி, தவ காமாட்சி, பங்காரு (ஸ்வர்ண) காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவ காமாட்சி என ஐந்து திருமேனிகள். அவற்றுள் பங்காரு காமாட்சி தற்போது தஞ்சையில் குடிகொண்டு அருள்புரிகின்றாள்.

இந்தத் திருக்கோயிலில் சரஸ்வதி, லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி - என தனிச்சன்னதிகள் விளங்குகின்றன. 

அன்னையின் திருவடிகளில் நவக்கிரக நாயகர்களும் தஞ்சம் புகுந்து வணங்கிக் கிடப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

திருக்கோயிலில் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் காமாட்சி அன்னை வீற்றிருக்கின்றாள். காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணி சன்னதியில்  தர்மத் துவாரம், பிட்க்ஷை துவாரம் என உள்ளன.

அம்பிகையைப் பணிந்து  பிச்சைத் துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என பிச்சை கேட்டு
வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இப்படி வழிபட்டுக் கேட்டால் நாம் உண்ணும்  உணவினை பெருத்த சிரமங்கள் ஏதும் இன்றி நமக்குக் கொடுத்து அம்பாள் காத்தருள்வாள் என்பது நம்பிக்கை. வீட்டில் உணவுக்கு பஞ்சம் இராது என்பது திருக்குறிப்பு. 

ஏனெனில் சிவபெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு   உலகம்  உய்ய முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்தவள் காமாட்சி அன்னை.  

ஒரு சமயம் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் சாபம் பெற்ற அம்பிகை, தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் இயற்றி வழிபட்டாள்.  அவ்வேளையில் அன்னையின் தவநிலையினைச் சோதிக்க - ஈசன் ஆற்றில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தினார்.  

வெள்ளப் பெருக்கினைக் கண்டு அஞ்சிய அன்னை சிவலிங்கத்தினை மார்புறத் தழுவி பெருமானின் திருமேனியினைக் காப்பாற்றினாள். அதனால் அன்னையின் திருமுலைத் தழும்பும் திருக்கரங்களின் வளைத்தழும்பும் சிவலிங்கத்தின் மீது பதிந்தது.  அதனால் ஈசன் மனங்குளிர்ந்து அன்னையை ஆட்கொண்டருளினார் என்பது புராணம். 

திருவொற்றியூரில் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் -   சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த  உறுதியினை  மீறி - அவரை விட்டுப் பிரியும் போது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் இரு கண்களிலும் பார்வை பறி போயிற்று. வழி தடுமாறி நடந்த  சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மின்னல் கொடி என வழி காட்டி, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் கொடுத்து, காஞ்சிக்கு அழைத்து வந்து வலக்கண்ணில் பார்வையைக் கொடுத்தருளியவள் அன்னை காமாட்சி.

''எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
'' 

என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் பாடியருள்கின்றார். 

காமாட்சி அன்னையின் கருணையினால், கண்களில் பார்வைக் குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஊனக் கண்களுடன் ஞானக் கண்களும் விளங்கும் என்பது திருக்குறிப்பு.
  
நாமும் நலம் பெற அன்னையின் பொற்பாதங்களைப் பணிவோம். 

2 கருத்துகள்:

  1. கண் பார்வை வழக்கும் அன்னை காமாட்சியின் அருமையான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

    வலைச்சரத்தில் குறிப்பிட்ட சிறப்பான பதிவு ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..