திங்கள், நவம்பர் 26, 2012

பெரியகோவில் யானை

தஞ்சை மண்டலத்தில் இருந்து மூன்று யானைகள் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றன.

வயது முதிர்வு காரணமாக தஞ்சை பெரியகோவில் யானை செல்லவில்லை.



தமிழக கோவில்களில் உள்ள யானைகள் ஒவ்வொரு ஆண்டும் புத்துணர்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஜனவரி 12–ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மண்டலத்தில் உள்ள திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில் யானை தர்மாம்பாள், மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் யானை செங்கமலம், திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோவில் யானை சூலிகாம்பாள் ஆகிய மூன்று யானைகளும் நேற்று புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றன.

இந்த மூன்று  யானைகளும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்பு இருந்து லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் திரு.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆனால் தஞ்சை பெரியகோவில் யானை வெள்ளையம்மாள் இந்த ஆண்டு புத்துணர்வு முகாமிற்கு செல்லவில்லை. காரணம் இந்த யானைக்கு 62 வயது ஆகிறது.

தமிழகத்தில் உள்ள யானைகளில் அதிக வயதுடையது வெள்ளையம்மாள் . இந்த யானைக்கு வயது முதிர்வு காரணமாகவும்  நகம் மற்றும்  மூட்டு பகுதியில் வீக்கம் காரணமாகவும், டாக்டர்களின் ஆலோசனைப்படி இந்த ஆண்டு புத்துணர்வு முகாமிற்கு செல்லவில்லை.

இந்த யானையை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யானையின் வயதினை கருத்தில் கொண்டு புத்துணர்வு முகாமில் மற்ற யானைகளுக்கு வழங்கப்படும் மூலிகை மருந்து வகைகளையும் மற்ற நிவாரணப் பயன்களையும்  தனி கவனத்துடன் வழங்கி தமிழகத்தின் மூத்த யானையான வெள்ளையம்மாளை தமிழக அரசு கெளரவப்படுத்த வேண்டும் என தஞ்சை வாழ் மக்களும் இறையன்பர்களும் விரும்புகின்றனர்.

நாமும் வெள்ளையம்மாள் விரைவில் உடல் நலம் பெற்று இன்னும் பல்லாண்டு  வாழ்ந்து எல்லாரையும் ஆசீர்வதிக்குமாறு எல்லாம் வல்ல பெருவுடையாரை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வெள்ளையம்மாள்!... வாழ்க பல்லாண்டு!...

4 கருத்துகள்:

  1. அன்பின் துரை செக்வராஜு - வெள்ளையம்மாள் பற்றிய பதிவு நன்று - பதிவிட்டு எட்டு மாத காலம் ஆகிவிட்டது . வெள்ளையம்மாள் நலமுடன் இன்றும் இறைப் பணியில் இருக்கிறதென நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!.. தங்களைப் போன்ற மேலோர்கள் வருகை தரவும் கருத்திடவும் நான் பேறு பெற்றவனாகின்றேன்!..நன்றி ஐயா!..

      நீக்கு
  2. ஆஹா வெள்ளையம்மாள் இன்றும் தங்கள் பதிவில் உயிருடன்,, என்னமோ மனது ,,,, ஆம் தங்கள் எழுத்துக்கள் அதன் உயிராக இன்றும்,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..