வியாழன், மே 09, 2024

தக்ஷிணாமூர்த்தி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 26
வியாழக்கிழமை


சிவபெருமானின் திருக்கோலங்கள்
அறுபத்து நான்கு.. 

அவற்றுள்  தக்ஷிணாமூர்த்தி எனும் திருக்கோலமும் ஒன்று.. தென்முகக் கடவுள் என்பர்..

தக்ஷிணாமூர்த்தி தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் அற்றவர்.. 


கல்லால் எனப்பட்ட ஆலமரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளுடன் ஆறு அங்கங்களையும் சனகர் சனந்தனர் சனாதனர் சனற்குமாரர் என்ற நான்கு பிரம்ம ரிஷிகளுக்கும் உணர்த்துபவர் - தக்ஷிணாமூர்த்தி.. 
எனவே ஞான குரு எனும் போற்றுதலுக்கு உரியவர்..

இவரது யோகநிலையைக் கலைப்பதற்கும் குலைப்பதற்கும் தேவர்கள் முயன்றனர்..

காரணம்?..

தட்சப் பிரஜாபதி நிகழ்த்திய யாகத்தில் தேவர்கள் தருக்குடன் கலந்து கொண்டதும் அதனால் கிடைத்த சாபமும் தான்..

ஈசன் எம்பெருமானுக்கு அழைப்பு விடுக்காமல் அவரை அவமதிப்பு செய்கின்றான் தட்சன் என்பது தெரிந்ததும் யாகத்தைப் புறக்கணித்து அங்கிருந்து வெளியேறவில்லை..

அதனால் ஸ்ரீ வீரபத்திரர் விடுத்த சாபத்தின்படி மாயையின் புத்திரர்களான சூரபத்மாதியர்களிடம் அடிமையாகிக் கிடந்த
நிலையில் -

இன்னல் தீர்வதற்கு - 
சிவபெருமானின் அம்சத்துடன் குமாரன் தோன்றியாக வேண்டும்..

எல்லாம் வல்ல பரம்பொருள் சக்தியுடன் கூடி திருக்குமாரனைத் தந்தருள வேண்டும்.. 

இதற்காகவே மன்மதனைத் தூண்டி - அனுப்பி வைத்தனர்..

அதன் முடிவு அங்கனாகத் திகழ்ந்த மன்மதன் அனங்கனாகி விட்டான்.. 

யோக நிலையில் இருந்த பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஜோதிப்பிழம்பில் எரிந்து சாம்பலாகி விட்டான்.. 

அதன் பின் ஈசன் யோலநிலை கலைந்து எழுந்ததும் -
பர்வதபுத்ரியுடன் மணக்கோலம் கொண்டதும் நெடுங்கதை..

சிவாலயங்கள் சிலவற்றில் வேறு கோலங்களிலும் திருமேனி திகழ்கின்றது..

சுருட்டப் பள்ளி திருக்கோலம்
சுருட்டப்பள்ளி எனும் திருத்தலத்தில் ஈசனுடன் அம்பிகையும் பொலிகின்ற அழகு தனித்துவம்..

ஈசன் ஆலின் கீழ் தவம் இருப்பதையும் மன்மதன் சாம்பலாகியதையும் திருமுறைகள் போற்றிப் பாடுகின்றன..

இந்த உண்மைகளை மனதில் இருத்தி - சிவ தக்ஷிணாமூர்த்தி திருக்கோலத்தைப் போற்றி வணங்கி நலமெலாம் பெறுவோம்!..
 
திருவீழிமிழலை

ஏரிசையும் வட ஆலின் கீழ் இருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறைப் பொருளை உரைத்து ஒளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும்  ஓசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே.. 1/132/1
-: திருஞானசம்பந்தர் :-

திருப்பழனம்

ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்றவர்க் கருளிச் செய்து
நூலின் கீழ் அவர்கட்கெல்லா நுண் பொருள் ஆகி நின்று
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே.. 4/36/6
-: திருநாவுக்கரசர் :-

திருக்கடவூர்

அன்றாலின் நிழற்கீழ் அறம்
நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.. 7/28/3
-: சுந்தரர் :-

நன்றாக நால்வர்க்கு
நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்கு
அறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்கு
அறமுரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங்
கூட்டோடே சாழலோ...16
திருச்சாழல்
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், மே 08, 2024

கண்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 25
புதன் கிழமை


கோழி கூப்பிட எழுவதில் இருந்து நாமும் நம்முடைய குல விளக்குகள் செய்த வேலைகள் தான் எத்தனை எத்தனை!..

கிணற்றில் நீர் இறைத்தார்கள்.. குடங் குடமாக இடுப்பில் சுமந்து பெரிய பெரிய தொட்டிகளை நிறைத்தார்கள்..

மாடு கன்றுகளை அவிழ்த்துக் கட்டி இரண்டு வேளையும் பால கறந்து நாளில் ஒருமுறையாவது அங்கம் குலுங்கக் குலுங்க தயிரைக் கடைந்து வெண்ணெய் திரட்டினார்கள்.. 

கொர்.. கொர் என்று
சத்தமிட்டுக் கொண்டு காலடியைச் சுற்றி வந்த கோழியைப் பிடித்து அதன் வயிற்றுக்குள் முட்டை இருக்கின்றதா எனச் சோதித்தார்கள்.. 

கொல்லைப் புற தோட்டத்தையும் அவ்வப்போது வயற்காட்டையும் பராமரித்தார்கள்..

நங்கையர்க்கு இப்படி என்றால் இளங்காளையர்க்கு வேறு மாதிரி...

விடியலில் எழுந்து வயற்காட்டுக்குச் செல்வதும் கொல்லைக் காட்டிற்குச் செல்வதும் தோப்பு துரவு என்று சுற்றி வருவதும் வண்டியைப் பூட்டிக் கொண்டு சந்தைக்குச் சென்று, ஆக வேண்டியதைப் பார்ப்பதும்...

வயலுக்கு எரு அடிப்பதும் உழவு அடிப்பதும் கோடை என்றால் கிணற்றில் தூர் எடுப்பதும்..

பெண் பிள்ளைகள் சடங்கான பிறகு பள்ளிப் படிப்பில் இருந்து விடுபட்டாலும் குடும்பத்தின் வரவு செலவுகளை திட்டமிட  அவர்களிடம் நுட்பம் இருந்தது.. நிர்வாகத் திறன்  இருந்தது..

இதெல்லாம் போதாது என்று சைவம் புலால் என இரண்டு வகை உணவு தயாரிப்பதிலும் வல்லமை கொண்டிருந்தார்கள்..

சிறு தீனிக் கடைகள் இருந்தாலும் கடைகளில் வாங்கித் தின்பதை விரும்பியதில்லை.. அதை ஒரு கௌரவமாகவும் நினைத்ததில்லை..

நெல்லை உலர்த்தி உரலில் இட்டுக் குத்தி அரிசி ஆக்குவதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் அவல் தயாரிப்பதில் ஆற்றல் பெற்றிருந்தார்கள்..

சாதாரண குடும்பத்துப் பெண்கள் வயல் வெளிகளில் வேலை செய்வதிலும் திறமை பெற்றிருந்தார்கள்..

கடுமையான கட்டிட வேலைகளையும் செய்து பிழைக்க வேண்டியதாகவும் அப்போதைய சூழ்நிலை..

இன்றைக்கு பெரும்பாலும் அப்படி இல்லை.. எல்லாம் பழங்கனவாகப் போய்விட்டன.. 

ஆறேழு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட  பின்னும் -
ஆரோக்கியமாகவே  இருந்தனர்..

இன்றைக்கு பிள்ளை பெறுவதற்கு முன்பே அவர்களுக்குப் பிரச்னைகள்...
பிள்ளை பெறுவதற்கே 
பிரச்னைகள்..

ஏன்?.. எதனால்?..

பெண்களுக்கு என்றே புதுசு புதுசா வியாதிகளைச் சொல்கின்றார்கள்.. 
அவற்றை உடனுக்குடன் சரிசெய்வதற்கு என்று சிறப்பு மருத்துவங்கள்..

இதோ உங்கள் ஊரில்!...
இதோ உங்கள் தெருவில்!...
- என்ற நிலைக்கு வந்து விட்டது..

இதோ உங்கள் வீட்டில்!...
- என்ற நிலையும் விரைவில வந்து சேரலாம்..


இனிய இல்லறத்திற்கு ஆணும் பெண்ணும் என்றாலும் எந்த ஒரு ஆணுக்கும் பெண் தான் ஆதாரம்.. அடிப்படை..

தாய்க்குப் பின் தாரம் என்றது தமிழ்..

அதனால் தான், பெண் - இல்லாள் எனவும் இல்லத்தரசி எனவும் சிறப்பிக்கப்பட்டாள்..

ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..

என்றும்

சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்..

என்றும் 
இல்லாளின் பெருமைக்குப் புகழ் பாடினார் கவியரசர்..

இளம் வயதிலேயே 
பெண்கள் பாரம்பரிய  சமையல் கலையைப் பழகி அம்மியில்  தேங்காய் அரைத்து எடுப்பது உடலுக்கு நல்லது.. 

அம்மியில் அரைப்பது மிகச் சிறந்த உடற்பயிற்சி.. 

1990 களுக்கு முன்பு வரை  கேட்டிராத நோய்கள் எல்லாம் இப்போது பேருந்துகளில் விளம்பரங்கள் என்று - ஊர் முழுக்க சுற்றி வருகின்றன..

பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தொலைக்காட்சியில்
மனதை அதிரடிக்கின்றன.. 

இளமையில் ஓரளவுக்கு நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டால் -
நாற்பது ஐம்பது வயதுகளில் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடப்பது பெருமளவுக்குக் குறையும் என்பதில் ஐயம் இல்லை..

ஓரிருவர் அப்படியும் இப்படியும் இருந்திருக்கலாம்.. 

எப்படியாயினும் பெண்களே ஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள்..

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்...

என்றார் ஐயன் திருவள்ளுவர்..

தற்காத்துத் தற்கொண்டான் பேணி - என்பதை ஆரோக்கியமானவற்றை உண்பதற்கும் தரமான உடைகளை உடுத்துவதற்கும் கொள்ளலாம்..

தர்மத்திற்கு நாலு பேர் என்றால்
துரியோதனத்துக்கும்
துச்சாதனத்துக்கும் நூறு பேர் என்பது உலக நியதி..

பங்களா என்றாலும் ஓலைக்குடிசை என்றாலும் கொல்லைக்கு என்று அவ்வளவு தூரம் சென்றது பழங்கதை..

இன்று நவீன வாழ்க்கை முறையில் எல்லாம் தலை கீழ்.. 

இன்றைய நாளில் திட்டமிடல் என்பது - 

கடன் திருவிழாவில் கடனாளி ஆவதும், 



எட்டு ஊர் தீனிகளையும் வீட்டுக்குள் வரவழைத்துத் தின்று தீர்ப்பதும் தான்..

நடு வீட்டுக்குள் என்பதும் மலையேறி
உள்ளங்கையில் அல்லவா உலகம்!..

இளந்தலைமுறைக்கு
இதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம்  இல்லை என்றாலும் நல்லதே நடக்கட்டும்!..

நம்முடைய நலம்
நம்முடைய கைகளில்..
**

ஓம் நம சிவாய நம ஓம்
***

செவ்வாய், மே 07, 2024

நலம் தேடி..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 24
செவ்வாய்க்கிழமை

நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட சிலவகை மசாலா பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளதாக செய்திகள்..

மாலத்தீவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றதாம்..

(இணையத்தில் தேடிக் கண்டு கொள்ளவும்)

காரணம் - 
நோய்த் தொற்று ஏற்படுத்துகின்ற பூச்சிக் கொல்லிகளும் வேறு சில வைரஸ்களும் அதில் காணப்படுவதால் அந்நாட்டின் (US Food and Drug Administration -FDA) உணவுப் பாதுகாப்புத் துறையினரின் இப்படியான நடவடிக்கைகள்..  (கூகிள் செய்தி)

இங்கே ரோட்டுக் கடைகளில் இதெல்லாம் தாராளம்.. அடித்துக் கொண்டு நிற்கின்றார்கள் என்கின்றீர்களா!... 

நமக்கு எதற்குங்க ஊர் வம்பு?..

3D illustration of Salmonella Bacteria
Salmonella is a ubiquitous human and animal pathogen which causes almost a hundred million cases of gastroenteritis each year throughout the world. 

Salmonellosis in humans usually presents as self-limiting food poisoning (gastroenteritis), albeit it can occasionally manifest as a severe systemic infection (enteric fever) that requires swift antibiotic treatment.

Most cases of salmonellosis in humans occur after the consumption of contaminated food products such as poultry meat, pork, beef, eggs, vegetables, juices, and other types of foods. Therefore, prudent use of antimicrobials in human medicine and agriculture is pivotal in minimizing the emergency aspects and spread of resistant Salmonella.

நோய்த் தடுப்பு முறை நிறையவே இருக்குது.. அதப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
(நன்றி விக்கி)

சால்மோனெல்லாசிஸ் (salmonellosis) என்பது   சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படுகின்றது.. 

பொதுவான அறிகுறிகள்: வயிற்றுப் போக்கு, காய்ச்சல்,  மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியன..

நோய் தடுக்கும் முயற்சிகளினால்  சால்மோனல்லாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 

அதற்கு முறையாக - 
சுகாதாரமாகத் 
 தயாரிக்கப்பட்ட  உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும்.. 

சால்மோனெல்லா  சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படுகின்றது.

சால்மோனெல்லா பாக்டீரியா நிணநீர் மண்டலத்தில் நுழைந்து ​​சால்மோனெல்லோசிஸ் எனும் வடிவத்தை ஏற்படுத்தும் போது டைஃபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது..

ஹைலோக்சியா மற்றும் டோக்ஸிமியா ஆகியவற்றின் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.  இவை பெரும்பாலும் மாசுபட்ட தண்ணீர் மாசுபட்ட உணவுகளில் காணப்படுகின்றன.  

சால்மோனெல்லா வைரஸ் ஏற்படுத்துகின்ற காய்ச்சலின் அறிகுறிகள்:

ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும். மிகவும் சோர்ந்த நிலை, வயிறு வலி, வயிறு உப்புதல்.
எடை குறைவு, வேகமாக மூச்சு விடுதல்..

மூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை.
குமட்டல், வாந்தி, வயிற்று வலி.

நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முறைகள் :

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை  சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்..

குடிநீர் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.. 

நோயாளர்கள் குடிநீரை
நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகே குடிக்க வேண்டும்..

காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகள் இருக்கும் பாத்திரங்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.. திறந்து வைக்கக் கூடாது. 

உணவை - ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். 

திறந்த வெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் தயாரிக்கப்படும் உணவுகளையும் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது..

எல்லாவற்றுக்கும் மேலாக சமைப்பவர் தனது தூய்மையில் நாட்டம் கொண்டவராக இருக்க வேண்டும்..

வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்..

சால்மோனெல்லா  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டிய உணவுகள்:-

காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே தரவேண்டும்.

பட்டினியாக இருக்கக் கூடாது. வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும்..

நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்..

மருத்துவர் பரிந்துரைக்கின்ற மருந்துகளை முறையாக எடுத்துக்
கொள்ள வேண்டும்.. இருப்பினும் காய்ச்சல் குறைந்த பின்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக, காலையில் புழுங்கல் அரிசிக் கஞ்சி மட்டும் (உப்பு குறைந்ததாக) எடுத்துக் கொள்வதும் 

மதிய வேளையில் 
காரம் புளிப்பு இல்லாத  
எளிய உணவும் -
இரவில் இட்லி இடியாப்பம் அமைவதும் நல்லது..

எந்த முறை மருத்துவம் ஆனாலும், தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறப்பு..

குவைத் நாட்டில் சில வருடங்கள் உணவகப் பணியில் இருந்த போது அளிக்கப்பட்ட பயிற்சிகள் நினைவுக்கு வருகின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், மே 06, 2024

தாகம் தாகம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 23
திங்கட்கிழமை


தாகம்.. 
தண்ணீர் தண்ணீர்!..

இன்னும் சில நாட்களுக்கு வெப்பக் கதிர் வீச்சு தொடரும் என்ற அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன...

வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வோருக்கு நீர் வேட்கை இயற்கை என்றாலும் சுத்தமான குடிநீருக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை..

Thanks  Fb.

இரண்டாயிரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு  எச்சரிக்கை விடுத்தார்கள் - இங்கே குடிக்கின்ற நீருக்கு விலை கொடுத்தாக வேண்டிய நிலை வரும் என்று!..

இப்போது -
அந்த எச்சரிக்கை வெற்றி பெற்று விட்டது..


தண்ணீரைக் குறை சொல்லக் கூடாது.. அதுவும் வணிக முறையிலான தண்ணீரைக் குறையே சொல்லக்கூடாது.. வியாபாரம் என்றால் அப்படித்தான் இருக்கும்.. 

இதற்குள் தரத்தை எதிர்பார்ப்பதெல்லாம் மடமை..

இஷ்டமில்லை எனில் வாங்கக் கூடாது - அவ்வளவே!..

ஆனாலும் நமக்குப் பாதுகாப்பு வேண்டும்.. அதுவும் நாமே தேடிக் கொள்ள வேண்டும்..

மாதம் தோறும் -
தலைக்கு மேலான அளவில் வருமானம் என்றால் பிரச்னை இல்லை.. எந்த வகையிலாவது தப்பித்துக் கொள்ளலாம்..

ஏழை பாழைகளும்
வெயிலில் வேலை செய்வோரும் அவரவர் பாட்டை அவரவரும் பார்த்துக் கொள்ள வேண்டியதே..

உடல் சூடு குறைந்து தாகம் தணிவதற்கு நமக்குக்  கிடைத்திருப்பவை நன்னாரி வேர், வெட்டிவேர் எனும் இயற்கையின்  சீதனங்கள்..


நுங்கு, இளநீர், தர்பூசணி, முலாம் பழம் ஆகியனவும் நல்லவையே..

எனினும், நாலு பக்கமும் சுவரை உடைத்துக் கொண்டு காசு பணம் வருகின்ற சூழ்நிலையிலா நாம் இருக்கின்றோம்?..

ஒவ்வொரு நாளும்  அதிகப்படியான செலவாக அல்லவா இருக்கின்றது!..


சாதாரணமாக ஒரு இளநீர் நாற்பது ரூபாய்.. நீர் இன்மையால் அடுத்த வருடங்களில் தென்னை மகசூல் பாதிக்கப்படலாம்.. 

இளநீரை அருந்தும் வரைக்கும் அதனுடைய சுவை பற்றித் தெரியாது.. சற்றே உப்புச் சுவை என்றாலும் மீண்டும் நா வறட்சி தான்..

என்னை மாதிரி வீட்டில் இருப்பவர்களுக்கு தினசரி இதற்காக சில நூறு ரூபாய் செலவு என்பது இயலாது.. 

ஆனாலும் 
ஏதாவது செய்தாக வேண்டுமே.. 
ஏதாவது சொல்லியாக வேண்டுமே.. 

குளுமைக்கு என்று  சாலையோரக் கடைகளில் ஏதாவது குடிப்பது நல்லதா?.. 

அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்கோ.. நான் அருந்துவதில்லை..

நிறமூட்டிகளில் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதாக செய்திகள்.. இருக்கின்ற பிரச்னைகள் போதாது என்று சருப்பத் (!?) வேறயா?..


இந்நிலையில் -
நமக்குக்  கிடைத்திருப்பவை - கிருஷ்ண துளசி,  சிவதுளசி, புதினா, கொத்தமல்லித் தழை, தேற்றாங்கொட்டை,
நன்னாரி வேர், வெட்டி வேர், நெல்லிக்காய் - எனும் இயற்கையின்  சீதனங்கள்..

புதிய மண்பானையில் நமக்குக் கிடைக்கின்ற தண்ணீரை முதல் நாள் இரவில் ஊற்றி அத்துடன் - துளசி,  புதினா ஏதாவது ஒன்றுடன் - 


நன்னாரி வேரையோ வெட்டி வேரையோ நெல்லியையோ
போட்டு வைத்து மறுநாள் முழுமைக்கும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது..

சாதாரணமாக தேற்றாங்கொட்டைக்கு  தண்ணீரைத் தெளிய வைக்கும் குணம் இருக்கின்றது..

கடுத்த நீரை இலகுவாக்குவது நெல்லி..


அந்தக் காலத்தில்  புதிதாக கிணறு தோண்டும்போது கடுத்த நீர் ஊற்றெடுத்து வந்தால் கவலையே படாமல் நெல்லிக் கிளையின் சிறு துண்டுகளைப் போட்டு வைப்பர்..

மறுநாள் தண்ணீரின் கடுத்த சுவை மறி இருக்கும்..

திரு ஆரூருக்குப் பக்கத்தில் திரு நெல்லிக்கா என்று ஒரு ஊரே இருக்கின்றது..

தேற்றாங்கொட்டையையும் நெல்லியையும் பானைக்குள் போட்டு வைத்திருந்து அந்த நீரை மறுநாள் அருந்துவது நல்லது..

துளசி, புதினா, கொத்தமல்லித் தழை - ஏதாவதொன்றை நல்ல தண்ணீரில் நன்றாக அலசி விட்டு,

பகல் பொழுதில் குடிக்கின்ற நீரில் - போட்டு வைத்திருந்து அந்த நீரைப் பருகுவதும் உடலுக்கு ஆரோக்கியம்..


குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட - நீரைக் குடிப்பதில் கவனம் தேவை என்கின்றது நவீன மருத்துவம்.. 


ஐஸ் கட்டிகள் தொண்டையில் பிரச்னைகளுக்கு காரணம் ஆகின்றன.. 

மேலும், வெயில் சூடு என்று ஐஸ் கட்டிகளை பல விதத்திலும் பயன்படுத்துவதால்
 ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படுகின்றன.. 

இயற்கையின் சீதனங்கள்... இந்நாளில் அவையும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கின்றன.. 

இருந்தாலும் அவை தீமை செய்வதில்லை..

எனவே -
துளசி,  புதினா, கொத்தமல்லித் தழை, தேற்றாங்கொட்டை,
நன்னாரி வேர், வெட்டி வேர், நெல்லிக்காய் - எனும் இயற்கையின்  சீதனங்களை இயன்றவரை பயன்படுத்தி நலம் பெறுவோம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை

ஓம் சிவாய நம ஓம்
***

ஞாயிறு, மே 05, 2024

மழை வருக..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 23
ஞாயிற்றுக்கிழமை


நாளிதழ் 
செய்திகளுடன்  
தொகுக்கப்பட்ட பதிவு..


மழை வருக மழை வருக
மாமழை வருகவே..
மண் கொண்ட வளம் வாழ
கண் கொண்ட நலம் சேர
மழை வருக மழை வருக
மாமழை வருகவே..


வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.. 

கோடை மழை இல்லாததால் - நாடு முழுவதும் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருகின்றது.. 

குடிநீர் தட்டுப்பாடு பல இடங்களிலும் பிரச்னைகளுக்கு வழி வகுக்கின்றது,.

கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்..


மரம் மட்டை, தோப்பு துரவு, வயல் வரப்பு, வாய்க்கால் குளம், ஏரி ஆறு - என்றிருந்த கட்டமைப்பு  சீர் குலைந்ததால்
மக்கள் மட்டுமின்றி வளர்ப்பு விலங்குகள், வன விலங்குகள், பறவைகள் தாவரங்கள் - என, அனைத்தும் துன்பப்படுகின்றன... 

காடுகளிலும் கடும் வறட்சி ஆனதால் வன விலங்களும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றன..

தென்மேற்குப் பருவ மழைக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன..

இந்நிலையில் வரலாறு காணாத வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு விட்டன..


நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால்
லட்சக் கணக்கான தென்னை, பனை மரங்களும் ஆபத்தில் இருக்கின்றன..


தண்ணீர் லாரிக்கு 
(6,000 லி) 1,800 ரூபாய் வரை செலவு செய்தும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை என விவசாயிகள் வேதனை..


தமிழகத்தில்
உத்தேசக் கணக்காக
 இரண்டரை கோடி தென்னை மரங்கள் வறட்சியை எதிர் கொண்டுள்ளன.. 

நன்றி : இந்து தமிழ் ஏப் 24/ 
தற்போது, அணையின் நீர்மட்டம் 55 அடிக்கு கீழ் சரிந்துள்ளதால், மீண்டும் நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது..


நந்தி சிலையைக் காண வார விடுமுறையில் பண்ணவாடிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். தண்ணீரில் மூழ்கியிருந்த நந்தி சிலையை பார்த்து ரசித்தனர். 

(இதிலே ரசிப்பதற்கு என்ன இருக்கின்றது?... )

பின்னர் பண்ணவாடி பரிசலில் மீன் வாங்கி சாப்பிட்டனர்...

(ஆகா.. அற்புதம்... மழை இன்மையால் மேட்டூர் தேக்கத்தில் நீர் குறைகின்ற நேரத்திலும் - சுற்றுலா. 
மீன்வறுவல்.. கொண்டாட்டம்.. 
என்ன கொடுமையடா இது.. )


தினத்தந்தி : மே 3/24
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ள நிலையில்,

தென்மேற்கு பருவமழை  ஜூன் மாதத்திற்கு முன்னதாகத் தொடங்கினால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். 

மேலும் மேட்டூர் அணையின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சேலம், ஈரோடு, நாமக்கல்,  கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை - ஆகிய மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது...
 

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்  
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து 
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் 
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து 
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் 
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி 
நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 
திருப்பாவை - 4
(கோதை நாச்சியார்)

மேகராகக் குறிஞ்சியாகிய 
இத்திருப்பாடலைப் பாடினால் 
மழை பொழியும் என்பது ஐதீகம்..

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி 
அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்று 
அருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர 
மழையென்று அஞ்சிச் சிலமந்தி 
அலமந்து மரமேறி முகில்பார்க்குந் 
திரு ஐயாறே.. 1/130/1
-: திருஞானசம்பந்தர் :-
*
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, மே 04, 2024

ஜெய் ஸ்ரீராம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 21
சனிக்கிழமை



ஸ்ரீராம ராம
ஜெயராம ராம..

 

காணொளிச் சித்திரம்
Fb ல் கிடைத்தது..
நன்றி..

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் 
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன்
தலை பத்தறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே!. 988
-: திருமங்கையாழ்வார் :-
 - நன்றி திவ்ய ப்ரபந்தம் -


வாக்கினால் இன்புரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை உண்டும் ஆறான்
தேக்குநீர் செய்த கோயில் திருஇரா மேச்சுரத்தை
நோக்கினால் வணங்கு வார்கள் நோய்வினை நுணுகும் அன்றே.. 4/61/7

கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே.. 4/61/9
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் 
ராமாய ராமபத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய பதயே நம:

ஓம் நம சிவாய நம ஓம்
***

வெள்ளி, மே 03, 2024

சிவஜோதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 20
சதய நட்சத்திரம்
 வெள்ளிக்கிழமை

திருநாவுக்கரசர்
சிவஜோதியுள் கலந்த நாள்


' புறச்சமயப் படுகுழியினின்றும் எடுத்தாள வேண்டும்.. ` - என்று திலகவதியார் செய்து கொண்ட  விண்ணப்பம் கேட்டு  எம்பெருமான் சூலை எனும் வயிற்று வலியினைக் கொடுக்க, காஞ்சியிலிருந்து நள்ளிரவுப் போதில் புறப்பட்டு திரு அதிகைப் பதியினை அடைந்து சகோதரியின் கால்களில் விழுந்தார் தருமசேனராக இருந்த மருள் நீக்கியார்.. 

திலகவதியார் திருநீறு கொடுக்க - 
 " கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்...
எனத் திருப்பதிகம் பிறந்தது..
 
திருப்பதிகம் பிறந்த அளவில் சூலை நோயும் பறந்தது..

வானில் இருந்து,
நாவுக்கரசு - எனும் திருப்பெயரும் எழுந்தது..

சகோதரனின் கையில் உழவாரப் படையினைக் கொடுத்தார் திலகவதியார்.. 
சகோதரியை வலம் வந்து பணிந்த நாவுக்கரசர் - திருநாவுக்கரசர் உழவாரப் படையினைக் கொண்டு உடையானின் ஊர்ப்பணி செய்வதற்கு நடந்தார்..

புறச்சமயத்தினரின் சொல் கேட்டு - அவரைச் சிறை பிடித்த மகேந்திர பல்லவன் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கினான்..

' நாமார்க்கும் குடியல்லோம்.. ' என்று சிவமயமாகி இருந்தவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது.. அதிலிருந்து மீண்டு வந்த நாவுக்கரசர் சுண்ணாம்புக் காளவாயில் அடைக்கப்பட்டார்.. 

சுண்ணாம்புக் காளவாயும் பூஞ்சோலையாகிப் போக - மதம் கொண்டிருந்த யானையை  அவிழ்த்து விட்டனர்.. 

அது நாவுக்கரசரை வலம் வந்து வணங்கி விட்டு ஓடிப் போனது..


ஆத்திரமுற்றோர் அறிவழிந்து
கருங்கல்லினொடு நாவுக்கரசரைக் கட்டி கடலுக்குள் தள்ளினர்..
அந்தக்கல்லும் மிதந்து திருப்பாதிரிப்புலியூரில் கரை ஒதுங்கியது..


மெய்யறிவு பெற்ற மகேந்திர பல்லவன் நாவுக்கரசரின் கால்களில் விழுந்து சிவ சமயத்தைத் தழுவினான்..

அதன்பின், திருப்பெண்ணாகடத் தலத்தில் சூல இடபக் குறிகளைப் பெற்றுக் கொண்ட நாவுக்கரசர் தில்லையம்பதி முதலான திருத்தலங்களைத் தரிசித்த வேளையில் காழிப்பதியில் நிகழ்ந்த அதிசயம் கேட்டு அங்கு விரைந்தார்.. 

ஞானசம்பந்தர் எனும் அந்தக் குழந்தை - " வாருங்கள் அப்பரே.. " என்று அழைத்து எதிர் கொண்டது.. 


ஊர்கள் தோறும் நடந்த அப்பர் - திங்களூர் எனும் தலத்தில் அப்பூதி அடிகள் எனும் மெய்யடியாரைக் கண்டு இன்புற்றார்.. அவர் பொருட்டு ஆங்கொரு அற்புதம் நிகழ்ந்தது.. 

நாவுக்கரசருக்கு அமுது படைக்க என்று வாழையிலை அரிந்த போது நாகம் தீண்டி இறந்த பாலகன் அப்பர் ஸ்வாமிகளின் திருப்பதிகத்தால் உயிர் கொண்டு எழுந்தனன்..

காலம் நடத்திய வழியில் திரு ஆரூரில் தியாகேசனை வணங்கி, ஆழித்தேர் கண்டு மகிழ்ந்து திருப்புகலூர் ஏகிய போது திருப்புகலூரில் மீண்டும் திருஞானசம்பந்தர் எதிர் கொண்டார்.. 

இருவருமாக தலயாத்திரை செய்து திருவீழிமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தினால் விளைந்த
பசிப்பிணி போக்கி - திருக்கடவூரில் கலய நாயனார் மடத்தில் தங்கியிருந்து திருமறைக்காடு ஏகி திருக்கோயிலின் கதவுகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்தனர்..  

அதுசமயம் பாண்டிய நாட்டில் இருந்து மங்கையர்க்கரசியார் அழைப்பு விடுக்க - திருஞானசம்பந்தர் ஆலவாய்க்குச் சென்றார்..

மக்கட் பணியைத் தொடர்ந்தார் அப்பர் ஸ்வாமிகள்..

அதன்பின் திருநாவுக்கரசர்
திருப்பைஞ்ஞீலி தலத்திற்குச் செல்லும் வழியில் இறைவன் பொதி சோறு கொணர்ந்தளித்து எதிர்கொண்டனன்..

அதன் பின் திருக்காளத்தியைத் தரிசித்த ஸ்வாமிகள் அங்கிருந்து திருக்கயிலைக்கு நடந்தார்.. கால்கள் தேய்ந்ததால் ஊர்ந்து சென்ற அவரை சிவயோகியாக வந்த இறைவன் கயிலாயத்தின் தடாகத்தில் மூழ்குமாறு பணித்தனன்.. 

அங்கே மானசரோருவ தீர்த்தத்தில் மூழ்கிய திருநாவுக்கரசர் இங்கே திரு ஐயாற்றின் சூரிய தீர்த்தத்தில் எழுந்தார்.. 

அப்போது - அம்மையப்பன்  தோன்றி பற்பல ஜீவராசிகளாகத் திருக்காட்சி நல்கினர்..


அப்பர் திருமடம் திருப்பூந்துருத்தி

திரு ஐயாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி ஏகிய
 அப்பர் ஸ்வாமிகள் அங்கே திருமடம் அமைத்துத் தங்கியிருந்த போது

திருஞானசம்பந்தர் மதுரையில் இருந்து சோழ நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.. 

அஃதறிந்த அப்பர் ஸ்வாமிகள் ஊர் எல்லையில் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு அழைத்து மகிழ்ந்தார்..

அதன்பின் பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்து மீண்ட திருநாவுக்கரசர் -

காலம் கனிந்த வேளையில் தமது எண்பத்தொன்றாவது வயதில் - சித்திரைச் சதய நாளில்  திருப்புகலூரில் சிவகதியடைந்தார்..

மகேசன் தொண்டுடன் மக்கட் தொண்டும் ஆற்றிய புண்ணியர்  - திருநாவுக்கரசர்..

இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சை  ராஜராஜேஸ்வரத்தில் தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் (கி. பி. 1013 -14) திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருளுவித்ததாக கல்வெட்டுச் செய்திகள் உள்ளன..

திருநாவுக்கரசர் அருளியவை என்று சொல்லப்படுகின்ற (4900) திருப்பதிகங்களில் நமக்குக் கிடைத்திருப்பவை 312 மட்டுமே..

திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் அகச் சான்றுகள் நிறைந்திருப்பவை.. 


இவைகளே தேவாரம் எனப்பட்டவை.. 

ஸ்ரீ ராஜராஜ சோழர் பெருமுயற்சி செய்து
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் கிடந்த சுவடிகளை மீட்டு,  திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தொகுத்தளித்தார்...

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் - பன்னிரு திருமுறைகளுள் 4,5,6 எனும் மூன்று தொகுதிகளாகத்  திகழ்கின்றன..

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்   
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்  
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்   
என்கடன் பணி செய்து கிடப்பதே.. 5/19/9
-: திருநாவுக்கரசர் :-
**
திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், மே 02, 2024

வாழை வனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 19
வியாழக்கிழமை

சித்திரை மாதத்தின் ஒருநாள்..

வழிநடையில் சோலை வனமாக நிழல் தரும் மரங்கள் பல இருந்தும் -  வெம்மை குறையவில்லை..

பறந்து திரிவதற்கு அஞ்சிய பறவைகள் -
கூட்டுக்குள் அடைந்தவாறு பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தன.

ஆனாலும், அந்தக் கொடும் வெயிலில் - குளிர் நிழல்தனைக் கண்டு ஒதுங்கி இளைப்பாறாமல் - ஒரு புண்ணிய ஆத்மா அந்த வழியில் வந்து கொண்டிருந்தது..

அது - சிவனே என்று வந்தாலும் - சிவனே என்று வராமல் -

வழிநடையில் போவோர் வருவோர்க்கு இடையூறாக  இருமருங்கிலும் முளைத்து தழைத்திருந்த - காரை, கற்றாழை, நாயுருவி, நெருஞ்சி போன்ற முட்செடிகளை தன் கையிலிருந்த உழவாரத்தினால் அப்புறப்படுத்திக் கொண்டு வந்தது.

அந்தப் புண்ணியர் - திருநாவுக்கரசர்..


வழித்தடத்தில் முட்செடிகள் பரவிக் கிடந்தால் - வழி நடப்பதற்கு அஞ்சுவரே மக்கள்.. மூலிகைச் செடிகளாக இருந்தாலும் அவை பல்கிப் பெருகி காடாகக் கிடப்பின் - விஷமுடைய உயிரினங்களுக்கு புகலிடமாகி விடுமே!. அங்ஙனம் ஆயின் அது பலருக்கும் அல்லலாக அமையுமே!..

- என்று ஆருயிர்களின் மீது கொண்ட அன்பு தான் இந்த அருஞ்செயலுக்கு அடிப்படை.

தள்ளாத வயதிலும் - தளராத உள்ளத்துடன் - தவப்பணி செய்து கொண்டு வந்த திருநாவுக்கரசரைக் கண்டதும் - மரங்களின் ஊடாக அமர்ந்திருந்த புள்ளினங்கள் பேச்சற்று இருந்தன..

பெருமானே!.. எம்மை ஆளுடைய ஐயனே!.. அருந்தொண்டாற்றி வரும் இந்த அடியவரின் அல்லலைக் களைந்தருள்வீராக!..

சற்று தொலைவில் திருக்கோயில் கொண்டிருந்த - வாழை வன நாதனை மனமுருகி வேண்டிக் கொண்டன..

ஆதவனின் அருங்கிரணங்களால் தடம் தகித்தது. அடியவரின் அடி சுட்டது.

பகலவனின் வெங்கதிர்களால் உடம்பு வியர்த்து.
மேனியிலிருந்த வெண்ணீறு கரைந்து பாலாக வழிந்தது..

அதற்கு மேலும் அவரால் தாள முடியவில்லை.

அருகிருந்த விருட்சத்தினை நோக்கி நடந்தார். கால்கள் சோர்ந்தன.

திருக்கயிலை நோக்கி நடந்த நாட்கள் அவரது நினைவில் வந்தன!..

பசியும் தாகமும் மேலிட்டன..

உமையொரு பாகனை உளங்கொண்டு வணங்கினார்...
அன்றொரு நாள் - கடம்பூரில் தொடுத்த பாமாலை நினைவுக்கு வந்தது...

அதிலிருந்து ஒரு பாவினை
 - தனது திருநாவினால் - மீண்டும் மொழிந்தார்...

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே!..

அருகே தாமரைத் தடாகம் தென்பட்டது.
ஆயினும் அருகே செல்ல இயலவில்லை..

கண்கள் இரண்டும் மயங்கின.
கையொடு கால்களும் தளர்ந்தன.

அதற்கு மேல் இயலாமல் மயக்கமுற்றார்..
திருநாவுக்கரசரின் திருமேனி நோகாமல் பூமகள் தாங்கிக் கொண்டாள்..

' இந்தப் புண்ணியரைத் தாங்கிட என்ன புண்ணியம் செய்தனமோ!..

எல்லாம் வல்ல சிவம் - உம்மைக் கொண்டு ஒரு திருவிளையாடலை நிகழ்த்த இருக்கின்றதே..

பெரியீர்!.. தம்மைப் போல அறச் செயல்களைச் செய்தார் வேறு யார் உளர்?!.

தாய் தந்தையரை இழந்த வேளையில் -
ஆதரவற்று மனம் தளர்ந்திருந்தாலும் நீரும் உமது தமக்கையும் இயற்றிய அறப்பணிகள் அளவிடற்கரியன... இல்லத்தில் நிறைந்திருந்த பொன்னையும் பொருளையும் வறியவர்க்கென வாரி வாரி வழங்கினீர்..

எல்லாவற்றிலும் மேலானது கோடையில் நீர்ப்பந்தல் அமைத்து வருவோர் தமக்கு சோறும் நீரும் அளித்து அருங்கொடை ஆற்றினீர்.. 

செய்தார்க்கு செய்த நலம் அல்லவோ!.. சற்றே இங்கு இளைப்பாறும்!..
'

- என்று பூமகள் புன்னகையுடன் கருணை கொண்டாள்..

சில விநாடிகளுக்கெல்லாம் பன்னீர் சாரல் பொழிந்தது.
நல்ல மலர்களின் நறுமணம் அங்கு கமழ்ந்தது.

உணர்வு வரப்பெற்ற திருநாவுக்கரசர் - மெல்ல கண்விழித்தார்.

எதிரில் - ஞான சூரியனைப் போல அந்தணர் ஒருவர்..

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்..

- என்று வள்ளுவப் பெருந்தகை வரையறுத்ததைப் போல - அருள் தோற்றம்..

அவரது தோளில் ஒரு மூட்டை.. கையில் நீர் நிறைந்த சுரைக்குடுக்கை..

ஐயா.. எழுந்திரும்!..

அன்புக் கட்டளை..

தள்ளாத வயதில் எதன் பொருட்டு இந்த கொடும் வெயிலில் வழிப்பயணம்!?..

புன்னகையுடன் வினா ஒன்று வெளிப்பட்டது..

தன்னையும் நாடி வந்து ஒருவர் கேட்கின்றாரே..
அவரை ஆற்றுப்படுத்துவோம்!.. 
- என எண்ணியபடி - கைகளை ஊன்றி எழ முயன்றார் - திருநாவுக்கரசர்.

இரும்.. இரும்!.. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இன்புற்று இரும்!.. இருந்தவாறே விளம்பும்!..

அன்பு வழிந்தது - அந்தணரின் பேச்சில்!..

காண்டற்கரிய கடவுள் கண்டாய்!..
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்!..
- என,  காசினியில் உள்ளோருக்கெல்லாம்
கயிலாய நாதனை - காட்டிச் செல்கின்றேன்.. காட்டச் செல்கின்றேன்..

அங்ஙனமாயின் நீர் கண்டதுண்டோ கயிலாய நாதனை!..

கண்டேன்.. அவர் திருப்பாதம்!.. கண்டறியாதன கண்டேன்!..

நீர் கண்டதை எமக்கும் காட்ட இயலுமோ!?..

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியுள்ளான்
காளத்தியான் அவன் என் கண்ணுளானே!..

அடேங்கப்பா!.. பெரிதினும் பெரிதாய் விளக்கம் காட்டுகின்றீர்... ஆயினும் அங்கெல்லாம் போய்த் தேடுவது எங்ஙனம்?.. ஆகவே அருகில் உள்ளதாய் காட்டுக!..

பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண்..
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண்!..

இங்கெல்லாம் கண்டிருக்கின்றீரோ!..

கண்டிருக்கின்றேன் ஐயா.. மலையான் மடமங்கை மகிழ்ந்து உடன் இருக்க பழனஞ்சேர் அப்பனைக் கண்டிருக்கின்றேன்.. சீர்வளர் செல்வி ஏலவார் குழலியுடன் பராய்த்துறை மேவிய செல்வனைக் கண்டிருக்கின்றேன்!..

அதுசரி.. பைஞ்ஞீலியானை!..

அவனைத் தான் - தேடிச் சென்று கொண்டிருக்கின்றேன்!..

தேடல் முடிந்திடுமா!..

தேடலும் முடிந்திடுமோ!?.. அதுவும் எம்பெருமானின் சித்தம்!..

பைஞ்ஞீலியை அறிவீரோ - நீர்!..

அறியேனே!.. இவ்வழியே செல்லுங்கள்.. பைஞ்ஞீலியை அடைவீர்!.. -  என்று ஆங்கொருவர் அடையாளங் காட்டினார்.. எனவே இவ்வழியில் அடியேன் தொடர்ந்து வருகின்றேன்.. ஆகட்டும் ஐயா.. இவ்வளவும் கேட்கின்றீரே.. தாம் யார்?.. தம்மைப் பற்றியும் கூறுகவே!..

யான் என்னைப் பற்றிக் கூறுவது இருக்கட்டும்..
முதலில் நீர் இருந்து பசியாறும்...
நீர் அருந்திக் களைப்பாறும்.... மிகுந்த சோர்வுடன் இருக்கின்றீர்...

அல்லலுற்ற ஆருயிர்களின் பசிப்பிணி நீக்குதல் - இதுவோ நும் பணி!..

ஆம்.. இவ்வழிச் செல்லும் அனைத்துயிர்களுக்கும்!.. அது மனிதர் என்னும் நல்லுயிர் தொட்டு பூத்துக் கிடக்கும் புல்லுயிர் வரைக்கும்!..

ஓ!.. இவ்வழி என்பது எங்கே செல்கின்றது?.. - திருநாவுக்கரசர் வினவினார்.

இவ்வழி சென்று முடிவதை இதுவரைக்கும் யாரும் அறிந்திலர். ஆயினும்,
இவ்வழி என்பது செவ்வழி!.. அறிந்திடுக - இதில் செல்வது யார்க்கும் எளிதல்ல!..

அதனால் தான் -  ஆங்காங்கே - முளைத்திருக்கும் முள்ளையும் கல்லையும் நீக்கிச் செல்கின்றேன்!..

செவ்வழி என்பது சிவன் வழி!.. - அந்தணர் புன்னகைத்த வண்ணம்
தலை வாழையிலையை விரித்து அதில் தயிரன்னத்தைப் பரிமாறினார்....

ஓ!... அப்படியும் ஒரு பொருள் உளதோ!..
அருஞ்சொல் கூறி அருஞ்செயல் ஆற்றுகின்றீர்..
அன்னம் பாலிக்கும் ஐயன் தில்லைச் சிற்றம்பலவனைப் போல!..
நீவிர் வாழ்க!.. நின் மனையாள் வாழ்க!.. 
மக்கள் சுற்றம் மாடு மனை மங்கலங்கள் யாவும் வாழ்க.. வாழ்க!..


தலைவாழை இலையில் பாலிக்கப்பட்ட தயிர் சோற்றைக் கையிலெடுத்து வணங்கி முகமன் கூறியவாறு உண்டார் திருநாவுக்கரசர்..

அவர் உண்பதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தணர்.

தாமரைத் தடாகத்தில் சேந்திய குளிர்ந்த நீர்.. அருந்தி மகிழும்!..

ஆகட்டும் ஐயனே!..

இதோ செங்கீரை.... உப்பிலிட்ட மாவடு!...

ஆகா.. அமிர்தம்.. அமிர்தம்.. இந்த அன்னத்தை ஆக்கிக் கொடுத்தனளே - உம் இல்லக் கிழத்தி!.. அவள் நித்ய சுமங்கலி - வடு வகிர்கண்ணியாக வாழ வேணும்!..

உண்ணும் உண்ணும்.. உவப்புடன் உண்ணும்!..

ஐயா.. தாம் யாரோ.. எவரோ.. உண்ணீர்.. உண்ணீர் என உவந்து ஊட்டுகின்றீர். இன்முகங்காட்டி உப்பிடுகின்றீர்!..
உலகில் உப்பை முதலில் அறிந்தவன் தமிழன்!..
கடலில் கலம் செலுத்தி அதன் அக்கரையைக் கண்டவன் தமிழன்!..
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. - என்று மொழிந்தவன் தமிழன்!..
யான் உம்மை உள்ளளவும் மறவேன்!..

அதனால்தான், 
எம்மை - 
ஆரியன் கண்டாய்!.. தமிழன் கண்டாய்!.. 
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்!.. 
- என்று, திருமறைக்காட்டில் அடையாளங் காட்டினீரோ!..

ஆ!.. அது உமக்கு எப்படித் தெரியும்?.. அங்ஙனமாயின்.. நீர்!?.. 
- திகைத்தார் - திருநாவுக்கரசர்...

கையில் எடுத்த கவளம் அப்படியே நின்றது..
பசியுந்தாகமும் பறந்தே போயின...

புன்னகை பூத்த திருமுகத்துடன் பொலிந்த அந்தணர் தன்னுரு கரந்தார்..

தேவ துந்துபிகள் முழங்கின... வானிலிருந்து பூமாரி பொழிந்தது...
எட்டுத் திக்கிலும் சிவகண வாத்தியங்கள் அதிர்ந்தன...

திருநாவுக்கரசரின் வினாவுக்கு விடை
- விடை வாகனத்தின் மீது பொலிந்தது..


அம்மையும் அப்பனும்!.. அருகே ஐங்கரனும் கந்தக் கடம்பனும்...

வெள்ளியங்கிரியைப் போல் ஒளிர்ந்த ஆனந்த நந்தி -
கழுத்து மணிகள் குலுங்க அப்படியும் இப்படியுமாக நடம் பயின்றது..

திருநாவுக்கரசரே!.. நிலைத்த புகழுடன் நீடூழி வாழ்க!...

எல்லாஞ் சிவன் என நின்ற எம்பெருமானே!.. என்னை ஆளுடைய கோவே!.. என் பொருட்டு சோறும் நீரும் தாங்கி வந்தனையே!..
எனையாள வந்த எளிமையை என்ன என்று சொல்லுவேன்!..
வண்டார்குழலி ஒரு பாகமாக வந்து வாடிய வாட்டம் தவிர்த்த வள்ளலே!.. நின்னையும் மறந்து உய்வனோ!..

தண்டனிட்டு வணங்கினார்- திருநாவுக்கரசர்..

மாதர்பிறைக் கண்ணியானை -
மலையான் மகளொடும் கண்ட ஆனந்தம் அவருக்குள் பொங்கியது.

மனம் ஆறாது - கண்ணீர் வழிந்தது.. 
வலஞ்செய்து வணங்கினார்..

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்..

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட்கு ஆரமுதம் ஆகித் தோன்றும்..

படைமலிந்த மழுவாளும் மானுந்தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்..

ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்..

வாருருவப் பூண்முலைநன் மங்கைதன்னை
மகிழ்தொருபால் வைத்துகந்த வடிவுந்தோன்றும்..

- என்று, பரமனையும் பரமேஸ்வரியையும் ஐங்கரனையும் அறுமுகனையும் பலவாறு பரவித் தொழுது போற்றினார்..

கண்ணெதிரில் பேரொளிப் பிழம்பாகத் திகழ்ந்த - திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலினுள் புகுந்து அம்மையப்பனைப் போற்றி வணங்கி இன்புற்றார்...


திருப்பைஞ்ஞீலியில் - அப்பர் பெருமானுக்கு சோறும் நீரும் அளித்த வைபவம் - 

சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று நிகழ்கின்றது.


இறைவன் ஸ்ரீவாழைவன நாதன் 
அம்பிகை 
ஸ்ரீவிசாலாட்சி அம்பிகை

தலவிருட்சம் - வாழை (ஞீலி)
தீர்த்தம் - அப்பர் தீர்த்தம்.

காருலா மலர்க் கொன்றையந் தாரினன்
வாருலா முலை மங்கையோர் பங்கினன்
தேருலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியெம்
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்மினே!.. (5/41)
-: அப்பர் பெருமான் :-
**
திருநாவுக்கரசர்
திருவடி போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***