செவ்வாய், டிசம்பர் 01, 2015

மீண்டும்.. மீண்டும்..

ஆடுமாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா..
புள்ளகுட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா!..

இது, தஞ்சை மண்ணில் வழங்கி வரும் சொல்வழக்கு!..

கடந்த ஐப்பசி மாதத்தின் கடைசி நாட்களில் -
தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தபோது -
தஞ்சை திருச்சி மாவட்டங்களில் பரவலான மழைதான்!..

தென் மாவட்டங்கள் மழையினால் திக்குமுக்காடிய போது கூட - தஞ்சை வட்டாரங்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன..

ஸ்ரீ வருணன் - தஞ்சை பெரியகோயில்
இந்நிலையில் - நேற்று முன் தினம் ஞாயிறு அன்று வருணபகவான் தஞ்சையை நோக்கிக் கண் மலர்ந்தார்..

விடியற்காலையில் மழை பெய்யத் தொடங்கிற்று.. சற்று நேரத்தில் கனமழையாகி - இரவு வரை பெய்து கொண்டிருந்தது..

திங்களன்றும் - விடாதே.. பிடி!.. - என்று விரட்டிக் கொண்டு வந்ததால் - நேற்று இரவும் நல்ல மழை..

இதனால், வேளாண் நிலங்கள் - மழைநீரில் மூழ்கியுள்ளன..

துரத்திக் கொண்டுவரும் கருமேகங்களைக் கண்டு மக்கள் திகைத்து நிற்கின்றனர்..

இவ்வேளையில்,

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்து வருகின்றது.. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் - அடுத்த ஐந்து தினங்களுக்கு கனமழை பெய்யும்!..

- என, வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது..

வங்கக்கடலின் தென்மேற்காக - உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளதாம்..

தமிழகத்தில் இயல்பு நிலைக்கு மேலாக, அதிக மழை பெய்துள்ள நிலையில் - மேலும், ஐந்து நாட்களுக்கு கனமழை - என, எதிர்பார்க்கப்படுவதால் -

கல்வி நிலையங்களுக்கு - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே பெய்த தொடர்மழை - நமக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்துள்ளது..

(கீழுள்ள படங்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை)








இதுவும் போதாதென்று, சென்னையின் சாலைகளில் - திடீரென பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளதாக செய்திகள்..


அதிக மழையின்போது - மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து - இறுக்கம் குறைவான பகுதிகளில் - சற்றே மண் உள்வாங்குவது இயல்பு..

இதுமாதிரியான மண் உள்வாங்குதலை பல இடங்களில் பார்த்திருக்கின்றேன்..

கிராமங்களில் - கார்காலத்துக்கு முன்னால் - மழையை எதிர்பார்த்து, மாந்தோப்பு தென்னந்தோப்புகளை ஆழமாக உழுது வைப்பார்கள்..

அடுத்து பெய்யும் மழை - உழப்பட்டிருந்த மண்ணை ஊடுருவிக் கொண்டு பூமிக்குள் சென்று சேரும்..

அப்போது மண் உள்வாங்கி விளங்கும்..

புதிதாகக் கட்டப்பட்ட வீடு  - முதல் மழைக்காலத்தைச் சந்திக்கும் போது - வீட்டைச் சுற்றிலும் மண் உள்வாங்குவதைக் காணலாம்..

நன்றி - தின்மலர்
நிலைமை இப்படியிருக்க -

சென்னையின் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு காரணம் என்ன?.. - என்ற கேள்விக்கு -

பெருமழை பெய்யும் நேரங்களில் மண் அடுக்கில் ஏற்படும் வெற்றிடங்களால் இது போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன..

பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது பெய்த பெரும் மழை, அதிக அளவு நீர்த்தேக்கம் மற்றும் மண் அரிப்பு காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

குடிநீர், கழிவு நீர் குழாய்கள் பதிப்பு, மெட்ரோ ரயில் பணி தான் - இதற்குக் காரணம் எனக் கூற முடியாது..

சாலையில் அவ்வப்போது தோண்டப்படும் பள்ளங்கள் சீரமைக்கப்படுகின்றன.. இதில் - எல்லா இடங்களிலும் 100%  அழுத்தம் கிடைக்காது..

தளர்வான மண்ணில் மழையினால் ஈரப்பதம் அதிகரிப்பதால் இந்தப் பள்ளங்கள் ஏற்படுவது சகஜம் தான்!.. இது இயற்கையாக நடப்பதுதான்!..

- என்று சொல்லியிருக்கின்றார்கள்..


மக்கள் நல்வாழ்வுக்கென லட்சோப லட்சங்களைக் கொட்டியது ஒரு காலம்..

அவை மக்களுக்கு நன்மையளித்தனவா இல்லையா என்பதை - யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் - காலம் கண்முன்னே சொல்லிவிட்டது..

செல்லும் வழியின்றித் தவித்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து கொள்ள -

சென்னையின் சிலபகுதிகளில் மக்கள் அடைந்த இன்னலை காலத்துக்கும் மறக்க இயலாது..

ஆனாலும்,

முன்பு - 1978ல் வேடசந்தூரில் குடகனாறு உடைந்ததால் ஏற்பட்ட பெருத்த சேதங்கள் மறந்து போயின..

1985ல் மதுராந்தகம் ஏரி உடைந்து -  பயணிகளுடன் பேருந்து வெள்ளத்தில் மூழ்கிப் போனதும் - ரயில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதும் மறந்து போயிற்று..

மதுராந்தகம் ஏரி உடைப்பில் பயணிகளுடன் மூழ்கிய பேருந்திற்கு சற்று முன் சென்ற பேருந்தில் தான் - 

நான் சென்னைக்குப் பயணித்தேன் என்பது கூடுதல் செய்தி!..

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட, இயற்கைப் பேரிடராக ஆழிப்பேரலை..

சில வருடங்களுக்கு முன், கடலூரைத் தாக்கிய - ''தானே'' புயல்..

பின்னும் கால சூழ்நிலைகளால் - மழை வெள்ளம்..

இப்படிப் பல அவலங்களை - சேதங்களைச் சந்தித்திருக்கின்றது - தமிழகம்..

அவற்றிலிருந்து - பயனுள்ள பாடம் பயிலப்பட்டிருக்கின்றதா?..

இல்லை.. இல்லவே இல்லை!..

அகற்றப்படாத குப்பை மேடுகள்..
வெளியேற்றப்படாத கழிவுநீர்த் தேக்கங்கள்..

மழையினூடாக திருப்பதி சென்று விட்டு ரயிலில் திரும்பியபோது - காலை வேளை..

ஆவடி - திருமுல்லைவாயில் - அம்பத்தூர் - வில்லிவாக்கம் - பெரம்பூர் - வியாசர்பாடி - என, கடந்து வரும்போது ரயில்பாதையின் இருமருங்கிலும் சொல்லொணாத அவலங்கள்..

இவற்றுக்கெல்லாம் - எத்தனை எத்தனையோ காரணிகள்..

ஆனாலும், அதிகபட்ச கொடுமையாக -

தேங்கிக் கிடக்கும் கழிவு நீர் - துர்நாற்றம் வீசும் குப்பை மேடு - இவைகளுக்கு இடையே மறைவிடம் தேடும் மக்கள்..

இதெற்கெல்லாம் விடிவு காலமே இல்லையா!..



இதற்கிடையில், இப்போது - மழை வெள்ளத்தால் சீரழிந்த கட்டமைப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கென -

கோடானுகோடிகள் கொட்டப்படுகின்றன..

இதனால் எல்லாம் - எதிர்கால வாழ்வு நலமாக அமையுமா?..

சொல்லத் தெரியவில்லை..

நம்மைக் காப்பதற்கு இயற்கையைத் தவிர 
வேறெதுவும் இல்லை என்பதே உண்மை..

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.. (015)

வாழ்க நலம்
* * *

16 கருத்துகள்:

  1. மிக அருமையாக விளக்கிச் சொல்லியுள்ளீர்கள். இந்தச்செய்திகளைப்படிக்கவும், படங்களைப்பார்க்கவும் பெரும் பீதி ஏற்படுகிறது.

    இயற்கை மேலும் மேலும் சோதிக்காமல் இருந்தால் மட்டுமே அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்.

    வாரம் ஒருமணி நேரம் வீதம், ஆங்காங்கே பரவலாக அடித்து, மழை பொழிந்துவிட்டு ஓய்ந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மழை மட்டுமல்ல எதுவுமே அளவுக்கு அதிகமானால், அதனால் ஆபத்துக்கள் மட்டுமே.

    பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புக்குரிய அண்ணா..

      இயற்கை இறங்கி வந்தாலும் - நம்மை நாமும் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்..

      கழிவு நீர் வாய்க்காலும் வடிகால் அமைப்புகளும் சரியாக பராமரிக்கப்படவேண்டும்..

      தங்கள் அன்பான வருகை கண்டு மகிழ்ச்சி.. நல்ல கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. நேற்றே தங்கள் பதிவு அஅஅஅ இப்படி தான் தெரிந்தது. 1985 களில் நான் மதுராந்தகம் பக்கம் உள்ள கருங்குழி எனும் ஊரில் பள்ளிப் படிப்பு விடுதியில் அப்போ, வெள்ளம் வந்தது. 2 வகுப்பு. இன்றும் நினைவில் உள்ளது. மக்கள் எல்லோரும் பள்ளியில் தான் இருந்தார்கள்.
    இன்றும், அங்குள்ள ஏரிகள் உடைத்துக்கொண்டன என்று படிக்க கேட்கும் போது எனக்கு அந்த நாள் ஞாபகம் தான்.
    மனம் கவலையாக இருக்கு. அன்று, நான் சிறுப் பெண்ணாக இருந்தாலும் அங்கு இருந்த விடுதியில் மக்களுக்கு நிறைய உதவினேன்.
    தாங்கள் அப்போ பயணித்தீர்களா? கடவுள் இருக்கார் என்று ,,,,,,,,
    இயற்கையை நாம் விஞ்ச நினைக்கிறோம், பலன் இப்படியாக,
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நேற்று இணையம் சரியில்லாததால் - இந்தப் பதிவு குழப்பிவிட்டது..
      தங்கள் வருகையும் மேலதிக தகவல்களும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தமிழகத்தில் மழைக்குத் தஞ்சை தப்பித்தது என்று நினைத்தபோது தஞ்சையில் பெருமழை என்னும் சேதி. பாசனத்துக்கு நீர் பிரச்சனை இருக்காதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இன்று காலையில் இருந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கின்றது. மேலும் சில தினங்கள் தொடர்ந்தால் மிகவும் சிரமம் தான்.. பாசனத்துக்குப் பிரச்னை இல்லை என்றாலும் பயிர்கள் கதிர் பிடிக்கும் நேரம் இது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மழை பற்றிய பதிவின் மூலம்
    தஞ்சை நிலவரம் குறித்த ஒரு பகிரங்க ரிப்போர்ட்
    தயாரித்து அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் அய்யா!
    மழை பற்றிய பதிவை பொழிபவர்
    மனங்களில் என்றும் வாழும் ராஜா!
    அது தாங்களே அருளாளர் அய்யா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..

      இன்று காலையில் இருந்து மீண்டும் மழை தொடர்கின்றது. மேலும் சில தினங்கள் தொடர்ந்தால் மிகவும் தொல்லை தான்.. கதிர் பிடிக்கும் பயிர்கள் நீரில் மூழ்குகின்றன..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்
    நீர்நிலைகளை அடைத்தோம்
    வீதிகளே நீர்நிலைகளாக மாறியிருக்கின்றன
    பாடம் கற்போமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சரியாகச் சொன்னீர்க்ள்... வீதியெல்லாம் குளம் குட்டைகளாகிப் போயின..
      இனியும் பாடம் கற்கவில்லை எனில் - சோதனையும் வேதனையும் தான்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் ஜி அஜ்மான் போயிருந்தேன் இப்பொழுதுதான் வந்தேன்.

    படங்கள் கண்டு மனம் பொருக்க முடியவில்லை இதிலும் நமது அரசியல்வாதிகள் ஆதாயம் தேடத்தான் பார்க்கின்றார்கள் வரும் தேர்தலிலாவது மக்கள் சிந்திக்க வேண்டும் சிந்திப்பார்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      சில தினங்களுக்கு முன்னால் வரைக்கும் -
      அடாத மழையிலும் ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் தான்..
      நேற்று இரவு முதல் மறுபடியும் கனமழை.. சென்னை தத்தளிக்கின்றது..
      மிகவும் கவலையாக இருக்கின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. வணக்கம்.

    மழையின் பிழையன்று. மனிதப் பிழை.

    தஞ்சையில் வழங்கப்படுவதாகத் தாங்கள் காட்டிய பழமொழி இதுவரை அறியாதது.
    குறித்துக் கொண்டேன்.

    பெருவுடையார் கோயிலை, அங்குலம் அங்குலமாக அளந்ததாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்த எனக்கு, நீங்கள் காட்டிய வருணன் சிலை, சரியான அடி...!

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.. வணக்கம்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி..

      மழையின் பிழையன்று!.. - ரத்னச் சுருக்கமாக தங்களின் வார்த்தைகள்..

      நினைக்கும்தோறும் புதிய சிந்தனைகளைத் தரும் திருக்குறளைப் போல -
      பார்க்கும் போதெல்லாம் - புதிய கோணத்தில் பரிம்ளித்திருப்பது - பெரியகோயில்...

      இன்னும் முழுமையாக உணர்வதற்கு - பலகாலம் ஆகும்..

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..