வெள்ளி, டிசம்பர் 28, 2012

திருவெம்பாவை - 10

 மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

thanjavur14
உன் கையில் பிள்ளை உனக்கே  அடைக்கலம்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்
றங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் - 19

எங்கள் பெருமானே! ''உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்'' என்று  காலகாலமாக வழங்கி வரும் பழமொழியை - எங்கள் அச்சத்தால் மீண்டும் கூறுகின்றோம். இந்த வேளையில் உன்னிடம் ஒரு வரத்தினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம். தந்தருள்வாயாக.

எம் கொங்கைகள் நின் அன்பர் தம் தோள்களைத் தழுவித் திளைத்திருக்கவும் எம் கைகள் உனக்கே பணி செய்து மகிழ்ந்திருக்கவும், அல்லும் பகலும் எம் கண்கள் உன்னை மட்டுமே பார்த்துக் களித்திருக்கவும் ஆகிய பெரும் பரிசினை இப்பூவுலகில் வாழும் வரைக்கும் - 

எங்கள் அரசே! எங்களுக்கு நீ வழங்கி அருள்வாய் எனில் - சுட்டெரிக்கும் சூரியன் எந்தத் திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?  -  என்று எம் பாவாய்!... நீராடுவோமாக!...

thanjavur14
தென்னாடுடைய சிவனே போற்றி
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர்  எம்பாவாய் - 20

எல்லாவற்றுக்கும் ஆதியாகி அருளும் நின் -  பாதமலர்கள் போற்றி!
எல்லாவற்றுக்கும் அந்தமாகி அருளும் நின்  - செந்தளிர் பாதங்கள் போற்றி! 

எல்லா உயிர்களும் தோன்றுதற்குக் காரணமான பொற்பாதங்கள் போற்றி!
எல்லா உயிர்களுக்கும் சுக போகங்களை அருளும் பூங்கழல்கள் போற்றி! 

எல்லா உயிர்களும் முடிவு எய்தி அடைக்கலமாகின்ற இணையடிகள் போற்றி!
திருமாலும், பிரமனும் காணமுடியாத திருவடித் தாமரைகள் போற்றி! 

நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற பொன்மலர் பாதங்கள் போற்றி!
போற்றி! போற்றி! என - நாம் இறைவனைப் போற்றி வணங்கி, எம் பாவாய்!...  மார்கழி நீராடுவோமாக!...
குருஅருளும் திருஅருளும் கூடி நிற்க இந்த அளவில் மாணிக்கவாசகப்பெருமான் அருளிய திருவெம்பாவை நிறைவடைகின்றது.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..