வெள்ளி, செப்டம்பர் 07, 2018

கற்பக மூர்த்தி

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா..
-: ஔவையார் :-


நாடெங்கும் விநாயக சதுர்த்தி விழாக்கள் களை கட்டியிருக்கின்றன...

பொருளாதாரத்தை அனுசரித்து
பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடும் திருக்கோயில்களும் உள்ளன..

அந்த வகையில்
காரைக்குடிக்கு அருகிலுள்ள
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் முக்கியமானது...

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் - என்றாலும்,
அங்கே பிரம்மாண்டமாக விளங்குவது சிவாலயம்...

அருள்தரும் வாடாமலர் மங்கை உடனாகிய மருதீசர் உறையும்
அழகான திருக்கோயில்...

ஆனால் -
மூல மூர்த்தி -
மலைப் பாறையின் சிறு குகைக்குள்
புடைப்புச் சிற்பமாக விநாயகர் திருமேனி...

வலஞ்சுழித்த துதிக்கை..
இரண்டு திருக்கரங்களுடன் பால கணபதி எனும் திருக்கோலம்..

ஸ்ரீ கற்பக விநாயகர் வடக்கு திசை நோக்கித் திகழ்கின்றார்...
ஆறடி உயரம்... அருள் நோக்கு மிக நன்றாகப் புலப்படும்...

ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர்...

இந்த குடைவரையுடன் இணைந்ததாக விளங்கும்
சிவாலயம் சமீப காலத்தைச் சேர்ந்தது...

கிழக்கு முகமாக விளங்கும் சிவாலயத்தையும்
குடைவரையையும் ஒருசேர கிரி வலம் செய்யலாம்...

மருத மரங்கள் நிறைந்திருந்ததால்
இவ்வூருக்கு மருதங்குடி, மருதவனம் என்பதே பழைய பெயர்...

காரைக்குடி - திருப்பத்தூர் பிரதான சாலையில் இறங்கினால்
திருக்கோயிலை நோக்கித் தெற்காகச் செல்கின்றது சாலை...

திருக்கோயிலை நெருங்கும் முன்பாக பெரிய திருக்குளம்...

அங்கிருந்தே -
ஆனைமுகத்து அம்மானை ஒளிமயமான திருக்கோலத்தில் தரிசிக்கலாம்...

நகரத்தார்களின் சீர்மிகு நிர்வாகத்தில் சிறப்புடன் விளங்குகின்றது..

திருக்கோயிலுக்குள் -
நிர்வாகத்தினரைத் தவிர படமெடுக்க அனுமதியில்லை...

சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோயிலுக்குச் சென்றபோது
வெளியில் இருந்து படங்கள் எடுத்திருக்கின்றேன்...

அப்படி எடுக்கப்பட்ட படங்கள் எங்கேயிருக்கின்றன!..
- என்று தெரியவில்லை...

கிடைத்தால் பதிவில் தருகின்றேன்..

இவ்வேளையில்
பிள்ளையார்பட்டியில் நிகழும் வைபவங்களின் படங்களும்

தஞ்சையை அடுத்துள்ள
கணபதி அக்ரஹாரம் மற்றும் மெலட்டூர்
விநாயகர் திருக்கோயில்களில் நிகழும் வைபவங்களின்
படங்களும் இன்றைய பதிவில்!..

வழக்கம் போல சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி...

பிள்ளையார்பட்டி வைபவங்கள்..

ஸ்ரீ கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி


ஸ்ரீ சண்டேஸ்வரர்
பிள்ளையார்பட்டி
கணபதி அக்ரஹாரம் - தஞ்சை..




மெலட்டூர் - தஞ்சை




அற்புதக் கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத்து இருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை..
-: கவியரசர் கண்ணதாசன் :-

ஓம் கம் கணபதயே நம: 
ஃஃஃ

21 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    முத்தாய்ப்பாய் முடிவில் கவிஞரின் பாமாலை அமைந்தது அருமை.

    படங்கள் அழகிய தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. விநாயகர் விவரங்களும், படங்களும் சிறப்பு. நான் சமீபத்தில் சென்று வந்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் நினைவுக்கு வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      திருவலஞ்சுழி அழகான கோயில்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கற்பகக் களிறை இருமுறை பார்த்திருக்கோம். பாண்டிய மன்னனால் எழுப்பப்பட்ட குடவரைக்கோயில்களில் இதுவும் திருப்பரங்குன்றமும் சொல்வார்கள். மெலட்டூர் விநாயகர் விழா பற்றி அதிகம் அறிந்ததில்லை. கணபதி அக்ரஹாரத்தில் ஊர் மொத்தமும் அன்று வீட்டில் கொழுக்கட்டை செய்ய மாட்டார்கள் எனவும் கோயிலிலே தான் செய்யணும் என்று ஊர்க்காரர்கள் சொல்லிக் கேட்டிருக்கேன். அந்த வழியாத்தான் கும்பகோணம் பலமுறை போய் வருகிறோம். ஆனால் மஹாகணபதி தரிசனம் இன்னமும் கிடைக்கவில்லை. ஊர் பெரிய ஊராகத் தெரிகிறது. ஒரு முறை திட்டம் போட்டுக் கொண்டு போயிட்டு வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      சாலையிலிருந்து சிறிது தூரம் தான் கோயில்..

      பிள்ளையார் சதுர்த்தி அன்று ஊர் மக்கள் கூடி ஒன்றாக வழிபடுவது சிறப்பு...

      அவசியம் ஒருமுறை தரிசனம் செய்யுங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நகரத்தார்கள் கோவில்களுக்கும் சிவத் தொண்டுக்கும் தாராளமாகப் பண உதவி செய்பவர்கள். சைவத்தைப் போற்றியவர்கள் நகரத்தார் என்று சொன்னால் அது மிகையில்லை.

    பிள்ளையார்பட்டி விநாயக தரிசனம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      நகரத்தார்கள் திருப்பணி மிகச் சிறப்பானது...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அதுக்கு ஏற்றமாதிரி, நகரத்தார் பாடிய பாடலையும் வெளியிட்டிருக்கிறீர்கள் (வேற யாரு... கண்ணதாசன் தான்). அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ. த..

      பிள்ளையார்பட்டியைப் பற்றி எழுதும் போது கவியரசர் பாடலும் நினைவுக்கு வந்தது...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகான படங்கள். இரண்டொரு முறை பிள்ளையார்பட்டி சென்றதுண்டு. அழகான கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. உங்களால் நாங்கள் விநாயகர்களைக் கண்டோம், தரிசித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கண்பதி அக்ஹாரம், மெலட்டூர் பிள்ளையார் பார்த்தது இல்லை.
    அவர்கள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    என் தங்கை வீட்டில் பத்து நாள் பிள்ளையார் கொலு வைப்பாள், பூஜைகள் செய்வாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      பிள்ளையார் கொலு என்பது சிறப்பு...

      1990 களில்
      பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரில் 108 விதமான பிள்ளையார் பொம்மைகளுடன் ஒரு இல்லத்தினர் சதுர்த்தி கொண்டாடிய செய்தி மங்கையர் மலரில் வெளியாகியிருந்தது...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. நகரத்தாரின் ஒன்பது கோவில்களுக்கும்சென்று வந்தது நினைவில் இன்க்லூடிங் பிள்ளயார் பட்டி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..