செவ்வாய், டிசம்பர் 25, 2012

திருப்பாவை - 10

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 10

போற்றப் பறை தரும் புண்ணியன்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ! வாசல் திறவாதார்!
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

நெறி தவறாது நோன்பு நோற்று வாழ்வு எனும் வாழ்வாகிய வைகுந்தம் புகுவேன் -  என்று நேற்று எங்களிடம் பெருமையாய் பேசியவளே!... 

பெருந்தனமாய் வந்துதித்த பெண் பாவாய்!... உன் வாசல் தேடி வந்து உன்னை எழுப்புகின்றோம்!...

துயிலெழுந்து கதவினைத்தான் திறக்கமாட்டேன் என்கிறாய்!....மலர் வாய் திறந்து ஒரு வார்த்தை - ஒரே ஒரு வார்த்தை கூடவா - உன்னால் பேச முடியாது?...

நறுமணம் கமழும் திருத்துழாய் தனை முடி மேலணிந்த ஆதி நாராயணன் நம் பெருமான்.

சொல்லாலும் செயலாலும் சிந்தையாலும்  - போற்றிப் புகழ்ந்து அடி பணியும் அன்பர் தமக்கு - தன்னையே - பெரும் பரிசாகத் தந்தருளும் தயாபரன் அவன்!...

வைகுந்தம் எனும் பேரின்பப் பெருவெள்ளம் அவன்... 

திருத் துழாய்

ஒற்றைத் துளசி போதுமே!...தூயவன் அந்த மாயவனின் அருள் பெற!...

அந்தப் புண்ணியனின் பொன்னடித் தாமரைகளைப் போற்றித் துதிக்காமல் இன்னும் பெருந்தூக்கத்தில் கிடக்கின்றனையே!......

அன்றொரு நாள்  ராமபிரானால் கூற்றுவன் வாயில் வீழ்த்தப்பட்டானே... 
கும்பகர்ணன் - அவன் தன் உறக்கத்தை  உன்னிடம் கொடுத்து விட்டுச் சென்றானோ!... 

அவனை வென்ற உறக்கத்தில் அல்லவா நீயும் ஆழ்ந்துவிட்டாய்!....

பெருந்தனமாய் வந்துதித்த பெரும் பேறே!... 

துயில் நீங்கி எழுந்து வா!... விரைந்து வந்து கதவினைத் திற!....
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..