நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 14, 2016

கோலம் திருக்கோலம்..

அக்கா... அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. செய்றீங்க.. பழைய கோல நோட்டெல்லாம் இன்னும் பத்திரமா வெச்சிருக்கீங்களா!..

இதெல்லாம் முப்பது வருஷ பழசு.. தெரியுமா!..

பார்த்தாலே தெரியுதே.. பாருங்களேன்.. நோட்டு விலை பதினைஞ்சு நயா பைசா..ன்னு போட்டிருக்கு!..


தமிழ்ச்செல்வி
நான் படிக்கிறப்பவே - கோலப் போட்டியில எல்லாம் கலந்துக்குவேன்.. எத்தனை பரிசு வாங்கியிருக்கிறேன்... 

ஓ!..

என்னயப் பார்த்ததுமே - மத்த பொண்ணுங்க..ல்லாம் தமிழு வந்துட்டாடி... இனிமே நாம என்னத்தைப் போடறது..ன்னு அசந்துடுவாங்க!..

உங்க கை வண்ணமே தனி தானே அக்கா!..

இனிமே அந்த நாளெல்லாம் திரும்பி வருமா..ன்னு தெரியலே!... அதிருக்கட்டும்.. அன்னைக்கு பாரதி விழாவில என்ன அருமையான பாட்டு!.. அடேயப்பா... அத்தனை பேரும் யாரு.. இந்தப் பொண்ணு..ன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு..

போங்க அக்கா!.. எனக்கு வெக்கமா ஆயிடுச்சி.. நான் ஏதோ தெரிஞ்சதைப் பாடினேன்.. அது இப்படியாகும்..ன்னு நினைக்கலை!...

அதில்லை தாமரை!... ழகர.. ளகர.. உச்சரிப்பு எல்லாம் சுத்தமா தெளிவா...  உண்மையிலேயே உணர்ச்சி பூர்வமா இருந்துச்சு உன் பாட்டு... 

என்னக்கா!.. நீங்க வேற ரொம்பப் புகழ்...றீங்க!..

அந்தப் பெரியவர் - அத்தான்..கிட்ட வந்து -  செந்தில்.. இந்தப் பொண்ணு உங்க உறவுக்காரங்களாமே.. ந்னு கேட்டதும் அத்தானோட முகத்தைப் பார்க்கணுமே.. ஒரே பூரிப்பு!...

பயந்துகிட்டே தான் வந்தேன்...நல்லவேளை... ஒன்னும் கோளாறு ஆகலை!.. 

மகாகவியோட பாட்டுகள்..ல நாலு தெரிஞ்சுகிட்டா போதும்.. தன்னம்பிக்கையும் தைரியமும் தன்னால வந்துடும்...

அட.. எங்க தமிழ் ஐயாவும் இப்படித்தான் சொல்வார்!..

தாமரை.. நானும் தமிழாசிரியர் பொண்ணு தான்... அன்னைக்கு மனப்பூர்வமா தமிழ் படிச்சதினால தான் உடம்பும் மனசும் உறுதியா இருக்கு!..


தாமரை
ஆமாங்..க்கா!.. தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் நாம காப்பாத்துனா... தமிழும் தமிழ் கலாச்சாரமும் நம்மைக் காப்பாத்தும்..ன்னு சொல்வாங்க எங்க தாத்தா!.. அவங்க அந்தக் காலத்திலயே குருகுலத்தில படிச்சவங்க.. ஏதேதோ பழைய சுவடிக்கெல்லாம் விளக்கம் எழுதினாங்களாம்!.. 

இதெல்லாம் நீ சொல்லவில்லையே.. தாமரை!..

தொண்ணூற்று ஆறு வயசு வரைக்கும் நடை உடையா இருந்தாங்க.... பெரிய கார்த்திகை அன்னைக்கு ஜோதி ஆகிட்டாங்க... அவ்வளவு சிவனடியார்கள் வந்து தேவாரம் திருவாசகம் பாடி மரியாதை செஞ்சாங்க.. அப்போ எனக்கு பத்து வயசு!..

அவங்கள்..லாம் கொடுத்து வைச்சவங்க!..

எனக்கு பேர் வெச்சதே எங்க தாத்தா தானாம்!.. எங்க அப்பத்தா.. எண்பத்தைஞ்சு வயசு வரைக்கும் இருந்தாங்க..  வாராவாரம் வீட்டை சாணி போட்டு மெழுகி.. பச்சரிசி மாவுல நீர்க்கோலம் போடுவாங்க..  நிலைப்படிக்கெல்லாம் மஞ்சள் பூசுவாங்க.. குங்குமம் வைப்பாங்க!.. நல்ல நாள் பெரிய நாள்..ல எல்லாம் செங்காவி பூசுவாங்க.. மாவிலை ஒடிச்சிக்கிட்டு வரச் சொல்லி தோரணம் கட்டுவாங்க...

தாமரை!.. அந்த மாதிரியெல்லாம் இப்ப யார் செய்றாங்க... யாருக்கு இடுப்பு வளையுது?...

அவங்களுக்கு அப்புறம் வீட்டு..ல சிமெண்ட் தரையானது.. அதுக்கப்புறம் மொசைக் வந்திச்சு.. இப்ப டைல்ஸ்.. கிரானைட்.. ன்னு பளபளப்பு.. ஆனா வீடு கழுவ முடியலை.. ஈரத்துணியைப் போட்டு துடைங்க.. அப்படி...ன்னு சொல்றானுங்க...

ஆமாம்.. தரையில கோலம் போட முடியலை.. ஸ்டிக்கர் கோலத்தை வாங்கிக் கிட்டு வந்து ஒட்டுறாங்க.. கோலம் போடறதும் மறந்து போச்சு.. எங்க சுகந்திக்கே கை வளையமாட்டேங்குது!..

கலாச்சாரம் தானே அடையாளம்.. அதை கைவிடாம இருந்தாதானே.. நாம எல்லாம் தமிழர்..ன்னு சொல்லிக்கலாம்!.. கலாச்சாரத்தை மறந்துட்டு நின்னா.. என்னாகும்?.. இன்னும் நூறு வருசம் கழிச்சி..

நீ வேற!.. நூறு வருசம் எல்லாம் என்னத்துக்கு?.. பத்து வருசமே அதிகம்!..

ஒரு பத்து வருசம் கழிச்சு - அடேய்.. உன் அடையாளம் என்ன..ன்னு கேட்டா.. ஒன்னும் தெரியாது.. ஆந்தை மாதிரி முழிக்க வேண்டியது தான்!..



ஏதோ இந்த மார்கழி மாசம் வந்துட்டா போதும்.. வீட்டு வாசல்ல இந்தக் கோலம் போட்டால்.. மகாலட்சுமி வந்துடுவா!.. அந்தக் கோலம் போட்டால் குபேரன் வந்துடுவான்... அப்படின்னு பத்திரிக்கையிலயும் டீவியிலயும் கலக்குறானுங்க.. அதுக்காகத்தான் ரொம்ப பேரு இப்போ கோலம் போட ஆரம்பிச்சு இருக்காங்க!...

இதுக்கு இடையில - அவங்க வாசல்..ல கோலமா போடறாங்க.. அவங்கள்..லாம்  நல்லா இல்லையா?.. - அப்படி..ன்னு கேள்வி கேட்டுக்கிட்டு ஒரு கும்பல் கிளம்பி விடும்!..

நல்லா இருக்கிறதும் இல்லாததும் அவங்க அவங்க மனசாட்சிக்குத் தான் தெரியும்!.. இப்ப கூட இந்த பழைய நோட்டெல்லாம் எதுக்கு.. ன்னு தெரியுமா?..

ஏங்..க்கா!.. எதும் போட்டியில கலந்துக்க போறீங்களா?..

இல்லே..ம்மா!.. பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க.. எல்லாம் கோலம் போட்டு பழகிக்கணுமாம்... எங்க அம்மா பெரிய களஞ்சியம் அப்படின்னு.. சுகந்தி சொல்லிட்டா!.. 

உண்மையில நீங்களும் அத்தானும் பெரிய களஞ்சியம் மாதிரி தான்.. நான் தான் அன்னைக்கு விவரம் தெரியாம சிவபூஜையில கரடி மாதிரி இடைஞ்சல் பண்ணிட்டேன்...

அதெல்லாம் ஒன்னுமில்லை.. தாமரை!...

எனக்கு மனசு ஆறவில்லை.. அக்கா!...

அதை விடு.. தாமரை.. இந்தப் பொண்ணுங்களுக்கு எல்லாம் கோலம் சொல்லித் தரணும்...

அக்கா.. எனக்கும் கோலம் சொல்லிக்கொடுங்க அக்கா!.. எவ்வளவு சார்ஜ் பண்றீங்க!..

அடிப் பைத்தியம்!.. இது ஒரு சேவையம்மா.. சேவை!..

எனக்குத் தெரியாதா.. சும்மா.. லுலு...லுவா!...


நானும் பக்கத்து வீட்டு ராஜியும் விடியக்காலைல கோலம் போடறப்ப.. உங்க அத்தான் கன்னுக்குட்டிய கையில பிடிச்சுக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடப்பாங்க.. அவங்களைப் பார்த்ததும் எனக்குக் கையும் ஓடாது.. காலும் ஓடாது.. நேர்க்கோலம் எல்லாம் நெளி கோலம் ஆகிப் போகும்.. ராஜி கிடந்து சிரிப்பா!..

அதெல்லாம் வசந்த காலம்... இல்லையா!..

அதுமட்டுமா!.. விடியற்காலைல.. கோலம் போடுறப்ப பனிக்காத்து ஒத்துக்காது... ந்னு - எங்க அம்மா எல்லாருக்கும் பனங்கல்கண்டு போட்டு சுக்குக் காபி கொடுப்பாங்க.. அதுல ஒரு குவளை உங்க அத்தானுக்கும் போகும்!..

இது வேறயா.. சரிதான்!..

ஆனா - அவங்களைப் பார்த்ததுமே எனக்கு வேர்த்து விடும்.. தாமரை!..

அக்கா.. உங்களுக்குத் தான் அதெல்லாம் ஒத்து வராதே!..

எதெல்லாம்!?..

அதை அப்புறமா சொல்றேன்.. இப்போ.. நீங்க சொல்லுங்க.. என்னைக்கு பயிற்சி வகுப்பு?.. நான் கலர் மாவு எல்லாம் வாங்கி வந்துடறேன்..

கலர் மாவா?.. அதெல்லாம் வேண்டாம்.. சாதாரணமா வந்தா போதும்.. பேனா.. கலர் பென்சில் நோட்டு கொண்டு வந்தா போதும்.. கோலம் பழகினதும் அரிசி மாவுல தான் போடணும்.. என்னைக்கும் இதை மறக்கக் கூடாது..



ஏங்..க்கா.. கலர் பொடியில போட்டா என்ன?...

கோலம்..ங்கறது ஒரு தர்மம்.. கைப்பிடி அரிசி மாவுல ஆயிரமாயிரம் எறும்புகளுக்கு அன்ன தானம் பண்றோம்... கலர் பொடி எல்லாம் ரசாயனம்.. கலர் கோலத்தைத் தேடி எறும்புங்க வராது... அதெல்லாம் ஒரு அலங்காரத்துக்குத் தான்.. அத்தானுக்கு அரிசி மாவுல கோலம் போட்டா தான் பிடிக்கும்...

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!... அக்கா.. இந்த இரசாயனம் எல்லாம் தண்ணில கரைஞ்சி மண்ணுக்குள்ளே போனா - அங்கேயிருக்கிற புழு பூச்சிக்கெல்லாம் ஆபத்து தானே!..

ஆமாண்டா.. செல்லம்!..

சே.. முட்டாள் தனமா.. கலர்ப் பொடியெல்லாம் வாங்கி வெச்சிருக்கேன்.. வெள்ளைக் கருங்கல்லை அரைச்சி கோலமாவு..ன்னு விக்கிறான்.. அதையும் வாங்கி வெச்சிருக்கேன்... பெரிய தப்பு பண்ணிட்டேன்.. அக்கா!..

நீ மட்டுமில்லே தாமரை.. முக்கால்வாசிப் பேர் இப்படித்தான் இருக்கிறாங்க... இது எதுக்கு.. இதுக்குள்ள அர்த்தம் என்ன.. அப்படிங்கறதை எல்லாம் யோசிக்கிறதே இல்லை...

அக்கா.. புயலோட புயலா -  நல்லா இருந்த மரங்களையும் சேர்த்து வெட்டித் தள்ளிட்டாங்களாம் - சென்னையில.. செய்தி படிச்சீங்களா!..







ஆமாம்.. படிச்சேன்.. அறிவு வளர்ந்திருக்கிறதால புயலைத் தடுக்க முடியலை...ன்னாலும் சேதங்களை ஓரளவுக்குக் குறைக்க முடிஞ்சது.. ஆனா - இந்த மாதிரி சமூக விரோதங்களை தடுக்கவே முடியாது போல இருக்கு... மரங்கள்..லாம் வேரோட சாய்றதைப் பார்க்கவே வருத்தமா இருந்தது.. அதுல இந்தக் கொடுமையும் வேற!..   

அக்கா.. கோலம் போட்டு சாணத்தில பூசணிப் பூ வைக்கணுமே.. அதுக்கெல்லாம் எங்கே போவது?...



அதெல்லாம் பிரச்னையே இல்லை.. மார்கழி முழுக்க பசுஞ்சாணமும் பூசணிப் பூவும் கொண்டு வந்து தர்றதுக்கு பக்கத்து ஊர்ல சொல்லியாச்சு..  

அது தானே!.. அக்கா இருக்க கவலை எதுக்கு?.. சரி.. நான் புறப்படட்டுமா!.. 

இரும்மா.. சுக்கு காபி ஒரு வாய் குடி!.. குளிருக்கு நல்லது.. குங்குமம் எடுத்துக்க தாமரை!..

அது சரிக்கா!.. மார்கழி..ல திருப்பாவை திருவெம்பாவை எல்லாம் படிக்கணும் தானே!..உங்க கிட்ட புத்தகம் இருக்கா?...

படிக்கிறது இருக்கட்டும்.. அதுமாதிரி நடக்கணும்.. திருப்பாவை திருவெம்பாவையின் நோக்கம் இறைவனை அடைறது மட்டும் இல்லை!..

அப்புறம்?..


இயற்கையை ரசிக்கிறது.. இயற்கையை நேசிக்கிறது..
இயற்கையை சுவாசிக்கிறது!..

அப்போ.. மார்கழி முதல் நாள்..ல இருந்து கோலமும் குதூகலமும் தான்!..


இயற்கையை நேசிப்போம்..
இயற்கையை சுவாசிப்போம்!.. 
* * * 

9 கருத்துகள்:

  1. மார்கழி கோலம் பற்றிய பதிவு அருமை.
    இயற்கையை நேசிப்போம், இயற்கையை சுவாசிப்போம்.
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இனி வெயில் காலத்தில் அதிக சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இந்தப் பதிவைப் படிக்கும்போது பதிவர் கவிஞர் சிவகுமாரன் முன்பு எழுதி இருந்த நீளம் தாண்டப் பழகோணம் என்னும் பதிவு நினைவுக்கு வருகிறது மார்கழி மாதத்தில் தெருவெல்லாம் கோலம் போடப்பட்டு இருப்பதால் சாலையில்அவற்றைஉ மிதிக்காமல் நடக்க நீளம் தாண்டப் பழகோணம் என்று எழுதி இருப்பார் இன்று பொதிகையில் பாரதியார் நினைவு நாளாக ஒரு இசை நிகழ்ச்சி இருந்தது.தியாகையர் நினைவாகப் பஞ்ச ரத்ன கிருதிகள் பாடுவதுபோல் பாரதியின் ஐந்து பாடல்களை இசைக்கலைஞர் களோடு சின்னக் குழந்தைகளும் பாடியது நிறைவாய் இருந்தது

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு. கோலம் இன்னமும் சில இடங்களில் போடுகிறார்கள் என்றாலும், கோலமாவிலும், கலர்பொடியிலும் தான். அரிசி மாவில் கோலம் போடுபவர்கள் அரிதாகி வருகிறார்கள்....

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. மார்கழிக் கோலம் பற்றி நல்ல பகிர்வு அய்யா...
    அரிசி மாவுக் கோலம் இப்போது பெரும்பாலான இடங்களில் அரிதாகிவிட்டது...
    நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையான பதிவு சகோதரா! நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..