நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 20, 2022

கருடசேவை 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று தஞ்சை மாநகரில் இருபத்து நான்கு கருடசேவை வெகு சிறப்பாக நடைபெற்றது..

பராசர மகரிஷிக்கு ஸ்ரீ மஹா விஷ்ணு கருட வாகனத்தில் தரிசனம் நல்கிய நாள் திரு ஓணம் என்றதன் அடிப்படையில் இவ்விழா..

அதன்பின் இங்கே திருமங்கை ஆழ்வார் தரிசனம் பெற்றதும் திரு ஓண நாளில் தான்..

இவ்வகையில் ஆதியான
ஸ்ரீ நீலமேகப்பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவு பெற்றதும் அடுத்து வரும் திருவோண நாளில் இவ்வைபவம் தொடங்கியது..



நேற்று முன்தினம் (திருவோணம்) சனிக்கிழமை காலையில் புறப்பாடாகி அருகிலுள்ள ஸ்ரீ நரசிங்கப் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.. அங்கே ஆழ்வார் மங்களாசாசன வைபவம்.. கருட வாகனத் திருக்காட்சி.. 

திருமங்கை ஆழ்வார்

நேற்று (ஞாயிறு) ஆழ்வாருக்கு அருளிய  திருக்கோலம் ஊருக்கும் உலகுக்கும்..

தொழுத கையினராக திருமங்கை ஆழ்வார் அன்ன வாகனத்தில் முன்னே செல்ல அவரைத் தொடர்ந்து ஸ்ரீ நீலமேகப்பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் கருட வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து ஸ்ரீ நரசிங்கப் பெருமாள் ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் ஸ்ரீ கல்யாண வெங்கடேசர் வேலூர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீ கோதண்டராமர் சுங்காந்திடல் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கரந்தை ஸ்ரீ யாதவக் கிருஷ்ணர் படித்துறை ஸ்ரீ வெங்கடேசர் - என, எழுந்தருளினர்..



ஸ்ரீ நீலமேகப்பெருமாள்






தஞ்சை நகரின் வடக்கு எல்லையாகிய கொடி மரத்து மூலையின் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் அருகில்  நகரில் உள்ள மேலராஜவீதி ஸ்ரீ விஜய ராமர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், கீழவாசல் ஸ்ரீ யோகநரசிம்மர் ஸ்ரீ கோதண்ட ராமர் கீழராஜவீதி ஸ்ரீ வரத ராஜர், தெற்குராஜவீதி ஸ்ரீ கலியுக வெங்கடேசர், ஸ்ரீ ஜனார்த்தனர், பஜார் ஸ்ரீ ராமர் நாலுகால் மண்டபம் ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேசர் கொள்ளுப்பேட்டைத் தெரு ஸ்ரீ வரதராஜர் மகர்நோன்புச்சாவடி ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேசர் - என, ஒன்று கூடியதும் நான்கு ராஜ வீதிகளிலும் திருவுலா எழுந்தருள பெருந்திரளான அன்பர்கள் தரிசித்து இன்புற்றனர்..

இங்கே குறிப்பிட்ட வகையில் சில கோயில்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.. ஆயினும் இருபத்து நான்கு கோயில்களின் கருட சேவை நடந்துள்ளது..






இன்று பதினைந்து திருக் கோயில்களில் நவநீத சேவை.. செவ்வாய்க் கிழமையன்று விடையாற்றி விழா..


எனது உடல் நிலை சரியில்லாததால்
கருட சேவையைத் தரிசிப்பதற்கு நான் செல்லவில்லை.. எனது மகன் தனது நண்பர்களுடன் காட்சிப்படுத்திய கோலாகலம் இன்றைய பதிவில்!..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
*** 

8 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் சிறப்பு.  தஞ்சையில் இத்தனை பெருமாள் கோயில்கள் இருப்பது அறிந்தேன்.  பெரும்பாலானவை சென்றதில்லை.

    உடல்நிலையில் கவனம் வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கருட சேவை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. அத்தனைக் கோவில் பெருமாளையும் பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். ஒரே நேரத்தில் இவ்வளவு பெருமாள் கோவில் கருட சேவை தரிசனம் காணப் பெற்றவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள். அந்த பெரும் பாக்கியத்தை அழகான படங்கள், மற்றும் பதிவின் வாயிலாக எங்களுக்கும் தந்த உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    ஓம் நமோ நாராயணாய நமஃ

    தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தஞ்சையில் எந்தப் பெருமாள் கோயிலுக்கும் சென்றதே இல்லை. ஆனாலும் இந்த கருட சேவைக்கு முன்னாட்களில் என் அப்பா வந்திருக்கார். கூட்டம் காரணமாக எங்களை எல்லாம் அழைத்துச் சென்றதில்லை. இத்தனை அருகில் இருந்தும் உங்களால் தரிசிக்க முடியலை என்பது வேதனை தான். உங்கள் மகன் அருமையாகக் காட்சிப் படுத்தி இருக்கார். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பெருமாள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய கருட சேவை பதிவு மனதைக் கவர்ந்தது. 24 கருட சேவையா? கேள்விப்பட்டதே இல்லை.

    பகிர்வுக்கு நன்றி. விரைவில் நலம் பெற்று கோவில் தரிசனங்களைத் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. கருட சேவை தரிசனம் செய்து கொண்டேன். உங்கள் மகனுக்கு நன்றிகள். நன்றாக படம் எடுத்து இருக்கிறார்கள்.
    உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
    விரைவில் நலம்பெற நாராயணன் அருள்வார்.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அருமை துரை அண்ணா. உங்கள் மகன் மிக அருமையாக எடுத்திருக்கிறார். வாழ்த்துகள்

    உடல் நலம் சரியில்லையா? கவனமாக இருங்கள் அண்ணா. அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதே. மருத்துவ ஆலோசனை பெற்றீர்களா?

    24 கருட சேவை கேட்டதுண்டு. விவரங்கள் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நிறைவான கருடசேவை படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..