புதன், டிசம்பர் 19, 2012

திருப்பாவை - 04

  

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 04

சார்ங்கம் உதைத்த சரமழை
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!
ஆழியுள் புக்கு முகந்து கொடு  ஆர்த்தேறி 
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் 
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில் 
ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து 
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் 
வாழ உலகினில் பெய்திடாய்!...நாங்களும் 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்  எம்பாவாய்!...    

ஆழி மழைக்கு அதிபதியான கண்ணனே!...எம்மை வாழ்விக்கும் மழை வளத்தினை எமக்குத் தருவதில் பெருந்தன்மையானவனாக இருப்பாயாக!... 

அலை அதிரும் கடலுள் புகுந்து நீரை வாரிக் கொண்டு வானில் ஏறி -  
மெய் கறுத்த ஊழி முதல்வன்
 ஊழி முதல்வனே!..உன் அழகிய கரிய மேனியே கார்மேகங்களாக - இங்கும் அங்கும் அலைந்து ஆரவாரமாக ஆர்ப்பரிக்கின்றாய்!...

நான்முகன் திகழும் உந்திக் கமலத்தினை உடையவனே!.... பத்மநாபனே!... வல்லமை  நிறைந்த தோள் அழகனே!... நின் திருக்கரத்தில் சர்வ சதாகாலமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதே - கண்கள் கூசும்படிக்குப் பிரகாசமான தீச்சுவாலைகளுடன்  - சுதர்சனம் ....

அந்தச் சக்கரத்தினைப் போல பேரொளியுடன் மின்னலென மின்னி ...

காதில் கேட்ட மாத்திரத்தில் கொடியவர் தம் குலை நடுங்கி - நிலை தடுமாறும் படிச் செய்கின்றதே - பாஞ்சசன்னியம்... 

அந்த வலம்புரிச் சங்கினைப் போல  எட்டுத் திக்குகளும் அதிரும்படி... பெருஞ் சத்தத்துடன் இடியென முழங்கி....

''சர்வமும் நீயே''  - என நின்னைச் சரணடையும் தூயவரைக் காக்கவும் துஷ்டரை  வேரறுக்கவும் என்று - கண்ணிமைப் போதும் தாமதிக்காமல் கூரிய சரங்கள் - எப்படி - உனது திருக்கரத்தினில் திகழும் சார்ங்க வில்லின் நாணை உதைத்துக் கொண்டு பாய்கின்றனவோ...

அந்த சார்ங்க வில்லின் சரங்களைப் போல...

வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, பிணி என்னும் கொடுமைகளைக் குலைக்கும் வண்ணம் - நீர் கொண்ட கார்மேகக் குடத்தினை உடைத்துக் கொண்டு - மண்மகள் மகிழும் வண்ணம் மழையெனப் பொழிவாயாக!... 
வாழ உலகினில் பெய்திடாய்!...
வையம் வாழ வேண்டும்!.... மார்கழி நோன்பு நோற்றுள்ள  நாங்களும் நீராடி மகிழ வேண்டும்!....

உற்று உணரும் பாவாய்!....மாதவன்... மதுசூதனன்... அருள் மழையில் நீராடி மகிழலாம்... துயில் நீங்கி எழுந்து வாராய்!...

மழையெனப் பெய்வாய் மாதவனே!...... 
மனம் குளிர்ந்திடச் செய்வாய் கோபாலனே!...
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..