நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 2
புதன்கிழமை
இன்று
மாட்டுப் பொங்கல்
வாழ்க ஆனினம்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை..
பெஞ்செல்வத்தினை மாடு என்னும் சொல்லைக் கொண்டு குறிக்கின்றார் திருவள்ளுவர்..
தேவாரத் திருப் பாடல்களிலும் - மாடு என்னும் சொல்லால் பெருஞ்செல்வம் குறிக்கப்படுகின்றது..
வேளாண்மையில் தோளுக்குத் தோள் கொடுக்கின்ற
கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகக்
கொண்டாடப்படுவது தான் - மாட்டுப் பொங்கல் நாள்..
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம்
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம்
எருமை சிறுவீடு
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
என்பதெல்லாம் ஸ்ரீ கோதை நாச்சியார் காட்டுகின்ற மனை வளம்..
இன்று காவிரிப் படுகையில் வேளாண் நிலப்பரப்பு பற்பல காரணங்களால் குறைந்து கொண்டிருப்பது கண்கூடு.. வயல்வெளிகளில் ஏர் பூட்டிய உழவு என்பதே அரிதாகி விட்டது..
கால்நடைகளைச் சிறப்பித்து அறுவடைத் திருநாளைக்
கொண்டாடுகின்ற மக்களுக்கு மத்தியில் தான் Beef பிரியாணிக் கடைகள் திறக்கப் பட்டிருப்பட்டிருக்கின்றன என்பது சிந்திக்கத் தக்கது..
வீடு பிறப்பை
அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன
பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன
மன்னு மாநடம்
ஆடி உகப்பன
அஞ்செ ழுத்துமே.. 3/22/7
-: திருஞானசம்பந்தர் :-
உருவமும் உயிரும் ஆகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாதம் அல்லால்
மற்றொரு மாடி லேனே.. 4/63/3
-: திருநாவுக்கரசர் :-
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை உள்ளன பற்றறுத் தானை.. 7/74/2
-: சுந்தரர் :-
**
அனைவரும்
இன்புற்று வாழ்க
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**