செவ்வாய், மே 19, 2026

ஆனைமங்கலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 செவ்வாய்க்கிழமை


ஆனைமங்கலச் செப்பேடுகள்

ஆனைமங்கலம் செப்பேடுகள்  எனப்படுபவை, மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகில் இருக்கும ஆனைமங்கலம் எனும் கிராமத்தின் நிலங்களை, பௌத்த விகாரத்திற்கு தானமாக வழங்கியதை விளக்கும் வரலாற்று சிறப்புமிக்க செப்புப் பட்டயங்கள் ஆகும். 

சோழர்களின் பெருமை, கடல் கடந்த வர்த்தகம் மற்றும் மத சகிப்புத்தன்மை இவற்றைப் பறைசாற்றும் இந்தச் செப்பேடுகள் குறித்த முக்கிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன..

 நன்றி விக்கி

வரலாறு மற்றும் முக்கியத்துவம்

கடாரத்தை (மலேசியா/இந்தோனேசியா) ஆண்ட ஸ்ரீவிஜயப் பேரரசன் ஸ்ரீமார விஜயதுங்கவர்மன் கட்டிய 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமத்தின் வருவாய் கொடையாக வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட காலம்.
முதலாம் ராஜராஜ சோழனின் இருபத்து ஒன்றாம்  ஆட்சி ஆண்டு (கி.பி. 1010 -1012) 


30 கிலோ எடையுள்ள 21 செப்பேடுகளைக் கொண்ட இவை சோழர்களின் முத்திரையான புலிச் சின்னத்தைக் கொண்டுள்ளன.

தொடக்கப் பகுதிகள் சமஸ்கிருதத்திலும் (சோழர்களின் மரபுவழி), பெரும்பகுதி தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நிலத்தின் எல்லைகள், வரிவிலக்குகள் மற்றும் நிர்வாகக் குறிப்புகள் இந்தச் செப்பேடுகளில்  இடம் பெற்றுள்ளன..

இவை 'லீடன் செப்பேடுகள் ' என்றும் அழைக்கப்படுகின்றன. 

பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனால் வெளியிடப்பட்ட ' செப்பேடுகளும்' இதற்குள் அடங்கும். 

செப்பேடுகள் இடமாற்றம்.

செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ள -  சூளாமணி விகாரம் 18ஆம் நூற்றாண்டு பிற்பகுதி  வரை நாகப்பட்டினத்தில் இருந்தது என்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் உறுதி செய்யலாம்.

1660 இல் டச்சுப்பயணி Woulter schouten என்பவர் நாகைக்கு விஜயம் செய்து இந்த புத்த விகாரத்தை  சீன பகோட என்று குறிப்பு எழுதியுள்ளார்.

1724 ல் டச்சுப் பாதிரி பிரான்சிஸ் வேலன்டைன் ( Francois valentyn)  என்பவர் இந்த விகாரம் பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.

1846 இல் சர். W. எலியட் என்னும் ஆங்கில அறிஞர் தான் எழுதியுள்ள பயணக்குறிப்பில் இவ்விகாரம் பற்றி குறிப்பிடுகிறார். இந்த பௌத்த விகாரம் நான்கு பக்க கோபுரங்களுடன் மூன்று நிலை கட்டிடமாக இருந்தது. செங்கற்களால் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது - என்று குறிப்பிடுகிறார் எலியட்.

புதுச்சேரியிலிருந்து நாகைக்கு வந்த பிரஞ்சு பாதிரிகளின் தூண்டுதலால்  அப்போதைய ஆங்கில அரசு 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று இந்த  சூடாமணி  விகாரத்தை இடித்துத் தள்ளியது.

இங்கு இருந்த புத்தர் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

டச்சு நாட்டின் கிழக்கிந்திய நிறுவனத்தின் அமைச்சராக இருந்த பிலோரென்ஷியஸ் காம்பெர் (Florentius Camper) என்பவர் நாகப்பட்டினம் புத்தர் விகாரையிலிருந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை தனது சொந்த ஊரான. ஒல்லாந்துக்கு (நெதர்லாந்து) கொண்டு சென்றார். அவரது குடும்பத்தினரிடமிருந்த செப்பேடுகள், அவரது உறவினரான
 H.A. ஹாமேக்கர் (H.A. Hamaker) மூலம் 1862-ஆம் ஆண்டு நெதலார்ந்து லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டது.

அதன்பின் இச்செப்பேடுகள் லெய்டன் செப்பேடுகள் எனப்பட்டன.


இந்திய தூதரகத்தின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, நெதர்லாந்து அரசு இந்த அரிய  செப்பேடுகளை இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது. 

ஆனைமங்கல செப்பேடுகள்  தமிழர் வரலாற்றின் மாபெரும் பொக்கிஷமாகப் போற்றப்படுகின்றன...
நன்றி விக்கி
மற்றும்
பல தரவுகள்

பாரதம் வெல்க
***

6 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள்.  சாண்டில்யன் கதைகளில் கூட இந்த விஹாரம் பற்றி அடிக்கடி வரும்.

    பதிலளிநீக்கு
  2. இனி அவற்றை வாங்கி என்ன செய்யப்போகிறோம் என்றில்லாமல், தமிழ்நாட்டு செப்பேடுகள்தானே, நமெக்கென்ன என்றும் இல்லாமல் அவற்றை மீட்ட இந்திய பிரதமருக்கு நன்றி சொல்லவேண்டும்.  

    பதிலளிநீக்கு
  3. அடுத்த வீட்டு / நாட்டு சொத்துகளை அலட்டிக்காம எடுத்துட்டு போய் தன் நாட்டுல, தன் வீட்டுல வச்சுக்கிட்டான் பாருங்க..  அவனை என்ன செய்யலாம்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆனைமங்கலம் செப்பேடுகள் பற்றிய விபரம் அறிந்து கொண்டேன். புத்த விகார கோவிலின் இடிப்புகளும் புத்தர் சிலைகளின் இடமாற்றம் செய்திகளும் மன வருத்தத்தை தந்தது.

    அக்காலத்தில் நம் நாட்டு மன்னர்களின் கொடைத்திறனையும், நேர்மையான அரசாட்சிகளை எண்ணும் போது மனது பூரிப்படைகிறது.

    இத்தனைக் காலத்திற்குப் பின் நம் நாட்டின் நினைவு பொக்கிஷங்கள் பத்திரமாக மீண்டும் நமக்கே வருவது மிகவும் பெருமைபடவேண்டிய விஷயம். பகிர்வுக்கு மிக்க நன்றி
    வாழ்க பாரதம்.
    வெல்க என்றென்றும். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பொன்னியின் செல்வனில் வரும் சூளாமணி புத்த விஹாரம்.செப்பேடு விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆனை மங்கல செப்பேடுகள் பற்றி முழுமையான தகவல்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..