ஞாயிறு, அக்டோபர் 06, 2024

பூந்துருத்தி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 20
ஞாயிற்றுக்கிழமை

திருப்பூந்துருத்தி

 நன்றி கூகிள்

ஸ்வாமி 
ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி

வில்வம் வன்னி
காசித் தீர்த்தம், குடமுருட்டி


கருவறையின் தென்புறம் தென் கயிலை, வடபுறம் வட கயிலைக் கோயில்கள் விளங்குகின்றன..

தவ நிலையில் துர்க்கை தனிச் சநிதியில்.

ராஜ கோபுர நந்திக்கு நடுப் பகலில் பிரதோஷ பூஜை நிகழ்கின்ற தலம்..

சூரியனை நோக்கியபடி ஏனைய கிரகங்கள்.








காசியப முனிவரின் வழிபாட்டிற்காக கங்கை கிணற்றில்  பொங்கி வந்ததாக ஐதீகம் .. காசித் தீர்த்தம் என, கிணறு கோயிலினுள் இருக்கின்றது..

கிணற்றின் கரையில் காசி லிங்கம்.. முன் மண்டபத்தில் கயிலாய லிங்கம்..

கொடி மரத்திற்கு அருகில் தனியாக மேற்கு நோக்கிய காசி விசுவநாதர் கோயில்..

பித்ரு தோஷம் தீர்க்கும் தலங்களுள் இதுவும் ஒன்று..





ஸ்ரீ நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவி கிருமணத்தின் போது புஷ்ப கைங்கர்யம்  இங்கிருந்து நிகழ்ந்ததாக ஐதீகம்.

கிழக்கே திருக்கண்டியூர் வீரட்டம்.. தெற்கே திவ்யதேசமாகிய தஞ்சை மாமணிக்கோயில்.
மேற்கே திரு ஆலம்பொழில்..
வடக்கே திரு நெய்த்தானம், திரு ஐயாறு..


திருநாவுக்கரசர் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த திருத்தலம்... மதுரையில் சமணத்தை வென்று திரும்பிய  ஞானசம்பந்தர்  - திருநாவுக்கரசருடன் திருமடத்தில் தங்கியிருந்ததாக  சொல்லப்படுகின்றது..

அப்பர் பெருமான் உழவாரப் பணி செய்த திருத்தலம் என்பதனால்  நடப்பதற்கு ஞானசம்பந்தர் அஞ்சிய போது அவருக்காக நந்தி விலகிய திருத்தலம்..


மூலஸ்தானத்தின் நேர் பின்புறத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் சந்நிதி அமைந்துள்ள தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்..


அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி வணங்கிய திருக்கோயில்.. 


இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி திருக்கரத்தில் வீணையுடன் திகழ்கின்றார்..





திரு இசைப்பா பாடல்களை அருளிய பூந்துருத்தி காடவ நம்பிகள் அவதரித்த திருத்தலம்..

கிருஷ்ண லீலா தரங்கிணி இயற்றிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் இங்குதான் சித்தியடைந்தார்.. 


தெற்கு மற்றும் மேற்கு திருச்சுற்றுகளில் அப்பர் பெருமானின் வரலாறும் வடக்குத் 
திருச்சுற்றில் ஞானசம்பந்தர் சுந்தரர் வரலாறும்  பெரிய புராணக் காட்சிகளும்  காணக் கிடைக்கின்றன..




தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்கின்ற பேருந்துகள் திருப்பூந்துருத்தி வழியாகச் செல்கின்றன.. 


நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாஎன் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லாதன எல்லாங் கற்பித் தானைக்
காணாதன எல்லாங் காட்டி னானைத்
சொல்லாதன எல்லாஞ் சொல்லி என்னைத்
தொடர்ந்திங் கடியேனை ஆளாக் கொண்டு
பொல்லா என் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 6/43/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, அக்டோபர் 05, 2024

தரிசனம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
மூன்றாவது 
சனிக்கிழமை



காணொளிக்கு  நன்றி


கண்ணறிகின்ற கதிர்மணி வண்ணா
காசினி காக்கும் கருணா மூர்த்தி
எண்ணரும் பிழைகள்
எல்லாம் இழைத்தேன்

கருதா நெறியில்
இருதாள் தொலைத்தேன்
விதிவழி நானும்
வினைப்பயிர் விளைத்தேன்

இளைத்தேன் களைத்தேன்
பிழைத்தேன் பிழைத்தேன்
பிழைதனில் நீங்கித்
தவித்தேன் துதித்தேன்

ஆனைக் கருளிய வரதா வருவாய் 
அடியனுக் கருளிட வருவாயே..


விண்ணவர் வேந்தே
வேங்கடத் தரசே
மண்ணவர் ஏத்தும் 
மாதவ மூர்த்தி
மடையன் கடையன் 
கொடியன் என்றே
நடை தடுமாறி 
நானிங்கு வந்தேன்
கடையன் எனினும்
காத்தருள் புரிவாய்
கரு மாமுகிலே 
காருண்ய மூர்த்தி..

ஓம் ஹரி ஓம்

கோவிந்தோ கோவிந்த
கோவிந்தோ கோவிந்த 
***

வெள்ளி, அக்டோபர் 04, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 18
வெள்ளிக்கிழமை

திருப்புகழ் 
தலம் - குடவாயில்
(குடவாசல்)
கும்பகோணத்திற்கு
அருகில்


தனனா தத்தன தனனா தத்தன 
னனா தத்தன ... தனதான


அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் 
அயலார் நத்திடு ... விலைமாதர்

அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக 
ளவரே வற்செய்து ... தமியேனும்

மயலா கித்திரி வதுதா னற்றிட 
மலமா யைக்குண ... மதுமாற

மறையால் மிக்கருள் பெறவே யற்புத 
மதுமா லைப்பத ... மருள்வாயே

கயிலா யப்பதி யுடையா ருக்கொரு 
பொருளே கட்டளை ... யிடுவோனே

கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ கதிர் 
வேல் விட்டிடு ... திறலோனே

குயிலா லித்திடு பொழிலே சுற்றிய 
குடவா யிற்பதி ... யுறைவோனே

குறமா தைப்புணர் சதுரா வித்தக 
குறையா மெய்த்தவர் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கூர்மையானதும் மை பூசியதும் 
நஞ்சு என்பதுமாகிய விழிகளை
உடையவர்கள் பயனற்றவர்கள்  
காண்போர் அனைவராலும்  
விரும்பப்படுகின்றவர்கள், 

 உறங்கும் போதிலே
வஞ்சிக்கின்ற குணம் உடையவர்கள்..  
அவர்களது ஏவல்களைச் செய்து
அடியேனும் தன்னந்தனியன் ஆனேன்..

மயங்கித்  திரிகின்ற எனது எண்ணம் ஒழிந்து  
தீய குணமும் அழிந்து போக,

வேதங்களை ஓதி  நினது திருவருளை நான் பெறுமாறு, 
தேன் ததும்பும் மலர் மாலைகள் திகழ்கின்ற திருவடியைத் தந்து அருள்வாயாக....

கயிலாய நாதனாகிய  சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை  உபதேசித்தவனே, ஏனைய தேவர்கட்குக் 
கட்டளை இடுவோனே..

கடலுக்குள் ஓடிப் புகுந்த  சூரபத்மன் அழிவதற்காக, 
ஒளி மிகுந்த வேலை ஏவிய மாவீரனே

குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள
குடவாயில் எனும் நகரில் உறைபவனே
 
குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் செய்து கொண்ட ஞான மூர்த்தியே, குறையாத  மெய்த் தவ நிலையை உடையவர் தமது பெருமாளே..


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், அக்டோபர் 03, 2024

இடர் களையாய்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 17
 வியாழக்கிழமை


ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
இடர் களையும் திருப்பதிகம் 

முதல் திருமுறை. 
திருப்பதிக எண் - 52 .


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுஉனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால்  உயர்ந்த
நிறையுடையார்  இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (1)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! வேதங்களைத் தன்னுடைமையாய்க் கொண்ட வேதியனே, புலியின் தோலினை ஆடை என அணிந்த தூயவனே, அழகாய் முடித்த நீள்சடையின் மேல் வளர் பிறையினைச் சூடியவனே - என்றெல்லாம் உன்னைப் புகழ்ந்து வாழ்த்தினால் குறையுடையருடைய குற்றங்களை மனதில் கொள்ளாமல் - அவர்களுக்கு அருள் புரிகின்ற பெருமானே!.. உன்னை வணங்கும் கொள்கையினால் உயர்ந்து நிறையுடையார் ஆகிய அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!.. 


கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணிஇராப் பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (2) 

திருநெடுங்களம் மேவிய இறைவனே!... வெண்ணிற அலைகள் புரளும் பெருங்கடலில் ஆரவாரத்துடன்  பொங்கி எழுந்த நஞ்சினை - சின்னஞ்சிறு தினையின் அளவாக்கி, அதையும் கண்டத்தில் நிறுத்தி நீலகண்டனாக அருளிய தேவதேவனே!.. 
உன்னை மனத்தகத்தில் நிறுத்தி உனது புகழினைப் பாடியும் ஆடியும் அல்லும் பகலும் உன்னையே தியானித்து வாழ்ந்து வருகின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (3)

திருநெடுங்களம் மேவிய இறைவனே!.. நிமலா!... நீயே சரண்!.. - என, நின் திருவடிகளை வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்கு வந்த வலிய கூற்றுவனை - 'என் அடியவன் உயிரைக் கவராதே!.. -  என்று உதைத்தருளிய பெருமானே!.. 
உன் பொற்றிருவடிகளை வழிபடுவதற்காக நறுமணம் மிக்க மலர்களையும் திருக்குடங்களில் தூய நீரையும் நாளும் சுமந்து வரும் அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..


மலைபுரிந்த மன்னவன்தன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும்  அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்  தாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (4)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! மலையரசனின் திருமகளைத் திரு மேனியில் ஓர்பாதியாகக் கொண்டு மகிழ்பவனே!..  அலைபுரளும் கங்கையை விரிந்த சடையினுள் கொண்ட திருஆரூரனே!.. கபாலத்தில் பலியேற்று மகிழும் தலைவனே!.. 
உனது திருவடி நிழலின் கீழ் நின்று அநவரத தியானத்தால் உன்னை மறவாத அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்  தாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (5)

திருநெடுங்களம் மேவிய இறைவனே!.. நற்குணமுடையவர்களும், தவநிலை தாங்கியவர்களும் - பலருடைய இல்லங்களிலும் பலி ஏற்கும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களைப் பாடி உன் திருவடிகளைத் தொழுது வணங்குகின்றனர். கரை கடந்த வெள்ளம் எனப் பொங்கிப் பெருகி வரும் அன்பினால்  தலைவனாகிய -
உனது திருவடி நிழலை நீங்கி நிற்க இயலாத அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..


விருத்தனாகிப் பாலனாகி வேதம்  ஓர்நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (6)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! வழிபடும் அடியார் பொருட்டு அவரவர் தன்மைக்கேற்ப விருத்தராக வேடந்தாங்கியும், பாலனாக இளமை வடிவங் கொண்டும் அருள் புரிந்து ஆட்கொள்பவனே! நான்கு வேதங்களையும்   உணர்ந்த தலைவனே! நானிலம் வாழும் பொருட்டு நங்கை எனும் கங்கையை நறுமணம் கமழும் சடையின்மிசை மறைத்து வைத்துள்ள பெருமானே! கலைஞானங்களின் முதற் காரணனாகவும் மெய்ஞானங்களின் நிறைந்த பொருளானவனாகவும் திகழ்பவனே!.. 
உன் இணையடிகளின் புகழினை எல்லோரும் உணரும் வண்ணம் -
தாம் அறிந்த ஆடலாலும் பாடலாலும் பரவிப் பணிந்து - நாளும் பணி செய்து வாழ்கின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டிஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம்எரித்த மன்னவனே கொடிமேல்
வர சாந்தம் ஈதென்று  எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (7)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்ட பெருமானே! அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டி அமைத்த அம்பினால் - அன்பருடனும் அடியாருடனும் பகை கொண்டு மாறுபாடுற்று திரிந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்துப் பொடியாக்கிய மன்னவனே!   இடபக்கொடி உடைய  ஏந்தலே!.. 
இதுவே மணம் நிறைந்த சந்தனம் என்று,
எம்பெருமான் அணிந்த திருநீற்றை விரும்பி அணிந்து மகிழும் அடியவர்களின் 
இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..


குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற  அரக்கர்கோனை  அருவரைக்கீழ்  அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால்  ஏத்திஇராப் பகலும்
நின்றுநைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (8)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! காற்றில் ஆடும் கொடிகள் விளங்கும் மதில்களால் சூழப்பட்டு குன்றின்மேல் திகழ்வதாகிய இலங்கையின் அரக்கர் கோன் என்ற செருக்குடன் - திருக்கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயற்சித்த இராவணனை அம்மலையின் கீழேயே அல்லலுறும்படி கால் விரலால் அடர்த்த  பெருமானே! 
இத்தகைய நின் பெருமையினைப் புகழ்ந்தும் வாய்மொழியாகிய தாய்மொழி கொண்டு - நல்ல தோத்திரங்களால் போற்றி,
இரவும் பகலும் உன்னையே நினைத்து நெஞ்சம் உருகி மனம் கனியும் 
அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

வேழவெண்கொம்பு  ஒசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழஎங்கும் நேட ஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம்பு  அணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியி
நீழல்வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (9)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! கம்சன் ஏவி விட்டதனால் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை ஒடித்த கண்ணபிரானாகிய  திருமாலும், புகழ்  விளங்கும் நான்முகனும், தங்களைச் சுற்றியுள்ள இடமெங்கும் தேவரீரைத் தேடி நின்றபோது இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்ற ஜோதியனே! பன்றியின் கொம்பினை மார்பில் அணிகலனாக அணிந்த பெருமானே!..
உனது பொன்னடி நீழலையே எண்ணி வாழ்கின்ற 
அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவம்  ஒன்று அறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (10)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணர்ந்து அறியாதவர்களாகி - தாம் கைக்கொண்ட தவநிலைக்கு சிறிதும் பொருந்தாமல் கொடுஞ்சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு உண்மைப் பொருள் இல்லாது ஒழுகும் சமண, சாக்கியர்களை விட்டு விலகி, அழியாப் புகழுடைய வேதங்களாலும், தோத்திரங்களாலும் உன்னைப் பரவி - உனது திருவடித் தாமரைகளை நெஞ்சில் வைத்து வாழ்கின்ற 
அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..


நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.. (11)

மேன்மேலும் வளர்ந்து பொலியும் சடைமுடியுடன் திகழும் பெருமான் மேவிய  திருநெடுங்களத்தை - மூத்தோர் வாழும் பெரிய வீதிகளைக் கொண்ட சிரபுரம் எனும் சீர்காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றி வணங்கி,  பனுவல் மாலை எனப் பாடிய,  
திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் நலங்கொண்டு உணர்ந்து -
எம்பெருமானை வழிபட வல்லவர்களின் பாவங்கள் விலகும் என்பது உறுதியே!..

திருச்சிற்றம்பலம்

நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

மேன்மைமிகு தருமபுர ஆதீனம் அருளிய - உரையை அனுசரித்து எழுதப் பெற்றது.

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், அக்டோபர் 02, 2024

தவம் என்ன?..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 16
புதன் கிழமை


 மகாத்மா
தோற்றம் 2 - 10 - 1869


லால்பகதூர் சாஸ்திரி
தோற்றம் 2 -10 - 1904


காமராஜர்
மறைவு 2 - 10 - 1975

பெருந்தகையாளர்
இவர்களைத் தலைவர்களாகப் பெறுவதற்கு
தவம் என்ன செய்தோமோ..

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
*

ஜெய் ஜெய் பாரத்
***

செவ்வாய், அக்டோபர் 01, 2024

ஐயனார் பாட்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 15 
செவ்வாய்க்கிழமை

ஆவணி இரண்டாம் செவ்வாய் அன்று திருச்செந்தூர் அருகே ஸ்ரீ கற்குவேல் ஐயனார் தரிசனம்..

அப்போது மனதில் தோன்றிய சிறு பாமாலை.. 

முந்தைய பதிவில் வெளியான சில கண்ணிகளின் விரிவாக்கம் இன்றைய பாமாலை..


கற்கு வேலும் இருக்கையிலே
கவலை இல்லையே ஐயன்
கனிந்த முகத்தைப் பார்க்கையிலே
கலக்கம் இல்லையே..
1
நன்றி சொல்ல நாவில் ஒரு
வார்த்தை இல்லையே ஐயன்
தாமரைப் பூம்பாதம் தொழப்
பிணியும் இல்லையே.. 2

தேரிக் குடிஇருப்பை நோக்கித்
தேடி வரும் மானிடர்க்கு  
துணை கூட்டும் நீதியனே
கற்கு வேல் ஐயா.. 3

தினப் பொழுதும் திருவடிகள்
தொழ வேண்டும் தொழ வேண்டும்
வேத மந்த்ர ஜோதியனே
கற்கு வேல் ஐயா.. 4

கற்கு வேலின் கழலடிக்குப்
பாத நமஸ்காரம் ஐயன் 
குடியிருக்கும் கோயிலுக்கு
கோடி நமஸ்காரம்.. 5

பொங்கி வரும் பொங்கலுடன் 
பூஜை புனஸ்காரம் ஐயன்
குளிர்விழிகள் நோக்கிட்வே
சூழும் சுக ஸ்தானம்.. 6

ஏறிவரும் குதிரைச் சத்தம் 
எட்டுத் திசையும் கிடுகிடுக்கும்
சந்தனமும் சவ்வாதும் 
ஊர் முழுதும் கமகமக்கும்.. 7

பாவியரின் இதயக் குழி 
பதறிப் பதறி படபடக்கும்
கடுவிழிகள்  கதறிக் கதறி
கண்ணீரும் தான் வடிக்கும்.. 8

பாவியரைத் தண்டங்கொள்ள
கற்கு வேலும் பளபளக்கும்
பூத்து வரும் புண்ணியங்கள் 
புதுமலராய் சிலுசிலுக்கும்.. 9

பூர்ணகலை பொற்கலையும் 
அருகிருக்கும் கோலம் ஐயன்
திருக்கோலம் நலம் அருளும் 
வாழ்வில் வசந்த காலம்.. 10


நானுண்டு காவலுக்கு 
என்று வரும் தெய்வமே
நீயிருக்கக் குறையும் ஏது
கற்கு வேலும் சரணமே.. 11

இருபத்தோரு பரிவார
தெய்வங்களும் சரணமே
இதயத்திலே ஜோதியாக
சிவ மகனும் சரணமே.. 12

மாடசாமி மனம் கூடி
மகிழ்ந்திருக்க வரணுமே
கருப்பசாமி விருப்பசாமி
கை கொடுக்க வரணுமே.. 13

சிவஹரியின் புத்திரனே
சேவடிகள் சரணமே
செய்ததையும் பொறுத்தருளி
திருவருளும் தரணுமே.. 14 

செந்தூரின் அருகிருக்கும் 
செண்டாயுத தெய்வமே
சேர்ந்தவர்க்குக் காவலாக
நின்றிருக்கும் தெய்வமே.. 15

ஆறுமுக வேலவனின்
அருகிருக்கும் ஸ்வாமியே
அருள் அரசைக் காண்பதற்குத்
தேடி வந்தோம் ஸ்வாமியே.. 16

ஆதரவே அருள் முகிலே
அடைக்கலமே அடைக்கலம்
நீதியனே ஜோதியனே
அடைக்கலமே அடைக்கலம்.. 17

வருந்துயரும் தீர்த்திடுவாய்
அடைக்கலமே அடைக்கலம்
பெருந்துயரில் காத்திடுவாய்
அடைக்கலமே அடைக்கலம்.. 18

வல்வினையும் அணுகாமல்
அடைக்கலமே அடைக்கலம்
தொல் பிணியும்  சேராமல்
அடைக்கலமே அடைக்கலம்..19

பகை பழியும் ஓட்டிடுவாய்
அடைக்கலமே அடைக்கலம்
வகையென்று வாழ்வுதர
அடைக்கலமே அடைக்கலம்.. 20

ஆருமில்லா வழிதன்னில் 
ஐயா நீ அடைக்கலம்
அன்னையாக தந்தையாக 
என்றென்றும் அடைக்கலம்.. 21


தாய்மடியாய் சாய்ந்திடவே
அடைக்கலமே அடைக்கலம்
தந்தையெனக் காத்திடவே
அடைக்கலமே அடைக்கலம்.. 22

கற்குவேல் ஐயனே
அடைக்கலம்
அடைக்கலம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***